* அடை மழையிலும்
ஒழுகவில்லை
தேனடை...

* காக்கா முள் தைத்ததும்
காற்றாடியானது
சிறுவனின் கையில் கிழிந்த பனைஓலை.

*ஆலம் விழுதுகளில்
ஊஞ்சலாடுகின்றன
பழைய நினைவுகள்.

* வெற்றிலை பெட்டிக்குள்
சிவந்து கிடக்கிறது
பாட்டியின் உலகம்.

* மைதானங்களில்
மைனாக்கள் உலவ
கணினியில் கைதிகளாய் சிறுவர்கள்.

* எந்த ஜீராவில் ஊரினால்
இனிக்கும்
பூமி குளோப்ஜாமூன்?

* கோபப்படும் காற்றுக்கு
வேகத்தடை வேண்டுகிறது
குலை தள்ளிய வாழை.

* என் பயணப்பாதையெங்கும்
பதுங்கிப் பதுங்கி
பயணிக்கிறது நிலா.

* வண்ணத்துப் பூச்சியின்
வண்ண ஊஞ்சல்
காற்றிலாடும் மலர்.

* உடைந்த தேனடையிலிருந்து
வழியும் தேன்
தேனீக்களின் கண்ணீர்.

* இரவிலாவது இரவல் கிடைக்குமா
உறங்கும் பறவைகளின்
ஒற்றைச் சிறகு?

* கண்ணீரின் ஈரத்தில்
கனத்தது
தலையணை.

* பசித்தும் பால்குடிக்காமல்
ரசிக்கிறது குழந்தை
கிண்ணத்தில் நிலா.

* மகளுக்கு புதிய புத்தகப்பை
மகிழ்ச்சியில் மறந்தது
கிழிந்த கைலியை மாற்றும் கனவு.

* குளம் நிறைய தாமரைகள்
முகம் பார்க்க முடியாமல்
நிலா.

* விழும் அருவியில்
விழுந்தோடுகிறது
மனது.
........................................

உளியின் கூர்நுனியில்
குவிந்து கிடக்கிறது
கலைஞனின் கவனம்

சிலைகளின் அழகில்
படர்ந்து உருள்கிறது
ரசிகனின் இதயம்.

- கவி.வெற்றிச்செல்வி சண்முகம்.

Pin It