தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் சிறுகதைகளில் பல, உலகச் சிறுகதைகள் தரத்தில், உலகச் சிறுகதைகள் வளமைக்கு நிகராக வளர்ந்து நிற்கின்றன. இது குறித்துத் தென்னிந்தியர்கள் நியாயமான பெருமைப்படலாம். இந்தச் சத்தியத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இந்தத் தொகுதி.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் என்று செயற்கையாகப் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு முழுவதும் இத்தனை மொழி இன வேறுபாட்டுக்கு இடையே«யும் மனித மனங்களில் ஈரம் இன்னும் வற்றிப்போய் விடவில்லை, என்று மீண்டும் உரக்க, மிக உரக்க நிரூபணம் ஆகியிருக்கிறது. கன்னடம் காவிரியைச் சிறைவைத் தாலும், ஆந்திரத்துக் கிருஷ்ணா தயங்கித் தயங்கித் தேங்கினாலும், அணைகளுக்கு மேல் அணையாக வையகத்துக்கு என்று வானம் வழங்கிய மழைநீரைக் கேரளம் கட்டிமறித் தாலும், நாம் எல்லோரும் மனிதர்களே, மானுடம் என்கிற அந்த ஒற்றைச் சொல்லை நிரூபணம் செய்யவே நம் அனைத்து அக்கறைகளும் நீட்சி பெறுகின்றன என்பதையே இந்தத் தொகுதி முழுதும் கதை மொழியில் இயம்பிக் கொண்டிருக்கிறது. மாநில அரசியல்கள் அல்ல, மனிதப்புரிதலே முதலும் முடிவுமான நிலைபேறு என்பதை இந்தத் தொகுதி மிகவும் தகிப்போடு சொல்கிறது.

இந்தத் தொகுதியில் உள்ள பல எழுத்தாளர்கள், மாநில மொழி எல்லைகளுக்குள்ளாகவே இருக்கிறார்கள் என்கிற யதார்த்த நிலை, நமக்குப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மார்க்வெஸ்ஸின் ‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’ உலகக் கரங்களுக்கு வருமுன்னர் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பொருட் படுத்தத்தக்க இலக்கியம் பிறக்க முடியும் என்பதை மேற்குலகம் நம்பவே இல்லை. மட்டுமல்ல; இலக்கியங்களின் தோற்றுவாயே ஐரோப்பாவும், அமெரிக்காவும் என்றே அந்த மேன்மையர் உலகம் நினைத்துக் கொண்டிருந்தது. விந்திய மலைக்குத் தெற்கேயும், உலகம் பொருட்படுத்தத்தக்க இலக்கியப் படையல்கள் உருவாகிக் கொண்டிருக் கின்றன என்ற உண்மையை இத்தொகுதி நிரூபணம் செய்தாலும், இவற்றை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. இந்தத் தொகுதியில் இருந்தும், வெளியே இருந்தும் ஒரு இருபது சிறுகதைகளைத் தேர்வு செய்து ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் முதலான உலக மொழிகளில் கொண்டு செல்லும் முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று எனக்கு இத்தொகுதி உணர்த்துகிறது.

இவ்வளவு அக்கறையோடும், ஆழ்ந்த ஈடுபாட்டோடும், தயாரான இன்னொரு மொழி பெயர்ப்புத் தொகுப்பு அண்மைக் காலத்தில் வெளிவந்தது இல்லை. இந்திய அளவிலும் உலக அளவிலும் ஈடு சொல்லத்தக்க கதைகள் இதில் உண்டு.

உலக இலக்கிய வெளியில் இத்திராவிடக் கதைகள் வரவேற்று வழிபடத்தக்க தகுதியில் இருக்கின்றன. எழுதிய பலரும் அந்தந்த மொழிகளில் இளந்தலை முறையினர். தங்கள் மூதாதையர்களின் கடந்த காலச் சாதனைகள் பலதைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். தங்கள் ஆகப் பெரிய சிருஷ்டிகரத்தின் மூலம் மூலமொழி ஆசிரியர்களுக்கு விசுவாசமான, சினேகித மனோபாவத் தோடு செய்யப்பட்ட, மிகு உழைப்பைச் சுவீகரித்த மொழியாக்க முயற்சி இது. எல்லாக் கதைகளும் ஒன்று போல ஒன்று இல்லை என்ப தோடு, படைப்பாளருக்கு உரிய அதிகபட்ச சுதந்திரத்தோடு படைக்கப்பட்டுள்ளன என்பதால், அந்தந்த மொழிகளில் வேறு வேறு பார்வைகளில்,வேறு வேறு பாணிகளில் பேசும் இந்தஅரிய அபூர்வக் கதைகள், மனிதனைப் பேசுகின்றன. தமிழர்கள் பாக்கியசாலிகள்.

தமிழை, தமிழ்ப்படைப்புகளை முன் நகர்த்தும் மிகவும் அரிய முயற்சி இது. இனிவரும் தலைமுறை எழுத்துக் கலைஞர்களுக்கு ஆதாரமும் நம்பகத் தன்மையும் கொண்ட கையேடாகவும் விளங்கும் தகுதிமிக்க மொழியாக்கத்தின் கம்பீரமான சிறுகதைத் தொகுப்பு இது.

தென்னிந்தியச் சிறுகதைகள்
தொகுப்பு: கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ், பக்கம் 432/ரூ.300

Pin It