நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் தமிழ் வட்டார வழக்கு அகராதிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழில் சில வட்டார வழக்கு அகராதிகள் உருப்பெற்றுள்ளன. இவ்வகராதிகளில் அகராதியியல் நெறிமுறைகள் குறைவாக இருப்பதைக் காணலாம். அகராதியியல் சார்ந்த ஆய்வுகள், பார்வை நூல்கள் குறைவாக இருப்பதும்கூட இதற்குக் காரணம் ஆகும். இன்றைய நிலையில் தமிழ் அகராதியியல் துறையில் வெளிவந்துள்ள நூல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அகராதி உருவாக்கத்தில் கவனம் செலுத்திவரும் அறிஞர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழில் கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக விளங்கும் அகராதியியல் துறையில் ஈடுபாட்டுடன் உழைத்து, அகராதிகளை உருவாக்கிவருகின்ற திரு.பா.ரா.சுப்பிரமணியன் அவர்களினால் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகச் சொல்வலை வேட்டுவன் என்ற நூல் வெளிவந்துள்ளது. 1970 தொடங்கி 2009 வரையிலான பல்வேறு காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முதல் முறையாக நூல் வடிவம் பெற்றுள்ளன.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நாட்டுப்புறவியல், அகராதியியல், பல்வகை என்று மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்புற மரபுகளில் மிகுதியும் படிந்திருக்கும் மொழியின் சொல், பொருண்மை வளத்தை அறியாத, தேடாத ஒருவரால் சிறந்த அகராதியியலாளராக முடியாது என்பதனால் அடிப்படையில் இந்த இரண்டு துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவைதான் எனலாம். திரு. பா.ரா. சுப்பிரமணியன்(பாராசு) அவர்கள் தமிழக நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்த முதல் ஆய்வாளராவார். அகராதியியலாளராகத் தமிழ் மொழிக்குச் சிறந்த கொடைகளை வழங்கி வந்தாலும் அவர் தொடர்ந்து நாட்டுப்புறவியல் துறையில் பணியாற்றாதது நாட்டுப்புறவியலுக்கு மிகப் பெரிய இழப்புதான் என்பதை இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணருவர். அவர் செய்துள்ள தொடக்ககால ஆய்வுகளே உலக அளவிலான ஆய்வுப் போக்குகளுக்கு இணையாக இருப்பதைக் காணமுடிகின்றது. குறிப்பாக அமைப்பியல் சார்ந்த ஆய்வுகளை 60 களிலேயே பாராசு நிகழ்த்தி யுள்ளார். இவ்வமைப்பியல் ஆய்வு முறையை இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகளிலும் காணமுடிகின்றது.

இன்று தமிழ்நாட்டில் நாட்டுப்புறவியல் சார்ந்த ஏராளமான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மிக எளிமையாக முனைவர் பட்டம் பெறுவதற்கான துறையாக அத்துறை ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ்ச் செய்திகளைச் சேகரித்து விளக்க முறையில் வகைதொகைப்படுத்தி அளித்தால் போதும் என்ற நிலையே தொடக்கத்தில் இருந்தது. இன்றும் அந்நிலை ஒரு சிலரால் தொடரவே செய்கின்றது. உண்மையில் நாட்டுப்புறவியல் துறை ஆழமான உழைப்பை, கோட்பாட்டு முறையிலான ஆய்வைக் கோருவது என்பதை ஒருசிலரே வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாகப் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை சார்ந்து உருவாகியுள்ள கல்வி, ஆய்வு முறைமை இத்தகு சிந்தனையை உருவாக்கியுள்ளது. தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வில் பாளையங்கோட்டை மரபுக்கு முன்னோடியாகப் பாராசுவின் ஆய்வு முறைமை இருப்பதை இக்கட்டுரைகளைப் படிப்பவர்கள் உணரலாம். அதற்குக் காரணம் மேலை நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைப் பற்றிய அறிதலும் புரிதலும் அவருக்கு இருந்துள்ளமையே ஆகும். இதனை, நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள் அன்றும் இன்றும் கட்டுரை நன்கு விளக்கு கின்றது. இக்கட்டுரையில் உலக அளவில் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள கோட்பாடுகளைச் சுருக்கமாக அளித்துள்ளார். மேலும் அவை ஒன்றுடன் ஒன்று கொண்டிருக்கும் தொடர்புகளையும் மதிப்பிடுகின்றார். மேலைக் கோட்பாடுகள் நமது ஆய்வு முறைகளுக்கு ஏற்றவையல்ல என முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு உரிய முறையில் பதில் அளித்து மேலைக் கோட்பாடுகளைத் தமிழ்ச்சூழலில் எப்படிப் பொருத்தி ஆராயலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.

நாட்டார் வழக்காறுகளின் பின்புலமும் இயங்கு நெறியும் என்ற கட்டுரையில் நாட்டுப்புறவியலின் போக்குகளைச் சுட்டும் ஆசிரியர் தமிழக நாட்டார் வழக்காறுகளைப் பற்றிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அவற்றின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய முறையை, நிகழ்த்தப்பட்டுள்ள முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் விளக்கிச் செல்கின்றார். மேலும் எழுதப்பட்ட இலக்கியங்களையும் நாட்டுப்புற இலக்கியங்களையும் மொழியியல் அணுகுமுறையில் அணுகி ஆய்வு நிகழ்த்தும்போது மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை மற்றொரு கட்டுரையில் விவரிக்கின்றார். இரண்டு இலக்கியங்களுக்கும் மொழிப்பின்னல் வேறுபட்டிருப்பது, நாட்டுப்புற இலக்கியங்களின் சமகாலத்தன்மை ஆகியவற்றை விளக்கி நாட்டுப்புற இலக்கியங்களை ஆராயும் போது எழுத்திலக்கியம் போலல்லாமல் தனித்த தன்மையுடையதாகக் கருதி ஆராய வேண்டும் என வற்புறுத்துகின்றார். சங்க இலக்கிய ஆய்வில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளருக்கு மிகுந்த வாய்ப்புகள் இருப்பதைக் காட்டும் ஆசிரியர் நாட்டார் மரபுகளைச் சங்க இலக்கியங்களில் தேடிய முந்தைய ஆய்வுகள், சுட்டிக்காட்டப்பட்டுள்ள அவற்றின் போதாமைகள், முரண்கள் ஆகியவற்றைக் காட்டி விளக்குகின்றார். கோவை மாவட்ட ஒப்பாரிப் பாடல்களின் தன்மைகளை விளக்கும் கட்டுரையில் நெல்லை வட்டாரப் பாடல்களை இணைத்து ஆராய்ந்து, வட்டாரம் சார்ந்து நாட்டுப்புறப் பாடல்களின் அமைப்பில் காணப்படுகின்ற தனித்தன்மைகளை வெளிப்படுத்துகின்றார். அமைப்பியல் ஒழுங்கிற்குள் இப்பாடல்களை நிறுத்திவிடாமல் அமைப்பின் வேறுபாடுகளைப் பதிவு செய்கின்றார். ஆலன் டண்டிசுடன் ஆசிரியர் நிகழ்த்திய உரையாடலும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களைக் கவனத்தில் கொள்ளாமல் எழுதப்பட்ட இலக்கியங்களை மட்டும் கவனப்படுத்தி உருவாக்கப்படும் இலக்கியக்கொள்கைகள் தவறானதாகவே அமையும் என்ற கருத்தைத் தெரிவிக்கும் கட்டுரை நா.வா.வினால் குறிப்பிட்டுச் சுட்டப்படுவது கருதத்தக்கது. வாய்மொழி வரலாறு பற்றிய கருத்துகளுக்கான முன்னோடி ஆய்வுகளில் ஒன்றாக இதனைக் கருதலாம். நாட்டுப்புற ஆய்வுகள் ஆழங்கால்படுவதற்குத் தேவையான பல்வேறுவிதமான கருத்துக்களைப் பாராசுவின் கட்டுரைகளிலிருந்து நம்மால் கண்டடைய முடிகின்றது. தமிழ்த்துறையில் நிகழ்த்தப்பட்ட தொடக்க கால நாட்டுப்புறவியல் ஆய்வுகள் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க பின்னால் வந்த ஆய்வுகள் வெறும் தொகுப்பு முறையில் அமைந்தமையும் கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள் தமிழ் ஆய்வுக்குத் தொடர்பற்றவையாகக் கருதப்படுவதும் தமிழ் ஆய்வின் தரம் வளர்நிலையில் இல்லை என்பதையே காட்டுகின்றன.

அகராதியியல் பகுதியில் காணப்படுகின்ற பெரும்பாலான கட்டுரைகள் சாதாரண வாசகர்களை நோக்கியதாக அமைந்திருக்கின்றன. அகராதிகளைப் பற்றிய மக்கள் மனநிலைகளை அலசும் போக்கில், தாய்மொழிக்கான அகராதிகளைப் பயன்படுத்துவது குறைவாக இருப்பதையும் உண்மையில் பல சொற்களுக் கான அகராதிப் பொருள்கள் நமக்குத் தெரிவதில்லை என்பதையும் இக்கட்டுரைகள் சுட்டுகின்றன. அகராதிகள் அதை உருவாக்குபவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப பலவகைகளில் அமைவதையும் நமக்குத் தேவைக்கான அகராதி எது என அறிந்தே அகராதிகளை வாங்கவேண்டும் என்பதையும் சில கட்டுரைகள் முன்வைக்கின்றன. நோக்கமாறுபாடுகளே சொற்கள் விடுபட்டும், பொருள் அளிக்கின்ற முறையில் மாற்றங்களும் இருப்பதற்குக் காரணம் என்பதைக் கட்டுரைகள் பல வகைகளில் காட்டுகின்றன. ஒவ்வொரு அகராதியும் சில அகராதி உருவாக்க நெறிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. இந்நெறிமுறைகளை அவை கட்டொழுங்காகப் பின்பற்றாமல் போவதும் உண்டு இதனாலேயே பதிவமைப்புகளில் சிக்கல்கள் எழுகின்றன என்பதை வையாபுரிப்பிள்ளையை முன்வைத்து ஒரு கட்டுரை பேசுகின்றது. ஒரு சிறந்த அகராதியியலாளர் அகராதிகளை உற்று நோக்குவதன் மூலம் தமக்கான அகராதியியல் நெறிமுறைகளை வகுத்துக்கொள்கின்றார். இந்நெறிமுறைகளை வகுக்கும் நோக்கத்திலேயே பாராசு அவர்கள் பல்வேறு அகராதிகளையும் திறனாய்வு செய்துள்ளார் எனலாம். பாராசு அவர்கள் வகுத்துக் கொண்ட அகராதியியல் நெறிமுறைகளை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி ஆகிய அகராதிகளின் முன்னுரைகளில் நம்மால் காண முடிகின்றது. மேலும் சொல் வழக்குக் கையேட்டிற்கு எழுதிய முன்னுரையும் சில அகராதிகளுக்கு எழுதிய அறிமுக, அணிந்துரை களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பாராசு தற்போது தயாரித்துக்கொண்டிருக் கின்ற சொற்கூட்டு அகராதிக்கான தேவைகளை விளக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

அகராதிகளில் பொருள்விரிவைக் காட்டுகின்ற முறையைப் பற்றிப் பேசும் கட்டுரை அகராதியை உருவாக்குபவர்களின் நோக்கத்திற்குத்தகப் பொருள் அளிக்கின்ற முறைமை மாற்றம் பெறுவதையும் பொருள் விரிவுகளைக் காட்டுவதில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைகளையும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, ஆக்ஸ்போர்டு கற்போர் அகராதி, வெப்ஸ்டர் அகராதி, ஆக்ஸ்போர்டு அகராதி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு விளக்குகின்றது. அது போலவே பொருளை வரிசைப்படுத்துவதிலும் பல விதமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் அடிப்படையில் மற்றொரு கட்டுரை விளக்குகின்றது. அகராதியியல் பற்றிய கட்டுரைகள் ஆய்வுப் போக்கில் அமைந்திருந்தாலும் சில கட்டுரைகள் வெகுமக்களை நோக்கியவையாக எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளில் ஒருவகையான கதை கூறும் போக்கினைக் காணமுடிகின்றது. இந்த எழுதுமுறையினால் வாசகனை நெருங்கிச் செல்லும் கட்டுரைகள் அறிவூட்டுவதுடன் இன்பமளிக்கவும் செய்கின்றன.

பல்வகைப் பகுதியில் காணப்படுகின்ற வ.அய். சுப்பிரமணியன் அவர்களின் இரங்கல் கட்டுரை மு. அருணாசலம் அவர்களின் 3 நூல்கள் பற்றிய கட்டுரை ஆகியவற்றைத் தவிர்த்த பிற கட்டுரைகள் அனைத்தும் அடிப்படையில் மொழி சார்ந்தவையாகவே உள்ளன. மாற்றுவெளி இதழ் பற்றிய திறனாய்வுக் கட்டுரையும் கால்டுவெல் சிறப்பிதழ் பற்றியது என்பதனால் அதுவும் ஒரு வகையில் மொழி பற்றியதாகவே உள்ளது. நாட்டுப்புறவியல் பற்றிய கட்டுரைகளிலும் ஆசிரியருடைய மொழி ஆய்வுப் புலமையைக் காணமுடிகின்றது.

மொழி ஆய்வுக்குப் பங்களித்துள்ள இந்நூல் மொழி சார்ந்த அரசியல் பார்வைக்கு இடம் தராமல் தூய கல்வியியல் சார்ந்ததாக அமைந்திருக்கின்றது. இந்தத் தூய கல்வியியல் பார்வையினால் கட்டுரையின் தொடக்கத்தில் சில வரையறைகளை உருவாக்கிக்கொண்டு அதிலிருந்து மாறாமல் எழுதிச்செல்கின்றார். இதனால் சில கட்டுரைகளின் இடையில் சிக்கல்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அவற்றை விளக்காமல் தமது ஆய்வுக்குள் சென்று விடுகின்றார். அவர் சுட்டிக் காட்டுகின்ற சிக்கல்கள் மட்டுமின்றி மேலைக் கோட்பாடு களைத் தமிழ் ஆய்வுகளுக்குப் பயன்படுத்துகின்ற முறைகளும் ஆய்வு நெறிமுறைகளும் ஆய்வின் எழுது முறைகளும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வளர்த்தெடுக்க வேண்டியவையாக உள்ளன (தமிழகப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றியிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கலாம்.) அப்படி வளர்த்தெடுப்பதன் மூலம் தமிழ் ஆய்வை உலகத்தரத்திற்கு நம்மால் உயர்த்தமுடியும்.

 

சொல்வலை வேட்டுவன்,

பா.ரா. சுப்பிரமணியன்,

கயல்கவின் புக்ஸ், சென்னை. பக்: 400 | ரூ.450

Pin It