(பாவலர் நா. இராசாரகுநாதனின் “வேர்கள் மண் பிடிக்கும்” என்ற கவிதை நூலைத் திருச்சி ரவி சிற்றரங்கில் 18.10.2014 அன்று வெளியிட்டுப் பேசியதன் எழுத்து வடிவம், சில இடங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.)

பாவலர் இராசாரகுநாதன் அவர்களின் பாத் தொகுப்பான “வேர்கள் மண் பிடிக்கும்” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் என்னைப் பேச அழைத்த போது “ நீங்கள் எனது கவிதை பற்றிப் பேச வேண்டாம். மற்றவர்கள் அது பற்றிப் பேசுவார்கள். நீங்கள் ஒரு நல்ல தலைப்பில் இலக்கிய உரை ஆற்ற வேண்டும்” என்றார். அதன்படி “படைப்பில் அறம்” என்ற தலைப் பையும் தந்தார்.

இராசாரகுநாதனின் கவிதை நூலை வெளியிட்டு விட்டு, அதற்கான விழாவில் அது பற்றி நான் பேசா மல் இருப்பது ஞாயமில்லை. கவிதை நூல் பற்றியும் நான் சில சொல்ல வேண்டும். எனக்கு முன் “வேர்கள் மண் பிடிக்கும்” என்ற இந்நூலை மதிப்புரை செய்து பேசிய தஞ்சை மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் அவர்கள் இராசாரகுநாதனின் கவிதைத் தொகுப்பில் உள்ள கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளையும் எடுத்துச் சொல்லி பாராட்டி விட்டார். இருந்தாலும் அதிலும் ஒதுங்கிய ஒன்றிரண்டு கவிதைகளை நான் எடுத்துக் காட்டி அவற்றின் சிறப்பைப் பாராட்டியாக வேண்டும்.

அரசியலில் தனிநபர் வழிபாடும் தனிநபர் பகையும்

அதற்கு முன் ஒன்றைச் சொல்ல வேண்டும். இங்கு பேசிய தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, என்னைப் பாராட் டிப் பல பட்டங்கள் கொடுத்துப் பேசினார். தமிழ்த் தேசியத்தின் தந்தை, துருக்கியின் கமால்பாட்சா போன்றவர் என்றெல்லாம் சொன்னார். இப்படிப்பட்ட பட்டங்களை நாம் கொடுத்துக் கொள்ளக் கூடாது.

இங்கே பேசிய கவிஞர் தமிழாளன் அவர்கள் அக இலக்கியத்தில் சொல்லப்படும் கைக்கிளைப் பற்றி- ஒருதலைக் காமம் பற்றிச் சொன்னார். அகத்திணையில் இன்னொரு காதலும் சொல்லப்பட்டிருக்கிறது. அது பெருந்திணை; அதாவது பொருந்தாக் காமம். தமிழகத் தில் அரசியல் தலைவர்களுக்கு இப்படிப் பட்டம் கொடுத்துக் கொள்வதைப் பெருந்திணை என்று கருதுபவன் நான்.

திராவிட முன்னேற்றக் கழகம்தான் இப்படிப்பட்ட பட்டங்களை வழங்கியது. இப்போது அது பன்மடங் காகப் பெருகிவிட்டது. இப்படிப்பட்ட பட்டங்களை அருவருக்கும் மனநிலை நமக்கு வேண்டும்.

நாம் ஏதாவது சாதித்திருந்தால் அதனைப் பின்னர் வரலாறு சொல்லட்டும். நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது.

கேரளத்தில், கர்நாடகத்தில், வட மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் தலைவர்களுக்குப் பட்டம் கொடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்த மாநிலங் களில் உள்ள அரசியல் பண்பாடு கூட தமிழ்நாட்டில் கிடையாது. தமிழ்நாட்டில் தனிநபர் வழிபாட்டு அரசி யலும் தனிநபர் பகை அரசியலும் வீங்கிப் பெருத்து சீழ்வடிந்து கிடக்கிறது. சாரத்தில் ஒரே கொள்கையும் நடைமுறையும் கொண்ட கட்சிகள் தனிநபர் பகைக் கட்சிகளாக இங்கு ஒன்றையன்று பழிவாங்கிக் கொள்கின்றன. இந்த அநாகரிகம் மற்ற மாநிலங்களில் இல்லை.

தமிழகத்திற்கான பொதுச் சிக்கல்களில் இங்கே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவதில்லை. சட்டமன்றத்திலே ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் அமர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடத்த முடியவில்லை. உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக் கொடுத்த தமிழினம் தனிநபர் ஆதாய அரசியலால் இன்று கேவலப்பட்டுக் கிடக்கிறது.

போலியாகப் பேசி போலியாக அரசியல் நடத்திப் போலித் தனங்களைத் தமிழ்நாட்டில் வளர்த்து விட்டார்கள். நாம் தமிழ்த் தேசியர்கள்; புதிய இலட்சிய அரசியலை, புதிய பண்பாட்டெழுச்சியை முன்னெடுப்ப வர்கள். அந்தப் போலித் தனங்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.

இராசாரகுநாதன் கவிதைத் திறம்

தோழர் இராசாரகுநாதன் தமிழ்த் தேசியப் பாவலர். தமிழ்த் தேசியத்தை மடக்குவதாக நினைத்துக் கொண்டு கேள்வி கேட்பவர்களுக்கு நெற்றியடியாக விடையறுக்கிறார் ஒரு கவிதையில். காலத்தைக் கீறும் கோடரி என்பது கவிதைத் தலைப்பு.

“பெரிதாக இருப்பது பலம்தானே

அறிவாளிகள் கேட்கிறார்கள்

பஞ்சுமூட்டை பெரியதுதான்

ஆனால் சிறிய பாறையே பலமானது.

ஆறரைக் கோடியாய் இருப்பதை விட

நூறுகோடியாக இருப்பது பெருமையல்லவா

அறிவாளிகள் கேட்கிறார்கள்

நூறுகோடியாய் இருப்பதை விட

ஆயிரம்கோடியே பெருமை என்று

எந்த ஏகாதிபத்தியமும்

எல்லைகளை அழிக்கவோ

இராணுவத்தைக் குறைக்கவோ முன் வருமா?

இப்படி மடக்க வந்த கேள்விகளை மடக்குகிறார்.

“மஞ்சப் பை” என்ற அருமையான கவிதை! மஞ்சள் நிறத் துணிப்பையில்தான் பணமோ, பழமோ, புத்த கமோ, துணியோ அனைத்தையும் போட்டு எடுத்துச் செல்வோம். அந்தப் பை இப்பொழுது நாகரிகக் குறை வான பை. நெகிழிப் பை அதாவது பிளாஸ்டிக் பைதான் இப்போது நாகரிகம். ஆனால் அந்த பிளாஸ்டிக் பை எந்த அளவு சுற்றுச் சூழலைக் கெடுக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அந்த நெகிழிப் பையை விட முடியவில்லை. நெகிழிப்பை உற்பத்தி செய்வதைத் தடுக்காத ஆட்சியாளர்கள் நெகிழிப்பை ஆபத்தானது அதனைப் பயன்படுத்தாதீர்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். இது போலித் தனமான அக்கறை. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று எழுதி வைத்துக் கொண்டு அரசு டாஸ்மாக் கடை நடத்துவது போன்றது.

“எங்களின்

பிறப்புக் காலக் குறிப்புகளின்

கட்ட மடிக்கப்பட்ட

சுவடிகளைச் சுமந்து கிடந்தது

அதுதான்!

நடைவண்டி நாட்களில்

நலிவுறும் காலத்தே

ஊற்றப்பட்ட

உரை மருந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்தது

அதில்தான்!

..... ..... ......

தேவரீர் அண்ணாவுக்கு என

சித்தப்பா எழுதிய

கடிதங்களில் சில உட்பட

அப்பாவின்

ஆவணக் காப்பகம் அதுதான்!

.... .... ......

புதைத்தால் உரமாகும்

எரித்தால் எருவாகும்

எதுவாயினும் ஆகாதெனச் சொல்லி

நிலமழிக்கும் நெகிழியை நாடும்

அந்நியம் விரும்பும்

அடிமைகள் எண்ணி

அழுகிறது

மஞ்சள் பையோடு

மண்ணின் மொழியும்

           என்கிறார் இராசாரகுநாதன்.

தமிழ்த் தேசியம் மனித வாழ்வின் பல்வேறு கூறுகளையும் பார்த்து அவைபற்றி அக்கறை கொள் கிறது. தோழர் சா. தமிழ்ச்செல்வன்

“எப்போதும் வறண்டு கிடப்பதால்

வருவதே இல்லை

வாய்க்கால் தகராறு!

என்று ஆற்று நீர் உரிமை மறுக்கப்பட்ட கொடுமை பற்றி நையாண்டியாகக் கூறி சினத்தை வெளிப்படுத் தினார். இணையதளங்களில் ஒரு நண்பர் எழுதிய கவிதையில்,

காவிரி

கர்நாடகத்தில் இருக்கிறது

முல்லைப் பெரியாறு

கேரளத்தில் இருக்கிறது

நெய்வேலி இந்தியாவில் இருக் கிறது

என்று எழுதினார். தமிழ்ச் செல்வன் உரிமைப் பறிப்பை நயமாகச் சொன்னார். ஆனால் இணைய தளத் தில் எழுதியவர் இன்னும் சீற்றமாக வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் அறச்சீற்றம்.

காவிரியைத் தடுக்கின்ற, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முய லுகின்ற கர்நாடக கேரள மாநிலங் களுக்கு நெய்வேலி மின்சாரத்தைத் தராதே என்று அவர் இக்கவிதையில் முழங்கவில்லை. ஆனால் வாசகரிடம் நெய்வேலி மின்சாரத்தை ஏன் தர வேண்டும் என்ற வினாவைப் பளிச் சென்று எழுப்பிவிடுகிறார்.

தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் படைப்புகள் நேரடியாக துருத்திக் கொண்டு பரப்புரை செய்யத் தேவை இல்லை. அது கூடாது. அழகியலோடு - சிறந்த வடிவத்தில் கருத்துகள் வெளிப்பட வேண்டும். அழகியல் கலையைத் தமிழ்த் தேசியப் படைப் பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண் டும்.

இலக்கியத்தில் அறம்

தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் படைப்புகளில் அறம் முதன்மை பெற வேண்டும்.

அறம் என்பது என்ன? இன்ப துன்பங்களைப் பிறருடன் சமமாகப் பகிர்ந்து கொள்வதை அறம் என்று சுருக்கமாகச் சொல்கிறோம். ஆனால் அறம் விரிவானது; பல்வேறு கூறுகளைக் கொண்டது.

காதல் செய்பவர்கள் - திருமணம் செய்து கொண்டு -குடும்பம் நடத்துவதை அறத்தொடு நிற்றல் என்றார் தொல்காப்பியர். காதல் செய்துவிட்டுக் கைவிட்டு விடக் கூடாது என்றார். அகவாழ்வு - புற வாழ்வு இரண்டிலும் அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வாழ்வியல் வகுத்தார்கள் தமிழர்கள். அதனால்தான் கணவனும் மனைவியும் குடும்பம் நடத்துவதை இல்லறம், மனை யறம் என்று கூறினர்.

கோவலன் தன்னைப் பிரிந்து மாதவியோடு சென்று வாழ்ந்த போது, தனது தனிமைத் துன்பத்தைப் பெரிது படுத்தாமல், கணவனுடன் குடும்பம் நடத்தி செய்ய வேண்டிய அறச் செயல்களைச் செய்ய முடியவில்லையே என்றுதான் கண்ணகி வருந்தினாள் என்பார் இளங் கோவடிகள்.

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

- என்று கண்ணகி வருந்தினாள்.

கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு பிணக்குகளாகிய புலவி, ஊடல் இவற்றில் கணவன் இயல்பு பற்றியும் மனைவி இயல்பு பற்றியும் கூட தொல்காப்பியர் குறிப்பி டுகிறார்.

“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியுள் உரிய..” என்றார்.

கணவன் பணிந்து போதலும் மனைவி சமரசமின்றிப் பிடிவாதம் பிடிப்பதும் புலவி என்ற பிணக்கில் நடைபெறும் என்றார் தொல்காப்பி யர். அவர் காலத்திற்குப் பின் வந்த வள்ளுவரோ, ஊடல் தீர்வதற்கு இருவருக்கும் சமமான பொறுப் புண்டு என்கிறார். பிணங்கிக் கொண்டு இருவரும் பேசிக் கொள் ளாமல் இருக்கும் போது, முதலில் பேசுபவர் தோற்றுவிட்டார் என்று கருதி இருவரும் பிணக்கை நீட்டிக்கக் கூடாது. முதலில் யார் பேசித் தோற்கி றாரோ அவர்தான் அப் பிணக்கில் வென்றவர் ஆவார். பிணக்குத் தீர்ந்த பின் ஏற்படும் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். அதனால் தோற்றவர் வென்றார் என்றார் வள்ளுவர்.

“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் காணப் படும்”

புறவாழ்க்கைக்கான அறத்தை நிறையவே நம் முன்னோர்கள் விளக்கியுள்ளார்கள். போர்புரிவதில் கூட அறத்தைக் கடைபிடிக்க வேண் டும் என்பது நம் முன்னோர் நமக்குக் காட்டியுள்ள நெறியாகும்.

பகைவரோடு போர் புரியும் போது அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே தமிழர் பண்பு. இராமன் ஒரு மரத்தில் மறைந்திருந்து வாலியை அம்பெய்திக் கொன்றான் என்கிறது இராமாயணம். மகா பாரதத்தில் பல்வேறு சூழ்ச்சிகளைக் கண்ணன் செய்ததால்தான் பாண்ட வர் அணி வெல்ல முடிந்தது. ஒரு முறைக்கு மேல் அர்ச்சுனன் மீது அம் பெய்யக் கூடாது என்று குந்தி தேவி மூலம் கர்ணனிடம் கண்ணன் சத்தி யத்தை வாங்கச் செய்தான். தேரைப் பூமிக்குக் கீழ் அழுத்தினான். மேலும் பல சூழ்ச்சிகளைக் கண்ணன் செய்த தால்தான் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்கள் வென்றார்கள். இல்லையேல் தோற்றிருப்பார்கள். இவ்வாறான நயவஞ்சக முறைகளைத் தமிழர் போர் அறம் ஏற்கவில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போரில் தமிழர் அறத்தைக் கடைபிடித்தார். சிங்களப் பொதுமக்களைக் கொல்லும் நோக்கத்தில் அவர் குண்டு போடச் சொல்லவில்லை. சிங்களப் பெண்களை மானபங்கப்படுத்தும் செயலில் விடுதலைப் புலிகளை ஈடுபடச் செய்யவில்லை. இந்த ஒழுக்கக் கேடுகள் - அறங்கெட்ட செயல்கள் அனைத்தையும் சிங்க ளர்கள் செய்தார்கள். சிங்களத் தலைமை அவற்றை அனுமதித்தது. சிங்களர் ஆரிய இனத்தைச் சேர்ந்த வர்கள்.

கட்ட நாயக்கா விமானத் தளத்தில் நின்ற விமா னங்களைத் தகர்த்து விட்டுத் திரும்பியது விடுதலைப் புலிகளின் விமானப்படை. எங்கேயும் பொதுமக்கள் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் படை இலக்கை மட்டும் தாக்கிவிட்டுத் திரும்பியது புலிகளின் விமா னம். இதுதான் தமிழரின் போர் அறம்.

எனவே தமிழர் அறம் என்பது விரிவானது; அது நுட்பமான பல கூறுகளைக் கொண்டது.

மன அழுக்கை நீக்குதல் அறம்

“மனத்துக்குக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற” என்றார் திருவள்ளுவப் பெருந்தகை. ஒருவர் தமது மனத்தில் பொறாமை, பொய், அடுத்தவரைக் கெடுக்கும் நயவஞ்சகம், காமவெறி போன்ற அழுக்குகள் இல்லாமல் இருந்தால் அதுவே எல்லா அறங்களிலும் சிறந்த அறம் என்றார்.

மனத்தை அழுக்கில்லாமல் வைத் துக் கொள்வது அரிதிலும் அரிது. மனித மனத்தை ஒரு தடவைத் தூய்மைப்படுத்திக் கொண்டால் போதாது. உடம்பில் மட்டுமல்ல, உள்ளத்திலும் அன்றாடம் அழுக்குச் சேர்கிறது, உடம்பில் வெளி அழுக்கும் சேர்கிறது. வியர்வை, சிறுநீர், மலம் போன்ற உள் அழுக்கும் சேர்கிறது. அதுபோல், வெளி உலகில் மற்ற மனிதர்களிடம் உள்ள பேராசை, போட்டி பொறாமை, போலித்தனங் கள் போன்ற அழுக்குகள் நம்மை வந்து சேர்கின்றன. இவை பிறரிடமி ருந்து வரும் தொற்று நோய் போன் றவை. தன்னல நோக்கில், மிகை நுகர்வு நோக்கில், தன்மனத்தில் உரு வாகும் அழுக்குகள் பல இருக்கின் றன. தற்செருக்கு, ஆணவம் போன் றவை நம் மனம் உருவாக்கிக் கொள்ளும் அழுக்குகள்.

இந்த மன அழுக்குகள் ஒவ்வொரு மனிதரிடமும் அன்றாடம் சேர்கின் றன. இந்த அழுக்குகளை அவ்வப் போதும் - அன்றாடமும் துடைத்தும், கழுவியும் தூய்மைப்படுத்திக் கொண்டால் ஓரளவு நமது மனம் தூய்மை அடையும். மனத் துப்புரவுப் பணி நிரந்தரமானது. அன்றாடம் துப்பரவு செய்ய வேண்டும். காலையில் தூய்மையாக அணிந்து சென்ற ஆடையில் மாலையில் வீடு திரும்பும் போது அழுக்கு சேர்ந்திருக் கும், தூசி படிந்திருக்கும். சட்டையைக் கழற்றி மாட்டும் போது உதறித் தூசியைப் போக்குகிறோம். ஓரிரு நாள் கழித்து அதே ஆடையைத் துவைத்து அழுக்கு நீக்கி அணிகிறோம். அதேபோல் மனத்தில் அன்றாடம் சேரும் அழுக்கை - தூசியை அன்றாடம் தூய்மைப் படுத்த வேண்டும்.

“புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்” என்றார் வள்ளுவர்.

உடல் தூய்மை தண்ணீரால் வரும்; மனத்தூய்மை உண்மையைக் கடைப்பிடிப்பதால் வரும் என்றார். உண்மை பேசுதல் அறத்தின்பாற்பட்டது.

           அடுத்த இதழில் முடியும்....

Pin It