”இலங்கையின் போர்க்குற்றங்கள்: ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியவை” என்ற தலைப்பில் தில்லி தமிழ் மாணவர்கள் ஒன்றியம் மற்றும் பிற மாணவர் அமைப்புகளும் இணைந்து 10.05.2011 அன்று கிருஷ்ண மேனன் பவனில் கருத்தரங்கம் நடத்தின. கூட்டத்தில், நீதிபதி இராஜேந்திர சச்சார்(பி.யு.சி.எல். தலைவர்) முன்னுரையுடன் கூடிய ஐ.நா.வின் அறிக்கையை தமிழ் மாணவர்கள் அமைப்பு  புத்தகமாக வெளியிட்டது.

முதல் அமர்வில், உலக சீக்கியர் செய்திகள் இதழின் முன்னாள் ஆசிரியர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் இலங்கையின் போர்க்குற்றங் களுக்கு உதவிய இந்திய அரசு தப்ப முடியாது என்று பேசினார். இந்திய அரசு இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் போல, செயல்பட்டதாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய நீதிபதி இராஜேந்திர சச்சார், “இலங்கையின் அராசகம் குறித்து இந்தியா மவுனம் சாதிக்கக்கூடாது” என்றார்.

சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் மணிவண்ணன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் சத்திய சிவராமன், மணிப்பூர் அமைதி மற்றும் சனநாயகத் திற்கான பரப்புரை இயக்கத்தைச் சேர்ந்த திரு. மலேம் நிங்தௌஜா, கர்நாடக மனித உரிமையாளர் நகரி பாபய்யா உள்ளிட்டோரும் இவ்வமர்வில் கண்டன உரையாற்றினர்.

இரண்டாம் அமர்வுக்கு திரு. சத்ய சிவராமன் தலைமை தாங்கினார். இவ்வமர்வின் போது, மருத்துவமனைகள், பொது மக்களின் வாழ்விடங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் என ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசின் தாக்கு தல்கள்கள் குறித்த ஒளிப் படங்கள் திரையிடப் பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் அனைத் திந்தியச் செயலாளர் டி.இராசா, லோக் ஜனசக்திக் கட்சியின் தலைவர் இராம் விலாஸ் பாஸ்வான், சி.பி.ஐ. மார்க் சிஸ்ட் - லெனினிஸ்ட் (விடு தலைக் குழு)  சார்பில் சுவாபன் முகர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதில் பேசினர்.

கருத்தரங்கின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. விசாரணைக் குழு அறிக்கையின் படி ஐ.நா. மன்றம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. தமிழர்களுக்கு எதிரான சர்வதேசக் குற்ற மிழைத்த இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமையினர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

3.      ஐ.நா. குழு அறிக்கையில் சுட்டிக்காட்டி யவாறு, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் தன்மை மற்றும் அவற்றின் அளவைக் கருத்தில் கொண்டு, நடந்திருப்பது இனப்படுகொலைக் குற்றம் என அங்கீகரிக்கப்பட வேண்டும்.

4.      இந்திய அரசு இலங்கையில் அமைதி ஒப்பந்தம் முறிவிற்கு வந்ததற்குப்பிறகு இலங்கை பிரச்சினையில், தனது பங்கு குறித்து  வெள்ளை அறிக்கையை வெளியிடுவதுடன் சர்வதேச விசார ணைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து இலங்கைத் தமிழர்களுக்கு கௌரவம், நீதி மற்றும் அமைதியைப் பெற்றுத் தர முன்வர வேண்டும்.

5.      இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் குறித்து உறுதியான குரல் கொடுக்க முன்வருமாறு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சனநாயக சக்திகளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
Pin It