புத்தாண்டே.
புதுமலரே....
நீ இதழ்விரிக்கும்
இந்த வருடமாவது
இதயங்களை நெருடாமல்
இதமாய் வருடட்டும்.

வெம்பி வெதும்பிய
உள்ளங்களில்
நம்பிக்கைகளை
நடவு செய்ய வா!

பராமரிப்புக்கு ஏங்கும்
சாலைகளைப் போலவே
வாழ்க்கைப் பள்ளங்களுக்குள் கிடக்கும்
மக்களுக்கு
வாழ்வாதாரங்களை
வழங்கிட வா!

வருவதும் போவதும்
தெரியாத
மின்சாரம் போல்
இருப்பதும் போவதும்
தெரியாமல் தவிக்கும்
மனித உயிர்களின்
நரக வாழ்க்கையை
சொர்க்கமாக்கி
சீராட்ட வா!

பெட்ரோல் விலைபோல்
பற்றி எரிகின்ற
விலை வாசியை
வாசிக்கையிலேயே
மாரடைத்துச் செத்தால்...
மறுநாள்
பால் ஊற்ற முடியாத
பரிதாப வாழ்க்கையை
அடியோடு மாற்ற
அடியெடுத்து வா!

எது 'பற்றி' எரிந்தாலும்
எதுபற்றியும் கவலைப்படாத
மேல் தட்டு மக்கள்...
எதைப் பற்றியாவது
எப்போதும் கவலைப்படும்
அடித்தட்டு மக்கள்...
எல்லோர் மனங்களையும்
சலவை செய்து சமமாக்கி
அன்பு ஒளி பாய்ச்சும்
விடியலாய்
விரைந்தோடி வா!

அன்னை தேசத்தில்
அணைக்காக
அடித்துக் கொள்கின்ற கைகள்
அணைத்துக் கொள்கின்ற கைகளாகட்டும்!

உன் விடியலில்
துயர் வடியட்டும்
அநீதி மடியட்டும்
போர் முடியட்டும்!

வறுமை மறைய
வளமை நிறைய
உன் வரவு
வரமாகட்டும்!
மனித வாழ்வு
தரமாகட்டும்!

- கவி. வெற்றிச்செல்வி சண்முகம்

Pin It