எப்போதும் இங்கு
கூட்டம் கூட்டமாக
ஏராளமாக

கோடையில்
கொள்ளிடத்து தெரியும்
மணல் துகளாக
மனிதத் தலைகள்

tasmac_370பிஞ்சு அரும்பே
நீ இங்கு வராதே
உன் பாதங்கள்
பதிய வேண்டாம்

முன்னர்
வனாந்தரங்களில்
கள்ளப்புதர்களில்
காய்ச்சப்பட்டோம்

எம்மிடம் வந்தோர்
முகவரி மறைத்து
முக்காடு போட்டு

தொழுநோயாளிப் போல்
தம்மைத் தாமே
அருவருத்து

காடுகளில் பானமாக
மிதந்த உங்கள்
பானைகளை உடைத்தது
காக்கிச் சட்டைகள் அல்ல
மது ஒழிப்புக் குழுக்களும்
துடைப்பம் ஏந்திய
வளையல் கரங்களுமே!
ஒரு மிருகம்கூட
எம்மை நுகர மறுத்தது
மரம் கொத்திகூட
எம்மை கொத்தியதில்லை

இப்போது நாங்கள்
அரச முத்திரையோடு
முரசுக் கட்டிலில்
ஆள்வோர் போடும்
வரிக் குருதியில்
டாஸ்மாக் பெயரில்

எம்மை ஒதுக்கி
ஒரு நகரம் உண்டா?
யாம் இல்லாத
வீதிகள் உண்டா?
எம்மைத் துரத்த
துணிச்சல் உண்டா?

காறித் துப்பப்பட்ட நாங்கள்
காக்கிச்சட்டை மரியாதையோடு
வண்ண, வண்ண குடுவைகளில்

நீ போய் விடு
குழந்தாய்

வாய் கோணி குழறி
சரிந்து சாய்ந்து
பேசும் கோமா நிலைக்கு
நீ மாறி விடாதே

நான் ஒன்றும்
குழம்போ ரசமோ அல்ல
என்னை ஒதுக்கிவிடு

இந்த தேசம்
பூக்களை எரித்து
முட்களைக் கொண்டாடுகிறது

முள்ளம் பன்றிகளை
விளையாட்டு பொம்மைகளாக
குழந்தைக்குக் கொடுக்கிறது

ஒரு வேளை
உனக்கு வாக்குரிமை
வழங்கினால்
புட்டிப்பாலுக்கு பதில்
புட்டி மதுவையே
தந்து விடுவார்கள்
எல்லாவகை ஆடைகளோடும்
அவர்கள் வருகின்றனர்.

நீ போய் விடு
குழந்தாய்

அவர்கள்
இன்றை எரிக்கிறார்கள்
நாளையை சாம்பலாக்க

- வெ.ஜீவகுமார் 

Pin It