இருபதாண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலையிலுள்ள வாச்சாத்தி என்ற ஆதிவாசி கிராமத்தின் மீது அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து அட்டகாசம் புரிந்தனர். வனஇலாகா அதிகாரிகள் சந்தனமரத்தை வெட்டிக் கடத்துவதை ஏற்காத ஆதிவாசி மக்களை அவர்கள் துவம்சம் செய்து அவர்களது வாழ்வையே சீரழித்தனர்.

20-6-1992 ம் நாள் வனத்துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் 300 பேர் வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் தொடுத்தனர். ஆதிவாசி மக்களை அடித்துத் துவைத்து வீடுகளைக் கொள்ளையடித்து ஊரையே சூறையாடினர். 18 பெண்களை பாலியல் வன்முறையில்ஈடுபட்டுச் சிதைத்தனர். இதில் 13 வயதுச் சிறுமி உட்பட அந்த வெறி நாய்களால் சீரழிக்கப்பட்டனர். பின்பு காவல்நிலையத்திற்கு இழுத்துப்போய் அடைத்து வைத்து அதையே தொடர்ந்தனர்.

மொத்தம் 133 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதிப்பேர் மலைக்காடுகளில் ஓடி ஒளிந்தனர். அதனால் இந்த அக்கிரமம் வெளி உலகிற்குத் தெரிவதற்கே நாளாகிவிட்டது. விஷயம் வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் மலைவாழ் மக்கள் சங்கமும் தலையிட்டன. இந்த அநீதிக்கு நீதிகோரி மார்க்சிஸ்ட் கட்சி 1992ம் ஆண்டு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. சிபிஐ விசாரணை கோரியது. நாடாளுமன்றத்திலும், தேசியப் பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் பிரச்சனை கிளப்பி விவாதிக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன், மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பெ. சண்முகம் மனுதாக்கல் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதி, ரேசன் கார்டு, நிலப்பட்டா, சாதிச்சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசை யார் ஆட்சி நடத்தினாலும் இந்த வழக்கில் இறுதிவரை அக்கறை காட்டவேயில்லை.

1995ல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் ஆர். வைகை, என். ஜி. ஆர். பிரசாத், இளங்கோ, சம்கிராஜ் ஆகியோர் வாதாடினர். பின்பு உச்சநீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. 2002ம் ஆண்டு வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும், பின்பு தர்மபுரி நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டது. வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. பலமுறை அடையாள அணி வகுப்புகள் நடத்தப்பட்டன. நீதிபதிகள் மாறிச் கொண்டேயிருந்தனர். ஒவ்வொரு நீதிபதியிடமும் பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியமளித்துக் கொண்டேயிருந்தனர்.

156 வனத்துறையினர், 100 காவல்துறையினர், 6 வருவாய்த்துறை அதிகாரிகள் என மொத்தம் 269 பேர் மீது சிபிஐ வழக்குத் தொடுத்தது. இதில் வழக்கு விசாரணை நடைபெறும் போதே 54 பேர் மரணமடைந்து விட்டனர். இருபதாண்டுகள் நீடித்த வழக்கல்லவா இது! இதில் 12 அதிகாரிகளுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும், பாலியல் குற்றவாளிகள் 17 பேருக்கு ஏழாண்டு சிறையும், மற்றவர்களுக்கு ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு இவ்வழக்கில் கடுமையாய்ப் போராடினார்.

தற்போது குற்றவாளிகள் அனைவரும் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர். குற்றவாளிகள் தப்பிவிடாதபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மலைவாழ்மக்கள் சங்கமும் தொடர்ந்து போராடுவார்கள். நாதியற்ற இந்த ஆதிவாசி மக்களுக்கு வேறு யார் தான் இருக்கிறார்கள்?

2011 நோபல் பரிசு

தொடர்ந்து நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளுக்கே இலக்கியத்துக்கான நோபல் பரிசை வழங்கி வந்தது ஸ்வீடிஷ் அகாடமி. இந்த ஆண்டு தங்கள் ஸ்வீடன் நாட்டுக்கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ராமரின் கவிதை நூலக்குப் பரிசினை வழங்கி மரியாதை செய்துள்ளது. சில நேரம் கடுங்குளிரில் வாடியபோதும் வெப்பம் மிகுந்த சக்திமிக்க கருத்துக்களை இயற்கை, தனிமை, அடையாளம் குறித்த கவிதைகளைப் பாடியவர் தாமஸ் என்று நோபல் பரிசுக்குழு பாராட்டியுள்ளது.

மேலும் அவரது சுருக்கப்பட்ட ஒளிவீசும் கற்பனைகள் மூலம் நமக்குப் புதுமையான யதார்த்தத்தை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்த ஒரு கவிஞருக்கே நோபல் குழு ஸ்டாக்ஹோமில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எண்பது வயதாகும் கவிஞர் தாமஸ் 15 கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவை அனைத்தும் ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக மனவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் தாமஸ் மனித மனங்களின் ஆழ்ந்த பார்வைகளை வெளிக் கொண்டு வந்தவர். இவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியை. தந்தை பத்திரிகையாளர். அதனால் அவர் இளவயதிலேயே இலக்கியம், வரலாறு, மதங்கள், மனவியல் பற்றிப் படித்து அறிந்தார். 1956ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் மனவியலில் பட்டம் பெற்றார்.

1990ம் ஆண்டில் அவரைப் பக்கவாத நோய் தாக்கியதில் அவர் இன்று வரை பேசவே முடியாத நிலையில் உள்ளார். 1974ம் ஆண்டுக்குப்பிறகு இப்போது தான் ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த ஒருவருக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1901ம் ஆண்டு முதல் இன்று வரை 103 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு 15 லட்சம் டாலர்களாகும்.

தாமஸ் வாய்பேச முடியா விட்டாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. 2010ல் கூட ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிநவீனத்தின் மறைவு

தகவல் தொழில் நுட்பத்தின் சிகரமாய் விளங்கிப் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிய வல்லுனர், விஞ்ஞானி ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். கடந்த ஏழாண்டுகளாய் கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீவ் 7-10-11ல் மரணமடைந்தார். கம்ப்யூட்டர் துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் அரிய பல கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்தவர் ஸ்டீவ். இன்றைய டிஜிட்டல் யுகத்தின் அற்புதக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.

ஒரு பெரிய கம்ப்யூட்டரை செல்போனுக்குள் கொண்டுவந்து அடைத்தவர். தொடுதிரை என்ற நவீனத் தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்தவர். இவரது கண்டுபிடிப்புகளில் அதிநவீனமானது ஐ பாட். இன்றைய நடுத்தர வர்க்கத்தின் கைகளில் பரவலாகிவரும் ஐ. பேட், ஐ போன், 2007ம் ஆண்டு ஸ்டீவ் உருவாக்கியது தான்.

அவர் தொடர்ந்து வாழ்ந்திருந்தால் இன்னும் பல அற்புதச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கக் கூடும். அவரது பெருமையால்தான் அமெரிக்க தேசியக் கொடியே அரைக் கம்பத்தில் பறக்கிறது. உலகமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஸ்டீவ் புத்தமதத்தைப் பின்பற்றியவர் என்பது அவரைப் பற்றிய கூடுதல் செய்தியாகும்.

Pin It