தி.மு.க. ஆட்சி 1996-2001 ஆண்டுகளில் நடந்ததற்கும் இப்பொழுது நடப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. 1976லிருந்து நீண்ட காலம் பதவியின்றி இருந்து 1989 இல் சிறிது காலம் பதவி பெற்று அதுவும் 90இல் கலைக்கப்பட்டு, அதன்பிறகு 1996 இல் ஆட்சிக்கு வந்ததால், கொஞ்சம் அடக்கி வாசித்தது தி.மு.க.

ஆனால் இந்த 2001-2011 என்பது 1970களில் கலைஞரை முதல்வராகக் கொண்டு அது ஆடிய ஆட்டங்களை மீண்டும் அரங்கேற்றுவதாக அமைந்து விட்டது. எல்லாக் கூறுகளிலும் இந்தக் கட்டுப்பாடிழந்த அத்துமீறல் இருக்கிறது. தொழிற் சங்கத் துறையில் 1970களை நினைவூட்டுவதுபோல் தி.மு.க.வின் அராஜகங்கள்,துரோகங்கள் நிகழ்கின்றன.

சென்னை அருகே பாஸ்கான் என்று கைபேசிக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 1800 பேர் நிரந்தரத் தொழிலாளிகள். 6000 பேர் அத்துக் கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளிகள்.

இத்தொழிற்சாலையில் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்துதல், சம்பள உயர்வு, வேலை ஒழுங்கமைப்பு, பெண்களை இழிவுபடுத்துவதையும் அவர்களுக்கு முறையற்ற பணிச்சுமையையும் நீக்கல் உள்ளிட்ட பல கோரிக் கைகளுக்காக தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.

அத்தொழிற் சாலையில் தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு. ஆகிய இரு சங்கங்கள் இருக்கின்றன. இரு சங்கங்களுடனும் பேச்சு நடத்த தொழிற்சாலை நிர்வாகம் அணியமாக இருக்கிறது.

ஆனால் தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொ.மு.ச.வுடன் மட்டும்தான் பேச வேண்டும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்துப் பேச்சு நடத்தாமல் தடுத்து வருகிறார்.

இந்தப் போராட்டத்தை ஆதரிக்கச் சென்ற சி.ஐ.டி.யு. தமிழகத் தலைவர் தோழர் அ.சவுந்திர ராசனையும், சி.பி.எம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் முத்துக் குமாரையும் தளைப் படுத்தி சிறையில் அடைத்தனர் காவல் துறையினர். தோழர்கள் சவுந்திர ராசனுக்கும் முத்துக் குமாருக்கும் கை விலங்கு மாட்டி இருக்கிறார்கள். இது சட்டவிரோதம். சி.ஐ.டி.யு. வுடன் பேச்சு நடத்தி கோரிக்கை களை ஏற்பதே ஞாயம்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரித் தொழிலகத்தில் 13 ஆயிரம் பேரை ஒப்பந்தத் தொழி லாளர்களாக வைத்துள்ளனர். அது இந்திய அரசின் தொழிலகம். நீண்டகாலமாக அவ்வப்போது வேலை நிறுத்தம் செய்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை ஆலைத் தொழிலாளர்களாய் நிரந்தரப் படுத்தக் கோரி வருகின்றனர். வாக்குறுதி கொடுத்த நிர்வாகம் நிரந்தரப் படுத்த மறுக்கிறது. சி.பி.ஐ.யின் ஏ.ஐ.டி.யு.சி இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறது. மொத்த நெய்வேலித் தொழிலகத்தில் நிர்வாகத்தின் ஏற்பு (அங்கீகாரம்) பெற்ற சங்கங்களாகத் தொ.மு.ச.வும், பா.ம.க.வின் பாட்டாளித் தொழிற் சங்கமும் இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 19 ஆம் நாளிலிருந்து மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அக்டோபர் 19 அன்று இதற்காகக் கடலூர் மாவட்ட முழு அடைப்பு நடந்தது.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தொடக்கத்தில் இப்போராட்டத்தில் சேர்ந்திருந்த தி.மு.க. சங்கமான தொ.மு.ச. பின்வாங்கி வேலை நிறுத்தத்தை உடைத்து வேலைக்குப் போகிறது. நிர்வாகத்துடன் தொ.மு.ச. ஒரு துரோக ஒப்பந்தம் போட்டது. அதில் பணி நிரந்தரம் இல்லை. ஆனாலும் பெரிய அளவில் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

 தமிழக முதல்வர் கருணாநிதி தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள். அங்கு வேலை நிறுத்தம் இல்லை என்று சீர் குலைவு அறிக்கை கொடுத்தார்.

13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளிகளையும் ஆலையின் நேரடித் தொழிலாளிகளாக ஏற்று நிரந்தரப் படுத்த வேண்டும் என்ற ஞாயமான கோரிக்கையைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

Pin It