ஆக்க வேலை செய்வதை விட அழிவு வேலை செய்வதில் சிலர்க்கு ஆர்வம் அதிகமிருக்கும். தமிழ் எழுத்து வடிவத்தை மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் கருணாநிதி இறங்கியுள்ளார். தமிழ் மொழியின் கமுக்கப் பகைவர் வா.செ.குழந்தைசாமி ‘கண்டுபிடித்த’ புதிய குறியீடுகளைத் தமிழ் வரிவடிவத்தில் சேர்க்கத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார் கருணாநிதி.

 எழுத்து வடிவ மாற்றத்திற்கு வா.செ.குழந்தைசாமி கூறும் காரணங்கள் யாவை?

 “இது பெரியார் முன்வைத்த எழுத்துச் சீரமைப்புக்கு அடுத்த கட்டம். தமிழ் மொழி கற்பதற்கு நேரம் அதிகமாகச் செலவிடப்படுவதாக அறியப்பட்டு அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்துச் சீரமைப்பு. தற்போது பயன்பாட்டில் உள்ள 247 தமிழ் எழுத்துகளுக்கு நாம் 107 குறியீடுகளைக் கற்கிறோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின் படி 39 குறியீடுகள் கற்றாலே போதும். எனவே இந்த எழுத்துச் சீர்திருத்தம் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.”- தமிழக அரசியல் - கிழமை ஏடு - 27.05.2010.

 பெரியார் முன்வைத்த சில சீர்திருத்த வடிவங்கள் எளிமையானவை. குறைவானவை. அதனால் மக்களால் அவை ஏற்கப்பட்டன. ஏற்கெனவே தமிழில் உள்ள வரி வடிவக் குறியீடுகளைத்தான் அவர் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக “கை” என்பது ஏற்கெனவே இவ்வாறு எழுதப்பட்டு வந்தது. ஆனால் ‘ùல’ என்று வேறு வடிவில் எழுதப்பட்டு வந்தது. அதை கை போலவே ‘லை’ என்று மாற்றினார் பெரியார். அதே போல் “நா” என்று ஏற்கெனவே இருந்தது. “t” என்று எழுதப்பட்டதை ‘ணா’ என்று மாற்றினார்.

 குழந்தைசாமியின் சீர்திருத்தம் தமிழ் வரி வடிவத்தின் அடிப்படையையே மாற்றுகிறது. இந்த வரிவடிவம்தான் அதிகாரப் பூர்வமானது என்று அரசு அறிவித்தால் ஒரே நாளில் குழந்தைசாமியைத் தவிர உலகில் உள்ள கல்வி கற்ற தமிழர்கள் அனைவரும் எழுதப்படிக்கத் தெரியாதவர் களாக மாறிவிடுவார்கள்.

 நூலகங்கள், தனி யார் வீடுகள் கல்விக் கூடங்கள் மற்ற இடங்களில் உள்ள தமிழ் நூல்கள் அனைத்தும் காலாவதி ஆகி விடும். அவை அனைத் தும் குழந்தைசாமி எழுத்தில் மாற்றப் பட்டாக வேண்டும். கணிப்பொறிகளில் சேமிக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்டுரைகள், பாக்கள், நாடகங்கள், நூல்கள் ஆய்வுகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட வேண்டிவரும்.

 இவ்வளவு இழப்புகளை தமிழுக்குச் செய்ய வேண்டிய தேவை என்ன? ஆங்கிலம் கற்றுக் கொள் வதை விட தமிழ் கற்றுக் கொள்வது எளிது. எழுத்தும் உச்சரிப்பும் ஒன்றாக உள்ளது தமிழ். எழுத்து வேறு உச்சரிப்பு வேறு என்று இருப்பது ஆங்கிலம்.

 தமிழில் மொத்தம் 30 எழுத்துகள் உள்ளன. மற்றும் சில குறியீடுகள் உள்ளன. உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18. இவை இரண்டும் சேர்ந்து உருவாகும் உயிர் மெய் எழுத்துகளுக்குச் சில குறியீடுகள் சேர்க்கப்படுகின்றன.

 ஆயிரக்கணக்கான எழுத்துகள் சீன மொழியிலும் சப்பான் மொழி யிலும் இருக்கின்றன. அம் மொழிகளின் வரி வடிவம் இடியாப்பம் போல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அம்மொழிகளை விட தமிழ் மொழி யின் வரிவடிவங்களில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன.

 தமிழ் வரிவடி வங்கள் கணிப்பொறிக்கு ஏற்றவை அல்ல என்று தொடக்கத்தில் கூக்குரல் எழுப்பப்பட்டது. அறிவாற் றலும் இனப்பற்றும் மிக்க தமிழ் இளைஞர்கள் மிக நேர்த்தியாக தமிழ் மொழியில் மென் பொருள்கள் உருவாக்கி விட்டார்கள். ஒற்றை குறியீட்டுத் தமிழ் மென்பொருளும் சக்கை போடு போடுகிறது.

 கணிப்பொறியில் எந்தத் தமிழ் எழுத்தையும் இன்றைய வடிவத்தில் தட்டச்சு செய்வது மிக எளிதாகிவிட்டது.

 குழந்தைசாமிக்கும் குவளையூரார்க்கும் மட்டும் குதர்க்கமான சிந்தனைகள் தோன்றியது ஏன்?

 தமிழைக் கட்டாயப் பாட மொழியாக பயிற்று மொழியாக மேல்நிலைப்பள்ளி வரை கூட கொண்டுவர முடியவில்லை. 1967 லிருந்து ஆட்சியிலிருக்கும் தி.மு.க. இன்னும் தமிழைப் பொறியியல் கல்வி மொழியாக, மருத்துவக் கல்வி மொழியாகக் கொண்டு வர முடியவில்லை. மாறாக அரசுப் பள்ளிகளில், மாநகராட்சிப் பள்ளி களில் ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கிறது தி.மு.க. ஆட்சி.

 தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டும் இன்னும் தமிழ்நாட்டு ஆட்சித் துறைகளில் தமிழ் முழுமையான அலுவல் மொழி ஆக்கப்படவில்லை. அரசுத் துறைகள் ஆங்கிலத்திலேயே இயங்குகின்றன. அரசு ஆணை இன்றும் ஆங்கிலத்தில் தான் போடப்படுகிறது.

 மாவட்ட நீதிமன்றம் வரை தமிழில் வழக்கு நடத்தலாம், தீர்ப்பெழுதலாம் என்று சட்டமிருந்தும் எத்தனை நீதிமன்றங்களில் தமிழில் வழக்கு நடத்தப்படுகின்றது.? இதில் தமிழக அரசு தலையிட்டு மாவட்ட நீதிமன்றம் வரைத் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா? இல்லை. இவ்வாறான தமிழ் வளர்ச்சி வேலைகளையெல்லாம் செய்யாமல், தமிழ் எழுத்து வடிவத்தை மாற்றப் புகுந்து விட்டார் கருணாநிதி. அதற்கு என்ன தேவை ஏற்பட்டது?

 வா.செ.குழந்தைசாமி தமிழ்ப் பயிற்று மொழிக் கொள்கைக்கு எதிரானவர். அவர் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தபோது பொறியியல் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்கிட மறுத்துவிட்டார். வெள்ளோட்டமாக ஒரு வகுப்புத் தொடங்குவதைக் கூட அவர் ஏற்கவில்லை. அதன்பிறகு அவர் இந்திராகாந்தி திறந்த வெளிப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆனார். அப்போது பயிற்று மொழி பற்றி ஓர் அறிக்கையை அவர் தமிழக அரசுக்கு அளித்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“சிக்கலான பிரச்சினைகளைப் பரிசீலிக்கும் போது யதார்த்தமான அணுகுமுறை தேவை. எல்.கே.ஜி. யிலிருந்து கட்டாயப் பாடமாகத் தமிழ் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. பெற்றோரின் விருப்பம் ஆங்கிலமாக இருந்தால் ஆங்கிலப் பயிற்று மொழியும் அனுமதிக்கப் படலாம்”

 வா.செ.குழந்தைசாமியின் இந்தப் பரிந்துரையை மேற்கோள் காட்டித்தான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாயப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணையை சென்னை உயர் நீதி மன்றம் 20.4.2000 அன்று செல்லாது என்று தீர்ப்பளித்தது.

 அத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி, எஸ்.ஜெகதீசன், என்.தினகர் ஆகியோர் தம் தீர்ப்பில் வா.செ. குழந்தைசாமியின் பரிந்துரையை மேற்கோள் காட்டினர். (தீர்ப்புரை பக்கம் -49).

 இதே குழந்தைசாமியை தமிழ் வழிக் கல்வி செயலாக்கத்திற்காக அமைக்கபட்ட நீதிபதி மோகன் குழுவில் உறுப்பினராக அமர்த்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அக்குழுவில் தமிழ் என்று மட்டும் இருக்கக் கூடாது - தமிழ் அல்லது தாய்மொழி என்று இருக்க வேண்டும் என்று சேர்த்தவர் இந்தக் குழந்தைசாமி. இப்படிப்பட்ட தமிழ் எதிர்ப்பாளரான வா.செ. குழந்தைசாமி தமிழ் எழுத்து வடிவத்தை மாற்ற என்ன தகுதியும் உரிமையும் பெற்றுள்ளார்?

 தமிழை வளர்க்க ஆக்க வேலைகள் செய்யாத கருணாநிதியும் குழந்தைசாமியும் கூட்டணி சேர்ந்து கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.

 குழந்தைசாமி கூறும் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டால் கிட்டத்தட்ட தமிழின் அடையாளம் முற்றிலும் மாறிவிடும். வரிவடிவம் அழிவது மொழி அழிவின் தொடக்கமாக இருக்கும். மொழி அழிந்தால் “தமிழர்” என்ற இன அடையாளம் அழியும். கருணாநிதி குழந்தைசாமி கூட்டணியின் அடிமன விருப்பம் இந்த அழிவுகள் தாமா? நமக்கு வலுவான ஐயம் உள்ளது.

 முப்பது ஆண்டுகளுக்குமுன் சி.சுப்பிரமணியம் (முன்னாள் நடுவண் அமைச்சர்) தமிழை ஆங்கில வரிவடிவத்தில் எழுதலாம் என்று கூறிக்கொண்டிருந்தார். இப்படி ஆளாளுக்குத் தமிழைச் சிதைப்பதில் ஆர்வப்படுகிறார்கள். அதை வளர்ப்பதற்கு உருப்படியாக எதுவும் செய்வ தில்லை.

 தமிழ் மொழி தனது கட்டமைப்பு வரிவடிவம் இலக்கியம் போன்றவற்றின் சொந்த ஆற்றலால் அயல்மொழிச் சூறாவளி அனைத்தையும் எதிர்கொண்டு வீறார்ந்து நிற்கிறது. சீரிளமையோடு வளர்ந்து வருகிறது.

 கருணாநிதி ஈழத்தமிழர்களுக்குச் செய்த இனத் துரோகத்தை மறைக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற ஒரு கூத்து, கும்மாளக் கொண்டாட்டத்தை நடத்துகிறார். அதில், தமிழின் எழுத்து வடிவத்தை மாற்றிட அண்டிப் பிழைக்கும் அறிஞர் கூட்டம் பரிந்துரைத்து, அதனடிப்படையில் வரிவடிவம் மாற்றப்படுகிறது என்று கருணாநிதி அறிவித்தால் உயிரைப் பணயம் வைத்துத் தமிழர்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

 ஈழத்தமிழர்கள் இலட்சம் பேர் சிங்களப் படையால் கொல்லப்பட துணை நின்ற கருணாநிதி தமிழினத்தின் உயிர் மூச்சாம் தமிழையும் அழிக்க முன்வந்தால் அந்தப் பேரழிவைத் தடுக்க எந்த ஈகத்திற்கும் அணியமாவோம்.

Pin It