தமிழர் வரலாற்றின் மிக நீண்ட காலவெளியில் நிலவிய இரு வேறு சூழல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழர் ஆய்வில் ஈடுபடுவோருக்கும் தமிழர் வரலாற்றைத் திறனாய்வு நோக்கில் மட்டுமே அணுகுவோருக்கும் இந்த இரு சூழல்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் புதிய அடிப்படைகளை உருவாக்கும்.

சூழல் – 1

· ’சேரன் செங்குட்டுவன் முன் நால்வகை மறைகளைப் பாடும் பறையூர் கூத்தச் சாக்கையர்கள் வந்து ஆடினர்’ என்கிறது சிலப்பதிகாரம். (நடுகற்காதை:76-77)

இப்பாடலில், சாக்கையர்கள் ’நால்வகை மறையோர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஊர் பறையூர் என்பதனால், இவர்கள் பறையர் ஆகின்றனர். நால்வகை வேதங்களையும் பாடி ஆடும் தொழிலில் பறையர் இருந்தனர் என்பதும், அவர்களுக்கு மறையோர் எனப் பட்டம் சூட்டப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

· கண்ணகியுடன் மதுரை செல்லும் வழியில் கோவலனைக் கண்டு மாதவி அளித்த தூதுக் கடிதத்தைக் கொடுத்தான் கௌசிகன் எனும் பார்ப்பனன். (புறஞ்சேரி இறுத்த காதை:48-54)

தலைவன் - தலைவியிடையே ஊடல் நேரும்போது அதைத் தீர்த்து வைக்கும் தூதுவராக பார்ப்பனர் பயன்படுத்தப்பட்டது தமிழர் மரபு (தொல்காப்பியம் -பொருளதிகாரம்)

· தலைவி தன் தோழியிடம், முந்தின நாள் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறுகிறாள்.

‘தோழி, ஊரே உறங்கிய பிறகு அழகிய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு என் காதலனுக்காக அங்கே நின்றிருந்தேன். அப்போது ஒருவன் வந்தான். மயிர் சொட்டையாய்ப் போன வழுக்கைத் தலை; அதன் மேல் ஒரு முக்காடு; கருங்குட்டத்தால் குறைந்துபோன கால் கைகள்! ஒழுக்கங்கெட்டவன்! அவன் யார் தெரியுமா? நம் சேரியை விட்டுப் போகாது வந்து கிடக்கும் பார்ப்பான் தானடி அவன்!

அவன் என்னையே பார்த்தான்; மண்டியிட்டான்; பணிந்தான் வைக்கோலைக் கண்ட கிழட்டு எருது போல ஆசை கொண்டவனாகி என்னைவிட்டுப் போகாமல் சுற்றிச் சுற்றி வந்தான்.அந்த ‘முது பார்ப்பானின்’ மீது கை நிறைய மணலை அள்ளி வீசினேன். அவன் உரக்கக் கத்தினான்; கதறினான். புலியைப் பிடிக்கப் போனால் குள்ள நரி வந்து விழுந்தது போல் இருந்ததடி என் நிலைமை. நல்ல கூத்துதான் போ!’ (குறிஞ்சிக் கலி 29)

இப்பாடலில் இம்முது பார்ப்பான், ’இவ்வூர்ப் பலியை நானே கொள்வேன்’ என்கிறான். பூசைக்குப் படைக்கப்படும் பொருட்களை உண்டு வாழும் பார்ப்பனன் என்பது இதன் பொருள். ஆகவே, இப்பார்ப்பான் ஆரியப் பார்ப்பான் தான்; தமிழ் அந்த ணனோ, கணிய மரபு அறிவாளரான பார்ப்பனரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூழல் -2

தாழ்த்தப்பட்ட சாதிகளின் பிரதிநிதியான ராவ் பகதூர் எம்.சி.ராஜா, பிரிட்டானிய ஆட்சியாளர்களிடம் 1929 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கைகளில் சில:

· ’தாழ்ந்த வகுப்பார் திறமையானவர்களென்று பல விவசாய நிபுணர்கள் தெரிவித் திருக்கிறார்கள். அவர்களுக்குக் கல்வி கற்பித்துத் தற்காலத்திய கருவிகளைக் கொண்டு பயிரிட அவர்களைக் கற்பிக்கச் செய்தால் அவர்கள் திறமைசாலிகளாக சிறந்த கல்விமான்களாக ஏற்படுவார்கள். மென்மேலும் அவர்கள் முன்னோர்களில் பலர் சிறந்த கல்விமான்களாகவும் ஞானி களாகவும் இருந்தார்கள். வள்ளுவர், கபிலர், அவ்வையார் ஆகிய இவர்கள் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள்’

· ’சமீபத்தில் என்னுடைய சென்னை மாகாணத்தில் தீண்டப்படாதார் ஒருவர் வீதியில் சென்றதற்காக அவரைச் சில இந்துக்கள் கடுமையாக அடித்துக் கொன்றார்கள்.

· நற்குணம் வாய்ந்தவர் ஒருவர் தண்ணீர் ஊற்றுவார் என்று நினைத்து, தாழ்ந்த வகுப்பார் ஒருவர் தம்முடைய தோண்டியைக் கிணற்றுக்கருகில் வைத்துவிட்டு, ஒதுங்கியிருந்து, அதில் தண்ணீர் ஊற்றியபின் அதை அவர் எடுத்துச் செல்வதாக ஐக்கிய மாகாண அரசாங்கத்தார் எங்களுக்குத் தெரிவித்தார்கள். யூனியன், தாலுகா, ஜில்லா சபைகள் அங்கத்தினர்கள் வசித்திருக்கும் கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டு போவதற்கு தாழ்ந்த வகுப்பாரை அனுமதிக்க வேண்டும்’

· ’தாழ்ந்த வகுப்பார் எனும் பிரிவில் கள்ளர் எனும் சாதியினரையும் சேர்க்க வேண்டும். 1912 ஆம் ஆண்டு முதல் 1917 ஆம் ஆண்டு வரையிலான கல்வியைப் பற்றிய அறிக்கையில் கல்வி உத்தியோகஸ்தர் சர் என்ரி ஷார்ப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கள்ளர் மற்றும் மலையில் வசிக்கும் சாதியார் சேர்க்கப்படவில்லை.’ (தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் -பதிப்பாசிரியர் வீ.ரேவதி, என்.சி.பி.எச் வெளியீடு 2009)

மேற்கண்ட இரு சூழல்களுக்கும் இடையில் நடந்தவையே தமிழர் வரலாற்றின் போக்கைத் திருப்பியவை. அறிவார்ந்த குலங்களாக விளங்கிய பறையர், பள்ளர், வள்ளுவர், கணியர், அம்பட்டர் உள்ளிட்ட அனைத்தும் குலங்கள் எனும் தகுதியை இழந்து சாதிகளாகின. சேவைத் தொழில் புரிந்து அண்டிப் பிழைத்து வந்த பார்ப்பனர் ஆதிக்கத்தின் உச்சத்திற்குச் சென்றனர். இந்த மாற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்தான், தமிழர் மரபு பிற்போக்கானது எனக் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பரப்புரை செய்து வருகின்றனர்.

சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டது என்பது குறித்த புனைவுகள் சான்றுகளுடன் கடந்த பகுதியில் மறுக்கப்பட்டது. அப்பகுதியில் குறிப்பிடத் தவறிய முக்கியமான சேதி ஒன்று உண்டு.

சோழர்கள் பார்ப்பனர் களுக்கு வழங்கிய சதுர்வேதி மங்கலங்களில் சாகுபடி செய்யும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. அதாவது, உழுவித்து உண்ணும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப் படவில்லை. மாறாக, அக் கிராமத்திற்குரிய நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி மட்டுமே பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் என்பதே அச்சேதியாகும். (சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / மே.து.ராசுகுமார்)

நிலவுடைமைச் சமூக வளர்ச்சியில் தொழிற் பிரிவுகள் தோன்றின. சிறு கிராமம் தனக்கான உணவு உற்பத்தியிலும் கருவிகள் உற்பத்தியிலும் கூட்டாக ஈடுபட்ட காலம் முடிந்தது. வணிகம், ஏற்றுமதி, நிர்வாகம், போர்கள் உள்ளிட்ட புறக் காரணிகள் காரணமாக உற்பத்தியின் அளவு அதிகரித்தது. வேறு வகையில் சொல்வதென்றால், மிகை உற்பத்திக்கான தேவையை நிலவுடைமையின் வளர்ச்சி உருவாக்கியது. இதன் விளைவாக, உழவுத் தொழில் புரிவோரான வேளாளரும் உழவரும், பிற தொழிற் பிரிவினருக்குமான உணவுத் தேவையையும் அரச நிர்வாகத்திற்கான தேவைகளையும் ஈடுகட்டுமளவு உழைக்க வேண்டியிருந்தது. இவர்களுக்குத் தேவையான ஏர், கோடறி, மண் வெட்டி, பானை உள்ளிட்ட கருவிகளை அவ்வத் தொழிற் கலைஞர்கள் நிறைவு செய்தனர். இந்த முறையை ஒழுங்குபடுத்துவதில் சோழர் காலம் பெரும் வெற்றி கண்டது.

கோயில்களில் பணிபுரியும் அனைவருக்கும் இதே விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் பார்ப்பனர்களுக்கு வழக்கப்பட்ட சதுர்வேதிமங்கலப் பங்குகள். அதாவது, பார்ப்பனர்கள் கோயில்களில் பணி புரிவதற்காக, அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யும் கிராமங்களே சதுர்வேதி மங்கலங்கள். இந்தச் சதுர்வேதி மங்கலங்களில் பார்ப்பனர்கள் கிராம சபை நிர்வாகத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பார்ப்பனர்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன என்பதும் அந்நிலங்களில் அவர்களே உழுவித்துப் பொருள் சேர்த்தனர் என்பதும் தவறான முடிவுகள் ஆகும்.

மங்கலமாக வழங்கப்பட்ட கிராமங்கள் என்றால், பார்ப்பனர்களின் முழு உரிமைக்கு விடப்பட்டவை என்ற பொருள் கிடையாது. மேலும், பிரமதேய கிராமங்களின் எல்லா நிலங்களும் பார்ப்பனர் பங்கிற்கு விடப்பட்டதும் கிடையாது. பின்வரும் கல்வெட்டுச் சேதிகளைக் கண்டு இக் கூற்றை உணரலாம்.

 

· நல்லூர் நாட்டு பிரமதேய கிராமங்களில் பார்ப்பனர்களுக்குக் கீழ்ப்பட்ட சாதியினர் குறிப்பிட்ட சில பணிகளுக்காக முன்பு காணியாகப் பெற்று அனுபவிக்கும் நிலங்களில் தற்போது குறிப்பிட்ட அப்பணிகளைத் தவறாமல் செய்துகொண்டு அவ்வுரிமையால் அனுபவிக்கப்பெறும் நிலங்களைத் தவிர, பணியாளர்கள் இல்லாமல் ஊர்ச் சபையினரிடமுள்ள நிலங்களை விற்குமாறு, இராசராசன் ஆணையிட்டார்.

குறிப்பிட்ட கோயிலில் பூசைகள் புரிந்த பார்ப்பனர், அக்கோயிலுக்கான நிலத்தில் பங்கு பெறுவதே பொதுவான வழக்கமாக இருந்தது. கோயில் பூசை செய்தல் என்பதும் அவர்களுக்கான நிரந்தர உரிமை அல்ல. அவ்வுரிமை விற்கத்தக்கதாகவும் இருந்துள்ளது. இதற்கான கல்வெட்டுச் சான்று:

· ’தஞ்சை நகரின் புறம்பாடியான கருந்திட்டைக்குடி மகாதேவர் கோயிலில் காணி பெற்றுப் பணி புரியும் (பூசை செய்யும்) கௌசிகன் கணபதி சூற்றி....பக்குடி சுதந்திர ஆகிய இருவரும் தஞ்சாவூர் வீரசோழப் பெருந்தெருவில் உள்ள திருவிதான சோமபிரான் கோயிற் காணி உரிமையுடைய ஆத்திரையன் சீதரந்தாழியான இராமீஸ்வரம் உடையானுக்குத் தங்கள் காணி உரிமைகளை (பூசை உரிமைகளை) விற்றனர்.

இதன்படி, ஒரு மாதத்திற்குரிய முப்பது நாட்கள் உரிமையில் கருந்திட்டைக்குடி மகாதேவர் கோயில் உரிமையில் இருபது நாட்களும் இவ்வூர்ப் பிடாரி கோயில் உரிமையில் இருபது நாட்களும், நந்தி மாகாளி கோயில் உரிமையில் இருபது நாட்களும், ஆத்திரையன் சீதரந்தாழியான    இராமீஸ்வரம் உடையான் அனுபவிக்க கௌசிகன் கணபதி   சூற்றியும், சுதந்தியும் உடன்பட்டு எழுதிக் கொடுத்துள்ளனர்.’ (மேலது - பக் 125)

இக்கல்வெட்டுச் சேதியில், பூசை உரிமைகளை விற்கும் கௌசிகனை அவனது பெயர் கொண்டு பார்ப்பனன் எனலாம்.. பூசை உரிமைகள் பார்ப்பனர் எனும் சாதிக்கு நிரந்தரமாக வழங்கப்பட்ட உரிமைகளாக இருக்கவில்லை. முறையறிந்த / திறனுடைய எவரும் பூசை செய்யலாம் என்பதே விதியாகும்.

இந்திய நிலப்பரப்பில், அரசு உருவாக்கம் எனும் கருத்தை ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் சுரண்டலுக்கானதாக உருவாக்கிக் கொண்டனர். அர்த்த சாத்திரம் வரிக்கு வரி இதைத்தான் வலியுறுத்துகிறது. தமிழரிடையே அரசுகள் உருவாகத் தொடங்கியபோது, ஆரிய பார்ப்பனர்களின் தேவை தமிழ் வேந்தர்களுக்கு உருவாகிவிட்டது. ஆரியரது கருத்தியல் கலப்பின்றி தமிழர் அரசு உருவாக்கம் நடக்கவில்லை. ஆரியருக்கு முற்பட்ட தமிழர் அரசுகள் அனைத்தும் குறுநிலங்களாகவும் இனக்குழு அரசுகளாகவுமே இருந்தன. இந்தச் சிறு அலகுகள் ஒழிக்கப்பட்டுப் பேரரசுகள் உருவாகத் தொடங்கிய காலத்தில்தான் ஆரிய பார்ப்பனருக்கான செல்வாக்கு தமிழகத்தில் உறுதிப்பட்டது.

கடல்கோளில் மூழ்கி அழிந்த முதற் சங்க அரசுகளுக்கு எனது இந்த வரையறை பொருந்தாது. அக் காலத் தமிழ் அரசாட்சி குறித்து ஆய்ந்து முடிவெடுக்குமளவு சான்றுகள் கிடைக்காமையே காரணம்.

கோயில்கள் நிலவுடைமை வளர்ச்சியின், பேரரசு உருவாக்கத்தின் தவிர்க்க இயலாத உறுப்புகள்ஆகும். கோயில்கள் சமயம் பரப்பிய, கலைகள் வளர்த்த, நிர்வாகம் புரிந்த, வருவாயும் பெருக்கிய அமைப்புகளாகும். சிற்பக் கலை, பொறியியற் கலை, நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைகளின் பயிற்சிக் கூடங்களாகவும் காட்சிக் கூடங்களாகவும் கோயில்கள் திகழ்ந்தன.

அரசு என்பது அடிப்படையில், சமூகத்தின் நிறுவனத் தலைமை ஆகும். கோயில்கள் அந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்கள். ஆகவேதான், அரசுருவாக்கம் குறைவாக இருந்த சங்க இலக்கியங்களில் கோயில்களும் குறைவாக உள்ளன. சங்க இலக்கியங்களில், கோயில்கள் குறைத்து மதிப்பிடப்படும் போக்கும் நிலவுகிறது. அரசுகள் நிறைந்துவிட்ட பிற்கால இலக்கியங்களின் பெரும்பகுதி கோயில் சார்ந்த / சமயம் சார்ந்தவையாக உள்ளன.

இந்தப் பின்புலத்தில்தான் சோழர் கால நிர்வாகத்தில் பார்ப்பனர் மற்றும் பிற சாதியினர் குறித்த தகவல்களை அணுக வேண்டும்.

கோயில்களே கூடாது என்பது சிலர் விருப்பமாக இருக்கலாம். ஆனால், சமூக இயங்கியலுக்கு அவ்விருப்பம் பொருந்தாது.

கிரேக்கம், எகிப்து, சீனம், சுமேரியா உள்ளிட்ட பண்டைய வளர்ச்சியடைந்த நாகரிகங்கள் அனைத்திலும் கோயில்களே நிர்வாக, ஆட்சியமைப்புக்குத் துணை செய்யும் நிறுவனங்களாக விளங்கின. இன்றைய ஐரோப்பிய சமூகத்தின் ஆணிவேராகக் கருதப்படும் கிரேக்க நாகரிகத்தில் கோயில்கள் எவ்வாறான முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதைப் பார்ப்போம்.

· பூசைக்கென பூசாரிகள் இருந்தனர்

· குறிப்பிட்ட வகுப்பினர்தான் பூசை செய்ய வேண்டுமென்ற பாகுபாடு இல்லை

· பூசை முறைகள் தெரிந்தவர் யாவரும் செய்யலாம்

· இந்த உரிமை ஏலம் விடப்பட்டது

· கோயில்களுக்குப் பலவித வருவாய்கள் இருந்தன. காணிக்கைகள், நில உற்பத்தியிலிருந்து கிடைக்கும் தானங்கள், போரில் கிடைப்பவை அவற்றில் அடங்கும்

· கோயிலின் புனிதத் தன்மை கண்டிப்பாகக் காப்பாற்றப்பட்டது

· கோயில் அதிகாரிகள் பூரண உரிமைகள் பெற்றிருந்தனர்

· எவ்வளவு பெரிய குற்றமும் செய்துவிட்டு, ஒருவர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால், அவரைத் தண்டிக்கக் கூடாது.

· இந்தக் கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டும் இல்லை. சிற்பக் கலையும் சேர்த்துக் காட்டும் சித்திர சாலைகளாகவும் இருந்தன எனலாம்.

· அரசு அலுவலர்கள் கோயில் கணக்குகளைத் தணிக்கை செய்தனர்

· தனி நபர்கள் தங்கள் நிலங்களைக் கோயிலுக்கு எழுதி வைக்கும் வழக்கம் இருந்தது

· கோயில்களின் நிர்வாகம் அரசாங்கத்தின் வசமே இருந்தது (கிரீஸ் வாழ்ந்த வரலாறு - வெ.சாமிநாத சர்மா/ முதல் பாகம்/பூங்கொடி பதிப்பகம் 2001/பக்-. 175-, 178)

தமிழகத்தில் கோயில்கள் நிலவுடைமைச் சமூகத்தின் பொதுவுடைமை வெளியாகவும் திகழ்ந்தன. நிலம் தனியார் சொத்து என்ற போக்கு வரையறுக்கப்பட்டது. நிலத்தின் உரிமையில் தனியார் பங்கு மிதமிஞ்சிப் போகாமால் தடுக்கப்பட்டது. தனியார் தம் நிலங்களைக் கோயிலுக்கு வழங்கியதன் வழியாக தனியுடைமையின் தீவிரம் மட்டுப் படுத்தப்பட்டது. கோயில் பெயரால் நிர்வகிக்கப்பட்ட நிலங்களின் வருவாய்,

அரசு

கோயில் பணியாளர்

பல்வேறு நலத் திட்டங்கள்

பல்வேறு தொழிற் குலத்தவர்

-என்ற அளவில் பகிர்ந்து அளிக்கப் பட்டது.

கோயில் நிர்வாகத்தில் பார்ப்பனர்களுக்கான இடம் தெளிவாக வரையறுக்கப் பட்டிருந்தது. கோயில் பூசைகள் புரிவதே அவர்கள் முதன்மைத் தொழிலாக இருந்தது. இத்தொழிலைப் புரிவதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலியே நிலக் காணிப் பங்கு ஆகும்.

திருமேனி எனப்படும் கடவுள் சிலையைத் தீண்டும் உரிமை அவர்களுக்கு இருந்ததாலும் அரசருடன் நெருங்கும் வாய்ப்பு இருந்ததாலும் அவர்கள் சாதியால் மேல் நிலையில் உள்ளவராக மதிக்கப்பட்டனர். திருமேனி தீண்டும் உரிமையும் பார்ப்பனர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை தவிர, பார்ப்பனருக்கான சிறப்புச் சலுகைகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை. பார்ப்பனச் சாதியினர் பிற சாதியினரை இழிவாக நடத்தினர் என்பதற்கோ, தீண்டாமையைக் கடைப் பிடித்தனர் என்பதற்கோ எந்தச் சான்றுகளும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. சோழர்காலக் கோயில்களில் சமக்கிருதத்தில் மட்டுமே பூசைகள் நடத்தப்பட்டன என்ற கருத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். தமிழ், சமக்கிருதம் ஆகிய இருமொழிகளிலும் பூசைகள் நடத்தப்பட்டன. அவற்றுள் பெரும்பான்மையாக தமிழிலேயே நடத்தப்பட்டன.

நிலக் காணிப் பங்கு வழங்குவது பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான சிறப்புச் சலுகை அல்ல. அனைத்து வகைக் குலத்தவருக்கும் சோழர் காலத்தில் நிலக் காணி வழங்கப்பட்டது. பல கோயில் பணியாளருக்கு ஊதியம், வீடுகள் வழங்கப்பட்டன.

பெரிய கோயில் எனப்படும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்களைக் காண்போம்.

· ’பெருவுடையார் கோயிலில் ஆடற் கலைஞர்களாகப் பணிபுரிந்த 400 பெண்களுக்குத் தஞ்சைத் தளிச் சேரியில் வீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இவர்களுக்கான பிற சலுகைகள் பற்றியும் கல்வெட்டுக்களில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவர்களோடு சேர்த்து, இப் பெண்களுக்குத் துணை செய்யும் ஆசிரியர்கள், பக்க வாத்தியக்காரர்கள் ஆகியோருக்கும் ஊதியம் வழங்கப்பட்டது. (இராஜராஜேச்சரம், குடவாயில் பாலசுப்ரமணியன்/ சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை 2010/ பக் - 428)

இந்தப் பெண்கள் தேவதாசிகள் என்றும், இவர்கள் அனைவரும் விபசாரம் செய்ய இராஜராஜனால் பிடித்துவரப்பட்டவர்கள் / அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் மாபெரும் பொய் ஒன்று தமிழகத்தில் நிலவுகிறது. இவர்கள் அனைவரும் தேவரடியாரே தவிர, தேவதாசிகள் அல்லர். இந்த இரு சொற்களுக்குமான வேறுபாடுகள் அதிகம். மேலும் இவர்கள் விபசாரிகள் அல்லர்.

இது குறித்த எனது விரிவான விளக்கங்களை ‘நிலம் பெண்ணுடல் நிறுவனமயம்’ நூலில் காணலாம். அதேபோல, தளிச்சேரி என்பது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான குடியிருப்பும் அல்ல.

‘பெருவுடையார் கோயிலின் வடமேற்கு வெளிச்சுவரை அடுத்த பகுதிதான் தளிச்சேரி அமைந்த இடம்.’ (நூல்: “தஞ்சாவூர்”, குடவாயில் பாலசுப்ரமணியன்/ அன்னம் 2009/ பக். 42)

இது நகரின் நடுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சேரி என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பைத்தான் குறிக்கும் என்பதும் ஒரு கட்டுக்கதையே.

சேரி எனும் சொல், ’புறத்தே’ உள்ள குடியிருப்பு அல்லது ஊர் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. பொதுவாக, சேர்ந்து வாழும் பகுதி சேரி ஆகும். அதாவது, ஊர், கிராமம் போல இது ஒரு அலகு. அவ்வளவே. நாகை அருகில் இன்றும் பார்ப்பனச் சேரி என்ற பெயரில் ஊர் உள்ளது.

பழந்தமிழரின் கடல் வணிக நகரமாக விளங்கிய கொற்கையில், கிரேக்கக் குடிகளில் ஒருவகை யினரான யவனர், வசித்தனர். இவர்கள் அக்கால கிரேக்க - தமிழக வணிக உறவில் இங்கு வந்தவர்கள். இந்த யவனர்கள் வாழ்ந்த பகுதியின் பெயர், ‘யவனச் சேரி’ எனப்பட்டது. (கோநகர் கொற்கை/ சாத்தான் குளம் அ.இராகவன்/அமிழ்தம் பதிப்பகம் 2005/ பக் 45)

சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும் ஊரில், பார்ப்பனரும், பாணரும் உள்ளனர். (புறஞ்சேரி இறுத்த காதை)

இவ்வூரைச் சிலப்பதிகாரம், ’புரிநூல் மார்பர் உறைபதி’ -அதாவது மார்பில் நூல் அணிந்தவர் வாழும் ஊர் என்று குறிக்கிறது.

பறைச்சேரி, என்றால் பறையர் வாழும் ஊர் என்பதுதான் பொருள். மாறாக, பறையர்கள் தாழ்த்தப்பட்டவர் என்றோ, அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கட்டவர் என்றோ பொருள் அல்ல. இதேபோல், பார்ப்பனச் சேரிகளும் தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஏராளமாக உண்டு.

’சோழன் ஆதித்த கரி காலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் வாழ்ந்த இடத்தின் பெயர் பார்ப்பனச் சேரி ஆகும்.’ (உடையாளூர் கல்வெட்டு - ஒரு மீள் பார்வை, -முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்)

அதேவேளை, தமிழர் சேரிகளில் அந்தந்த சாதியினர்/ குலத்தினர் மட்டும்தான் வாழ்ந்தனர் என்ற அவசர முடிவுக்கும் செல்லக் கூடாது. சேரி என்றால், அதில் பார்ப்பனரும் வாழ்வர் என்பதை நிறுவவே சிலப்பதிகார மேற்கோள் காட்டப்பட்டது.

இதுபோன்ற பொய்களைப் பரப்பியதில், திராவிடக் கோட் பாட்டாளர்கள் கடந்த நூற்றாண்டில் பெருவெற்றி பெற்றனர் என்பது தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் உண்மை.

பெருவுடையார் கோயில் நிர்வாகத்திற்காக, அக்கோயிலில் பணி செய்தவர்களின் பட்டியலைப் பல்வேறு கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. அப்பணியாளர் அனைவருக்கும் எவ்வளவு நிலக் காணி வழங்கப்பட்டது என்ற பதிவும் அவற்றில் அடங்கும். அக்கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து சிலவற்றை இங்குக் காட்டுகிறேன்.

நட்டுவம் செய்யும் ஆசார்யார்கள்     -    12

கானம் பாடுவோர்               -    5

ஆரியம் பாடுவோர்              -    3

தமிழ் பாடுவோர்                -    4

கொட்டி மத்தளம் இசைப்போர்   -    2

முத்திரைச் சங்கு ஊதுவோர்     -    3

விளக்குப் பணியாளர்            -    7

நீர் தெளிப்பவர்            -    4

குயவர்கள்                      -    10

துணி வெளுப்பவர்              -    2

நாவிதர்                   -    6

துணி தைப்பவர்                 -    2

கன்னார்                   -    1

தச்சர்                           -    5

சாக்கைக் கூத்தர்                -    4

-          உள்ளிட்ட மொத்தம் 258 பேர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளனர்.

-இவர்கள் அனைவருக்கும் அவரவரது பணிக்கேற்ப, ஒன்றரை முதல் 2 காணி நிலம் வரை வழங்கப்பட்டது. (இராஜ ராஜேச்சரம், குடவாயில் பால சுப்ரமணியன்/ சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை 2010/ பக் - 429)

பார்ப்பனருக்கு வழங்கப் பட்ட நிலக் காணிப் பங்கை, ஊரையே வாரிக் கொடுத்தது போல, பக்கம் பக்கமாக எழுதி வரும் திராவிட ‘ஆய்வாளர்கள்’ என் றேனும் மேற்கண்ட பட்டியலைத் தேடியதாவது உண்டா?

’தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தலைமை சிவாச் சாரியாராக இருந்தவர் பவனபிடாரன் என்பவராவர்.’ (மேலது நூல் / பக் - 440)

இவர் ஆரியருமல்லர்; பார்ப்பனரும் அல்லர். தமிழாய்ந்த தமிழரே! தேவாரம் பாடுவோர் பிடாரர் எனப்பட்டனர். பவனபிடாரர், தேவாரம் பாடுபவர்; இவரே கோயிலின் தலைமைக் குரு. பார்ப்பனர்கள் இவருக்கு அடுத்த நிலையில்தான் வைக்கப்பட்டனர். பார்ப்பனர்கள், அரசனிடமிருந்து காணிப் பங்கு எதிர்பார்த்து வாழ்ந்த நிலையில், ‘பவன பிடாரன் பெருவுடையார் கோயிலுக்கு பொன் போர்த்திய செப்புக் குடத்தை அறக்கொடையாக வழங்கினார்’ (மேலது நூல்/ பக் - 440)

பார்ப்பனரைக் கொலை செய்வது பாவம் என்பது ஆரிய பிராமணியத்தின் கோட்பாடுகளில் ஒன்று. பிரமஹத்தி தோக்ஷம் என்று இதற்குப் பெயர்.

‘மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்ட இராஜராஜன் அந்நாட்டு பார்ப்பனர்களைக் கொன்றான் என்பதைச் சாளுக்கியக் கல்வெட்டு கள் காட்டுகின்றன’ (உடையார் குடி கல்வெட்டு ஒரு மீள் பார்வை, --முனைவர் குடவாயில் பால சுப்ரமணியன்)

சோழர் ஆட்சியில், குற்றவியல் தண்டனை முறைகளிலும் பார்ப்பனருக்கென சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

இவை ஒருபுறமிருக்க, கோயில்களில் பூசை செய்யும் பிரிவினர் குறித்த சில விளக்கங்களைக் காண்போம். இக் கட்டுரைத் தொடரின் பல இடங்களில் சான்று காட்டி விளக்கப்படும் கருத்துகளில் ஒன்று, தமிழர் வரலாற்றில் பார்ப்பார்கள் என்னும் பிரிவினரில் தமிழரும் உண்டு; அந்தப் பார்ப்பாரில் பெரும்பகுதியினர் வள்ளுவர், பறையர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரிவினரே என்பதாகும். ஆரியப் பார்ப்பனர் தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தமக்கானதாகவும் மாற்றிக் கொண்டனர்.

அந்தணர் என்னும் பிரிவினரிலும் பாணர், பறையர், வள்ளுவர் உள்ளிட்ட பிரிவினர் பெரும்பங்கு இருந்தனர் என்பதும் ஏற்கனவே நிறுவப்பட்டது. ஆரியப் பார்ப்பனர், குறிப்பிட்ட கலையோ தொழிலோ அறியாதோர். ஆதலால், அவர்கள் காதலன் காதலி, தலைவன் தலைவி இடையே வாயிலோராகவும் (தூதுவர்), பூசை செய்து அதன் மீதப் பொருட்களை உண்டு வாழ்பவராகவும் இருந்தனர்.

இதேவேளை, ஆரிய பார்ப்பனர் வாய்வழியாக ஓதி வந்த மறைகளைத் தமிழரும் கற்றுத் தேர்ந்தனர்.

முன்னர் கண்டவாறு, அரசு உருவாக்கம் நிகழத் தொடங்கிய பிறகு, ஆரிய பார்ப்பனருக்கான தேவை அதிகரித்தது. அரசர்களின் போர்க்கள வெற்றிகளுக்காக அவர்கள் வேள்வி வளர்த்தனர். இதன்போது மறை ஓதப்பட்டது. அரசர்கள் இப் பார்ப்பனர்களை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த மாற்றத்தில் தமிழரின் பல குலத்தவரும் பங்கு பெறத் தொடங்கினர். சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படும் பறையூர் சாக்கைக் கூத்தர் நான் மறை அறிந்திருப்பது இந்தக் காரணத்தினால்தான்.

பறையர்கள் வேதம் கற்றதைத் தடுக்கும் துணிவு அக்காலத்தில் ஆரிய பார்ப்பனர்களுக்கு இல்லை. மேலும், தமிழ் அரசர்களும் பறையர் உள்ளிட்ட தமிழ்க் குலங்களின் காவலர்களாகவும் இருந்தனர். சேரன் செங்குட்டுவன் முன்னால் பறையூர்க் கலைஞர்களின் கூத்து நிகழ்த்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இமயம்வரை படையெடுத்துச் சென்று ஆரியரை அழித்து வந்த தமிழ்ப் பேரரசர்கள், ஆரிய பார்ப்பனரது கருத்துரு வாக்கங்களையும் உட்கொண்டனர் என்பதுவே வரலாறு காட்டி நிற்கும் உண்மை. அதேவேளை, ஆரிய பார்ப்பனருக்கான முக்கியத்துவம் வழங்குவதில் கட்டுப்பாடற்ற தன்மையையும் அவ்வரசர்கள் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மையே.

கோயில் பூசைகளில் ஆரிய பார்ப்பனர் மட்டுமே அனுமதிக்கப் பட்டார்கள் என்ற நிலை தமிழகத்தில் இருக்கவில்லை. இவ்வாறான குற்றசாட்டை முன்வைக்கும் எந்தக் கருத்தி யலாளரும், பார்ப்பார் - பார்ப்பனர் - அந்தணர் ஆகிய மூன்று பிரிவுகளையும் விரித்து ஆய்ந்தது மில்லை. இந்த ஆய்வை மேற் கொள்ளாமல், பார்ப்பார் என்றாலே பார்ப்பனர்; பார்ப்பனர் என்றாலே ஆரியர் என்று அரைகுறை முடிவு களைச் சொல்கின்றனர்.

கோயில் பூசை மேற் கொள்ளும் பணியில் பார்ப்பனர் மட்டுமல்லாது பல்வேறுத் தமிழ்க் குலத்தினரும் பங்கேற்றனர். திருமேனி தீண்டும் உரிமை ஆரிய பார்ப்பனருக்கு மட்டும் உரியதாக ஒருபோதும் இருந்ததே இல்லை. இந்தக் கருத்திற்கான விளக்கத்திற்குச் செல்வோம்.

ஆகம விதிகளின்படி அர்ச்சகராகும் உரிமை யாருக்கு உள்ளது எனக் காண்போம்.

சைவக் கோயில்கள்

’சிவாகமத்தில் பூசை செய்பவர்கள் சிவ தீட்சை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இக் கோயில்களில் பூசை முதலிய பணிகளைச் செய்வோர் ஆச்சாரியார், அர்ச்சகர், ஸ்தானிகர், பாசகர், பரிசாரகர் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். கௌசிகர், காசியபர், பரத்வாஜர், கௌதமர், அகத்தியர்ஆகிய ஐந்து ரிக்ஷிகளுக்கும் சிவபெருமான் இந்த ஆகமங்களை உபதேசித்தார். இவர்களுள்,

கௌசிகர் - சத்திரியர்

காசியபர் - கொல்லர்

பரத்வாஜர் - பார்ப்பனர்

கௌதமர் - நாவிதர்

அகத்தியர் - வேட்டுவர்

-இந்த ஐந்து கோத்திரங்கள்தான் சிவாச்சாரியாரின் கோத்திரங்கள் ஆகும். ஆகவே, சிவாச்சாரியார் என்பார்கள் பார்ப்பனர் மட்டு மல்லாமல் சத்திரியர், நாவிதர், கொல்லர், வேட்டுவர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவரும்தான் எனக் கருத வேண்டும். சிவாகமங்கள் அறிந்த அனைவரும் அர்ச்சக ராகலாம் என்பதே கருத்து. (TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY, PUBLISHED BY AUTHORITY/ CHENNAI, MONDAY, DECEMBER 1, 2008/ Part II-Section 1/ ð‚ - 11-12)

வைணவக் கோயில்கள்

’வைணவத்தில் சாதி என்பதே இல்லை. எந்தச் சாதி என்று கேட்பதே பாவம் ஆகும். ஆகவே, வைணவக் கோயில்களில் எந்தச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.’ (மேலது ஆவணம் / பக் -13)

தமிழர் ஆகம விதிகள் இந்தளவு சாதியத்திற்கு எதிரானவை தான் என்பதை உணர வேண்டும். ஆகமங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றும் கோயில்களில் அர்ச்சகராக உள்ள அனைவருமே ஆரிய பார்ப்பனர் அல்லர். தமிழக ஆகமக் கோயில் அர்ச்சகர்கள் தமிழர் குலங்களும் பார்ப்பனக் குலமும் கலந்த நிலையில் உருவானவர்களாகவோ, தனித்த தமிழ்க் குலத்தவராகவோதான் இருப்பரே தவிர, முழு ஆரிய பார்ப்பனராக இருப்பதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிது.

அந்தணர், பார்ப்பனர் ஆகிய குலங்களில் தமிழ்க் குலத்தவர் இன்று தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படுவோர் -மிகுதியாக இருந்தனர் என்பதாலும் பெரு வுடையார் கோயில் தலைமை அர்ச்சகரே தமிழ்க் குலத்தவர் என்பதாலும், இன்றைய அர்ச்சகர் களை ஆரிய பார்ப்பனர் எனக் கருதுவது உண்மை நிலைக்கு எதிரானதாகும். அவர்கள் தங்களை ஆரிய பார்ப்பனர் என்று கருதிக் கொள்வதும் தவறு. மேலும், கோயில் குருக்களாகப் பணிபுரியும் ஆச்சார்யார் களும் பட்டர்களும், பிற பார்ப்பன சாதிப் பிரிவினரால் கிட்டத்தட்ட தீண்டத்தகாதவராக இன்றும் ஒதுக்கி வைக்கப் படுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

கோயில் குருக்கள் பிரிவு, பார்ப்பனருக்குள்ளேயே உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவாகவே நிலவு கிறது. இவர்கள் வீட்டில் கை நனைப்பதே பாவம் என்று பிற பார்ப்பனர்கள் கருதும் போக்கு இன்றும் உள்ளது. எனவே இவர்களுக்குள் திருமண உறவு கிடையாது.

அதேபோல, கோயில் கருவறைக்குள் சென்று திருமேனி தீண்டும் உரிமை, குருக்களைத் தவிர, வேறெந்த பார்ப்பனருக்கும் இல்லை. காஞ்சி சங்கராச்சாரி கூட எந்தக் கோயிலுக்குள்ளும் சென்று திருமேனி தீண்ட முடியாது. கருவறைக்குள் நுழையக்கூட அவருக்கு அனுமதி கிடையாது. மீறி சங்கராச்சாரி கருவறைக்குள் அனுமதிக்கப் பட்டிருந்தால் அது அவரது செல்வாக்கு, அதிகாரம் ஆகிய வற்றுக்குப் பணிந்து போன விதிமீறலாகவே இருக்கும்.

சோழர் காலம்வரை, எக்குலத்தாரும் கோயில் அர்ச்சகராகலாம் என்றிருந்த நிலை இன்று இல்லாமல் போனது எப்படி? அர்ச்சகர் பிரிவினர், தாமே ஒரு ஆதிக்க சாதியினராக இறுகிப் போனதும் அவர்களுக்குக் கோயில் களில் கட்டற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டதும் எக் காலத்தில்? பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர் போன்ற குலங்கள் இன்று தாழ்த்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளாக வாட, இக்குலத்தவர் ஆட்சி செய்த கோயில்களில் இவர்கள் தீண்டப்படா தோராக மாறியது யார் செய்த சதி?

ஒப்பீட்டளவில் பேரளவு சமத்துவக் கொள்கைகளைக் கடைப்பிடித்து, ஆரியப் பார்ப்பனரின் இடத்தை வரையறுத்து வைத்து, தமிழ்க் குலங்களுக்கு வளர்ச்சி அளித்த தமிழர் மரபுதான் சாதியத்தை வளர்த்த மரபு என்று நாக் கூசாது பொய் பரப்பும் திராவிட இயக்கத்தின் மூலவர்களின் சாதி யினரே, தமிழரைத் தமிழ்நாட்டி லேயே அடிமை களாக்கியவர்கள்! அவர்களே, சாதியக் கட்டமைப்பை வெற்றிகரமாகக் கட்டியமைத் தவர்கள்; நால்வருணக் கோட் பாட்டைத் தமிழகத்தில் நடை முறைப்படுத்தியவர்கள்; அறிவார்ந்த தமிழ்க் குலங்கள் அனைத்தையும் அடிமைப்படுத்தி, அக்குலத்தவர் அனைவரையும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளியவர்கள்!

இதுவே, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் பாய்ச்சப்பட வேண்டிய உயிர்க் குருதி!

அந்தணராக, கணியராக, கணக்காயராக, அரசராக, வேந்தராக, படைத் தலைவராக, அர்ச்சகராக, தேவாரம் பாடியோராக, பாசுரம் பாடியோராக, யாழ் இசைத்தோராக, சதிராட்டக் கலைஞராக, வேளாண் மாந்தராக, தத்துவ ஆசான்களாக, கப்பற் கட்டும் பொறிஞராக, சிற்பக் கலை வல்லுநராக, சித்தராக செம்மாந்து வாழ்ந்த குலத்தவரின் வாரிசுகள், ’எங்கள் சாதியைத் தாழ்த்தப்பட்ட சாதியாக அறிவிக்க வேண்டும்’ என அரசுக்குக் கோரிக்கை வைப்பதும், ’நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்’ எனக் கையில் சான்றிதழோடு அலைவதும், தமிழர் வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்தி டாத கொடூரம்!

இந்தக் கொடுமைகளின் பின்னணியில் இருப்பவர்களின் வாரிசுகளே, தமிழர் மரபு குறித்த பொய்யுரைகளை முழு மூச்சோடு பரப்பினர். அந்த வரலாறு - நாம் அறிந்து தெளிந்து தேற வேண்டிய வரலாறு!

விஜய நகரப் பேரரசு

சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவில்லை. கி.பி.1279 ஆம் ஆண்டு, மூன்றாம் இராசேந்திர சோழன் மரணம் அடைந்தார். இவரோடு சோழர் காலம் முடிந்தது. இதன் பின்னர் பாண்டியரும் வலுவிழந்து, குறுநில மன்னராகி அதையும் இழந்தனர். பாண்டியரை ஒழித்ததில் மாலிக்காபூர் எனும் முகமதிய அரசனுக்குப் பெரும்பங்கு உண்டு. டெல்லியில் வலுவான முகமதிய அரசு அமைத்து, டெல்லி சுல்தானாக 1320 ஆம் ஆண்டு பதவி ஏற்ற கியாசுதீன், இந்தியத் துணைக்கண்டப் பகுதி முழுமையையும் ஒரே குடையின் கீழ் கொணர நினைத்தான். அப்போது பாண்டி நாட்டை ஆண்டவன் பராக்கிரமப் பாண்டியன். கியாசுதீன் தன் மகன் உலுக்கான் என்பானை, பாண்டியருடன் போர் புரிய அனுப்பினான். பராக்கிரமப் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பெரும்புகழ்ப் பாண்டி நாடு, டில்லி சுல்தானின் 23 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.

டில்லி சுல்தான்களால் அனைத்து மாகாணங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 1335 ஆம் ஆண்டு, மதுரையை ஆண்ட ஜலாலுதீன் தன்னை சுதந்திர அரசனாக - சுல்தானாக - அறிவித்துக் கொண்டான். அதன் பின்னர், மதுரை சுல்தான்களின் ஆட்சியில் நீடித்தது.

தென்னிந்தியாவில் முகமதி யர் ஆட்சி அமைவதை, ஆரிய வயப்பட்ட தென்னிந்திய அரசர் களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆரிய - பிராமணிய ஆட்சிமுறைக்கு நேர் விரோதமான கொள்கைகளைக் கொண்டிருந்த முகமதியரின் தொடர் வெற்றிகளை நிறுத்தாவிட்டால், தமது இருத்தலே கேள்விக்குள்ளாகிவிடும் என்ற நிலை ஆரியக் கருத்தில் தோய்ந்த அரச குலத்தவருக்கு ஏற்பட்டது. குறிப்பிட்ட இந்தக் காலத்தில், அரசமைக்கும் வலுவோடு தென்னிந்தியாவில் இருந்தவர்கள் இணைந்து அமைத்த அரசே விஜயநகரப் பேரரசு ஆகும்.

கர்நாடகத்தில் உள்ள துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஒய்சாளர் களிடம் அதிகாரிகளாகவும் சிற்றரசர்களாகவும் இருந்தவர்கள் அரிகரன், புக்கன் ஆகியோர். 1346 ஆம் ஆண்டு ஒய்சாள வம்சத்தில் நிலவிய பூசல்களைப் பயன்படுத்தி, ஆட்சியமைத்தவர்கள் இவர்கள்.

இந்துத்துவக் கோட்பாடு களைத் தமிழகத்தில் விதைத்து உரமிட்டவர்கள் விஜயநகரப் பேரரசினர் ஆவர்.

விஜயநகரப் பேரரசன் முதலாம் புக்கனின் மகன் கம்பணா, தமிழகத்தைக் கைப்பற்றிய ’திராவிட ’அரசர்களின் முன்னோடி. வட மேற்குத் தமிழகத்தை ஆண்ட சம்புவரையர்களை, கம்பணா தோற்கடித்தான். இதேவேளை மதுரையில் சுல்தான் ஆட்சி நடந்தது.

’காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பணா ஒரு கனவு கண்டான். அக் கனவில் தோன்றிய பெண், மதுரை சுல்தான் ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தாள்.

வேத மந்திரங்கள் ஒலித்த இல்லங்களில் கூச்சலும் குழப்பமும் மலிந்தன. பெண்களும் பார்ப்பனர்களும் துன்புறுத்தப் பட்டனர். இந்துக்களின் புனிதச் சின்னமான ‘பசு’ வதைக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு ரத்த ஆறாக ஓடியது’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு 2007/ பக் - 32)

இந்தக் கனவின் பின்னர் மதுரை சுல்தானை கம்பணா வென்றான். மிகத் தெளிவான இந்துத்துவ/ஆரியக் கனவு கம்பணா வுக்கு வந்தது. கம்பணா உள்ளிட்ட அன்றைய ’திராவிட’ ஆட்சியாளர் அனைவரும் இந்துத்துவ வெறியராக இருந்தனர் என்பதாலேயே இவ்வாறு கூறப்படுகிறது.

இதற்கான முகாமையான சான்று ஒன்றைக் காண்போம்.

‘திருச்சிராப்பள்ளி மா வட்டத்தில் கண்ணனூர் என்பது ஒய்சாளர்களின் முந்தைய தலை நகரமாக இருந்தது. அங்கு வீரசோமேஸ்வரா என்ற ஆட்சி யாளன் கி.பி.13 ஆம் நூற்றாண்டின் மத்தியில் போசலீஸ்வரம் உடையார் கோயிலைக் கட்டினான். ஆனால், இக்கோயில் முகமதியரின் தென்னகப் படையெடுப்பின்போது சேதப் படுத்தப்பட்டது. இக்கோயில் வளாகச் சுவர்க் கற்களை முகமதியர் கோட்டையமைக்கப் பயன்படுத்தினர். ஆனால், குமார கம்பணாவின் தென்னகப் படையெடுப்பின் விளைவாக அம்மசூதியை மீண்டும் பழைய நிலைக்குக் கோயிலாகப் புதுப்பிக்கத் திருப்பணி மேற் கொள்ளப்பட்டது’ (மேலது நூல்/ பக் - 33)

கம்பணாவின் அதிகாரிகள் வரிசையைக் காண்போம்.

1. சோமப்ப தன்ன நாயக்கர்

2. கண்டாரகுளி மாரய்ய நாயக்கர்

3. அனிகொண்டி வித்தாரபர்

4. கோபணாரிய கோபணாங்கா

இவர்கள் அனைவரும் சாதியால் பார்ப்பனர் ஆவர். ‘நாயக்கர்’ என்பது அரசனால் வழங்கப்படும் பட்டம். ’நாயக்கன்’ என்றால், ’சேனைத் தலைவன்’ என்று பொருள். கன்னட தெலுங்கு ‘திராவிட’ பார்ப்பனர்கள் எண்ணற்றவர்கள் விஜயநகரப் பேரரசில் பங்கு பெற்று, ’இந்துத்துவ தர்மத்தைக் காத்து’ நாயக்கர் எனும் பட்டம் பெற்றனர். இப்பட்டமே பின்னர் சாதியாகவும் மாறியது.

’சோமப்ப தன்ன நாயக்கர் ஒரு வட மொழிப் பண்டிதர். கோயில் திருப்பணிகளில் ஈடுபாடு கொணடவர். முல்பாகல் என்னுமிடத்தில் சோமநாதர் ஆலயத்தைக் கட்டியவர்’ (மேலது நூல் / பக் - 39)

’கண்டாரகுளி மாரய்ய நாயக்கர், சோமப்ப நாயக்கரின் மகன். கம்பணாவின் தளபதி. இவருக்குக் கம்பணா ‘அண்ண மங்களப் பற்று’ எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்தான். தன் தந்தை சோமப்ப நாயக்கர் பேராலேயே, சோமப்ப தன்ன நாயக்க சதுர்வேதி மங்கலம்’ என்னும் சர்வமானிய கிராமத்தை ஏற்படுத்தினார். அதுவே தற்போது தென்னார்காடு மாவட்டம் திண்டி வனம் தாலுகாவில் சட்டம்பாடி எனும் பெயருடன் விளங்கி வருகிறது.

மேலும், இக்கிராமத்தை 42 பங்காகப் பிரித்து இரண்டு பங்கைக் கோயிலுக்கும் மீதமுள்ள 40 பங்கை 40 பார்ப்பனர்களுக்கும் பங்கிட்டு வழங்க ஆணையிட்டான்’ (மேலது நூல் / பக் - 40, 41, 43)

’அனிகொண்டி வித்தாரபர், கம்பணாவின் மனைவி ரமாதேவியின் பெயரில் ‘ரமாதேவி நல்லூர்’ என்ற பார்ப்பன கிராமத்தை அமைத்தார்.’ (மேலது நூல் / பக் - 44)

’கோபணாரிய கோப ணாங்கா, தமிழகக் கோயில் களுக்குப் பொதுக் கண்காணிப் பாளராக இருந்தார்’ (மேலது நூல் / பக் - 45)

-           ஆட்சியதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் பார்ப்பனர்கள் இருந்த நிலையைத் தான் தமிழரல்லாத ‘திராவிட’ அரசர்கள் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தனர். நாயக்கர் எனும் சாதிப் பிரிவில் பார்ப்பனக் கலப்புக்குப் பஞ்சமே இல்லை என்னும் விதமாக, விஜயநகரப் பேரரசின் ’நாயக்கர்களில்’ கணிசமானோர் பார்ப்பனராக இருந்துள்ளனர்.

இந்தப் பார்ப்பனர்களும் ஆட்சியாளர்களாக இருந்த பிற ஆதிக்க சாதியினரும்தான் தமிழகத்தில் சாதியம் எனும் கருத்தியலை முற்றும் முழுதாக நடைமுறைப்படுத்தினர். மேற்கண்ட பார்ப்பன நாயக்கர்களின் ‘பங்களிப்பு களை’க் கண்டாலே இந்நிலையின் வீரியத்தை உணர முடியும்.

பெருமளவிலான பார்ப்பனர் கள் முழு நிலவுடைமையாளராக்கப் பட்டது ’திராவிட’ விஜய நகரப் பேரரசர் மற்றும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் என்பதே உண்மை வரலாறு. சோழர் காலத்தில், காணிப் பங்கு வழங்கப்பட்ட நிலையைத் திரித்து, பொய்யுரை பரப்பி வரும் திராவிடக் கோட்பாட்டாளர்கள், நாயக்கர்களின் பார்ப்பன நேசத்தை யும், சர்வமானியதானங் களையும் கண்டும் காணாது உள்ளனரா? அல்லது காணவே முடியாத சங்கடத்தில் உள்ளனரா?

கிருஷ்ணதேவராயர் காலத் தில் பார்ப்பனர் மேலும் தழைத்து ஓங்கினர். பல பார்ப்பனர்கள் ’நாயக்கர்’ பட்டம் பெற்று, தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினர்.

கிருஷ்ண தேவராயரது ‘சாதனைகள்’ சில;

· தேவதான நிலங்களின் வரியைத் தள்ளுபடி செய்தார்.

· கிருஷ்ணராயபுரம் என்ற கிராமத்தை ஏற்படுத்திப் பார்ப்பனர் களைக் குடியேற்றினார்.

· கன்னடம் தாய்மொழி என்றாலும் தெலுங்கில் எழுதும் ஆற்றல் படைத்தவர் அவர்.

· அவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் நன்கு மதிக்கப் பெற்றனர். எந்தக் குற்றங்கள் செய்தாலும் பார்ப்பனர்கள் தண்டிக்கப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, கிருஷ்ண தேவராயர் தன் மகன் திருமலாவைக் கொன்ற சாளுவ திம்மா என்ற பார்ப்பன அமைச்சரைக் கொல்வதற்கு ஆணை பிறப்பிக்க வில்லை.

· பேரரசை நிர்வகிக்க, பார்ப்பன அமைச்சரின் ஆலோசனைகள் கேட்டார். இது குறித்து அவர் கூறிய விளக்கம், ’பார்ப்பனர்கள் அரசுக்கு நெருக்கடி வரும் சமயத்திலும் போர்க்காலங்களிலும் விசுவாசமான முறையில் நடந்து கொண்டனர். சில சமயம் அவர்களைச் சத்திரியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் கீழ் அதிகாரிகளாக நியமித்தாலும் பொறுப்புடன் செயல்பட்டனர்’ என்றார்.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மூவரில் ஒருவர் செல்லப்பா என்கிற வீரநரசிம்ம நாயக்கர். இவரது தந்தை காஞ்சிபுரம் பார்ப்பனர். அவர் பெயர் தழுவக் குழைந்தான் பட்டர் என்பதாகும்.

செங்கற்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் திருக்கோயில் கல்வெட்டு இவரை, ’அகஸ்திய கோத்திரத்து, போதாயன சூத்திரத்து, யஜூஸ் ஸாகாத்யாபகரான தழுவக் குழைந்தான் பட்டர் மகன் உபயப் பிரதானி வீரநரசிங்க நாயக்கர்’ என்று குறிப்பிடுகிறது. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நிறுவப் பெற்றதில் இந்த ’பார்ப்பன நாயக்கருக்குப்’ பெரும் பங்கு உண்டு.

’திராவிடர் என்போர் தென்னாட்டுப் பார்ப்பனரே’ என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

’திராவிடர்’ என்றால்தான் அத்தொகுப்பில் ’பார்ப்பனர் வரமாட்டார்’ என்று பெரியார் தொடர்ந்து பேசியதும், பிற திராவிட இயக்கக் கோட்பாட்டாளர்கள் இன்றும் கூறி வருவதும் பிழையான அணுகுமுறை மட்டுமல்ல, தெரிந்தோ தெரியாமலோ ஒரு துரோக வரலாற்றை மறைக்கும் செயலும் ஆகும்.

(இக்கட்டுரைத் தொடர் இத்துடன் முடிகிறது. உடனடித் தேவை கருதி இக்கட்டுரைத் தொடர் முழு நூலாக வரவுள்ளது. அதில் இங்கு இறுதியாகச் சுட்டிக்காட்டப்பட்ட “துரோக வரலாறுஉள்ளிட்ட புதிய வரலாற்றுச் செய்திகளும் திறனாய்வுகளும் இடம் பெறுகின்றன. நூலின் பெயர்: அலர் - திராவிட அவதூறுகளும் தமிழர் மரபும் - கட்டுரையாளர்)

Pin It