மொழி என்பது வெறும் ஓசைதான். தமிழ் மொழியும் வெறும் ஓசைதான். அதை உயர்வான மொழி என்று கூறுவது தவறு என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளாரே?

இங்கிலாந்தில் ஓசை எழுப்பினால் ஆங்கிலம், தமிழ்நாட்டில் ஓசை எழுப்பினால் தமிழ். மொழி என்பது அவ்வளவுதான் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார். அவர் தமது மொழிக் கொள்கையை விளக்கப்படுத்த தம்முடைய தாய்மொழியான கன்னடத்தைத்தான் எடுத்துக்காட்டாகக் கூறியிருக்க வேண்டும். தமிழர்களின் தாய் மொழியை எடுத்துக் காட்டாகக் கூறியிருக்கக் கூடாது. பெங்களூரில் நின்று கொண்டு கன்னடம் வெறும் ஓசைதான் என்று இளங்கோவன் கூறினால் கன்னடர்கள் அவரைப் பதம் பார்த்து பக்குவப்படுத்தியிருப்பார்கள். தமிழ் நாடு திறந்த வீடு!

அடுத்து அவரது மொழிக் கொள்கையை சோனியாவிடமும் மன்மோகனிடமும் எடுத்துக் கூறி இந்தி என்பது வெறும் ஓசைதான். அதைத் தேசிய மொழி என்றும் இந்தியாவின் ஆட்சி மொழி என்றும் கூறாதீர்கள் என்று சொல்ல வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்திலோ அல்லது இங்கிலாந்திலோ திருவள்ளுவர் போல் ஒருவர் ஓசை எழுப்பவில்லையே ஏன்? அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் ஊமைகளாக இருந்தார்களா?

மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவியோ அல்லது இளங்கோவனின் அலங்கோல ஆய்வு போல் வெறும் ஓசையோ அன்று. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் முகவரி. அதுவே ஒரு தேசத்தின் அடித்தளம். ஓர் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டு அறிவுச் செல்வத்தைச் சேமித்து வைக்கும் களஞ்சியம். மனிதர்களுக்கிடையேயான உறவுச் சக்தி. மொழி உற்பத்திச் சக்திகளில் ஒன்று.

இளங்கோவன் எப்பொழுதும் தமிழினப் பகைவராகவும் தமிழ் மொழிப் பகைவராகவும் செயல்பட்டு வருகிறார்; பேசி வருகிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது அதை எதிர்த்தார். தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும்தான் வசிக்கிறார்களா? தமிழை எப்படி வழக்கு மொழியாகத் திணிக்கலாம் என்றார்.

சிங்கம் கர்ஜிக்காத காட்டில் நரிகள் ஊளையிடும். தமிழ்த் தேசிய உணர்வுடன் இளைஞர்கள் எழுந்தால் இளங்கோவன் போன்ற அழும்பர்களுக்கு உடனுக்குடன் எதிர்வினை புரியலாம்.

காலாவதியான மருந்துகளைத் திரட்டி புதிய மருந்துகள் போல் முத்திரையிட்டு விற்பனை செய்தது சிறிய அளவில் நடந்ததாகத் தெரியவில்லையே. தமிழகம் முழுவதும் இந்தக் கொள்ளை நடந்திருக்கும் போலிருக்கிறதே?

ஆம். “நாங்கள் எங்கள் கொள்ளையைப் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் கொள்ளையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சமூகப் பகைவர்களுக்குத் தன்னாட்சி வழங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்”;. நாடாளுமன்றத்தில் போடப் படும் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிகராக இணைப் பொருளாதாரங்களை வணிகச் சூதாடிகள், கலப்படம் செய்வோர், காலாவதி ஆன மருந்துகளை விற்போர், இலஞ்சம் வாங்குவோர், ஹவாலாப் பேர்வழிகள், வரி ஏய்க்கும் பெரும் புள்ளிகள் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்து வாங்க முடியாது. இங்கு அப்படியில்லை. மருந்துக்கடை விற்பனையாளரே மருத்துவரும் ஆகி, மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுக்கிறார். இரசீது பெறாமல் மக்கள் மருந்துகளை வாங்குகிறார்கள்.

மருந்து உற்பத்தி, விற்பனை இரண்டையும் கண்காணிக்கப் புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் தலைவர்கள் கையூட்டு வாங்காதவர்களாக இருக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் அத்வானிக்குத் தொடர்பு உண்டு என்று கூறும் அஞ்சுகுப்தா ஒரு முஸ்லீமைத் திருமணம் செய்து கொண்டவர். அதனால்தான் அப்படிப் பொய் கூறுகிறார் என்று பா.ஜ.க. கூறுகிறதே, அது உண்மையா?

பாபர் மசூதியை இடிக்கத் தேர்ப்பயணம் நடத்தி, இடிக்கத் தூண்டியவர் அத்வானி என்பதில் என்ன ஐயப்பாடு இருக்கிறது? காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவும் பாபர் மசூதி இடிப்பில் பங்கு கொண்டவர்தாம்.

அஞ்சு குப்தா என்ற பெண் காவல் அதிகாரி, அப்போது அத்வானிக்குக் காவல் புரியும்; காவலர்களுக்கு அதிகாரியாக இருந்து அவருடன் கூடச் சென்றுள்ளார். 1992 டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அத்வானி, முரளி மனோகர் ஜோசி, உமாபாரதி, வினய் கத்தியார், சாத்விரிதம்பரா விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்ட இந்து பாசிச வெறியர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நொடி தவறாமல் கண்காணித்து வந்துள்ளார் அஞ்சு குப்தா.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு சி.பி.ஐ. நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. அதில் 26.03.2010 அன்று சாட்சியமளித்த அஞ்சு குப்தா இரண்டு மணி நேரம் நடந்த உண்மைகளைக் கூறி விட்டார்.

அம்பலப்பட்டுப் போன ஆரிய வன்முறைக் கும்பல் அஞ்சு குப்தாவின் கணவர் இஸ்லாமியர் என்று கூறி திசை திருப்பப் பார்க்கிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

இன்றைய நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தங்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்வது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க உதவியாக இருக்கும். அதற்காக, டக்ளஸ் தேவானந்தா - கருணா இரண்டகக் கும்பலின் ஆட்களைத் தேர்ந்தெடுத்து என்ன பயன்?

பழைய தமிழ்த் தேசியக் கூட்டணி மீண்டும் அதே கொள்கையில் ஒருங்கிணைந்து வாக்காளர்களைச் சந்திப்பதும், அவர்களைத் தமிழர்கள் தேரந்தெடுப்பதும் தமிழ் ஈழ மக்களுக்கு இப்பொழுது ஊன்று கோலாகவும் உதவியாகவும் இருக்கும்.

இப்படி நடக்காது போல் தெரிகிறது அங்குள்ள நிலைமை! கருணா வடக்கு மாநிலத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்துகிறார் என்பது கவலை அளிக்கிறது.

கலைஞரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மு.க. அழகிரி கூறி உள்ளாரே?

இதையே தான் மு.க.ஸ்டாலினும் வருங்காலத்தில் கூறப் போகிறார். கனிமொழியும் அவ்வாறே எதிர்காலத்தில் கூறப் போகிறார்.

உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு நடத்திய பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவேன் என்று கூறிய கருணாநிதி - இப்போது அதை மாற்றிக் கொண்டார். நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அவரது இந்தச் சொல்லே குடும்பத்தில் இந்நேரம் சூறாவளியைக் கொண்டு வந்திருக்கும்.

பதற்றப்படாமல் எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள்.

வெளிநாட்டு அணு மின் நிலையங்களில் கதிர்வீச்சு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டால், குறைந்த அளவு இழப்பீடு தந்தால் போதும் என்ற சட்ட முன் வரைவைக் கிடப்பில் போட்டு விடுவார்களோ?

 

இப்போதைக்கு எதிர்ப்பைச் சமாளிக்கத் தாமதித்துத் தாக்கும் உத்தியை சோனியா மன்மோகன் வகையறா கடைப்பிடிக்கலாம்.

மன்மோகன், இந்தியாவின் அமெரிக்க வைசிராய் என்று ஏற்கெனவே நாம் கூறியுள்ளோம். இத்தாலிப் பெண் காங்கிரசுக் கட்சிக்குத் தலைவரானது மன்மோகனுக்கு அமெரிக்க சேவை செய்ய பெரிய வாய்ப்பாகிவிட்டது

போபாலில் நடந்த யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் காற்று வெறியேற்றத்தால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இன்னும் அப்பகுதியில் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கின்றன.

ஆனால் அணுமின் உற்பத்தி - நிலையத்தில் விபத்து ஏற்பட்டு கதிர்வீச்சு வெளிப்பட்டால் போபாலை விட பலநூறு மடங்கு இழப்புகள் ஏற்படும். சோவியத் ஒன்றியத்தில் 1980களில் ஏற்பட்ட செர்னோபில் அணுஉலை விபத்தின் பாதிப்பு இன்றும் தொடர்கிறது. அமெரிக்காவின் திரிமைல் ஐலண்டு பகுதியில் 1970 களில் நடந்த அணு உலை விபத்தின் பாதிப்புகள் இன்னும் தொடர்கின்றன. பாதிப்புகளுக்கு வரம்பில்லை; இழப்பீட்டிற்கு மட்டும் வரம்பு உண்டு என்கிறது தில்லி அரசு.

பெரும் விபத்தும் பெரும் நாசமும் ஏற்படக் கூடிய அணுமின் உற்பத்தித் தொழிலகத்தை ஏன் நிறுவ வேண்டும்? நிறுவக் கூடாது.

-தமிழ்த் தேசம் செய்தியாளர்

Pin It