செப்டம்பர் 15, 2008 பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு துவக்கம். காஞ்சிபுரத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன்பால் ஈர்த்த ஒரு அரசியல்வாதி. இலக்கியவாதி. நடிகர், கவிஞர், வசனகர்த்தா, பள்ளி ஆசிரியர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு நவரசவாதி. நூற்றாண்டு விழா காணும் அண்ணாவினுடைய படைப்புகளும், அவர் கடந்து வந்த அரசியல் பாதைகளும் நிச்சயம் இக்காலத்தில் திரும்பிப் பார்க்கப்படும். திறனாய்வு செய்யப்படும். அத்துணை தகுதிகளும் அவருக்கு உண்டு.

பொதுவாக, ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக இறுதி வரை வாழ்ந்து மறைபவரே வரலாற்றில் நிலைத்து நிற்பார். அந்த முறையில் பார்த்தால் அண்ணாவும் தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக நின்றவர், வென்றவர்.

Pain of Loveவிடுதலை போராட்டக்காலத்திலும், அதற்கு அடுத்த காலங்களிலும் வீரியமிக்கதாக காங்கிரஸ் பேரியக்கமும், பொதுவுடமை பேரியக்கமும் எழுச்சியோடு இருந்தகாலத்தில் மிட்டாமிராசுகளும், ஆலை அதிபர்களும், ஜமீன்தார்களும் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக்கட்சி சவலைப்பிள்ளை போல் இருந்த காலம். இயல்பாகவே, படிக்கும் காலத்தில் தமிழ் மீதும், சீர்திருத்த கருத்துக்கள் மீதும் தாளாத பற்றுறுதி கொண்டிருந்த அண்ணா எப்படியோ நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து பணியாற்றினார். பிள்ளை பிழைக்குமா, பிழைக்காதா என்ற விபரம் வைத்தியருக்குத்தானே முதலில் தெரியும். அதுபோல, நீதிகட்சியில் பணியாற்றத் துவங்கிய சில காலங்களிலேயே அதன் போக்குகளை புரிந்துகொண்ட அண்ணா திராவிடர் கழகமாக அதை உருமாறச் செய்வதில் பெரும்பங்காற்றினார்.

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், அதன் நிறுவனத் தலைவரான தந்தை பெரியாரின் பேரன்புக்கு பாத்திரமானவராகவும் இருந்தார். ஆற்றல்மிகு பேச்சு, அற்புதமான எழுத்து நடை, எல்லோரையும் இயல்பாக அரவணைத்துச் செல்லும் அவரது தலைக்கனமற்ற குணம், தளபதி என்ற பட்டத்தை பெற்றுத்தந்தது. அண்ணாத்துரையாக அரசியலில் நுழைந்தவர் தளபதி அண்ணாதுரையாகி, பின்னர் அறிஞர் அண்ணாவாகி, பின்னரே பேரறிஞர் அண்ணாவாக உருமாற்றம் பெற்றார். கட்சியின் தலைவர் என்ற முறையில் அன்றாடம் தான் படித்த, உணர்ந்த கருத்துக்களை தன்னைப் பின்பற்றும் தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதில் தாளாத விருப்பம்கொண்டவர். அதுமட்டுமல்ல, ஊர் ஊராகப் போய் ஒருநாளைக்கு ஒரு மேடை என்றால், அன்றாடம் தனக்கு கிடைக்கக்கூடிய அறிவுசார்ந்த விஷயங்களை தன் தொண்டர்களுக்கு சொல்லி முடிக்க ஆயுள் போதாது என்பதை அனுபவரீதியாக உணர்ந்தார். எனவே, தான் பத்திரிகை நடத்த வேண்டியதின் அவசியத்தை மிக நுட்பமாக உணர்ந்தவர். தான் பத்திரிகை நடத்துமளவுக்கு பொருளாதார வளர்ச்சி இல்லாத நேரத்தில் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார். இதன்மூலம் மிகப்பெரிய வாசகர் வட்டம் மலரைத் தேடி வண்டுகள் செல்வது போல் அண்ணாவை நோக்கி சென்றது.

திராவிடர் முன்னேற்றக் கழகம் உருவாகிய பின்னர் எண்ணற்ற நாளிதழ்களை உருவாக்கி தன்னுடை எண்ணங்களை எல்லாம் தனது தொண்டர்களுக்கு அன்றாடம் அந்த இதழ்களின் மூலமே பதிவு செய்தார். இந்த நடைமுறை தமிழகத்தில் வேறெந்த அரசியல்வாதியாலும் இதற்கு முன் பின்பற்றப்படவில்லை. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்றே தனது கடிதங்களுக்குத் தலைப்பிட்டு தன்னுடைய எண்ணங்களை பதிவு செய்தார். தனது இயக்கத்தில் உள்ள தன்னுடைய சகாக்களையும், கீழ்மட்ட தொண்டர்களையும் அன்பொழுக தம்பி என்றே அழைத்தார். இயல்பாகவே இவருக்கு பெற்றோரால் வைக்கப்பட்ட அண்ணாதுரை என்ற பெயரும் வாய் நிறைய அவரது தம்பிமார்கள் அண்ணா என்றழைக்க பொருத்தமானதாக அமைந்துவிட்டது. தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் “உன்னைத்தான் தம்பி” என்று அவர் அன்றாடம் எழுதும் மடல்கள் அனைத்துமே வித்தியாசமானவை. தமிழ்நாட்டு அரசியலில்

துவங்கி வடநாட்டு அரசியலை அலசி உலகின் பல்வேறு நாடுகளின் அன்றாட நடப்புகளை அந்தக் கடிதத்தில் கொண்டு வருவது அவருக்கே உரிய புதிய பாணி. இதன்மூலம் அன்றாடம் தனது கட்சியினருக்கு சொல்ல வேண்டிய தன் கட்சியை பற்றிய இயக்கச் செய்திகளை சொல்வதோடு நாட்டு நடப்புகளை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதையும் சொல்லிவிடுவார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல தனக்கு தன் எழுத்தும், பேச்சுமே பலம் என்பதை அண்ணா மிக நுட்பமாக உணர்ந்திருந்தார். பணப்புழக்கம் அதிகமில்லாத அந்த காலங்களில் ஓரணா (6 பைசா), இரண்டனா (12 பைசா) என்பதே ஏழை, எளியவர்களுக்கு மதிப்புமிக்க தொகையாகும். ஆனால், அதை சிறிய விஷயமாக்கி, இவருடைய எழுத்துக்களை பெரிய விஷயமாக மாற்றி, தான் நடத்திய பத்திரிகைகளை எல்லோரையும் வாங்க வைத்தார். பல ஊர்களில் அண்ணாவின் கடிதங்கள் தாங்கி வரும் பத்திரிகைகளை காத்திருந்து வாங்கிச் சென்று படித்தவன் நான் என்று இன்றைக்கும் சொல்லக்கூடியவர்களை கண்முன் காண்கின்றோம். இதேபோல், நாடகத்துறையிலும், திரைப்படத் துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் வருவதற்கு அடித்தளமாக இருந்தவர் அண்ணா. அரிச்சந்திராவும், இராமாயணமும், மகாபாரதமும், வள்ளி திருமணமும், பவளக்கொடியும் கோலோச்சிக் கொண்டிருந்த நாடக உலகில் சமூக சீர்திருத்த கருத்துக்களைப் புகுத்தி அடியோடு மாற்றம்காண வைத்தார்.

இதேபோல், திரைப்படத் துறையிலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தினார். அடுத்து வரும் தலைமுறைக்கும் இதன்மூலம் ஒரு வழிகாட்டியாக அமைந்தார். தான், தனியாக திமுக என்ற இயக்கத்தை கண்டபின் மாலைமணி, நம்நாடு, காஞ்சி போன்ற தமிழ் ஏடுகளையும், ஹோம் லேண்ட் என்ற ஆங்கில இதழையும் நடத்தினார். இதேபோல், தனது கட்சியின் சகாக்கள் தனித்தனியாக பத்திரிகை நடத்துவதையும் ஊக்குவித்தார். எழுதுவதிலும், படிப்பதிலும் சலிப்பில்லாத உற்சாகம் கொண்டிருந்தார். சந்திரோதயம், நீதிதேவன் மயக்கம் அல்லது சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம், சொர்க்கவாசல், நல்லவன் வாழ்வான், பணத்தோட்டம், கோமளத்தின் கோபம், ரங்கூன் ராதா, காதல் ஜோதி, வேலைக்காரி, ஓர் இரவு, தீ பரவட்டும், ஆரிய மாயை, கம்பரசம் உட்பட எண்ணற்ற நாடகங்களையும், திரைப்பட வசனங்ளையும், கட்டுரைகளையும் எழுதிக்குவித்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சிவாஜியாக நடிக்க வைத்து அதில் வரும் ஒரு துணைப்பாத்திரமான காகப்பட்டராக அண்ணா நடித்திருக்கிறார்.

போரில் வெற்றி பெற்றாலும் நீ பிற்படுத்தப்பட்டவன். ஆகவே மன்னராகக் கூடாது என்று சனாதனவாதிகள் சொல்வதுதான் இந்த நாடகத்தின் உட்கரு. இதற்காக சிவாஜி பேசுவதாக 90 பக்கங்களுக்கு அண்ணா வசனம் எழுதியிருக்கிறார். அதை 7 மணி நேரத்தில் மனப்பாடம் செய்து சிவாஜி கணேசன் பேசியிருக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி மட்டுமல்ல, சிவாஜி கணேசன் என்ற ஒரு மாபெரும் கலைஞனை நாடக உலகிலும், பராசக்தி திரைப்படத்திற்கு சிபாரிசு செய்ததின் மூலமும் அடையாளம் காட்டிய பெருமை அண்ணாவையே சாரும். முதன்முதலாக தனது எழுத்துப்பணிக்கு உரிய அங்கீகாரமாக 1934ல் ஆனந்தவிகடனில் கொக்கரக்கோ என்ற சிறுகதை எழுதி ரூ.20 அன்பளிப்பும் பெற்றுள்ளார். இப்படி அண்ணாவுக்கு ஒரு சிறிய அங்கீகாரத்தை அந்தக்காலத்தில் கொடுத்த அதே விகடன்தான் 1967ல் திமுக தலைமையில் காங்கிரசை எதிர்த்து 7 கட்சி கூட்டணி அமைந்தபோது அண்ணா, பி.ராமமூர்த்தி, இராஜாஜி போன்ற தலைவர்கள் எல்லாம் சேர்ந்து கழுதை மேல் போவது போல் கார்ட்டூன் போட்டு தனக்குத்தானே ஒரு கரும்புள்ளி வைத்துக்கொண்டது விகடன்.

அண்ணா எழுதியவற்றில் பாதுகாக்கப்பட்ட நூல்களின் பக்கங்கள் மட்டும் சுமார் 16,000 பக்கங்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல, சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதிலும் முதன்மையானவராக இருந்திருக்கிறார். அவரது பேச்சுக்களையும் நூல் வடிவமாக்கினால் இன்னும் பல்லாயிரம் பக்கங்கள் கூடுதலாகும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் அண்ணாவை பற்றிச் சொல்லும் போது, அண்ணா இரவெல்லாம் கண்விழித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் காகிதங்களையெல்லாம் அடுக்கி பக்கம்போடும் வேலையை நான் மகிழ்ச்சியோடு செய்திருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். ஆரியமாயை என்ற நூல் அந்தக்காலத்தில் மிகவும் பரபரப்பூட்டியதாகும். 1941ல் அண்ணாவால் எழுதப்பட்டு 3 பதிப்புகள் வெளியான பின் 1943ல் இந்த நூல் தடை செய்யப்பட்டதுடன் அண்ணா கைது செய்யப்பட்டதுடன் சிறைதண்டனையும் பெற்றார். அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேபோல், தந்தை பெரியார், மாவீரன் பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்” பிரசுரம் செய்ததற்காக தண்டிக்கப்பட்டார். இந்நூலை மொழிபெயர்த்த பொதுவுடமை இயக்கப் பேரொளி பா.ஜீவானந்தம், கை, கால்களில் விலங்கு மாட்டி தெருக்களில் இழுத்து வரப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்டார். பிற்காலத்தில் கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி படம் தடைசெய்யப்பட்டது. நல்லவேளை, தண்டனை எதுவும் கிடைக்கவில்லை. அரங்கங்களில் நடக்கும் கூட்டங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறையே அண்ணாவின் பேச்சுக்குத்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவினுடைய பேச்சிலும், எழுத்திலும் சொல்லப்படும் உவமானங்கள் இன்றைக்கும் தமிழக அரசியல் உலகத்தில் பிரசித்தி பெற்றவை. மாற்றாரையும் மதிக்கும் எண்ணம் வேண்டும் என்ற நோக்கில் அவர் சொன்னது “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்பது. பெரியாரோடு பிரச்சனை ஏற்பட்டு அவரை விட்டுப் பிரியும் காலத்தில் அவருக்கே உரிய பாணியில் பெரியார் கண்ணீர் துளி பசங்கள் என்றார். அதையே கருப்பொருளாக்கி கண்ணீர் துளிகளே, கழக கண்மணிகளே என்று எழுதத்துவங்கி அதை மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற சொல்லாக்கிவிட்டார் அண்ணா.

ஒருமுறை, பெருந்தலைவர் காமராஜர், திமுகவை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றதற்கு அண்ணா சொன்ன பதில், நீங்களோ ஆளும்கட்சி. அதுவும் அகில இந்திய கட்சி. அத்தோடு நீங்கள் முதலமைச்சர் வேறு; அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. நானோ ஒரு சின்னக்கட்சியின் தலைவன். என்னைப்போய் நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது பட்டாக்கத்தியை எடுத்து பட்டாம்பூச்சியைவெட்டுவது போல; வெட்டரிவாள் கொண்டு வெண்ணையை வெட்டுவது போல என்பது மாதிரி 18 வகையான உதாரணங்களைச் சொன்னாராம். இதேபோல், அண்ணாவுக்கும், நேருவுக்கும் கடுமையான கருத்து மோதல்கள் வந்த காலத்தில் நேருவின் பேச்சு ஆத்திரமூட்டுவதாக இருப்பதை இப்படி நளினமாக சொன்னாராம்: “நீங்களோ கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்; நானோ கொட்டிக்கிடக்கும் செங்கல்”.

ஒரு வகையில் தன்னைத் தாழ்த்திக்கொண்ட போதிலும் மறுபுறத்தில் செங்கல்கள் இல்லாமல் கோபுரங்கள் கட்டமுடியாது என்பதை எச்சரிக்கையாகவும் உணர்த்தும் விதத்தில் சொல்லியிருக்கிறார். இதேபோன்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெருந்தலைவர் காமராஜருக்கும், மூதறிஞர் இராஜாஜிக்கும் நடந்த அரசியல் போட்டிகள் ஊரறிந்த ரகசியம். இதில், மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த ஒரு மாநாட்டில் காமராஜரின் கை ஓங்கியிருக்கிறது. இதைப்பற்றி சொல்லும்போது குன்றம் உயர்ந்தது; கோடு தாழ்ந்தது என்று சொல்கிறார். (இராஜாஜிக்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் தோல்வியடைந்ததை இவ்வாறு குறிப்பிடுகிறார்)

தான் தம்பிக்கு எழுதும் மடல்களில் கூட சில தலைப்புகளையும் மிக அற்புதமாக சொல்லியிருப்பார். கிளிக்கு பச்சை பூசுவதா? குன்று குடைப்பிடித்துக் கொள்ளுமா? ஜனநாயக சர்வாதிகாரி! ஐயா சோறு இதோ நேரு பாரு! பாலைவனத்தில் வீசிய பனிக்கட்டி! குருடனிடம் காட்டிய முத்துமாலை! செவிடன் கேட்ட சங்கீதம்! போன்றவை இதற்கு சில உதாரணங்களாகும்.

அண்ணாவினுடைய ஆற்றொலுக்கான பேச்சு நடையால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் அவர் பேச வேண்டுமென்ற விருப்பமட்டுமல்ல அன்றைய மாணவர்களுக்கு அதுவொரு ஏக்கமாகவே இருந்தது. தன்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சென்னையில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியராக சில மாதங்கள் பணியாற்றி ஏதேனும் ஒரு கல்லூரியில் ஆசிரியர் பணிக்குப் போக வேண்டுமென்று விரும்பியவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஆனால், பின்னாட்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கல்லூரிகளும் தங்களது கல்லூரியில் வந்து உரையாற்ற அண்ணாவின் தேதி கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் நிலைமையை உருவாக்கினார்.

செட்டிநாட்டு அரசர் தனது செயலாளராக வருமாறும், மாதம் ரூ.120 சம்பளம் தருகிறேன் என்று கூறியதும் அண்ணாவின் வேலை தேடிய படலத்தில் உள்ள ஒரு சுவாரஸ்யமான சம்பவமாகும். பொதுக்கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும், பட்டிமண்டபங்களிலும் கொடுக்கக்கூடிய தலைப்பில் நின்று அதன்மீது எண்ணற்ற உதாரணங்களை எடுத்துக்காட்டி கேட்பவர்களை சொக்கிப்போக வைப்பவராக அண்ணா இருந்திருக்கிறார். எழுதுவதைப் போலவே படிப்பதிலும் அண்ணா எவ்வளவு ஆர்வம் கொண்டவர் என்பதற்கு நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.

பெரியாரோடு அண்ணா திராவிடர் கழகத்தில் பணியாற்றும்போது இருவரும் ஒருநாள் இரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாவோ படிப்பதில் ஆர்வமிக்கவர். பெரியாரோ சிக்கனத்தில் அதைவிட ஆர்வமிக்கவர். இரயில் நிலையத்தில் இருந்த ஒரு புத்தகக் கடையில் ஹிட்லரைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் பார்த்த அண்ணா பக்கங்களைப் புரட்டி கொஞ்சம் கொஞ்சமாக படிப்பது, திரும்ப பெரியாரிடம் போய் நிற்பது என அங்குமிங்குமாக நடந்தே புத்தகத்தைப் படித்துவிட்டார். இருந்தாலும் அதை வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பெரியாரிடம் போய் அந்த புத்தகத்தின் சிறப்பைச் சொல்லி இதை வாங்கிப்படிப்பது அவசியம் என்றாராம். பெரியாரோ, அதுதான் அங்குமிங்குமாக போய் படித்துவிட்டு வந்துவிட்டீர்களே இனி எதற்கு அந்த புத்தகம் என்றாராம். இதிலிருந்தே அண்ணாவின் படிப்பு ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் “ஆற்றங்கரையோரம்”, நினைப்பும் நிலையும்” போன்ற தலைப்புகளிலும், மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது இன்றைக்கும் மிக மிகச்சிறப்பான எடுத்துக்காட்டுகளாக கூறப்படுகின்றது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அண்ணாவின் பேச்சுக்கள் பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சில கூட்டங்களுக்குச் சென்று எனக்கு என்ன தலைப்பு என்று அண்ணா கேட்க, தலைப்பு என்ற தலைப்பில் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். உடனே எந்தவித பதட்டமுமின்றி தலைப்புகளுக்கான மேற்கோள்களைக் காட்டி ஒரு மணி நேரம் எல்லோரையும் தனது பேச்சினால் கட்டிப்போட்டிருக்கிறார்.

எப்போதுமே தனி ஒரு ஆளாக அண்ணா எங்கும் செல்வதை விரும்பமாட்டாராம். நண்பர்கள் புடை சூழவே உட்கார்ந்து படிப்பது அல்லது விவாதிப்பது என்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒருமுறை இவரோடு இருந்த நண்பர்கள் அகம் என்பதின் இலக்கணம் என்ன? புறம் என்பதின் முழுப்பொருள் என்ன? இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அண்ணா மிக அழகாக இவ்வாறு பதில் சொல்லியிருக்கிறார்.

அகம் என்பது உணர்ந்து மகிழத்தக்கது
புறம் என்பது பகிர்ந்து மகிழ வேண்டியது.

எவ்வளவு ஆழமான விஷயத்தை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் சார்ந்த இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது நாங்கள் கட்டிடம் இல்லாத கல்லூரிகள் என்று கூறி பெருமைப்பட்டிருக்கிறார். அண்ணாவின் நூல்களைப் பற்றி ஆராய்சி செய்தவர்கள் அண்ணாவை உவமைகளின் வங்கி என்றும் குறிப்பிடுகிறார்கள். உவமானங்கள் ஏராளமாகக் கூறிப் பேசுகிறார் என்பதற்காகவே அந்தக்காலத்தில் அடுக்குமொழி அண்ணாதுரை என்று போற்றப்பட்டிருக்கிறார். சில பேர் இதையே, ஏளனமாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஏளனங்கள் எடுபடவில்லை என்பது வரலாறு காட்டும் வரலாறு. ஆம். பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா பிரிந்து திராவிடர் முன்னேற்றக் கழகம் துவங்கியபோதும் பெரியாரை ஒருபோதும் அவர் தீ போல் சுட்டதில்லை. தென்றலாகவே தீண்டியிருக்கிறார். ஆனால், பெரியாரோ இதற்கு நேர்மாறாகவே அண்ணாவிடம் நடந்து கொண்டார்.

தேர்தலில் நிற்கக் கூடாது என்பது பெரியாரின் கொள்கை. தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பதன் மூலம்தான் மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்ய முடியும் என்பது அண்ணாவின் கொள்கை. 1952ல் நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகளை ஆதரித்தார் அண்ணா. இதன் பின்னால் நடந்த அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளில் இருந்துதான் நாமும் தேர்தலில் பங்கேற்க வேண்டுமென்பதை உணர்ந்து 1957 தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக திமுகவைச் சேர்ந்த 15 பேர் சட்டமன்றத்திற்கும், 2 பேர் நாடாளுமன்றத்திற்கும் செல்ல வழிவகுத்தார். மக்களிடம் ஊடுருவ இது பெரியளவுக்கு உதவியது. இந்த தேர்தலில் அண்ணா தோற்க வேண்டுமென்பது பெரியாரின் விருப்பம். ஆனால், அது ஈடேறவில்லை.

1962 பொதுத் தேர்தலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உண்டாகிக் கொண்டிருந்த நேரம். அந்நேரத்தில், பெரியாரின் சகோதரர் மகனான ஈ.வி.கே.சம்பத் திமுகவிற்குள் பெரிய பூகம்பத்தையே கிளப்பினார். அவரோடு கவிஞர் கண்ணதாசன் உட்பட பலர் பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினர். சென்ற வேகத்திலேயே திரும்பி வந்த தலைவர்களும் உண்டு. அதில் கே.ஏ.மதியழகன் குறிப்பிடத்தக்கவர். திமுகவில் ஏற்பட்ட இந்த பிளவை காங்கிரஸ் பெரிதாக ஊதியது. ஆனால், அண்ணா வெகு லாவகமாக சம்பத்தை சமாளித்தார். கட்சி ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே சம்பத் காங்கிரசோடு இணைய வேண்டிய கட்டாயமாகிப் போனது. ஆனாலும், அத்தேர்தலில் அண்ணா தோற்கடிக்கப்பட்டார். பெரியாரின் ஆசை ஓரளவு நிறைவேறியது. இதேபோல், 1967 தேர்தலிலும் பெரியார் திமுகவுக்கு எதிராகவே இருந்தார். ஆனால், பெரியாரை தங்களது தலைவர் என்று சொல்லிக்கொண்டே மிக லாவகமாக காய் நகர்த்தி 1967ல் ஆட்சி அமைத்ததும், அதை பெரியாருக்கே காணிக்கையாக்கி தன்னுடைய கண்ணியத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் பெரியாரேயே திகைக்க வைத்தார்.

“இன்னா செய்தாரை ஒருத்தல்
அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்” என்ற குறளுக்கு நடைமுறை உதாரணமானார் அண்ணா. 1947ல் நாட்டுக்கு விடுதலை வாங்கி தந்தோம். எங்களை யாரும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த காங்கிரசை 20 ஆண்டுகளில் ஆட்சி கட்டிலை விட்டு ஓரங்கட்ட வைத்ததில் அண்ணாவிற்கு பெரும்பங்கு உண்டு. காங்கிரஸ் எதிர்ப்பில் கடுமையாக நின்ற அண்ணா, பொதுவுடமை இயக்கத்தோடு எப்போதும் இணக்கமாகவே இருந்தார். அதன் தலைவர்களோடும் நட்புணர்வோடு நடந்து கொண்டார். 1962 பொது தேர்தலிலேயே பொதுவுடமை இயக்கத்திற்கும், திமுகவிற்கும் தேர்தல் கூட்டணி ஏற்பட்டிருக்குமானால் தமிழகத்தின் வரலாறு அப்போதே மாறியிருக்கும். தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கூட்டணி அமையாமல் போனது.

இதை 2 கட்சிகளுமே உணர்ந்திருந்த காரணத்தினால் 1967ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தோழமை கொண்டு காங்கிரசை வீழ்த்துவதில் பெரும்பங்காற்றின. பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கை என்பது தனது கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று நினைத்த அண்ணா, இடையில் ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்றும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இது பகுத்தறிவு பாசறைக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றே கூறவேண்டும். இதேபோல், திராவிடர் நாடு அடைந்தே தீருவோம் என்பதுடன் அதற்கான சில நியாயங்களையும் பேசி அண்ணா ஆதரவை திரட்டினார். அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு பிரிவினைவாத தடை சட்டத்தை இதற்காகவே கொண்டு வந்தது. இது தனக்கும், கட்சிக்கும் பெரிய சேதாரத்தை தரும் என்பதை உணர்ந்துகொண்ட அண்ணா திராவிடர் நாடு கேட்பதை தற்காலிகமாக ஒத்திவைக்கிறேன் என்று கூறி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

சட்டம் கொண்டுவந்த காங்கிரசுக்கோ இது சப்பென்று ஆகிவிட்டது. நாடு முழுவதும் இதுகுறித்து கேள்விகள் எழும்பியபோது “காதில் புண் ஏற்பட்டதால் கடுக்கனை கழற்றி வைக்கிறேன். புண் ஆறிய பின்னர் அணிந்து கொள்வேன்” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி முடித்துக்கொண்டார். காமராஜர் என் தலைவர்; அண்ணா எனக்கு வழிகாட்டிதான் என்று சொல்லி ஒரு கட்டத்தில் திமுகவின் மேல்சபை உறுப்பினர் பதவியையும் எம்ஜிஆர் ராஜினாமா செய்து சிக்கலை உருவாக்கினார். எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கி என்பதை அண்ணா அந்தக் காலத்திலேயே உணர்ந்திருந்தார். அதனால்தான் என் இதயத்தில் விழுந்த கனியாக எம்ஜிஆரை பார்க்கிறேன், அவர் முகத்தைக் காட்டினால் 30 லட்சம் ஓட்டுக்கள் நிச்சயம் என்று பாராட்டி அவரையும், அவர் உருவாக்கிய சிக்கலையும் சமாளித்தார்.

இப்படி தனது அரசியல் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களையும், கடுமையான கண்டனங்களையும், மிகப்பெரிய பாராட்டுக்களையும் சந்தித்தபோதிலும் எல்லாவற்றையும் ஒரேமாதிரி எடுத்துக்கொண்டார். இதையே, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல்லி மற்றவர்களுக்கும் உணர்த்தினார். தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக் கொண்டவர். ஆடம்பரத்தை விரும்பாதவர். எளிய வாழ்க்கை மேற்கொண்டவர். தான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அமைச்சர்களுக்கான சம்பளத்தில் சரிபகுதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்தவர். முதலமைச்சரானவுடன் அரசாங்கத்தால் வீட்டிற்கு கொடுக்கக்கூடிய உயர்தரமான மேஜை, நாற்காலி, சோபா போன்றவற்றைக் கூட வாங்க மறுத்துவிட்டவர். பதவி போய்விட்டால் மறுநாள் இதை எடுத்துப் போய் விடுவார்கள். பதவி காலத்தில் இந்த சவுகரியங்களுக்கு பழகிவிட்டால் பின்னால் அதிலிருந்து விலக முடியாது என்று தன் குடும்பத்தாருக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தவர்.

இன்றைய தலைமுறையினர் அண்ணாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எளிமை, இணைக்கமான உறவு, அயராது படிப்பது, அதைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பது, இயக்கத்தை ஜனநாயகபூர்வமாக நடத்துவது, ஏழைகளின் பால் மாறாத அன்பு கொள்வது என்பதே ஆகும். ஆனால், இன்றைக்கு அவரது பெயரால் கட்சியையும், ஆட்சியையும் நடத்தக்கூடிய இயக்கங்கள் இதில் எந்தளவுக்கு தடம் பதித்திருக்கிறார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

- இரா.காண்டீபன்