பெரியார் திராவிடர் கழகத் தோழரும், “ஈ.வெ. இராமசாமி என்கிற நான்...“ என்ற பெரியார் குடியரசுக் கட்டுரைகளின் தொகுப்பாசிரியருமான தஞ்சைத் தோழர் பசு.கவுதமன்--திருவாட்டி. அறிவுச்செல்வி இணையரின் மகள் செல்வி தென்றலுக்கும் சென்னை வேளச்சேரி திரு. ஜேம்ஸ் ஆன்டனி -- திருவாட்டி. சலோமி ஜேம்ஸ் இணையரின் மகன் செல்வன் கிரிஸ்டோபர் டொமினிக்குக்கும் தஞ்சையில் 8.5.2011 ஞாயிறு மாலை திருமணம் நடைபெற்றது. சாதி மறுப்புத் திருமணமான இது தாலி மறுப்புத் திருமணமாக நடைபெற்றது. மேடையில் திருமணப்பதிவு நடந்தது.

1848 ஆம் ஆண்டு காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் எழுதி வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழ்ப்படுத்தி    குடியரசு' இதழில் 1931 ஆம் ஆண்டு “சமதர்ம அறிக்கை“ என்ற பெயரில் வெளியிட்டார். அவ்வறிக்கையின் முதல் பாகம், தோழர் பசு.கவுதமனால் தொகுக்கப்பட்டு திருமண அன்பளிப்பாக மணவிழாவில் வெளியிடப்பட்டது. “காந்தியாரும் பெரியாரும் காங்கிரசும்“ என்ற நூல் திருமண அன்பளிப்பாக வெளியிடப் பட்டு அனைவர்க்கும் வழங்கப்பட்டது.

தமிழக வணிக வரித்துறை அமைச்சர் திரு.சி.நா.மீ. உபயதுல்லா, பெரியார் தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்தோழர் சி.மகேந்திரன்,  திருச்சி செல்வேந்திரன் (தி.மு.க.) சாகுல் அமீது (நாம் தமிழர் கட்சி) கோவை கு. இராமகிருட்டிணன்(பெ.தி.க.பொதுச் செயலர்), முனைவர் மு.இராமசாமி  (செம்மொழி இயக்குநர்), தோழர் குப்பு வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கியபோது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பின்வருமாறு பேசினார்.

சாதி மறுப்புத் திருமண மாக நடைபெறுவது பாராட்டிற்குரியது. சாதி ஒழிப்பிற்கு இவ்வாறான  திருமணங்கள் பெருக வேண்டும்.

வர்ணாசிரமத்தையும் சாதியையும் வாழ்நாள் முழுதும் எதிர்த்துப் போரா டிய பெரியார், தமது வாழ்நாள் அனுபவமாக ஒரு முடிவுக்கு வந்தார். அது தமிழ்நாடு தில்லியின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் வரை வர்ணாசிரமத்தை ஒழிக்க முடியாது. சூத்திரப்பட்டத்தை ஒழிக்க முடியாது என்பதுதான்.

1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் பிறந்தநாள் மலருக்காக எழுதிய கட்டுரையில் பெரியார் இந்தக் கருத்தை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை மட்டும் படிக்கிறேன்.

“எனது 95ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு, வழமை போல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை, என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ இல்லையோ என்கிற பிரச்சினை மாத்திரமல்லாமல், எழுதும் படியான வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்பதே முக்கியக் காரியமாகும்.“

பெரியார் எழுதிய படியே நடந்து விட்டது. அதே 1973 டிசம்பரில் அவர் இறந்துவிட்டார். ஆனால் பெரியார் குறிப்பிட்டது அடுத்த ஆண்டு பிறந்த நாள் மலருக்குக் கட்டுரை எழுதிட உயிரோடு இருப்பேனோ மாட்டேனோ“ என்பது மட்டுமல்ல, உயிரோடு இருந்தாலும் கட்டுரை எழுதும்படி வெளியில் இருப்பேனோ அல்லது எழுத முடியாமல் சிறையில் இருப்பேனோ என்ற பொருளில் ஆகும். தமிழ்நாட்டு விடுதலைக்கான ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி அதற்காக சிறையில் இருக்க வேண்டி வரலாம் என்று கருதினார். அக்கட்டுரையில் அவர் எழுதுகிறார்.

"இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்தியப் பிரஜையாய் இருக்கும் வரை, இந்துவாய் அல்லது கிறிஸ்துவனாகவோ முஸ்லிமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை, நமது பண்டார சன்னதிகள் உட்பட நாம் பவுத்தனுக்கும் ஜெயினனுக்கும் சமானமாக இருக்கும்படியாக இருந்தாலும், பகுத்தறிவு வாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான் _ பார்ப்பானின் தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும்.

------------  ---------.... ..... .....

இதுதான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்தச் சட்டத்தை திருத்தவோ மாற்றவோ நம் மக்களுக்கு ஒரு நாளும் சக்தியோ உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்ல, இந்திய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான - நிர்ப்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும் இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயே நான் இப்படி எழுதுகிறேன்.

.........  .......  .......

---------   -----------நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாகக் கருதுபவர்களே யாவார்கள்.

ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம்.

...... .........     ........

----------------நான் முதலில் “நான் இந்து அல்ல“ என்று சொல்லிவிட்டால், இழிவு நீங்கி விடும் என்றுதான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்-இந்துக்கள் என்றால் சூத்திரர்கள் வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப் படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

------------  ---------.... ..... ..... ------------   ----------

எனவே நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் சுதந்திரத் தமிழ்நாடு ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வரவேண்டியது ஒவ்வொருவர்க்கும் அவசிய மான காரியம் என்பதைப் பணிவோடு தெரி வித்துக் கொள்கிறேன்“

பெரியாரின் இக்கட்டுரை, ஐயா ஆனைமுத்து அவர்கள் முதலில் தொகுத்த மூன்று தொகுதி களில் மூன்றாவது தொகுதியில் 1980 மற்றும் 1981 ஆம் பக்கங்களில் உள்ளது.

தமிழ்நாடு விடுதலை அடைவதற்கு முன் சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டாம் என்பதல்ல இதன் பொருள். போராட வேண்டும். சில உரிமைகளைப் பெறலாம். ஆனால் முழுமையாக சாதி ஆதிக்கத்தை நீக்க முடியாது. ஏனெனில் வர்ணாசிரம தர்மத்தின் தலைமைப் பீடம் அதன் ஊற்றுக்கண் தில்லியில் இருக்கிறது. அந்தத் தலைமை பீடத்திலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்ளாமல் நாம் நடத்தும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் சாண் ஏற முழம் சறுக்கியது என்ற கதையாக சில உரிமைகள் பெறுவோம், மேலும் பல சீரழிவுகள் உருவாகும். சாதியும் ஒழியாது.

அரசியல் இலக்கற்ற ஒரு தொழிற்சங்கம், சம்பள உயர்வு, போனஸ், வேலை நிலைமை குறித்துப் போராடி சில உரிமைகள் பெற்றாலும் அது தொழிலாளி வர்க்கத்தைக் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்காது. அது போல இந்தியாவில் ஒரு காலனியாக _ அடிமை நாடாகத் தமிழ்நாட்டை வைத்துக் கொண்டு, நடத்தும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங் களுக்கு வரம்புக்குட்பட்ட சில பலன்கள் மட்டுமே கிடைக்கும். சாதி ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமானால் அதற்குத் தமிழ்நாட்டு விடுதலை தான் உரியவாறு வாசல் திறந்து விடும்.

எனவே, உடனடிச் சிக்கல்களுக்கு சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை வர்ணாசிரம எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டே பெரியாரின் கூற்றுப்படி தமிழ்நாடு விடுதலைக்கு முதன்மை கொடுத்துப் போராட வேண்டும் என்பதைத் திருமண வாழ்த்துச் செய்தியாகக் கூறி மணமக்கள் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

(தோழர் பெ.மணியரசன் பேச்சு எழுத்துவடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.)
Pin It