விசுவாசம்

வகைமைகள் பலவான பூக்கள்

பயன்கொள்ள நார், கத்திரி, நூற்கண்டு

கைதேர்ந்த கோர்ப்பாளனோடு விரைந்து

அருகமர்த்தி நெய்யச் செய்து

உதிர்க்காத அதிகாரங்களோடு

பெருத்துக் கிடந்தவனுக்கு

உதிராத மாலையை அணிவிக்க

திடுமென கொத்தாய் கலைந்த

தேன் புழுக்களைக் காண

கணம் மறந்தனர்.

பெரிதென ஆசை கொள்

பசிய இலையாய் சரிந்தான்

உரையாடலின் கணத்தில்

கண்டுணர இயலாவிடினும்

செவிகளால் ருசிப்பவன்

சூடிக்கொள்ள இயலா

பால் வண்ணப் பூக்களை நூலாக்கி

சகலரும் விருப்பம் கொள்ள

வடிவமாக நெய்பவனின் காலடியில்

நுரைத்த பதட்டத்தில்

அழுதழுது இவனும் வீழ்ந்தான்

காட்சி நிகழ்த்திய குருகுருப்பில்

கண்களில் நீர் மொய்க்க

மிகு சிரமத்திற்கிடையே தூக்கினோம்

தன்மேல் துண்டை சுழற்றி வீசி

 நான் மகாகலைஞனடாவென இசைத்தான்.

Pin It