(மே 22 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கருத்தரங்கில் வெளியிடப்பட்ட செம்மொழித் தமிழுக்கான செயற்பிரகடனம்)

உலகின் ஆதிமொழிகளில் ஒன்றான நம் தாய்த்தமிழ் மொழியின் சிறப்புக்களை நாம் உணர்ந்ததைப் பார்க்கிலும் உலகின் பிற பகுதிகளில் வாழும் அறிஞர் பெருமக்கள் அறிந்து வியந்து இது தொன்மையான செவ்வியல் மொழி என்று நீண்ட காலத்துக்கு முன்னரே பாராட்டினர்.நமது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழி என அங்கீகரித்தது.பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாகத் திகழும் இந்திய நாட்டின் மைய அரசு எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உரிய அக்கறை செலுத்தும் ஒரு மொழிக்கொள்கையைக் கடைப்பிடிக்காத வரலாற்றைக்கொண்டிருக்கிறது.அதன் காரணமாக 60களில் தமிழ் மண்ணில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமான வடிவம் எடுத்தது.அன்று தமிழர்கள் இந்தியால் தமிழுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினோம்.ஆனால் இன்று உலகமயச்சூழலில் ஆங்கிலத்தால் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் அழியும் அபாயம் சமீபித்து வருகிறது.யுனெஸ்கோவின் ஆய்வும் அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகின்றன.1967க்குப் பிறகு தமிழ் உணர்வையே மையமாகக் கொண்டு அரசியல் நடத்திய திராவிட இயக்கத்தார் தமிழ்நாட்டை ஆண்டு வந்தபோதும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பாதுக்காக்கப்பட்டுத் தமிழ் கைவிடப்பட்ட நிலையே தொடர்கிறது. கல்வியிலும் ஆட்சியிலும் நீதிமன்றங்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் என எங்கும் தமிழ் என்பது எட்டாக்கனவாகவே நீடிக்கிறது.

செம்மொழித்தமிழுக்காக ஓர் உலக மாநாட்டைத் தமிழக அரசு நடத்துகின்ற இவ்வேளையில் தாய்த்தமிழைப் பாதுகாத்திடவும் நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் மைய அரசும் மாநில அரசும் மக்களாகிய நாமும் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளைத் தொகுத்து இப்பிரகடனத்தை தமிழ்ச்சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறோம்.இப்பிரகடனத்தின் ஒவ்வொரு வாசகத்தையும் நடைமுறைப்படுத்திடத் தொடர்ந்து போராடத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்நாளில் தமிழின் மீது ஆணையிட்டு உறுதியேற்கிறது.தமிழின் பேரால் வெற்று முழக்கங்களை எழுப்பாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட விரும்பும் அத்துணை தமிழ் நெஞ்சங்களையும் இச்சமரில் எம்மோடு தோள்கொடுக்க வருமாறு இந்த நாளில் திறந்த மனதோடு அறைகூவல் விடுக்கிறோம்.

1.தமிழ்வழி படித்தோருக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குக.

2.மருத்துவப்படிப்பையும் தமிழ் வழியில் கொண்டுவருக.

3.தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் பிரிவு ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வேண்டுமென்றால் அவ்வப்போது அரசாணை வெளியிட்டுப் பயன்படுத்திகொள்ளலாம் என்று சொல்கிறது.தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தின் இதயம் போன்ற இப்பகுதியில் ஆங்கிலம் ஆட்சி செய்து வருகிறது.எனவே இச்சட்டப்பிரிவில் தமிழே விதியாகவும் ஆங்கிலம் விதிவிலக்காகவும் இருக்கும்படியான உரிய திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

4.எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கும் உடனுக்குடனான மொழிபெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்க.

5.தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்குமொழியாகிட நடுவண் அரசே அனுமதி வழங்கு

6.தமிழ் ஆட்சிமொழி குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும் அரசு நிர்வாகத்திலும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் நடைமுறைப்படுத்துக.

7.மத்திய அரசுடன் தமிழக மக்கள் தமிழில் கடிதப்போக்குவரத்து நடத்திட ஏற்பாடு செய்க.

8.வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்கிற அரசாணையை உறுதியுடன் அமுலாக்குக.

9.தொலைக்காட்சி மற்றும் நேரலை அலைவரிசைகளில் அன்றாடம் சிதைக்கப்படும் பழகுதமிழைக் காத்திட –நல்ல தமிழ் ஒலித்திட- அந்நிறுவனங்களும் தமிழக அரசும் தமிழ் உணர்வுடன் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

10.உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு நடக்கும் இப்போதாவது தமிழகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாறுகளை அறிவியல் பார்வையுடன் உரிய அறிஞர்களைக் கொண்டு எழுதிட ஏற்பாடு செய்க.

11.பிறமொழிகளிலிருந்து பல்துறை சார் நூல்களை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட (முன்னர் தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம் செய்ததுபோல) முறையான ஏற்பாட்டைத் தமிழக அரசு செய்ய வேண்டும்.

12.தமிழகத்தின் கோவில்களில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்திட உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்திட வேண்டும்

13. மாறிவரும் காலசூழலுக்கும் கணிணிக்கும் ஏற்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உரிய மொழி அறிஞர்களைக்கொண்ட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14.மொழியைப் படைத்தவர்களான மக்கள் மொழி உணர்வு அற்றவர்களானால் அம்மொழியை யாராலும் காக்க முடியாது. தமிழகத்தில் தமிழ்த்தெருவில் தமிழ் வீடுகளில் தமிழ்தான் இல்லை என்கிற நிலையை நோக்கி வேகமாகச் செல்லும் ஒரு சூழல் மிகுந்த கவலை அளிக்கிறது.நம் பிள்ளைகளைத் தமிழ் உணர்வோடு வளர்த்திடவும் நம் வீடுகளில் தமிழ் முழங்கிடவும் ஆனதெல்லாம் செய்திட வேண்டுமெனத் தமிழ் மக்களை நோக்கி உரிமையுடன் வேண்டுகோள் வைக்கிறோம்.

இவற்றோடு.... .

 

1.சங்க இலக்கியங்கள்,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,நவீன இலக்கியங்கள் என மிகப்பெரும் பாரம்பரியமும் செழுமையும் மிக்க மொழி தமிழ் மொழி..நீண்ட நெடுங்காலமாகவே இச்செல்வங்கள் யாவும் பண்டிதர்கைச் சரக்குகளாகவே நீடிக்கின்றன.எளிய வாசகனும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் சந்தி பிரித்து அருஞ்சொற்பொருளுடன் உரிய விளக்கங்களுடன் இவை யாவும் அரசின் செலவில் மிகமிகக் குறைந்த விலையில் நல்ல தாளில் அச்சிட்டு அரசே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். .

2. தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்கள் ஊடாக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும்.

3.அரசு நடத்தும் இசைப்பள்ளிகள்,இசைக்கல்லூரிகளில் அவ்வப்பகுதியைச்சேர்ந்த எல்லா நாட்டுப்புற இசை வடிவங்களும் வாய்ப்பாட்டும் சேர்க்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்கள் அங்கு வருகைதரு பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

4.நீண்ட நெடிய கூத்து மரபுகொண்ட நம் தமிழ்மொழியில் முறையான ஒரு நாடகத்தமிழ் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை.அதற்கான முயற்சிகளை அரசு துவக்க வேண்டும்.

5.தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்குமே நாடகத்துறை என்பது இல்லை.அங்கும் ஆய்வு நிலையில் மட்டுமே உள்ளது.உருப்படியான பாடநூல்களும் இல்லை.நாடகப்பள்ளி ஒன்றினையேனும் உருவாக்குவதும் எல்லாக்கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் நாடகம் இணைக்கப் படுவதும் அவசியம்.கூத்து மற்றும் நாடகப்பயிலரங்குகள் தமிழ்ப் பாடத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.

6.வீதி நாடகங்கள் என்னும் புதிய மக்கள் கலை வடிவம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவும் புதிய நாடகங்கள் தயாரிப்பதற்கான ஆதரவை வழங்குவதற்குமான நிரந்தர ஏற்பாடு ஒன்றினை அரசு உருவாக்க வேண்டும்.

7.இழிசனர் வழக்கென்று பன்னெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட வாய்மொழி இலக்கியங்களாக உள்ள நாட்டுப்புற இலக்கியங்கள் பள்ளி மற்றும் கல்லூரித் தமிழ்ப்பாடத்திட்டத்தின் பகுதியாக மாற்றப்பட வேண்டும்.இதுவரை தொகுக்கப்படாத நிலப்பரப்புகளில் இவற்றைத் தொகுத்திட அரசின் செலவில் தமிழ் கற்ற ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுப் பணிகள் துவக்கப்பட வேண்டும்.

8.பன்னெடுங்காலமாக மேல்தட்டு வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நாட்டுப்புறக்கலைகள் காலம் காலமாக உழைப்பாளி மக்களால் ஆதரித்து வளர்க்கப்பட்டவை.ஆதரிப்பார் யாருமின்றி அழிந்துபோன நாட்டுப்புறக்கலைகள் எத்தனையோ.நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ஒன்றைத்துவக்கி இக்கலைகளும் இலக்கியங்களும் அழியாமல் பாதுகாக்க இம்மாநாட்டை ஒட்டியேனும் அரசு சிந்திக்க வேண்டும்.

9.முழுமையான தமிழ்வழிக்கல்வி அதிலும் அருகமைப்பள்ளி என்பதை நோக்கியும் தமிழைத்தாய் மொழியாகக்கொண்ட குழந்தைகள் தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் கல்வியை முடிக்க இனி வாய்ப்பில்லை என்கிற நிலையை நோக்கியும் தமிழகம் சென்றிட அரசியல் உறுதிமிக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் மொழிப்பாடங்களாக இருக்கலாம்.

10. தமிழ்ச்சமூகம் மிக நீண்ட ஆழமான பண்பாட்டு வரலாறு உடையது.மானிடவியல் ஆய்வுகள் மூலம் அவற்றை வெளிக்கொணர வேண்டும். இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் மானுடவியல் அறிஞர்கள் போதிய அளவில் இல்லை என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் மானுடவியல்துறை உடனடியாகத் துவங்கப்பட வேண்டும்.

11.தேசிய இயக்கம்,சுயமரியாதை இயக்கம்,திராவிட இயக்கம்,பொதுவுடமை இயக்கம்,தலித் இயக்கம்,பெண்ணிய இயக்கம் என இவை ஒவ்வொன்றும் தமிழுக்காற்றிய பங்கு பற்றிய விருப்பு வெறுப்பற்ற ஆய்வுகள் நடத்தி ஆவணப்படுத்த வேண்டும்.

12.ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் உள்ளிட்ட அகராதிகளின் நிலை குறித்து இந்த நேரத்தில் நினைத்துப்பார்ப்பது அவசியம்.1960களில் பல்கலைக்கழக மான்யக்குழுவின் நிதி உதவியோடு சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிக்குப் பிறகு அரசு சார் நிறுவனரீதியாக எந்த முயற்சியும் இல்லை.அந்த ஒரு அகராதியும் இன்னும் தற்காலப்படுத்தப்படாமலே உள்ளது.தமிழக அரசு இது தொடர்பாக ஒரு பல்துறை அறிஞர் குழுவை போதிய நிதி ஆதாரத்துடன் நியமித்துப் பணிகளைத்துவக்க வேண்டும்.

13. வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தமிழின் மொழியியல் வளர்ச்சிக்கு மிக அடிப்படையான தேவையாகும்.சில தனிப்பட்ட ஆளுமைகளின் கடும் உழைப்பால் சில வட்டார வழக்குச் சொல்லகராதிகள் வந்துள்ளன.அரசு சார் நிறுவனங்களோ பல்கலைக் கழகங்களோ இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை.உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரும் செலவிலான நிகழ்வுகள் நடக்கும் போதேனும் இதுபற்றிக் கவலை கொண்டு தமிழகம் முழுவதும் வட்டார வழக்குகளை அகராதிகளாகத் தொகுக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்ய வேண்டும்.

14. 1960இல் தமிழக அரசு வெளியிட்ட கலைக்களஞ்சியத்துக்குப் பிறகு எந்த முயற்சியும் இத்துறையில் செய்யப்படவில்லை.60க்குப்பிறகு அதிவேகப்பாய்ச்சலில் அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.ஆகவே தற்காலப்படுத்தப்பட்ட கலைக்களஞ்சியம் உடனடியான தேவையாகும். தொடர்ச்சியாக துறைவாரியான கலைச்சொல் அகராதிகளை அரசு முன்னின்று முயன்று வெளிக்கொணர வேண்டும்

15.கணிணிக்கான பொதுவான தமிழ் எழுத்துரு என்பது இன்னும் கனவாகவே உள்ளது.கணிணிக்குப் பொருத்தமான மொழியாக நம் தமிழ் இருப்பது நமக்குப் பெருமைதான்.ஆனால் ஒரு பொதுவான தமிழ் விசைப்பலகையைத் தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.

16.மருத்துவம்,பொறியியல் போன்ற தொழில்நுட்பத்துறை சார் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.புதிய கலைச்சொல் ஆக்கங்களில் அவர்கள் ஈடுபட இது அவசியமல்லவா?இத்தகு கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியர்களை நியமிப்பதும் அவசியமாகும்.

17.புதிதாக அனுமதிக்கப்படும் மேனிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் தமிழாசிரியர்களை நியமிக்கத் தமிழக அரசு விதித்துள்ள தடையாணையை நீக்க வேண்டும்.

Pin It