அலுவலகத்திற்கு செல்கையில் அரக்கப் பரக்கக் குளிப்பது போலல்லாமல் மெதுவே துவங்கினேன். நிதானமாகக் குளிக்கையிலெல்லாம் தவிர்க்கவியலாமல் ஊர் ஞாபகம் வந்துவிடும்.மிக மோசமாக தண்ணீர் கஷ்டம் உள்ள ஊர் அது.

தெற்கே சின்னப்ப நாயக்கர் தோட்டத்து கெணத்துக்கு தண்ணிக்கு போகணுமின்னா ஒரு கிலோமீட்டர் நடக்கணும்.

என் அம்மாகூட நாலு கொடம் தண்ணி சேந்த கயிறு, உருளை எல்லாம் தூக்கிட்டு நானும் போகணும். என் செட்டுப் புள்ளைங்க எல்லாம் வருவாளுக. எலந்தவடையெல்லாம் தின்னுட்டு ரொம்ப ஜாலியாதான் இருக்கும்.அம்மா தண்ணி சேந்தும் போது நானும் கூட கை புடுச்சு கயிறு இழுப்பேன்.ஆனா அது அம்மாவுக்கு உதவிக்கு பதில் உபத்தரவமாகத்தான் இருக்கும். நான் தப்புத்தப்பா கை வைக்கும் போது அம்மாவோட லயம் மாறிடும்.இழுக்க முடியாது.ஆனாலும் திட்டமாட்டா. அம்மாவோட கிழிஞ்ச உள் பாவாடை இல்லாட்டி அப்பவோட கிழிஞ்ச வேட்டிய நல்லா கெணமா சுத்தி அம்மா ஒரு சும்மாடு செய்வா. பிறகு என் தலையில் ஒருசின்னக் கொடம்,இடுப்புக்கு ஒரு தோண்டி தூக்கி விடுவா. ஆனா அம்மா ரொம்பப் பாவம்.பெரிய தகரக் கொடம் ஒன்னு இருக்கு. அது ஓட்டையானாலும் மாத்தி வேற வாங்கக் காசில்லாததால சிமிட்டி வெச்சு அடைச்சு அடைச்சு பொண கனங் கணக்கும். தம் கட்டி அதைத் தலைக்குத் தூக்கிடுவா. இன்னொரு கொடத்தை இடுப்புக்கும் தூக்கி வெரசலா நடப்பா..நாலஞ்சு நடையாவது தண்ணி கொண்டு போனாத்தான் இன்னிக்கிப் பொழு தோட வரைக்கும் தாக்காட்டும். அதுக்குள்ளார அப்பா வேல விட்டு சாப்பாட்டுக்கு வந்திடும். அதுக்குள்ள சோறாக்கலேனா அம்மாவுக்கு அடிதான். கழுதமுண்ட. வீட்ல தின்னுட்டு சும்மா தான இருக்க. நேரத்துக்கு சோறுகூட ஆக்க முடியாதானு கண்டபடி பேசிடும்.

வெரசலா நட சாமின்னு என்னய கூப் பிட்டுட்டே அம்மா நடந்தா. எனக்கு உச்சி மண்டை யெல்லாம்எரியுதும்மான்னேன். பழகிச்சுன்னா சரியாயிடும்னா. சொட்ட மண்டையாயிடுமாம் மான்னேன்...

இல்லசாமி..வீட்டு வேலையெல்லாம் பழகுலேன்னா நீ வாழ்க்கப்பட்டுப்போறஎடத்துல அம்மா வளர்ப்பு சரியில்லேன்னு என்னத்தான் கேவலமா பேசுவாங்க..ன்னா

அம்மா உன்னய யாராவது திட்டினா அவங்க மண்டைய ஒடச்சிட்டு வந்திருவேன்

அம்மா சிரிச்சுட்டே எந்தங்கத்துக்கு புத்தி ஜாஸ்தின்னா வீட்டுத்திண்ண மேல கால எத்தி வச்சி இடுப்புக் கொடத்தை எறக்கிட்டு தலையை கொஞ்சூண்டு சரிச்சி தலைக் கொடத்தையும் எறக்கிட்டு வெரசலா எங் கொடங்களையும் எறக்கி எந்தலையத் தேச்சுவிட்டா.

வா சாமி இன்னொரு நடை தண்ணி எடுத்துட்டு வந்துடலாம்னா..

போம்மா நா வரல..இந்த நடைக்கு சாந்தா வரலயாமா.. நானும் வரமாட்டேன்

செரி, நீ இப்ப ஒரு கொடம் மட்டும் தூக்கிக்கோனு சமாதானப் படுத்தி கூட்டிப் போனா... அப்படியே மணி 12 ஆயிடுச்சு..செம்மண் பாதையில் கால் சூடு தாங்கமுடியலை.செருப்பு போட்டா வேகமா நடக்கமுடியாதுங்கறதுக்காக தண்ணி எடுக்கிற யாரும் செருப்பு போட மாட்டாங்க. அதுக்காகவே வேகமா வீடு வந்து சேந்துடுவாங்க..

எனக்கு ரொம்பப் பசியாச்சு..இதுக்கு மேல அம்மா விறகடுப்பைப் பத்த வெச்சு சோறாக் கறதுக்குள்ள ரொம்ப நேரமாகிடும். காலையில மிச்சமாயிருந்த கஞ்சியும்,கருவாடும் அம்மா எனக்குப் போட்டுக்குடுத்தா..வாங்கிட்டு வேலி யோரத்தில இருக்கிற வேப்பமரத்தோட ஊஞ்சல்ல போய் ஆடிட்டேதான் சாப்பிடுவேன்

எங்கவீட்டு வேப்பமரத்தில இந்த தூரி எப்பவுமே தொங்கிட்டேதான் இருக்கும். நாலா எட்டா மடிச்ச சாக்கு அதில தொங்கிட்டேதான் இருக்கும். அது தான் என்னோட சாப்பிடுற எடம். சாப்பிட்டு முடிச்சதும் தட்ட ஜலதாரியில போட்டுட்டு நா சாந்தா வீட்டுக்கு வெளையாடப் போயிட்டேன்.

மறுபடியும் எனக்கு பசிச்சப்போ வீட்டுக்கு வந்தேன். அம்மா பாத்திரமெல்லாம் வெளக்கிக் கிட்டிருந்தா. ஸ்கூல் லீவு விட்டா எனக்கு சாப்பிட றதும் வெளையாடறதும்தான் வேலை.

அப்பா சாப்பாட்டுக்கு வந்துட்டுப் போயிட் டார். நீயும் சாப்பிடு சாமின்னா.

அம்மாவுக்கு வேலையே தீரல..வீடு தொடைச்சுட்டிருந்தா..நா வழக்கம் போல் வேப்ப ஊஞ்சல்...

நாலு மணிக்கு அம்மா தன் மத்தியான நடை யைத் துவங்கினாள். மறுபடியும் கொடம் உருளை கயிறு.

போம்மா... உனக்கு வேற வேலையே இல்லியா? நா வரமாட்டேன்..

வாசாமி, கயிறெல்லாம் தூக்கிட்டு நா எப்புடி போறது. காலையில எல்லாருக்கும் மூஞ்சி கழுவ,கால்கழுவ தண்ணி வேண்டாமா?நீயும் ஸ்கூல் போயிடுவ ......

எனக்குக் கால் ரொம்ப வலிச்சது..ஆனா அம்மாவ தனியா அனுப்ப மனசில்லாம கூடப் போனேன். நாயக்கர் தோட்டத்துல காலைல மட்டுந்தான் தண்ணி விடுவாங்க. சாயங்காலம் கெழக்கால இருக்கிற லைன் கெணத்துக்குத்தான் போகணும். அங்க போனதும் தண்ணி விட மாட்டாங்க.. அந்தப் பக்கமிருக்கிறவங்க எல்லா ரும் சேந்திட்டு பாவம்னு இடையில ஒரு நடை விட்டா விடுவாங்க.. அந்தக் கெணறு ரொம்ப ஆழம்.. பாவம் அம்மா கையெல்லாம் செவந்து காப்புக் காச்சிரும்.....

ஆடி மாசக் காத்துல தண்ணியெடுக்கறது தான் ரொம்பக் கஷ்டம்.எதிர்க் காத்துக்கு ஒரு எட்டு வெக்கறதுக்குள்ள சேல கால்ல சுத்திக்கும்.உள் பாவாடை மேலேறிப் போய் கால் தடுக்கும்.

ரெண்டு கொடந்தூக்கறவங்களுக்கு கெரகந் தான்.

காத்துல சேல மாராப்பு ஒருங்கி நிக்காது. பாவம் அம்மா..ரெட்டக்கொடத்தையும் சொமந் துட்டு சேலைய இழுத்துவிடறதுக்குள்ள படாத பாடு பட்டுடும். அப்பப் பாத்து யாராவது ஆம்பிள்ளைங்க வந்துடக்கூடாதுன்னு நான் சாமிய வேண்டிக்குவேன். நானும் கொடம் தூக்கறதுனால என்னால எதுவுஞ் செய்யமுடியாது. சிலசமயம் எதிர்த்தாப்பல வர்ற தெரிஞ்ச பொம்பளைங்க கிட்ட கொஞ்சம் இழுத்துவிடச் சொல்லும் அம்மா.

கடைசி நடைன்னா ரொம்ப கஷ்டம்.வீடே வராத மாதிரி தோணும்.காலு பின்னிப்பின்னிப் போகும்.கயித்தை சுத்தி தலைமேல் வைக்கிற கொடத்து மேல போட்டுக்கும். இடுப்புல வைக்கிற கொடத்துமேல உருளைய கவுத்தி வச்சுக்கும்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மா கருப்பட்டிக் காப்பி வெச்சுத்தரும்.மோரு மொளகா,பூண்டு, கருவேப்பிலை எல்லாம் போட்டு பொரி வறுத்துத் தரும்.செரியான ருசியா இருக்கும்.

ஆறு மணியாகறதுக்குள்ள வீடு வாசல் திண்ணையெல்லாம் கூட்டித்தள்ளி கோலம் போடும். அப்பத் தான் மகாலட்சுமி வீட்டுக்குள்ள வருவானு அம்மா சொல்லும்.மறுபடியும் ராத்திரிக்கு சோறாக்கப் போயிடும்.

அப்பா ஏழு மணிக்கு வருவார். வந்தவுடனே ஒரு பக்கெட்டுத் தண்ணீரில் மேலு கழுவீட்டுதான் வீட்டுக்குள்ளயே வருவார். வந்து துன்னூறு எடுத்துப் பூசி சாமி கும்பிட்டதும் சாப்பிட உட்காருவார். நானும் அவர் கூடவே தான் சாப்பிடுவேன்.

அப்போதான் அப்பா அம்மாவைப் பாத்து கேட்டார் ‘ஏண்டி சூர நாயே!’ குளிக்கலியா? என்ன கேடு வந்துச்சு உனக்கு? வீட்ல வெட்டியாதான இருக்க..அதான் தொட்டி நெறையத் தண்ணி இருக்கில்ல?அழுக்குத்துணியோட இருக்க? உங் கையால பச்சத்தண்ணீயுங்கூட வாங்கிக் குடிக்க யோக்கியதை இல்லன்னு சொல்லிட்டே சாப்பிட் டுட்டுப்போய் படுத்துட்டார்.

ராத்திரி அம்மா பக்கத்துல படுத்திட்டிருந்தப்போ அம்மா கேட்டா காலு வலிக்குதா சாமி? இல்லம்மா.....

தலையைக் கோதியவாறே தலை வலிக்குதா சாமி?

இல்லம்மா....

நானும் கேட்டேன். உனக்கு வலிக் குதாம்மா?

அவள் அழுதாள்... அவளுக்கு வேறெதுவோ வலித்திருக்கக்கூடும். நான் அவளின் அழுக்குச் சேலையை இழுத்து போர்த்திக்கொண்டேன்.

சுவரில் மாட்டியிருந்த மகாலட்சுமி முகம் சட்டென மாற்றம் கொண்டு அம்மாவின் முகமா யிற்று...

Pin It