அழகான பெண் குழந்தை. மழலைப் பேச்சும், குறும்புத்தனங்களும் நிறைந்த அந்தத் தேவதைக் குழந்தையைக் கண்டு பரவசமானார்கள். இந்தக் குழந்தைக்கு பெற்றோர்களான ஓட்டோ மற்றும் ப்ராங்க் தம்பதிகள். ஆனால் அந்தக் குழந்தை செய்த ஒரே தவறு, அது ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்ததுதான். அப்போதுதான் ஜெர்மனியில் புகழ் பெற்று வளர்ந்து வந்தான் ஹிட்லர். யூதர்கள் அனைவருமே கொன்று குவிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற கொலை வெறிக் கொள்கையைக் கொண்டிருந்த அந்த ஆரிய வெறி பிடித்தவனின் ராணுவம் ஜெர்மனியில் தங்கன் யூத ரத்த வேட்டையை நடத்த ஆரம்பித்திருந்தது. உலகப் போருக்கான கரும் மேகங்கள் ஐரோப்பிய வானத்தை சூழ்ந்த கால கட்டம் அது.

ஜெர்மனியில் உள்ள ஒவ்வொரு யூதக் குடும்பத்தையும் தேடித் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தது பைத்தியக்கார ஹிட்லரின் கொலை வெறி பிடித்த ராணுவம். ஓரளவுக்கு கௌரவமாக குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த ஓட்டோ பிராங்க் தம்பதிகள் இனிமேலும் ஜெர்மனியில் வாழ்வது பாதுகாப்பானது அல்ல என்பதைப் புரிந்து கொண்டு நள்ரவில் குடும்பத்தோடு அங்கே இருந்து ஹாலந்து நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். சிறுமி ஆனிக்கு அப்போது இருந்த ஒரே தோழி அவளுடைய சகோதரி மர்காட்தான்.

புதிய நாடு, புதிய மக்கள், புதிய சூழல் என்று ஆனிக்கு முதலில் குழப்பம் ஏற்பட்டாலும் புத்திசாலிக் குழந்தையான அவள் விரைவிலேயே பள்ளியில் மிகச் சூட்டிகையான பெண் என்று பெயரெடுத்தாள். இத்தனை சிறிய ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கற்பனை வளம் சாத்தியமா என்று அவளுடைய டீச்சர்களே வியக்கும் அளவுக்கு அவள் தன் எழுத்தாற்றலைக் காட்டினாள்.

ஆனால் அந்த வசந்த காலம் சில வருடங்களே நீடித்தது. நாடு நாடாகப் பிடித்து மக்களை வேட்டையாடிய பிணந்தின்னி ஹிட்லர் 1940 ஆம் வருடம் ஹாலந்து நாட்டையும் பிடித்தான். அவனுடைய ராணுவம் அங்கிருந்த யூத மக்களையும் தேடித் தேடிக் கொல்ல ஆரம்பித்தது. எப்படியும் தன் குடும்பத்தையும் அது கொலை செய்து விடும் என்று பயந்த ஓட்டோ தன்னுடைய அலுவலத்துக்குப் பின்னால் ரகசியமாக ஒரு இருப்பிடத்தை அவசரமாகக் கட்டினார். அதில் பல நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், உடைகள், உணவுப் பொருட்கள் போன்றவற்¬யும் ஒத்து வைத்தார்.

ஹிட்லரின் வெறிநாய்க் கூட்டம் அருகே வர, வர, ஓட்டோ தன் மொத்தக் குடும்பத்தினரையும் அந்த ரகசியச் சிறையில் வைத்துப் பூட்டினார். இனிமேல் அவர்கன் உலகம் அதுதான். என்றாவது ஒருநாள் ஹிட்லர் ஒடுக்கப்பட்டு சமாதானம் மலரும் போதுதான் அந்த ரகசிய இல்லத்திலிருந்து தன் குடும்பம் வெளியே வர வேண்டும் என்று நினைத்தார் ஓட்டோ. அவருடைய அலுவலகத்தை எரித்து நாசப்படுத்திய ஹிட்லரின் நரவேட்டைக் கூட்டத்தினால் அந்த ரகசிய வீட்டை அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போதுதான் ஆரம்பித்தது ஆனி பிராங்கின் அந்தக் காவிய வாழ்க்கை. அப்பா ‘இனிமேல் ஒரு பூட்டிய ரகசிய வீட்டில்தான் இருக்கப் போகிறோம்’ என்று சொன்ன உடன் தன் பெட்டியில் அவள் வைத்த முதல் பொருள் அவளுடைய டைரி. அதைத்தான் ஆனி உயிரினும் மேலாக நேசித்தாள். டைரி எழுதும் வழக்கம் அவளுக்கு மிக இளம் வயதிலேயே இருந்தது. ஆனால் மிகவும் கவித்துவமாகவும், இலக்கியத் தரமாகவும் அதை அவள் தினமும் எழுதுவாள் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்தது.

“அப்பா என்னிடம் உனக்குப் பிடித்தமான பொருட்களை உன் பெட்டியில் வைத்துக் கொள். அடுத்த பல வருடங்களுக்கு நாம் தலைமறைவாகவே வாழப்போகிறோம் என்று சொன்ன போது, முதலில் என் பெட்டியில் என் டைரியைத்தான் வைத்தேன். அதற்குப் பிறகு சீப்புகள், கைக்குட்டைகள், பள்ளிப் புத்தகங்கள்...... போன்றவை... ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நான் நினைத்தது, யாராலும் களவாட முடியாத என் ஞாபகங்களைத்தான்..’’ ஆனி அந்த டைரியில் முதல் முதலாக இப்படி எழுதினாள்.

நம்ப முடிகிறதா, அடுத்த இரண்டு வருடங்கள் முழுக்க அந்த ரகசிய வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் ஆனி. அந்தச் சிறுமி தினமும் மறக்காமல் செய்த ஒரு விஷயம் டைரி எழுதுவதுதான். அப்போது அவள் எழுதிய ஒவ்வொரு வரியும் பின்னால் அற்புதமான இலக்கியமாக மாறியது. தன் டைரிக்கு “கிட்டி’’ என்று பெயரிட்ட ஆனி அதனுடன் பேசுவது போலவே தன்னுடைய எண்ணங்களைப் பதிவு செய்தாள். ஹிட்லர் காலத்தில் யூதர்கள் வாழ்ந்த மகா கொடுமையான வாழ்வின் ஒரு சாட்சியாக ஆனியின் டைரி ஆவணமாகியது.

1994 ஆம் வருடம் ஆனியின் மறைவிடம் கொலைகார ஹிட்லர் ராணுவத்தால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனி உள்பட அவருடைய குடும்பத்தார் அனைவரும் “கான்சண்ட்ரேஷன் காம்ப்ஸ்’’ எனப்படும் நாஜிக்கன் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே கடுமையான காய்ச்சலாலும், குளிர் ஜுரத்தினாலும் பாதிக்கப்பட்ட பதினைந்து வயது ஆனி பிராங்க் அகதி முகாமிலேயே அநியாயமாகச் செத்துப் போனாள். அந்தக் காலகட்டத்திலும் தினமும் தான் டைரி எழுதுவதை நிறுத்தவில்லை ஆனி. ஹிட்லரின் அறிவற்ற ராணுவத்தினர் அந்த டைரியைத் தூக்கி எறிந்தாலும் இரண்டு பெண்மணிகள் அதைக் காப்பாற்றி பிற்காலத்தில் ஓர் ஆவணமாக்க வழி செய்தனர்.

அதுதான் இன்றைக்கும் “ஹோலகாஸ்ட்’’ என்று சொல்லப்படும் ஹிட்லரின் கொலை முகாம் நினைவுகன் சாட்சியாக அவனுடைய முகமூடியைக் கிழித்துக் கொண்டிருக்கிறது. ஆனியின் டைரிக் குறிப்புகள் “ஓர் இளம் பெண்ணின் டைரி’’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியாகி உலகின் 70 மொழிகல் மொழி பெயர்க்கப்பட்டன. ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆனி பிராங்குக்கென்றே ஒரு மியூசியம் திறக்கப்பட்டது. ஜெருசலேத்திலும் ஒரு நினைவு அரங்கம் நிர்மாணிக்கப்பட்டது.

- கிருஷ்ணா டாவின்ஸி

 

Pin It