‘ஒடியன்’ என்று முற்றிலும் வித்தியாச மான தனித்துவமான சொல்லை தலைப்பாக ஏற்றுக் கொண்டு வெளிவந்திருக்கிற இந்தக் கவிதை நூலைப் படைத்தவர், லட்சுமணன்.

‘ஒடியன்’ என்பது இருளர்களிடையே புழங்குகிற ஒரு தீய சொல். இருளர்கள் எனப்படுகிற மலை மக்களின் நூற்றாண்டு காலத்துக் கோபமும் குமுறலும் ரௌத்ரமாக தெறித்திருக்கிறது, இக்கவிதைகளில். கோவை மாவட்டத்து மலை மக்களான இருளர்களின் கோபம், சோகம், அவலம், குமுறல், சாபம் எல் லாமே இருளர்களின் மொழி யிலேயே ரத்தமும் சதையுமான உயிர்த் துடிப்புடன் வெளிப்பட் டிருப்பது, இதன் மிக முக்கிய மான தனித்துவம்.

அவர்களின் மொழியிலே யே அவர்களது ஆன்மா வெளிப் படுகிறபோது, அதன் கவித்துவ வீர்யம் அசாதாரணமாகிவிடு கிறது. வளர்ந்த நிலப் பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்தில் ஊறித் திளைத்திருப் பதால் நமது ரத்தத்திலும், பொதுப்புரிதலிலும் ஓடிக் கொண்டிருக்கிற பண் பாட்டையும், நாகரீகத்தையும், ஒழுக்க மதிப்பீட்டையும் அதிர்வு க்குள்ளாக்கி புரட்டிப்போடு கிறது, இருளர்களின் பண் பாடும், நாகரிகமும்.

கோவை மண்ணின் மைந்தர்களாக இருந்த இருளர்கள். கோவன் என்ற பதியின் தலைமையும் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகப் பண்போடு பகிர்ந்துண்டு வாழ்ந்திருந்தவர்கள். வனத்தின் தாய்கள். இயற்கையின் பிள்ளைகள்.

சோழப்பேரரசும், சேரப் பேரரசும் தனது நிலப்பரப்பை பெரிதாக்கிக் கொள்கிற பேராசைப் போரில் இருளர்களை துவம்சம் செய்து, தோற் கடித்து, துரத்தியடிக்கின்றன. மலையின் மடிகளில் பம்மிப் பதுங்கி வாழ் வைத் தக்க வைத்த இருளர்கள், பொதுமைச் சமூகப் பண்பையும் காத்து வருகிறார்கள்.

நிலப்பரப்பு மனிதர்களை - வணிகர்களை - அதிகாரிகளை - நிலப்பிரபுக்களை வன்மத்துடன் நோக்குகிற நூற்றாண்டு காலத் தகிப்பு நெஞ்சுக்குள் இருக்கிறது. பேரரசுகள் செய்த அதே சூறை யாடல்களை, வதைகளை சுரண்டல்களை செய்கிற நிலப் பரப்பு மனிதர்கள்.

அவர்களது நம்பிக்கைகள், கனவுகள், வாழ்வியல் பண்பாட்டு நெறிகள், ஒழுக்க நியதிகள் எல்லாமே வித்தியாசமான வை. அதற்குரிய தொனியில் அவர்கள் மொழியிலேயே வெளிப்பட்டிருக்கிறது.

“கூப்புரோட்லே

கையிலே கெடாய்த்தூம்

இருளென வெலாக்கி

தூக்கி பெணாங்கி மெதிச்சான்

எச்சாவோ நிந்த

காண்ட்ரீட்டுகாரனே ராஜா”

இருளர்கள் யானை ராஜா என்று உச்சரிக்கிறார்கள். வனத் தை யழித்து மரத்தை கொண்டு போக போடப்பட்ட சாலை யான கூப்புரோடு.

எங்கேயோ நின்ற மரக் காண்ட்ராக்டரை தேடிக்கண்டு பிடித்து, தூக்கி, சபித்து, மிதித்து கொல்கிறது யானை.

யானை என்பது இருளர் கள். வனவாசிகள், காண்ட்ராக்டர் வனநாசிகள். வனநாசிகள் மீது வனவாசிகள் கொண்டி ருக்கிற வன்மமும் கோபமும் யானையின் சபித்தலில் மிதித்த லில் தெறிக்கின்றன.

“அப்பேங் கொடாத்த                             பாவாடே

அண்ணேங் கொடாத்த நீல                               சீலே

தொட்டில்லே ரொங்குகாதிருந்தே     போடுகே

கழுத்துப்பாசி

செல்லி தந்தே

செத்த பின்னாக்கும்

அச்சாமேதானே கெடாக்கு

‘இருளச்சிக்கு திமிரடங்கலெ’ங்கா

கெம்பனூருகவுண்டச்சி”

நிலப்பரப்பிலிருந்து வந்து குடியேறியவள் கவுண்டர் சாதிப் பெண்.

அப்பன் தந்த வண்ணப் பாவாடையையும், அண்ணன் தந்த நீலநிறச் சேலையையும், தொட்டில் பருவத்திலிருந்து போட்டிருந்த கழுத்துப் பாசியை யும் கணவன் இறந்த பிறகும் கழற்றாமலிருக்கிற இருளச்சியின் வாழ்வியல் பண்பாட்டை - விதவைக்கோலமற்ற வாழ்வி யலை - புரிந்துகொள்ள முடியாமல் வெறுக்கிறாள் கவுண்டர் பெண்.

தாய்வழிச்சமூகமான ஆதிகாலப் பொதுவுடைமை சமூகத்தின் பெண்ணுரிமையும்... வளர்ச்சியடைந்த நாகரிக சமூகத் தின் நாகரிகமற்ற பெண்ணடிமைப் பண்பாடும் முட்டி மோதிக் கொள்கிற இடம் இது.

பிற்பகுதியில் லட்சுமணனின் சுயமொழிக் கவிதைகளும் உண்டு. ஆயினும், வாசித்து முடித்த பின்னும் மன செல்லாம் வியாபித்து நிற்பது மலை வாசத்து மூலிகைமொழிக் கவிதைகள்தாம்.

தமிழுக்கு புதிய உரம் தரும் இந்தத் தொகுப்புக்கு எழுத்தாளர் ச.பாலமுருகனின் அணிந்துரை கனகச்சிதம்.

தமிழ்மொழிக்கு மலை மொழியும் புது ரத்தம் பாய்ச் சுகிறது.

(வெளியீடு : மணிமொழி பதிப்பகம், 220ஏ, முல்லைவீதி, தந்தை பெரியார் நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை-606601. விலை : ரூ. 50)

Pin It