சிறுகதை

 

‘‘தம்பிக்கு ட்ரெஸ் எடுத்தேன்னு சொன்னீங்களே... எங்க காட்டுங்க"..

அவள் கேட்ட போது தான் எனக்கே “ஞாபகம் வந்தது... ".

“அடடா..ச்..ச்"

“என்னாச்சு... !”

"வரும்போது அல்லிநகரத்துல காயின்பாக்ஸல பேசுறப்ப எடஞ்சலா இருக்குன்னு அங்கனக்குள்ள வச்சேன்... மறந்துட்டு எடுக்காமயே வந்துட்டேன் போல்ருக்கு... இவ்வளவு நேரமாகியிருச்சு... சரி... போயி பாத்துட்டு வந்துர்றேன்... "வார்டை விட்டு வேகமாய் வெயியேறினேன்.

"மெதுவா போங்க... "

ஆமை வேகத்தில் பின்னுக்குப் போன பத்து மாதங்களின் பொறுமையின் முடிவில் கடந்த வெள்ளியன்று எங்களுக்கு அழகான ஆண்குழந்கை பிறந்தது. மருத்துவர் கொடுத்த தேதியையும் தாண்டி அதிகமாக நான்கு நாளும் ஆகிவிட்டது.

"இன்று பிறக்குமோ... இல்லை இரவு பிறக்குமோ... ஏன் பாப்பா இன்னும் பிறக்கலை... ரொம்ப அடம்பிடிக்குதே... ஏ பாப்பா நீ எப்ப வெளில வருவ... ஒரு வேளை லேட்டாகுறதுனால பொம்பளை பிள்ளையா இருக்குமோ... ! ஏதுவா இருந்தா என்னா... நம்ம குழந்தை தானே சீக்கிரம் பொறந்தா சரி... எங்கள் இருவருக்குள்ளும் மன ஒட்டம் சதா... ஆ... இப்படித்தான் இருந்தது.

இந்நிலையில், மதிய நேரம் வழக்கமான சலூன் கடையில் சவரம் செய்ய சென்றிருந்தேன். “என்னங்க தம்பி கொழந்த பொறந்துருச்சா... ?” முகத்தில் ப்ரஷ்சால் நுரைத்தபடி பார்பர் கேட்டார்.

“இல்லங்ணே... ஆஸ்பத்திரியில சேத்துருக்கு... இன்னக்கி ராத்திரிக்குள்ள பொறந்துரும்னு சொல்றாங்க... ஆனா வலி எதுவும் இல்ல... நாளு வேற கடந்துட்டதால சங்கடமா வும் இருக்கு... "

முதல்கட்ட இழுப்பை முடித்து எதிர் ஷேவ்க்காக முகத்தில் தண்ணீரைத் தொட்டுத் தொட்டு அழுத்தமாக தடவிக் கொண்டிருந்தார்." குழந்தை பெறக்கட்டும்... ஸ்வீட்டோட வந்து கவனிக்கிறேன்." - பத்து ரூபாயை நீட்டிவிட்டு சைக்கிளை மிதித்தேன்.

குளித்து புறப்பட்டு மாலை நேரம் மருத்துவ மனை நோக்கினேன்.ஆறரை மணிபோல மருத்துவர் வந்தார். அவளை மீண்டும் அவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். "பேபி நல்லா கீழ இறங்கியிருக்கு... ஆனா கர்ப்பவாய் சுத்தமா திறக்கலையே... வலியும் இல்லையா... ?"

"ஆமாங்க மேடம்... "

"டேட் வேற தாண்டிடுச்சு... நல்லா நடந்து குடுங்க... நைட் வெய்ட் பண்ணுவோம்... பயப்படும்படியா எதுவுமில்ல... ஸப்போஸ்... பெய்ன் வரலைன்னா காலைல ஜெல் வச்சு பார்க்கலாம்... ஒ.கே.யா?"மருத்துவர் சென்று விட்டார்.

இரவு பத்து மணியை நெருங்கிய போது மருத்துவமனையே  வெறிச்சோடிக் காணப் பட்டது. அவளுடன் இருவர் தங்கிக்கொள்ள ஆண் களுக்கு அனுமதி இல்லாததால் நான் வாட்ச்மேன் ஆலோசனைப்படி அவருக்கு இருபது ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு அவரின் அறையில் நடு ஓரமாக படுத்துக் கொண்டேன்.ஏற்கனவே அங்கே நாலைந்துபேர் கிடந்தனர்.இருந்தால் ஆத்திர அவசரத்திற்கு உதவலாமல்லவா...

தூங்கியும் தூங்காமலும், குழந்தை  கொஞ் சல்... அப்பா - அம்மா கனவிலும் நினைவிலும் கடிக்கும் கொசுக்களினூடான தர்க்கத்திலும் அந்த இரவு இம்மி இம்மியாய்க் கடந்தது.

அதிகாலை நாலரை மணிக்கு மேல் கண்கள் இமை மூட மறுத்தன. உள்பாதையின் சுவர் ஓரமாய் திண்டுகளாய் நீண்டு படுத்துக் கிடந்த கடப்பா கற்களின் ஒரு ஓரத்தில் கலைந்த தலையோடு அமர்ந்தேன்.

குடை சூழ ஓங்கி வளர்ந்திருந்த வேப்ப மரத்திலிருந்து பறவைகள் துயிலெழுப்பிக் கொண் டிருந்தன. மருத்துவமனையினுள் ஆங் காங்கே ஆள் நடமாட்டம் தென்பட்டது, துப்புரவுப் பெண் ஒருவர்  சர்க்... சர்க்-கென ஒரு பக்கமாய் கூட்டிக் கொண்டிருந்தார்.வெளிப்பகுதியிலும் வாகனங் களின் சலசலப்பும்,ஆட்களின் நடைகளும் தெரிந் தது. ஐந்து மணிக்கு மேலாகி விட்டது .. பிரதான இரும்புக் கதவை இருபுறமும் இழுத்து விட்டு அந்த நாளை வரவேற்றார் வாட்ச்மேன்.

போர்வையை எடுத்துக் கொண்டு அறையை நோக்கினேன். அந்த வேலையில் இரண்டு செவிலியப் பெண்கள் அவளை கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு மருத்துவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஒருமணி நேரம் கழித்து மீண்டும் வெளியே கூட்டி வந்தனர்.

"பெட்டுக்கு கூட்டிட்டு போங்க. ஜெல் ட்ரீட்மென்ட் குடுத்துருக்கு..இன்னும் ஆறுமணி நேரம் வெய்ட் பண்ணலாம் ஃபெய்ன் வந்துடும்.."

சூரிய ஒளிக்கதிர்கள் சுளீரென குத்தும் படியாய் பகல் தன்னை வெறித்துக் காட்டியது. அணு அணுவாய் நேரம் கடந்தது. பக்கத்து அறையில் ஒரு பெண் பிரசவ வலியில் அலறிக் கொண்டிருந்தார். இவளுக்கோ எதுவும் இல்லை,

பனிரெண்டு மணிக்கு மீண்டும் மருத்துவர் வந்தார். நிலையை அறிந்ததும் உடனடியாக ஸ்கேன் எடுக்க எழுதித் தந்தார். சிரமத்தோடு சிரமமாய் ஸ்கேன் எடுத்து வந்த பிறகு தான் ஒரு முடிவிற்கு வர நேரிட்டது.

உள்ளே தண்ணீர் வற்றத் துவங்கிவிட்டது. இந்நிலை நீடித்தால் குழந்தைக்கு ஆபத்து நேரிடுமென அறியவே மருத்துவர்களின் ஆலோ சனைப்படி ஆப்ரேசன் செய்ய வேண்டிய கட்டாய மாகி விட்டது.

அவளை ஆயத்தமாக்கி பனிரெண்டே முக் கால் போல அறுவைச் சிகிச்சை அரங்கினுள் அழைத்துச் சென்று கதவை மூடினார்கள். "அந்தக் காலத்துல மாதிரி பத்து பதினைஞ்சு பிளளைகளா பெத்துக்கப் போறோம்.. ஒன்னோ ரெண்டோ தான பெறப் போறோம்.. சுகப்பிரசவத்துக்கு ஆப்ரேஷன் எவ்வளவோ தேவலையப்பா. மயக்க ஊசி போடப் போறாங்க. லேசா கிழிச்சு எந்த செரமமும் இல்லாம குழந்தைய எடுக்கப் போறாங்க.. இதுக்குப் போயி கவலப்பட்டுக் கிட்டு.. பேசாம இருங்க தம்பி.." வளாகத்தின் வெளியே நான் அறியாத ஒருவர் விசயமறிந்து என்னைத் தேற்றினார்.

ஒருமணி பத்துநிமிடம் வாக்கில் அரங்கின் கதவு திறக்கப்பட்டது. செவிலியப் பெண் ஒருவரின் கைகளில் துணியால் போர்த்தப்பட்டு ‘க்வா... க்வா..’ சத்தத்துடன் குழந்தை வெளியே வந்தது.

"பையன் பிறந்திருக்கான்! "

பின்பு ஸ்ட்ரெச்சர் மூலமாய் அவளும்கொண்டு வரப்பட்டு அறைக்கட்டிலில் படுக்க வைக்கப்பட்டாள்.. செவிலியர்களின் பராமரிப்பி லிருந்து குழந்தையும் ஒப்படைக்கப் பெற்றோம்.

நெய்லட்டு, மிட்டாய் பாக்கெட். கேக் என விதவிதமான இனிப்புகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

உறவினர்கள், உடன் வேலையாட்கள், நண்பர்கள், தெருக்காரர்கள் என வந்து போய்க் கொண்டிருந்தனர். ஹார்லிக்ஸ் டப்பாக்களையும், சிலர் ரூபாய்களையும், பெரும்பாலானேர் குழந்தைக்கான உடைகளையும் கொடுத்து கொஞ்சி விட்டுச் சென்றனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு எமர்ஜென்சி அறையிலிருந்து வார்டுக்கு மாற்றினார்கள். இப்போது அவள் எழுந்து உட்கார்ந்தாள்.நடந்தாள். தானாக பாத்ரூமுக்கு போயும் வந்தும் ஏனையோரிடம் நன்றாகவும் பேசினாள்.

நேற்று மாலையில் நான் சென்றபோது உடனிருந்தோர் வெளியே செல்ல, நானும் அவளும் குழந்தை மட்டுமே தனித்திருந்தோம். மெதுவான சத்தத்தில் பேசிக் குழந்தையைக் கொஞ்சினோம்.. அப்போது அவள் கேட்டாள்..

"ஏன்யா, தம்பி பெறந்ததுக்கு எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கி குடுத்தீங்க... எனக்கும் வேணும்ங் கறத வாங்கித் தர்றீங்க.. ஆனா நம்ம பாப்பா பையனுக்கு ஏதாவது செஞ்சீங்களாய்யா.."

"என்னாடி செய்யணும்...!"

"ம்... எத்தன பேரு ட்ரெஸ் எடுத்துட்டு வந்தாங்க. அப்பா நீங்க.. ஆசையா ஒரு ட்ரெஸ் எடுத்துட்டு வந்து பையனுக்குப் போட வேண்டாமா.."

"ஸ்... ஓ..ஸாரி..ஸாரி செல்லம்.. எடுக் கணும்னு நினைச்சேன்.. நிறையா வந்திருக்கதால இன்னோரு நாள் எடுக்கலாம்னு அசால்ட்டா இருந்துட்டேன்.. ஸாரிப்பா... "

"ஐயோ நானும் சும்மாதான் சென்னேன்.. நமக்குள்ள என்னா கணக்கு வழக்கா.. வீட்டுக்குப் போன பெறகு கூட எடுக்கலாம்.. சும்மா விளை யாட்டுக்குத் தான் கேட்டேன்.."அவள் சொன்னாலும் என் மனம் கேட்கவில்லை.

“எந்தக் குழந்தைன்னாலும் பரவாயில்ல. பொறந்த உடனே அரைப் பவுன்லயாவது ஒரு செய்ன் எடுத்துப் போடணும்.. நல்ல அழகான ட்ரெஸ் எடுத்துப் போட்டு அழகு பார்க்கணும்"- கர்ப்பக் காலத்தில் அவளிடம் பலநாள் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இந்த நேரம் பார்த்து பணப் பற்றாக்குறை ஏற்படவே செய்ன் காரியம் சாத்திய மில்லாமல் போய் விட்டது. ஆசைக்கு ஒரு ட்ரெஸ்ஸாவது எடுத்திருக்கணும். சந்தோஷத்தில் அதையும் மறந்தாயிற்று. ‘வேண்டாம் சும்மா தான் சென்னேன்’ என அவள் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை.

இரவு எட்டுமணிக்கு மேல் தேனிக்குச் சென்றேன். எல்லா கடைகளிலும் ஒரேமாதிரியான உடைகளைக் காண்பித்தார்கள். சிறிய ஜட்டி ஒன்று, மேல்சட்டை போலொரு பனியன், தலைக்கு குல்லா, இரண்டு கால்களுக்கும் சூ போன்று துணிகள், நெற்றி வரை சேர்த்து உடலைப் போர்த்திக் கொள்ள ஒரு அளவான துண்டு என செட்டு செட்டாய் கலர் கலராய் இருந்தன.

எழுபது ரூபாய், நூறு ரூபாய், நூற்றி இருபது, இருநூறு என விலைக்குத் தக்கபடி பாலித்தீன் பைகளிலும், சிறியரக பிளாஸ்ட்டிக் டப்பாக்களிலும் நீள் சதுர பெட்டிகளிலும் காட்சி தந்தன. அதுபோக ஜட்டி, பனியன், போர்த்தும் துண்டுகளும் தனித்தனியே இருந்தன.

"இவ்வளவு வெல கம்மியாவா இருக்கு... நல்லா ஹைக்குவாலிட்டியா கூடுன ரேட்டுக்கு இருக்குதா... ?" என்னமோ உலக அதிசயத்தையே வாங்கப் போவது போல் ஒரு மமதை.

"பொறந்த குழந்தைகளுக்கு இப்பிடித் தேன்ணே இருக்கும்.".

இருநூற்று நாற்பது ரூபாய்க்கு ஒரு செட் காண்பித்தார்கள். செவ்வந்திப் பூவின் நிறம்... மேல் சட்டையின் கழுத்திற்குக் கீழே இரண்டு சில்வர் பட்டன்கள், காலர் - கை -மற்றும் எல்லா நுனி களிலும் நெளிவு நெளிவாய் வெட்டி வண்ண நூல்களால் எம்ராய்டரி போடப்பட்டிருந்தது.. அப்பெட்டியின் பக்கவாட்டில் ஜான்சன் பேபி பவுடரும்,ஆயிலும் சொருகியிருந்தது.பார்க்கவே திருப்தியுடன் வாங்கி விட்டேன்.

இனி மருத்துவமனை சென்று வருவது தாமதமாகிவிடும். ஆசையோடு வாங்கியதை அவதி அவதியாய்க் கொடுத்து வருவதற்கும் மன மில்லை. ‘காலையில் வரும் போது கொண்டு வருகிறேன்.’ என கைபேசியிலே அழைத்து அவளிடம் சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன்.

இன்று காலையில் புறப்பட்டுக் கொண் டிருந்த போது கைபேசியிலே என்னைத் தொடர்பு கொண்ட அவள் வரும்போது  பீரோவினுள்ளே கீழ் அடுக்கில் இருக்கும் இரண்டு புதிய நைட்டி களையும், ஒரு போர்வையையும் எடுத்து வரச் சொன்னாள்.

ஒரு கையில் அவளுக்கான உடையையும், மறுகையில் குழந்தைக்கென வாங்கிய பெட்டியில் அடங்கிய துணிப்பையையும் பிடித்துக் கொண்டு கீழிறங்கி நடந்தேன். மினி பஸ்சில் செல்ல விருந்ததால் சைக்கிளை எடுக்கவில்லை.

சாலையை வந்தடைந்தபோது தான் ஒரு சந்தேகம் வந்தது! வரும் போது என் அறையில் ஓடிக்கொண்டிருந்த மின் விசிறியை அணைத்தேனோ இல்லையோ என்று... ஒருமுறை இப்படி மறந்து அறைக்கதவை சாத்தியும் போய் விட்டேன். அன்று முழுவதும் வெட்டியாய் ஓடி மின்சாரம் வீணானதுதான் மிச்சம். அந்த மறதி இப்போதும் வந்திருக்கிறது,

உடனே அம்மாவின் கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது எனக்கு டவர் கிடைக்கவில்லை. ஒரு பேக்கரியின் வெளியே தொங்கிக் கொண்டிருந்த ஒரு ரூபாய் தொலை பேசியை அணுகினேன்.

இரண்டு கைகளிலும் பைகள் சிரமமாக இருக்கவே வலது கையில் இருந்த குழந்தையின் உடை கொண்ட பையை கடைக் கதவின் ஓரமாக கீழேவைத்து விட்டு ரிசீவரையெடுத்து நாணயம் போட்டு பட்டன்களை அழுத்தி அம்மாவிடம் பேசினேன். மின் விசிறி அணைக்கப்பட்டிருப்பதாக சொல்லவே திருப்தியுடன் வேகமாய்க் கிளம்பி வந்தேன்.

மருத்துவமனைக்கு வந்த போது உறவினர்கள் பலர் வந்திருந்தார்கள். நெடுநேரம் அவர்களுடனான சந்திப்பில் மறந்தும் போனேன். எல்லோரும் போன பிறகு அவள் தான் கேட்டாள்:

"பையனுக்கு ட்ரெஸ் எடுத்தேன்னு சொன் னீங்களே... எங்க காட்டுங்க... "ஞாபகம் வரவே ஒரு ரூபாய் தொலைபேசியின் அருகில் மறந்து வைத்து விட்டு வந்ததை சொல்லி விட்டு வேகமாய்க் கிளம்பினேன்.

மிதமாய் உருண்ட மினிபஸ்சில் பொறுமை காத்து அல்லி நகரம் வந்திறங்கி.. படபடப்புடன் பேக்கரியை நோக்கினேன். என் பிள்ளைக்கே ஆசைப்பட்டு எடுத்தது அது...

நிச்சயமாய் இருக்குமென்று ஆவலாய்சென்ற போது அங்கே இல்லாதது ஏமாற்றம் தான். மீண்டும் மீண்டும் கடைக்காரரிடம் கேட்க அவர் என்னை முறைத்து விட்டார்.

"ஒரு நாளைக்கி நூறு பேரு வர்றாங்க போறாங்க... எல்லாரையும் பாக்குறதுதான் எங்க வேலையா... தெரியாதுப்பா.." எனச் சொன்ன போது ஆத்திரமாக வந்தது. அந்த ஆளை கடித்துக் குதற வேண்டும் போலிருந்தது.

"இப்பதானங்க பேசிட்டு வச்சுட்டுப் போனேன்... "எனது நிலைப்பாடு தொடரவே அவர் என்னைக் கண்டு கொள்வதை விட்டு விட்டு வாடிக்கையாளர்களைக் கவனிக்கலானார்.எனது மறதிக்கு யாரை கோபித்து என்ன பிரயோஜனம்.

மதங்கொண்ட யானையைப் போலிருந்தது மனது. களவாணிங்க ... சோத்த திங்கிறாங் களா... இல்ல வேற என்னத்தயும் திங்கிறாங் களான்னு தெரியலை.. ஒரு சின்னப் பையனோட துணிய ஆட்டயப் போட்டுட்டு போயிருக் காங்களே.. வெளங்குவானுங்களா.. நாசமாப் போகட்டும்.. மருத்துவமனை திரும்பினேன்.

அவளிடம் தொலைந்ததைச் சொல்லவும், வருத்தப்பட்டாள். “ச்... ச்... ஐயோ... தம்பிக்கு மொத மொதல்ல எடுத்தது இப்பிடியாயிருச்சே.. சரி ... ஃபீல் பண்ணாதீங்க விடுங்க...”

“எவ்வளவு ஆசப்பட்டு எடுத்தது.. அடுத்த வெம் பொருளுக்கு இப்பிடியா ஆசப்படுறது.. தொலஞ்சு எடுத்தவெ எங்கிட்டோ நாசமாப் போகட்டும்..”  இன்னும் பல கடுமையான சொற்களைப் பிரயோகித்து புலம்பிக் கொண்டே இருந்தேன்.

தொடர்ந்த எனது வார்த்தைகளில் அவள் அதிருப்தி அடைந்தவளாய், படாரென தோளை உலுக்கியபடி, “ என்னா பேச்சு பேசுறீங்க... இப்பிடியெல்லாம் பேசக்கூடாது... பேச்ச விடுங்க மொதல்ல.. "என அதட்டினாள்.

"அப்பறம்  என்னா... ! பொறந்த குழந் தைக்கு எடுத்ததப் போயி... எவ்வளவு கஷ்டமா யிருக்கு... "

கையால் எனது நாடியை நிமிர்த்தி முகம் பார்த்தபடி "எதுக்குக் கஷ்டப்படுறீங்க. நீங்க தொலைச்ச ட்ரெஸ் இவனுக்கு இல்லைன்னாலும் இதே மாதிரி எங்கயோ பெறந்திருக்க இன்னோரு குழந்தைக்குத் தான அது உபயோகப்படும்... அதுவும் ஒரு குழந்தைதான... அப்பிடி நெனச்சு சந்தோஷமாயிருங்க .." எனச் சொல்லிவிட்டு எந்தச் சலனமுமில்லாமல் அழுத குழந்தையைத் தூக்கினாள்.

"வாம்மா செல்லம்... வா..வா.. வா... ஏங் கண்ணுல்ல... வாடா செல்லம்... வாடா செல் லம்..." - அவனை அணைத்துக் கொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

Pin It