உனக்கு இன்னுமா புரியவில்லை?
வாக்குக்குக் கொடுக்கும் அரிசி
உனக்கான வாய்க்கரிசி என்று!

நீ அறிவது எப்போது?
உனக்குக் கொடுப்பது மூக்குத்தி அல்ல
மண்புழு

கோக்கப்பட்ட தூண்டில் முள்!
 
நீ
புரிந்துகொள்ளப்போவது எப்போது?
நீ பெற்ற வாக்குரிமை
உனக்கு வழங்கப்பட்ட
பிச்சைப் பாத்திரமல்ல!

பந்திகளில் பலகாரம்
முந்தியிருக்க

மறந்து விட்டு
எச்சில் இலைகளில்
இன்பம் காண்கிறாய்!

சாட்டையைக் கையில்
வைத்துக் கொண்டு
வேட்டி சேலைகளுக்காய்
விலை போகிறாய்!

இலவச வேட்டியை
இடுப்பில் உடுத்திக்
கொண்டு
தன்மானத்தை கொடியில்
உலர வைக்கிறாய்!

ஒருநாள்
பன்னீர்த் துளியின் வாசனைக்காக பலநாள்
கண்ணீர்த்துளிகளை காணிக்கையாக்குகிறாய்!

விளக்கொளி நீ என்பதை மறந்து
விட்டில் பூச்சிகளிடம் மண்டியிடுகிறாய்!

பருத்தி புடவையாய் காய்க்குமா
என எதிர்பார்க்கும் நீ
திருத்தி எழுதுவதெப்போது தீர்ப்பை?

Pin It