தமிழர்கள் தங்களின் சொந்த விழாக்களைச் சிக்கல் இல்லாமல் அயல் இன ஆதிக்கமில்லாமல் கொண்டாடும் நிலை இன்றில்லை.

தைப் பொங்கல் விழா என்பது அறுவடைத் திருநாள் விழா. பல இன மக்களும் அறு வடைத் திருநாள் விழா கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் தனித்தன்மை என்னவெனில், பொங்கல் விழாவை நான்கு நாள் நிகழ்வாகக் கடைபிடிப்பதாகும்.

மார்கழித் திங்களின் கடைசி நாள் போகிப் பண்டிகை என்று கடைபிடிக்கப்படுகிறது. வீடு, வீதி, அனைத்தையும் தூய்மைப்படுத்துவது ஒருவிழாவாகத் தமிழர்களால் கடை பிடிக்கப்பட்டது. சுற்றுச் சூழல் தூய்மை - பாதுகாப்பு என்ற கருத்தியல் வளர்ந்துள்ள இந்நாளில் தமிழர்கள் அந்தக் காலத்திலேயே தூய்மைப்படுத்தலுக்கு ஒருநாள் ஒதுக்கி விழாவாகக் கொண்டாடியது மிகவும் போற்றத் தக்க செயல்.

மறுநாள் மக்களுக்கான பொங்கல்; அடுத்தநாள் கால் நடைகளுக்கான பொங்கல்; அடுத்தநாள் மாட்டு வேடிக்கை - ஏறுதழுவுதல் விழா அல்லது காணும் பொங்கல்!

இவ்வாறு தமிழர்களுக்கு மட்டுமே தனிச் சிறப்புடன் விளங்குகிறது பொங்கல் விழா. இந்தியாவில் வேறு எந்த இனமும் நான்கு நாள் பொங்கல் விழா கொண்டாடுவதில்லை. ஆனால் ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களின் பொங்கல் நாளை சங்கராந்தி நாள் என்றே அழைக்கின்றனர். அப்படியே நாட்காட்டிகளிலும் இந்நாள் குறிக்கப்படு கிறது. அது என்ன கருங்கிராந்தி நோய் போல் சங்கராந்தி?

சரி, அதே ஆரியப் பார்ப்பனர்கள் போகி, மாட்டுப்பொங்கல், ஏறு தழுவல் விழாக்களைக் கடைபிடிக்கிறார்களா? அந்த நாட்களுக்கு சமற்கிருதத்தில் பெயர்கள் உண்டா?

தமிழாண்டுக் கணக்கில் ஆரியப் பார்ப்பனர்கள் புராணப் புளுகுகளைத் திணித்து அறுபது சுழற்சி ஆண்டுகளை உண்டாக்கினர். பிரபவ தொடங்கி அட்சய வரையுள்ள அறுபதாண்டுகளை மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டால் வரலாற்றில் காலக் கணக்கை எப்படிச் சொல்வது? அந்த அறுபதுபெயர்களும் சமற்கிருதப் பெயர்கள். அவை யாவும் கிருட்டிண பரமாத்மாவுக்கும் நாரதர்க்கும் அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த அறுபது ஆண் குழந்தைகளின் பெயர்கள் என்கிறார்கள்.

இந்த அவலத்தை, மானக்கேட்டை மாற்றி தமிழர்க்கான தொடராண்டு முறையை உருவாக்கிட 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஆய்வு செய்து, பொங்கல் விழாவை சாதி, சமயம், கடந்த தமிழர் விழாவாகக் கொண்டாடுவது என்றும், தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்றும் இத்தொடர் ஆண்டுக்குத் திருவள்ளுவர் ஆண்டு எனப் பெயரிடுவது என்றும் முடிவு செய்தனர். ஏசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்று கணக்கிட்டு நடப்பில் உள்ள கிருத்துவ ஆண்டுடன் 31 ஆண்டைக் கூட்டிக் கொண்டு திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும் என்றும் அறிவித்தனர்.

அதன் பிறகு பல்வேறு கூட்டங்களில் மறைமலை அடிகளார். திரு.வி.க. சோமசுந்தர பாரதியார், கா.சு. பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற தமிழறிஞர்களும் பெரியார் அண்ணா, ம.பொ.சி. போன்ற அரசியல் தலைவர்களும் மற்றவர்களும் திருவள்ளுவராண்டை ஏற்றுச்செயல்படுத்துமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விட்டனர்.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1971 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட நாட்குறிப்புச் சுவடிகளில் திருவள்ளுவராண்டு கடைபிடிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசிதழில் திருவள்ளுவராண்டு முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு எம் ஜி,ஆர் முதல்வராக இருந்த போது, தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் திருவள்ளுவராண்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

2008 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது திருவள்ளுவராண்டு முறையைத்தான் அரசு கடைபிடிக்கும் சித்திரையில் தொடங்கும் ஆண்டு முறையைக் கடைபிடிக்காது என்று சட்டம் இயற்றினார். அது நடைமுறைப்படுத்தவும் பட்டது.

இத்தனை வரலாற்றையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் இப்பொழுதுள்ள முதலமைச்சர் செயலலிதா 2011 ஆம் ஆண்டு, தை முதல் நாள் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு என்பதைக் கடைபிடிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றி அதைச் செயல்படுத்தி வருகிறார். பழைய பார்ப்பனிய ஆண்டு முறையான பிரபவ - அட்சய ஆண்டு முறையே அதிகாரம் உள்ளது என்று ஆக்கினார். அக்ரகாரச் சிந்தனை எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது.

தமிழர் ஆண்டு முறை மட்டுமல்ல, தமிழகம் சாதித்து வைத்துள்ள சமூக நீதிக்கும் குழு தோண்டி வருகிறார் செயலலிதா.

கடந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு இல்லை; போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் வேலை என்று அறிவித்துச் செயல்படுத்தினார்.

இப்போது, சென்னையில் சட்டப்பேரவை, மற்றும் தலைமைச் செயலகத்திற்காக 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடத்தில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப் போகிறேன் என்றார்.

இந்தப் பல்நோக்கு உயர் மருத்துவமனையில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்படுவர். ஒப்பந்த அடிப்படை என்பதால் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட மாட்டாது என்கிறது செயலலிதா அரசு. இடஒதுக்கீட்டை இல்லாமற் செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தம் என்று ஒரு தந்திரத்தைக் கையாள்கிறார். மருத்துவமனை நிரந்தரமாக இருக்கப் போகிறது. அதில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தம் ஏன்? அப்போது தான் இட ஒதுக்கீட்டைப் பறிக்க முடியும் என்பதற்காக செயலலிதா செய்யும் தந்திரம் இது!

செயலலிதா தலைமையில் தமிழக அரசியல் சூழலில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக விகிதத்தில் பார்ப்பனர்களை நீதிபதிகளாக்கும் முயற்சிகள் வேகமாக நடக்கின்றன.

12 ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருப்பதை மெல்ல மெல்ல நீக்கிட அரசுப் பள்ளிகள் அனைத்திலும் ஆங்கில பயிற்று மொழி வகுப்புகளை தொடங்கியுள்ளார் செயலலிதா.

தமிழர் அடையாளங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், தமிழகம் பெற்ற சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அனைத்தையும் காலி செய்கிறார் செயலலிதா.

ஏற்கெனவே பதவியில் இருந்த போது கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்; இப்போது சிவாஜி கணேசன் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்.

இனப்படுகொலையில் மடிந்து போன ஈழத் தமிழர் நினைவுச் சின்னமான தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒரு பகுதியை இடிக்கச் செய்தார். முழுமையாக இடிக்க சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

தில்லை நடராசர் கோயில் நிர்வாகம் இந்து அறநிலையத் துறையிடம் நீண்ட போராட்டங்களுக்குப் பின் தி.மு.க. ஆட்சியில் ஒப்படைக்கப்பட்டது. அதை மீண்டும் கைப்பற்ற தீட்சிதக் கும்பல் சுப்பிரமணியசாமி தலைமையில் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கில் வேண்டுமென்றே ஏனோ தானோ என்று தமிழக அரசு வழக்கறிஞர் செயல்பட்டதை உச்சநீதிமன்றமே கண்டித்தது. தமிழக அரசு மறைமுகமாகத் தீட்சதர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டது. உச்சநீதி மன்றம் தீட்சிதர்கள் பொறுப்பில் சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் வரவேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டது.

செயலலிதா ஆட்சி ஆரியப் பார்ப்பனியத்தின் அரசியல் வாரிசின் ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. பார்ப்பனிய எதிர்ப்பைத் தூக்கி எறிந்து விட்டு பா.ச.க.வுடன் கூட்டுச் சேர்ந்தது. பார்ப்பனியத்துடன் கூடிக் குலாவுவதில் பெருமை காண்கிறது. போராட்டங்கள் நடந்தால் தாங்கள் தமிழினத்தின் பக்கம் இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக ஏனோதானோ என்று ஆணைகள் போடுவது, பின்னர், ஓய்ந்துவிடுவது என்ற தி.மு.க. வின் நிலை தான் செயலலிதாவுக்குத் துணிச்சல் கொடுத்தது. செயலலிதாவை ஆதரித்து சமூக நீதி காத்த வீராங்கனை என்று ஏற்கெனவே பட்டம் கொடுத்தார் வீரமணியார்.

இப்பொழுதும் தமிழர் திருநாளை “திராவிடர் திருநாள்” என்று கூறி குறுக்குச் சால் ஓட்டுகிறார் வீரமணியார்.

இவையெல்லாம் தான் தமிழ்மக்களிடம் வாக்கு வாங்கி வெற்றிபெற்ற செயலலிதாவுக்குத் தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் துணிச்சலைக் கொடுத்தது.

தமிழின உணர்வு அடிப்படையில் எழும் உண்மையான தமிழ்த் தேசியமும் அத் தமிழ்த் தேசியத்தைத் தமிழ்மக்கள் அனைவரும் உயர்த்திப்பிடிக்கும் வளர்ச்சியும் வரும் போதுதான் ஆரியப் பார்ப்பனியத்தின் தமிழின விரோதச் செயல் களைத் தடுக்க முடியும்.

மேற்கண்ட படிப்பினைகளை உணர்ந்து தமிழ்த் தேசியம் எழச் செய்வோம் என்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளில் தமிழர் திருநாள் விழாவில் தமிழக மக்கள் அனைவரும் உறுதி ஏற்போமாக!

தமிழமக்கள் அனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக!

Pin It