படித்ததில் பிடித்தது

குழந்தைகளைக் கொண்டாடாத சமூகங்கள் எதுவும் இல்லை. ஆனால் காரணங்கள் மாறுபடுகின்றன. "எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப் போலவே இருப்பான்" என்ற கருத்துகள் தன்னுடைய ஆண்மையை நிரூபிப்பதும், தன்னை ஒத்த பிரதியாக தன்னுடைய பெருமைக்குரிய சொத்தாக இருக்கப் போவதை, ஆண்மையை குடும்பப் போக்கை வலியுறுத்தும் பொருளில் சமூகத்தின் குழந்தைகள் பற்றி ஒரு முக்கிய கருத்தை வெளிப்படுத்துகிறது.

எல்லா விலங்கினங்களும், பறவைகளும் தத்தம் குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் தங்களுடைய அடிப்படை குணாம்சங்களை இயல்பான போக்கில் போதித்து விடுகின்றன. மனிதன் மட்டும் 'நாகரிக மனிதனாக மாறிவிட்டதால்' மனிதனின் அடிப்படை குணங்கள் தமது குழந்தைகளுக்கு தாமாக வரவிடுவதில்லை. மாறாக, தன்னுடைய இருத்தலுக்காக ஆதிக்கம், வஞ்சம், பொய், ஏமாற்று, நம்பிக்கையின்மை, வன்முறை என பிற விலங்கினங்களுக்கு இல்லாத 'சிறப்புகளை' குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் சமூகமாக நாம் மாற்றி வைத்திருக்கிறோம். எனவே மனித நேயம் என்பதும் அன்பு, சகமனிதன் என்கிற உணர்வு போன்றவை இல்லாமல் போவதை அங்கீகரிக்கும் மனநிலைக்கு சமூகங்களை ஆட்படுத்தியிருக்கின்றன. நாம் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம் "ஷ. அமனஷ்வீலியின் குழந்தை களைக் கொண்டாடுவோம்" என்ற பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

இப்புத்தகம் படிக்கும்போது நம் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியமானதொரு கட்டத்தில் எப்படிப்பட்ட இழப்புகளை ஏற்படுத்திவிட்டோம் என்பது கவலையளிப்பதாக உள்ளது. இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் முதல் 5 முதல் 6 வருடங்கள் அவர்களை வளர்க்க வேண்டிய விதம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகள் கல்வியாளர்களை சென்றடைய வேண்டும். அவர்கள் மூலம் அரசியல்வாதிகளைக் குறிப்பாக கல்வி / பாடத்திட்டம் மற்றும் கல்விக் கொள்கைகளை உருவாக்குபவர்களை சென்றடைய வேண்டும். அதற்கெல்லாம் முதலில் இப்புத்தகம் பரந்துபட்ட வாசகர்களை சென்றடைவதே. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முதற் புள்ளிகளாக இருக்கும்.

மிகவும் நேசிப்புடன், ரசித்துப் படித்தாலும் மொழிநடை சற்று நெருடலாகத் தெரிகிறது. காரணம் மொழியாக்க புத்தகம் என்பது மட்டுமல்ல; தமிழ்ச் சமூகத்தில் இந்தக் கருத்து தளமும், இந்தப் புத்தகம் எழுதப்பட்ட களமும் அதில் வரும் ஆசிரியர் பாத்திரமும் நாம் கேட்டறியாதது. மேலும் கற்பனைக்குரியது. இருப்பினும், குழந்தைகளை வளர்ப்பதில் கற்றுக் கொடுப்பதில் இந்தச் சமூகம் கற்க வேண்டிய பாலபாடம்தான் இப்புத்தகம். ஒரு வரியில் சொல்வதானால் "ஒவ்வொரு குழந்தையும் மதிப்புக்குரிய நமது சகமனிதர்" என்னும் கருத்தை நமது சமூகம் இயக்க வேண்டும் என்பதை அழகாகச் சொல்லும் இந்நூல் நான் படித்ததில் பிடித்தது.

- பி.எஸ்.அஜிதா

Pin It