1.
என்னை நானே கொண்டாடுகிறேன்-மேலும்
என்னை நானே பாடுகிறேன்
நான் நினைப்பதை- நீ நினைக்கலாம்
ஏனென்றால்,
என்னுடையவை அனைத்தும் உன்னுடையவை
புல்லின் மேல் சாய்ந்து கொண்டு
பொழுதைக் கழிக்கிறேன்
மேலும் என் ஆன்மாவை அழைக்கிறேன்
என் ஒவ்வொரு துளி ரத்தமும், என் மொழியும்
இம்மண்ணிலிருந்தும், காற்றிலிருந்தும் தான்
உருவானது.
என் பெற்றோரும் முன்னோர்களும் அவ்வாறே.
இப்போது ஆரோக்கியமாய் உள்ளேன்.
மரணம் வரையிலும் ஆரோக்கியமாய் இருப்பேன்
என்று நம்புகிறேன்.
மதங்களும், தத்துவங்களும்
கல்வியும் சடங்குகளும் உபயோகமற்றவை
போதும் அவைகள்.
ஆனால் எப்போதும் மறக்க இயலாதவை
நன்மை, தீமையை நான் ஏற்கிறேன்.
ஒவ்வொரு தீமையின் போதும்,
நான் பேசுவதற்கு அனுமதி உண்டு
தடையற்ற இயற்கை சக்தியோடு
என்னிடம் பேசும்.

2.
வீடும் அறைகளும் நறுமணத்தால் நிரம்பி உள்ளன
ஒவ்வொரு பிரிவுகளும் நறுமணத்தால் நிரம்பி உள்ளது
அந்நறுமணத்தை நான் சுவாசிக்கிறேன் என்பது
எனக்கும் தெரியும். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நறுமணம் என்னைப் போதையில் ஆழ்த்தும்-ஆனால்
என்னால் அதை அனுமதிக்க முடியாது
இயற்கை என்பது நறுமணமல்ல
அதற்கு என்னைத் தெரியாது.
அது மணமற்றது- அவை
எப்போதும் என் இதழ்களுக்காக
நான் அதைக் காதலிக்கிறேன்
பாசாங்குகளற்ற நிர்வாணத்தில்
வனத்தின் கரையோரமாகச் செல்லும்...
இயற்கையோடு உறவு கொள்ளப் பைத்தியமாய் உள்ளேன்.
என் மூச்சுக் காற்றிலாடும் பனி, எதிரொலிகள், அலைகள்,
ரீங்கரிக்கும் வண்டுகளின் ஓசை
அன்பின் வேர்கள், பட்டு நூல்கள்
பாதம் முதல் கேசம் வரை படர்ந்து செல்லும்
எனது சுவாசம், உள்ளிழுப்பு, இதயத்துடிப்பு
காற்றும் இரத்தமும் கலந்து
இதயத்திலிருந்து வரும் சக்தி
பசுந்தளிர்கள் மற்றும் சருகுகளின் வாசம்
கறுத்துக் கிடக்கும் கடலோரப் பாறைகள்
குவித்து வைத்துள்ள வைக்கோல்போர்
காற்றிலோடி வரும் குரலில் எதுக்களிக்கும் வார்த்தைகள்
தென்றலின் தாலாட்டில் மரங்கள்,
கிளைகளின் நிழலும் ஒளியும் விளையாட்டு
தனிமையின் சுகம்,
வீதிகளில் வேகமாகச் செல்லும் போது
பசுமையான வயலின் மத்தியில்
மலைச்சரிவில் காலாற நடக்கும்போது
ஆரோக்கியத்தை உணரும்போது
என்னுடைய பாட்டு படுக்கையிலிருந்து எழுந்து
சூரியனைச் சந்திக்கும்
லேசான சில முத்தங்கள்
சில தழுவல்கள்
என் கரங்களைச் சுற்றிலும்

பூமியைப் புரிந்து கொள்ள முயற்சித்தாயா?
பூமியைப் படிப்பதற்கும்,
வாசிப்பதற்கும் பயிற்சி பெற்றாயா?
கவிதைகளை அறிந்து கொள்வதில் பெருமை அடைகிறாயா?
இந்த இரவும் பகலும் என்னோடு நிற்கட்டும்
கவிதைகளின் ஊற்றை உன்னிடமே வைத்துக் கொள்
ஆதவனின் அருமையையும்
பூமியின் பெருமையையும்
நீ பெற்றிடுவாய்
(பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான சூரியன்களும்
பூமிகளும் உள்ளன)
இரவலாக அல்லது இனாமாக
இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக
எவரிடமிருந்தும் - நீ
எதையும் பெற வேண்டியதில்லை.
புத்தகங்களிலிருந்து செங்கோலையும்
அறிவையும் பெற வேண்டியதில்லை
இறந்தவன் கண்கள் வழியாக நீ
எதையும் பார்க்க வேண்டியதில்லை
என் கண்கள் மூலமாகவும் நீ
எதையும் பார்க்க வேண்டியதில்லை
என்னிடமிருந்து எதையும் எடுக்க வேண்டியதில்லை
உன்னைச் சுற்றிலும் உள்ளவை ஏராளம்
அனைத்தும் உன்னிடமே அடக்கம்.

தமிழில்: கலா.மணியன்

Pin It