மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநிலக்குழு ஏற்பாடு செய்த சாதிய ஒடுக்குமுறைகள்-தீண்டாமை ஒழிப்பு ஆய்வரங்கம் பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தோழர் பி.சம்பத் அழைக்கப்பட்டிருந்தார். “தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களும் தமிழக அனுபவங்களும்” என்ற தலைப்பில் தோழர் பி.சம்பத் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:

இந்தியச் சாதியமைப்பு:

சாதியமைப்பு என்பது இந்தியாவில் மட்டுமே நிலவக்கூடிய தனித்தன்மை வாய்ந்த சமூக ஒடுக்குமுறையாகும். மனிதகுல வரலாற்றில் ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து ஆண்டான் அடிமைச் சமுதாயம் பிற நாடுகளில் உருவெடுத்த போது, இந்தியாவில் ஆண்டான் அடிமைச்சமுதாயமே ஆரியர்கள் என்றும் தாசர்கள் என்றும் வருண சமுதாய வடிவில் உருவெடுத்தது. பிற்காலத்தில் விஞ்ஞானம் - தொழில்வளர்ச்சி ஏற்பட்டு ஏராளமான வேலைப்பிரிவினைகள் உருவெடுத்தபோது, சாதிக்குள் சாதியாகவும் உப சாதிகளாகவும், ஏராளமான சாதிகள் உருவெடுத்தன. அந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில் உருவெடுத்த சாதியமைப்பு இன்றளவும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு தடைச்சுவராக நீடித்து வருகிறது. எனவே, ஆதியிலிருந்து இன்று வரை சாதியும், வர்க்கமும் பின்னிப்பிணைந்தே உள்ளன. சாதிய ஒடுக்குமுறைகளும். வர்க்க ஒடுக்குமுறைகளும் பின்னிப் பிணைந்தே உள்ளன. நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகிய அனைத்து சுரண்டும் வர்க்கங்களும் சாதியமைப்பை பாதுகாத்தே வந்துள்ளன. இந்தியச் சாதியமைப்பு பற்றி பி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிய அறிஞர்கள் ஏரளாமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இதனை உரிய முறையில் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்சியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல. எந்த ஒரு நாட்டிலும் இதனை எந்திர கதியாக அமல்படுத்த முடியாது. அந்தந்த நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைபாடுகளுக்கு ஏற்ப பொருத்தி அமல்படுத்துவதிலேயே அந்தந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் திறமை அடங்கியுள்ளது. எனவே, இந்தியச்சூழலில் மார்க்சிஸ்டுகள் சாதியமைப்பு என்ற சவாலை சந்தித்தே ஆக வேண்டும். இதனைப் புறக்கணிப்பதோ, அல்லது சந்திக்காமல் கடந்து செல்வதோ சாத்தியமல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை உறுதிபட உணர்ந்துள்ளது.

சவால் நிறைந்த பணி:

இந்தியச் சாதியமைப்பு மிக நுட்பமானது. சிக்கலானது. சாதிய முடிச்சுகளை அவிழ்ப்பதிலும், அதன் சவாலை முறியடிப்பதிலும் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை என்பது உண்மையே. இருப்பினும் மனம் தளர்வது மார்க்சிய வழியல்ல. அனுபவங்களின் அடிப்படையில் சாதியமைப்பையும், நெருக்கடிகளையும் வீழ்த்த தொடர் முயற்சிகளையும், தேவையான மாற்றங்களையும் செய்தாக வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் மேலான பல சாதிகள் மட்டுமல்ல, கீழான பல சாதிகளும் இருக்கும் வகையில் இந்தியச் சாதியமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சாதியினரும் தத்தமது சாதி பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். இந்தியச் சாதியமைப்பின் ‘இருத்தலுக்கு’ இது மிக முக்கிய காரணியாகும். சாதியமைப்பின் மேல் மட்டத்தில் உள்ள பார்ப்பனர்களுக்குள்ளும் அதேபோல மிகவும் அடித்தட்டில் உள்ள தலித்துகளுக்குள்ளும் கூட ஏராளமான சாதிய உட்பிரிவுகள் இருப்பது சாதியமைப்பின் சூட்சமத்தைக் காட்டுகிறது. கீழ் சாதியில் பிறந்த ஒருவன் மேல் சாதிக்கு செல்ல முடியாது என்பது மட்டுமல்ல, மேல் சாதியில் பிறந்தவனும் கீழ் சாதிக்கு மாற முடியாது. இந்து மதம் இந்தியச் சாதியமைப்பை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகிறது. எனவேதான், “இந்து மதம் பல சாதியடுக்குகளைக் கொண்ட மாளிகை ஆனால் இந்த அடுக்குகளுக்குச் செல்ல ஏணிப்படியோ, வாசலோ கிடையாது” என டாக்டர் சாகேப் அம்பேத்கர் அற்புதமாகச் சித்தரித்துள்ளார். அந்தந்த சாதியில் பிறந்தவர்கள் அந்தந்த சாதியிலேயே தான் வாழ்நாள் முழுவதும் முடங்கிக் கிடக்க வேண்டும். இதனால் பெரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாபவர்கள் மிகவும் கீழ்மட்ட சாதிகளில் பிறந்த தலித்துகள்தான் .

சமூக சீர்திருத்த இயக்கமும், தலித்துகளும்:

இந்தியாவின் சாதியமைப்பு காரணமாக தொடர்ந்து மோதல்களையும், முரண்பாடுகளையும் நாடு சந்தித்து வருகிறது. துவக்கத்தில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதவர்களின் முரண்பாடு பிரதானமானதாக இருந்தது. பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கும் பாத்திரமும் பிரதானமானது. இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. ஜோதிபா பூலே, பெரியார், அம்பேத்கார், ஸ்ரீநாராயண குரு போன்றோர் பங்கு இதில் முக்கியமானது. இதனை இடதுசாரிகள் உரிய முறையில் உள்வாங்க வேண்டியது அவசியம். இத்தகைய சமூக சீர்திருத்த இயக்கங்களால், பார்ப்பனரல்லாத பல்வேறு சாதியினரின் சமூகப் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாததாகும்.

இந்தியாவின் நீண்ட நெடிய சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலன் தலித்துக்களுக்குப் போய்ச் சேராதது அவற்றின் பலவீனமாகும். இந்தியாவில் நடைபெற்ற சமூக சீர்திருத்த இயக்கமும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் இடைப்பட்ட சாதிகளுக்குள் சில பல மாற்றங்களை ஏற்படுத்தியது தவிர சாதியமைப்பை ஒழிததுக்கட்டுவதில் வெற்றி பெறவில்லை. ஒவ்வொரு சாதியும், தனக்கு மேலான சாதிகளை எதிர்க்கும் அதே நேரத்தில், தனக்குக் கீழான சில சாதிகள் இருக்க வேண்டும் எனக்கருதும் மனோநிலையை இந்தியச் சாதியமைப்பின் நுட்பமான தன்மை உருவாக்கியிருப்பதே அதற்குக் காரணமாகும். இந்தியாவின் மிகக் கணிசமான எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே தங்களுக்குக் கீழான சாதியினராக தலித்துகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பின்னணியில்தான் வலுவாக ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையேயும் தலித் மக்களிடையேயும் ஏற்பட்டு வரும் மோதல்கள் கவலை தரும் வகையில் அதிகரித்துள்ளன. தலித்துகளுக்கு எதிராக இதர சாதிப்பிரிவினரும் ஒன்று சேரும் சூழல் அதிகரித்துள்ளது. இதற்கு தலித்துகளிடையே ஏற்பட்டு வரும் எழுச்சியும் ஒரு முக்கிய காரணமாகும். இதனால் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதவர் என்ற முரண்பாடு மட்டுமல்ல, தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர் என்ற முரண்பாடும் பிரதானமாக முன்னுக்கு வந்துள்ளது. இந்திய உழைக்கும் மக்களில் கணிசமான பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவினரிடையே சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரித்து வருவது குறித்து வேறு எவரையும் விட கம்யூனிஸ்ட்களுக்கும், இடதுசாரிகளுக்கும் அதிக கவலை உண்டு. ஏனெனில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையில் வேறு எல்லோரையும் விட இடதுசாரிகள் தான் அதிக அக்கறை உடையவர்கள்.

சாதிய ஒடுக்குமுறையின் உள்ளடக்கம்:

எனவே, சாதி உணர்வு மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்துக் கட்டுவதில் கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் முன்வரிசையில் நிற்க வேண்டும். சாதிய ஒடுக்குமுறை என்பதில் பொருளாதார ஒடுக்குமுறைகளும் உள்ளடங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி ரீதியாக மிகவும் ஒடுக்கப்படுபவர்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தலித் சாதியினரும்தான் இந்திய உழைப்பாளி மக்களில் மிகக்கணிசமான பகுதியினர் (80சதவிகிதம்) என்பது தற்செயலான நிகழ்வல்ல. இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையையும், பொருளாதார ஒடுக்குமுறையையும் ஒருசேர அமல்படுத்தி வந்துள்ள சுரண்டும் வர்க்கப்பாதையின் விளைவு இது என்பதை உணர வேண்டும்.

இந்தியாவில் வர்க்க ஒடுக்குமுறையும், சாதிய ஒடுக்குமுறையும் பின்னிப்பிணைந்துள்ளன என்பதே மார்க்சிய நிலைபாடாகும். நமது கட்சித்திட்டமும், கட்சிக் காங்கிரஸ் தீர்மானங்களும் இதனை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளன. எனவே, நமது போராட்டம் வர்க்க ஒடுக்குமுறைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராக ஏககாலத்தில் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக, வர்க்க எதிரிகளை (முதலாளிகள், நிலப்பிரபுக்கள்) எதிர்த்துப் போராடுவதை இடதுசாரிகள் பரவலாகச் செய்து வருகிறோம். ஆனால், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமும், வர்க்க ஒடுக்குமுறையின் ஒரு பகுதி என்ற முறையில் நமது கவனமும தலையீடும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும். பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்க எதிரிகளை நேரடியாக எதிர்த்து நடத்தக் கூடியதாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது உழைப்பாளி மக்களிடையே மனதளவிலும், சிந்தனையிலும் ஏற்பட்டுள்ள சுரண்டும் வர்க்கக் கண்ணோட்டத்திற்கு எதிரான சிக்கலான சித்தாந்தப் போராட்டமாக அதன் ஒருபகுதி அமைந்துள்ளது. கூடவே சாதிய சக்திகளின் வன்கொடுமைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிரான நேரடிப் போராட்டங்களை நடத்துவது அதன் மற்றொரு பகுதியாக அமைந்துள்ளது.

தலித் எழுச்சி - நமது பார்வை:

இந்தியச் சாதியமைப்பில் வேறு எவரையும் விட, கொடூரமாக ஒடுக்கப்படுபவர்களும், பாதிக்கப்படுபவர்களும் தலித்துகளே. இவர்கள் மத்தியில் சமீப காலமாக விழிப்புணர்வும், எழுச்சியும் பலமடைந்து வருகின்றன. இந்த எழுச்சி வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதுமாகும். இந்த எழுச்சிக்கு சாதிச்சாயம் பூசுவதை ஏற்க முடியாது. கிராமப்புற தலித்துகளில் 80 சதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். நகர்ப்புற தலித்துகளில் 70 சதம் பேர் அணி திரட்டப்படாத உழைப்பாளிகள். தலித்துகள் என்பவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியினரே. உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதி சாதி ரீதியாக ஒடுக்கப்படுவதையும், முடங்கிக்கிடப்பதையும் ஏற்க முடியாது. எனவே, தலித்துகளின் எழுச்சிக்கு தொழிலாளி வர்க்க இயக்கம் தலைமை தாங்க வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டங்கள்:

இப்பார்வையோடுதான் தமிழ்நாட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற விரிந்து பரந்த மேடை உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், மத்திய தர வர்க்க அமைப்புகள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கங்களாக இணைந்துள்ளன. இதோடு மாநில அளவிலான 18 தலித் அமைப்புகளும், மாவட்ட அளவிலான 67 தலித் அமைப்புகளும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ 30 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட அமைப்புகள் இடம் பெற்றுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித் மக்களின் உரிமைக்கான போராட்டங்களிலும், தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும் தலித் மக்களோடு, ஏராளமான தலித் அல்லாத மக்களையும் பங்கேற்க வைப்பதில் தனிக்கவனம் செலுத்துகிறது.

கிராமங்களிலும், நகரங்களிலும் தலித் மக்களின் சமூகப் பொருளாதார அவல நிலையை ஆய்வு செய்வது, தீண்டாமை வன்கொடுமைகளின் வடிவங்களை கண்டறிந்து அம்பலப்படுத்துவது, பொருத்தமான பிரச்சனைகளை கையில் எடுத்து போராட்டங்களை நடத்துவது, கிடைத்த வெற்றிகளை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வது, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்வது என்ற முறையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதுவரை 1845 கிராமங்களிலும், மதுரை, சென்னை போன்ற மாநகரங்களிலும் களஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள், 23 வடிவங்களில் வன்கொடுமைகள், நகர்ப்புறங்களில் தலித் மக்களிடம் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் ஓரவஞ்சனையைக் கண்டறிந்து அரசு நிர்வாகங்களிடம் மனுக்களை அளித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தபுரத்தில் கண்டறிந்த தீண்டாமைச் சுவர் என்ற வடிவம் தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் பெரும் தாக்கத்தையும், ஜனநாயக சக்திகளிடையே பெரும் கோபத்தையும் ஏற்படுத்தின. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்தால் உத்தபுரம் தீண்டாமைச்சுவரின் ஒருபகுதி உடைத்து எறியப்பட்டு, தலித் மக்களுக்கு பொதுப்பாதை உருவாக்கித் தரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் (2) திருச்சி, திருப்பூர், சேலம் ஆட்டையாம்பட்டி, விழுப்புரம், கண்டமங்கலம் ஆகிய 7 இடங்களில் தீண்டாமைச்சுவர்களும், காட்பாடியில் இரும்பு கேட்டும் கண்டறிந்து உடைத்து நொறுக்கப்பட்டு தலித் மக்களுக்கு பொதுப்பாதை உத்தரவாதம் செய்யப்பட்டது. சுவர் என்பது மறைக்கப்பட முடியாத ஒரு தீண்டாமை வடிவம் என்ற முறையில், பல ஊர்களில் கண்டிறியப்பட்டு உடைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ரியல் எஸ்டேட்காரர்கள் தங்களது பிளாட்டுகளின் விலையை உயர்த்துவதற்காக அருகாமையில் உள்ள தலித்துகளின் குடியிருப்பைச் சுற்றி சிறையிடுவது போல வேலி அமைப்பது, சுவர் கட்டுவது போன்ற கொடுமைகள் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

17 இடங்களில் தலித்துகளைத் திரட்டி ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல ஊர்களில் 50 முதல் 100 ஆண்டுகள் வரை தலித்துகள் செல்ல முடியாத ஆலயங்களில் அவர்களின் வழிபாட்டு உரிமை உத்தரவாதம் செய்யப்பட்டது. காங்கியனூர், செட்டிபுலம் போன்ற ஊர்களில் காவல்துறை மற்றும் சாதி வெறியர்களின் வன்முறைத் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். உத்தபுரம் ஆலயப்பிரவேசத்திற்கு எதிராக தமிழக அரசு 144 தடையுத்தரவைப் போட்டு, 1,500 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

பல கிராமங்களில் தலித்துகளுக்கு மயான உரிமை, மயானத்திற்கான பாதை உரிமை பெற்றுத்தரப்பட்டது. பல ஊர்களில் தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை ஒழிக்கப்பட்டது. சில கிராமங்களில் பொதுக்குளங்களில் தலித்துகளுக்கு மீன்பிடிக்கும் உரிமை உத்தரவாதம் செய்யப்பட்டது. பொதுக்கழிப்பறைகளில் தலித்துகளின் உரிமையைப் பெற போராட வேண்டியிருந்தது. குடியாத்தத்தில் 2 தலைமுறைகளாக வாழ்ந்த தலித் மற்றும் இஸ்லாமியக் குடும்பங்கள் சமூக விரோத ரியல் எஸ்டேட் கும்பலால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டபோது, அதைக் கண்டித்தும் மாற்று இடம் கோரியும் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை அட்டூழியத்தையும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமையையும் எதிர்கொள்ள நேரிட்டது.

பேரணி, தர்ணா, மறியல், கைது போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தலித்துகளிலும் தலித்துகளாக உள்ள 30 லட்சம் அருந்ததியர் மக்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு கிடைத்தது. இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்குகள் தொடுத்த போது சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாகவும் எதிர் வழக்காடி இந்த உரிமை உத்திரவாதப்படுத்தப்பட்டது.

பஞ்சமி நில மீட்புக்கான மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையொட்டி, தமிழக அரசு இதனை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது. தலித்-பழங்குடி மக்களின் உபதிட்டத்திற்கு மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கவும், முறையாக செலவிடவும் வலியுறுத்தி பல ஆர்ப்பாட்டங்கள், மாநாடு நடத்தப்பட்டதையொட்டி தமிழக அரசு முதல்முறையாக தனது பட்ஜெட்டில் 19 சதவிகிதமான ரூ.3828 கோடி நலத்திட்ட நிதியாக ஒதுக்கியது. ஆனால் அதன் செலவினங்கள் தலித் மக்களுக்கு முழுமையாக சென்றடையாதபடி திட்ட ஒதுக்கீடு அமைந்த போது, அதனைக் கண்டித்தும், மாற்றுத்திட்டத்தை உருவாக்கவும் ஆய்வரங்கம் நடத்தப்பட்டு நகல் மாற்றுத்திட்டம் வெளியிடப்பட்டது.

பல அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றாலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல போராட்டங்கள் தலித் மக்களின் உரிமைகளையும், நலன்களையும் பெற்றுத் தருவதில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளன. இப்போராட்டங்களில் தலித் இயக்கங்களின் பங்கும், பாத்திரமும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளன.

சில அனுபவங்களும், படிப்பினைகளும்:

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வின் மூலம் கண்டறிந்த தீண்டாமை வன்கொடுமை வடிவங்களை அம்பலப்படுத்திய போதும், பல கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களை நடத்திய போதும் சில அனுபவங்களை எதிர்கொள்ள நேரிட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களால் தலித் மக்களிடையே மனஎழுச்சியும், போர்க்குணமும் பலமடைந்தன. இதனால் கலவரமடைந்த சாதிய சக்திகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும், அமைதியாக உள்ள ஊரில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தவதாகவும் குற்றம் சாட்டின. தமிழக அரசு நிர்வாகமும், சாதிய சக்திகளின் பார்வையிலேயே பிரச்சனையை அணுகியது. சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயல்படுவதாக விமர்சித்தது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு தலித்துகள் அடங்கி வாழ்வதையே சமூக அமைதி என சாதிய சக்திகளும், அரசு நிர்வாகமும் வியாக்கியானம் செய்வதை நாம் ஏற்க முடியாது. இந்த அமைதி நிரந்தர அமைதியல்ல. மாறாக, நீறுபூத்த நெருப்பான சூழலாகும், இந்த மயான அமைதி ஜனநாயக இயக்க வளர்ச்சிக்கு உதவாது. தீண்டாமையை ஒழித்து, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டி சமூக சமத்துவ அடிப்படையில் உருவாகும் அமைதியே நிரந்தரமான அமைதியாகவும் , ஜனநாயகச்சூழலை பலப்படுத்தும் அமைதியாகவும் இருக்க முடியும். இந்த அமைதியே இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தும்போது ஜனநாயக சக்திகளின் ஒரு பிரிவினரிடையே தயக்கம் மற்றும் ஊசலாட்டத்தைக் காண முடிகிறது. இப்போராட்டங்களால் தலித் அல்லாத இதர பகுதி மக்களின் ஆதரவை நாம் பெற முடியாது என இவர்கள் வாதிடுகின்றனர். இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் சாதிய ஒடுக்குமுறையை தாஜா செய்வதன் மூலம் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது. பொதுவாக முதலாளித்துவக் கட்சிகள் தலித் மக்களின் உரிமைக்கான போராட்டங்களுக்குத் துணை நிற்பதில்லை. அவ்வாறு நின்றால் தலித் அல்லாத மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்காது என இவை கருதுகின்றன. ‘வாக்கு வங்கி’ நோக்கத்திற்காக தலித் மக்களின் உரிமைகளை சமரசம் செய்யும் முதலாளித்துவக் கட்சிகளின் அணுகுமுறையை இடதுசாரி இயக்கம் நிராகரிக்கிறது.

சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமே ஜனநாயக முன்னேற்றத்தையும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையையும் சாதிக்க முடியும். சாதிய வெறி மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் அல்லாத மக்களிடையே நாம் விரிவான பிரச்சாரத்தைக் கொண்டு சென்று அப்பாதையில் மக்களை அணிதிரட்டுவதே இடதுசாரி ஜனநாயகப் பாதையாகும். மேலும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதியை மேம்படச் செய்வது போன்ற பொதுவான பிரச்சனைகளில் தலித் மக்களையும், தலித் அல்லாத மக்களையும் ஒன்றுபடுத்துவதற்கு இப்பாதையே சிறந்த வழிமுறையாகும். மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இப்பாதையில் நாம் வெகுதூரம் முன்னேறியுள்ளோம். இம்மாநிலங்களில் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் பெருமளவு ஒழிக்கப்பட்டுவிட்டன என்பது தற்செயலான நிகழ்வல்ல. இம்மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒரு சேர போராட்டம் நடத்தியதால் கிடைத்த முன்னேற்றம் இது.

முன்னேற்றம்:

சில அனுபவங்கள், படிப்பினைகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களுக்கு கிடைத்த முன்னேற்றத்தை பதிவு செய்திட வேண்டும். தலித் மக்களிடையேயும், தலித் அமைப்புகளிடையேயும் சிபிஎம் மற்றும் இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. நம்பிக்கை பலப்பட்டுள்ளது. சமூகநீதியில் அக்கறை உள்ள ஜனநாயக சக்திகள் மத்தியில் இந்த இடதுசாரி அமைப்புகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனந்த விகடன் என்ற பிரபல வார இதழ் பல ஆய்வுகள் நடத்தியதன் அடிப்படையில் 2010-இல் தமிழகத்தில் தலைசிறந்த 10 நபர்களை அடையாளம் காட்டியபோது, அதில் 2 பேர் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சார்ந்தவர்கள் என்பது இதன் வெளிப்பாடே. இடதுசாரி அணிகளிடையே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்கள் மிகப்பெரிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. மேலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்களையொட்டி எந்த இடத்திலும் சாதியக் கலவரங்கள் நடைபெறவில்லை என்பதோடு, பல போராட்டங்களில் அரசு நிர்வாகம் தலையிட்டு தீர்வு காணவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது என்பது இதன் போராட்ட பாதைக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஆம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்கள் சாதிய சக்திகளையும், அரசு நிர்வாகத்தையும் பணிய வைத்த ஜனநாயகப் போராட்டங்களாகும். இப்போராட்டங்களை மென்மேலும் முன்னெடுத்துச் செல்ல தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதி பூண்டுள்ளது. இதன் அனுபவங்கள் கர்நாடக மாநிலத்திலும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை வலுப்படுத்த உதவும் என நம்புகிறேன்.

Pin It