(1)

பார்த்ததை எல்லாம் சொல்லாதே!

தெரிந்ததை எல்லாம் பேசாதே!

- என்பது நைஜீரியப் பழமொழி. பழமொழிக்குப் பின்னால் ஒரு கதையும் இருக்கிறது. கதை இதுதான்: கதையின் நாயகன் பெயர் 'எடுரோ ஹுன்'. நமக்குச் சிரமமான பெயர்- ஹுன் என்று வைத்துக் கொள்ளலாம். ஹுன், ஊர்த் தலைவர் மகன். ஊர்த் தலைவரை 'எனோஜி' என்று அழைப்பார்கள். ஊர்கள் அடங்கியது நாடு. நாட்டுத் தலைவரை 'ஒபோ' என்று சொல்வார்கள். ஹுன் தந்தையான ஊர்த் தலைவருக்குப் பெரிய வசதிகள் கிடையாது; ஒரே ஒரு வயல் இருந்தது.

ஹுன் தினசரி அதிகாலை எழுந்து வயலுக்குப் போவான். கையில் சிறு கோடாலி; தோளில் ஒரு பை. பையில் கொஞ்சம் சாப்பாடு; குடிக்கத் தண்ணீர்! ஒருநாள்... இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லை... வயலுக்குப் போகும் வழி வெட்டவெளியாகக் கிடந்தது. ஹுன் அரைத் தூக்கத்தில் நடந்துகொண்டு இருந்தான். அப்போது ஒரு சிறு சத்தம் 'ஹுன்!' யாரோ தன்னை அழைப்பதுபோலப் பட்டது. ஹுன் சுதாரித்துப் பார்த்தான். யாரும் தட்டுப்படவில்லை. ஏதோ கனவு என்று நினைத்து நடந்தான்.

திரும்ப சத்தம் கேட்டது. இப்போது இரண்டு முறை 'ஹுன்! ஹுன்!'. திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தான். சத்தம் வரவில்லை. ஒரே ஒரு மரம் அங்கு நின்றது. வேறு யாரும் இல்லை. மரம் பேசுமா?... தயங்கித் தயங்கி இன்னும் நாலு எட்டு வைத்திருப்பான். சத்தம் இப்போது பலமாகக் கேட்டது 'ஹுன்!' சந்தேகமில்லை. யாரோ கூப்பிடுகிறார்கள். மனிதக் குரல்தான்! மரத்தின் பக்கம்தான் சத்தம் கேட்டது. ஹுன் மரத்தை நோக்கி நடந்தான்.

வழியில் ஒரு செடி இருந்தது. அதன் அருகில்தான் சத்தம் கேட்டது. பையப் பைய நடந்துபோய், செடிக்கு அருகில் குனிந்து பார்த்தான். யப்பாடி! ஹுனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடல் உதறல் எடுத்தது. ஒரு தலை துண்டாகக் கிடந்தது. உடம்பைக் காணோம்! வெட்டப்பட்ட தலை - ஆணின் தலை! கண் மூடி இருந்தது. வாய் மட்டும் முனகியது. இது உண்மையா? பிரமையா? ஹுன் ஒரு குச்சியை எடுத்துத் தலையை லேசாகப் புரட்டினான். உடனே வெட்டப்பட்ட தலையின் கண் திறந்தது; வாய் முனகியது: "ஏய்! ஏய்! ஏன் என்னைச் சிரமப்படுத்துறே?" சொன்னதும் கண் மூடிக்கொண்டது.

திடுக்கிட்ட ஹுன் குச்சியைத் தூக்கி எறிந்தான். அந்தத் தலைமீது இரக்கம் உண்டானது. குனிந்து மெல்லக் கேட்டான் : "ஐயா! நீங்க யார்? உங்களுக்கு என்ன ஆச்சு?" பதில் வரவில்லை. திரும்ப அதே கேள்விகளைக் கேட்டான். தலையின் கண்கள் திறந்தன. வாய் முனகியது: "ஏய்! அனாவசியக் கேள்விகளை எல்லாம் கேக்காதே!"

ஹுன் வாயடைத்தான். சற்று நேரம் பேசாமல் இருந்தான். பிறகு திரும்பக் கேட்டான் : "என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?" பதில் இல்லை. மறுபடி மறுபடி கேட்டான். பதில் வந்தது:

"எனக்கு என்னென்னவோ தெரியும். தெரிஞ்சதை எல்லாம் ஓங்கிட்ட சொல்லமுடியுமா?" பேசும்போது, பேசும்போது தலையின் கண்கள் திறந்தன. பிறகு மூடிக்கொண்டன.

இனி என்ன பேசுவது என்று தெரியாமல் ஹுன் சற்று நேரம் அங்கேயே நின்றான். பிறகு நகர நினைத்தான். இரண்டு எட்டு எடுத்து வைத்திருப்பான். 'நில்!' என்றது தலை. உடனே நின்றான், தலை கேட்டது; "எனக்குக் கொஞ்சம் தண்ணி கொடு!"

ஹுன் பையில் இருந்த குடுவையை எடுத்தான். வாய் திறந்தது. "மெதுவா ஊத்து" என்றது. கை நடுக்கத்தோடு ஹுன் கொஞ்சம் ஊற்றினான் 'கடக் கடக்'. வாய்க்குள் தண்ணீர் ஓடியது. வயிறு கிடையாது. தண்ணீர் எங்கே போகும்? இரண்டு மடக்கு குடித்ததும் வாய் மூடிக்கொண்டது. பிறகு மெதுவாகப் பேசியது: "இங்கே பார்த்தது நடந்தது எதையும் யார் கிட்டேயும் சொல்லாதே! போ!" ஹுன் அந்த இடத்தை விட்டு வேகம் வேகமாக நடந்தான்.

2

ஹுனுக்கு ஓட்டை வாய். அதுபோக, நாலு பேர் கவனம் தன்மீது விழ வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருப்பவன் அவன். இந்த அதிசயத்தை எப்படிச் சொல்லாமல் இருப்பான்? நாட்டின் தலைவன் ஒபோவைப் பார்க்கச் சென்றான். பலர் சூழ்ந்து இருக்க ஒபோ உட்கார்ந்து இருந்தார். ஒபோவைக் கும்பிட்டு, ஹுன் விசயத்தை ஆரம்பித்தான்.

"ஐயா! ஐயா! எங்க ஊர்ல ஒரு தலை வெட்டப்பட்டுக் கிடக்கு!" என்றான் ஹுன்.

ஒபோ சிரித்தார். "அட பையா! நம்மூர்ல சண்டைக்குப் பஞ்சமா? அங்கங்கே தலை துண்டு துண்டாத்தான் கெடக்கு!" என்றார்.

"இந்தத் தலை பேசுது ஐயா!" என்றான் ஹுன்.

ஒபோ மறுபடி சிரிததார். "வெட்டப்பட்ட தலை பேசுதா? இது நடக்கக்கூடிய காரியமா? உளறாதே!" என்றார்.

ஹுன் விடவில்லை, நடந்ததைப் பூரா திரும்பவும் சொன்னான். ஹும்! ஒபோ பெருமூச்சு விட்டார். காவலர்களைக் கூப்பிட்டார்.

"இவன் விடமாட்டேங்கிறான்! வெட்டப்பட்ட தலை பேசுதுங்கிறான்! போய்ப் பாருங்க! உண்மையா இருந்தாச் சொல்லுங்க! இல்லாட்டி..."

ஹுனைப் பார்த்து ஒபோ எச்சரித்தார்: "நீ சொன்னது பொய்'னா உன்னைச் சும்மா விடமாட்டேன்!".

3

காலையில் தான் பார்த்த இடத்துக்குக் காவலர்களை ஹுன் அழைத்துப் போனான். தலை அந்த இடத்தில் அப்படியே கிடந்தது. கண்கள் மூடிக் கிடந்தன. ஹுன் குதித்தான்.

"பாத்தீங்களா! பாத்தீங்களா! தலை கெடக்கு!" என்றான். காவலர்களுக்கு எரிச்சல் வந்தது.

"இந்தாப்பா! துள்ளாதே! தலை கிடப்பது இல்ல அதிசயம்! தலை பேசுமா?" என்றார்கள்.

"பேசும்!" என்றான் ஹுன்

"ஏய்! தலையே பேசு!" என்று காவலர்கள் தலையிடம் போய் ஆணையிட்டார்கள். தலை பேசவில்லை. "மாண்புமிகு ஒபோவின் ஆணை. தலையே பேசு!" என்றார்கள். தலை பேசவில்லை அப்படியே கிடந்தது. எந்த அசைவும் இல்லை. காவலர்கள் ஹுனை முறைத்தார்கள். ஹுன் பயந்துபோனான். குனிந்து தலையிடம் கெஞ்சினான்:

"ஐயா! காலையில் என்னைக் கூப்பிட்டீங்களே! பேசினீங்களே! தண்ணீர் கேட்டீங்களே! பேசுங்க ஐயா! பேசுங்க!"

தலை பேசவேயில்லை. காவலர்கள் ஹுனை ஒபோவிடம் இழுத்துப் போனார்கள். நடந்ததைச் சொன்னார்கள். ஒபோ சிம்மக் குரலில் ஆணையிட்டார்:

"வெட்டப்பட்ட தலை பேசவில்லையா? நெனச்சேன். இவன் பொய் சொல்லி இருக்கான். இவன் தலையைத் துண்டித்து விடுங்கள்..."

4

ஹுனுக்கு மரண தண்டனை. தலையை வெட்ட இரு காவலர்கள் வந்தார்கள்.

அப்போதுதான் ஹுனுக்கு ஞாபகம் வந்தது. ஹுன் ஊர்த் தலைவர் மகன். அதாவது எனோஜி மகன். எனோஜியையோ, எனோஜி பிள்ளைகளையோ கொல்லக்கூடாது என்பது அந்த நாட்டுச் சட்டம்.

காவலர்களிடம் ஹுன் கத்தினான்: "நான் எனோஜி மகன். என்னைக் கொல்லக்கூடாது!".

காவலர்கள் ஹுனைத் திரும்பக் கொண்டுபோய் ஒபோவின் முன் நிறுத்தினார்கள். ஒபோ எரிச்சல்பட்டார்:

"இவனோட பெரிய தொல்லையாப் போச்சு! இவன் ஊர்த் தலைவர் மகன்தானான்னு விசாரிச்சுட்டு வாங்கப்பா!" என்றார்.

காவலர்கள் விசாரித்துவிட்டு வந்து சொன்னார்கள்: "பிரபுவே! இவன் சொன்னது நெசந்தான்! இவன் எனோஜியின் மகன்தான்!".

ஒபோ யோசித்தார். நாட்டுச் சட்டப்படி ஊர்த் தலைவர் மகனைக் கொல்லக்கூடாது. பிறகு ஹுனிடம் சொன்னார்:

"தம்பீ! தப்பிச்சுப் போ! இனிமே வெட்டுன தலை பேசுதுன்னு பொய் சொல்லக்கூடாது. சரியா?" என்று எச்சரித்து அனுப்பினார்.

ஹுன் 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டான். வீட்டுக்குத் திரும்பினான்.

இந்த ஒருநாள் அனுபவம் அவனைப் பெரிய விவேகியாக மாற்றிவிட்டது.

"பார்த்ததை எல்லாமே சொல்லாதே!

தெரிந்ததை எல்லாம் பேசாதே!"

என்பது அவன் சொன்ன பழமொழிதானாம்.

தமிழிலும் இதுபோல ஒரு சொலவடை உண்டு.

"கண்டதைப் பேசாதே!

கேட்டதைச் சொல்லாதே!

காட்டு மரத்துக்குக் கீழே நில்லாதே!"

என்பது தமிழ்ச் சொலவடை.


தமிழ் வடிவம் : ச.மாடசாமி

கதை ஆதாரம் : Benin Folklore, Retold by : Funmi Osoba
Pin It