சாதிய அமைப்பில் புனிதமானவர்கள்-தீண்டத்தகாதவர்கள் என்று இரண்டு எதிரெதிர் பிரிவினர்களை உருவாக்குவதற்கு இந்துத்துவ வளர்ச்சிக்கானப் பண்பாட்டு அரசியல் குறியீடாக இருந்து வருகின்ற பசுவும் முக்கியமாகப் பயன்படுகின்றது. பசுவை புனிதமாகப் போற்றுகின்ற மக்கள் புனிதமானவர்களாகவும் பசு உணவினை உண்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றனர். தலித்துகளில் குறிப்பாக பறையர்களின் தோற்றக் கதைகளில் ‘செத்த மாட்டை அகற்றுவென கடவுள் பிறப்பித்த கட்டளை’யும் ஒரு கதையாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தீண்டாமைக்குட்பட்ட, ஆனால் அதேசமயம் மாட்டுக்கறி உண்ணாத சாதியினர் இவ்வாறு ஒரு கேள்வியினை எழுப்புகின்றனர்: ‘மாட்டுக்கறி தின்னும் பறையர்கள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது சரி! ஆனால், அதனை உணவாகக் கொண்டிருக்காத எங்கள் மீது ஏன் தீண்டாமை கடைபிடிக்கப்பட வேண்டும்? இக்கேள்வி குறித்து இங்கு பேசவில்லை, இக் கேள்வியை முன்வைத்ததற்குக் காரணம் அக்கருத்தாக்கம் எந்த அளவிற்கு மாட்டுக்கறி உண்ணாத ஆனால் தீண்டாமையினை அனுபவித்த, அனுவித்து வருகின்ற தலித்துகளிடத்திலேயே தீண்டாமைக்குக் காரணம் மாட்டுக்கறி உணவுதான் என்ற கருத்தாக்கம் ஆளுமை செலுத்துவதை எடுத்துரைப்பதற்கே ஆகும்.

இந்துமத கருத்தியல்கள் மாட்டுக்கறிக்கு தீண்டாமை முலாம் பூசிய காரணத்தினால், மாட்டுக்கறி உண்ணுவதை தவிர்த்துவிட்டால் தங்கள் மீதான தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பறையர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கத்தை கைவிடுவதற்கு முற்பட்டனர். இந்தப் போக்கினை சமூகவியலாளர் எம்.என்.ஸ்ரீநிவாஸ் மொழியில் சமஸ்கிருதமயமாக்கம் என்று கூறலாம். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய செயல் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் செத்த மாட்டிறைச்சியினை உண்ணக்கூடாது என்ற செயல்பாட்டினை சமஸ்கிருதமயமாக்கல் என்று மட்டும் கூறிவிட முடியாது அது ஆரோக்கியம் என்ற நோக்கிலும் அணுகப்படவேண்டும். செத்த மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தினைத் தடுப்பதற்காக சென்னை மாகாணப் பேரவைக்கு நியமிக்கப்பட்டிருந்த தலித் பிரதிநிதிகள், குறிப்பாக ஏ.எஸ்.சகஜானந்தம், வி.ஐ.முனிசாமிபிள்ளை, எம்.தேவதாசன் ஆகியோர் போராடியிருப்பதனை அறிந்து கொள்ள முடிகிறது. செத்தமாடு அல்லது சாகும் நிலையில் இருக்கின்ற மாடுகளை உணவுக்காக கொடுப்பதற்கு முன்னர் அதனைப் பரிசோதிப்பதற்கு அரசாங்கம் என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செத்த மாட்டிறைச்சியினை உண்ணக் கூடாது என்று ஆணை பிறப்பித்திருப்பதை இதர மாவட்டங்களுக்கும் அமுல்படுத்த முடியாதா? என்ற கேள்விகளை 27 ஜனவரி 1931ம் ஆண்டு அவர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

தலித் உறுப்பினர்களின் கேள்விகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதில்களிலிருந்தும் சில உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. காலனியாட்சிக் காலத்தில், செத்த மாடுகளையோ அல்லது இதர விலங்குகளையோ இறைச்சிக்காக வெட்டக்கூடாது, அவைகள் புதைக்கப்பட வேண்டும் என்பது விதியாக இருந்திருக்கிறது. அது மட்டுமின்றி கிராம அதிகாரிகளுடைய கையேடு, சாலையோரம் அல்லது பொது இடங்களில் நோய்களின் தாக்கத்திற்குள்ளாகி இறந்துகிடக்கின்ற விலங்குகளை எரிப்பதற்கு அல்லது புதைப்பதற்கான பணிகளை கிராமத்தின் தலையாரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இவைகள் தலித்துகளைச் செத்த மாடுகளை உண்ணுவதிலிருந்து தடுக்கின்ற நோக்கம் கொண்டவை. இதே நோக்கத்திலேயே பல கிராமங்களில் தலித்துகள் செத்த மாட்டிறைச்சியினை உண்ணுவதை கைவிட்டிருக்கின்றனர்.

ஆரோக்கியம் என்ற நோக்கத்திலோ அல்லது சமஸ்கிருதமயமாக்கச் செயல்பாட்டினாலோ மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தினை கைவிடுகின்ற நிகழ்வு அனைத்துத் தலித் கிராமங்களிலும் நடைபெற்றிருக்கவில்லை. பல கிராமங்களில் மாடு அறுத்தல் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது. மாடு அறுத்தல் தலித்துகளின் வாழ்க்கையில் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கொண்டாட்டத்திற்குரியதாகவே இருந்திருக்கிறது.

பொதுவாக இன்று இறைச்சிக் கடைகளில் சென்று மாட்டிறைச்சி வாங்குவதுபோல் அன்று அவ்வழக்கம் இருந்திருக்கவில்லை. மாட்டிறைச்சி என்பது கடைகளில் விற்பதென்பது சில பத்தாண்டுகளாகத்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் மாடு தலித் கிராமங்களிலேயே அறுக்கப்படும். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மாடு அறுப்பதில் சிறந்து விளங்கினர். மாட்டின் தோலில் சிறு கிழிவு ஏற்படாமல் மாடு அறுக்கின்ற மூதாட்டிகளும் இருந்திருக்கின்றனர். தீபாவளி, புத்தாண்டு, கரிநாள் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமின்றி வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதம் இருமுறை அல்லது ஒருமுறை மாடு அறுக்கப்படும். எடை போட்டு விற்பனை செய்வதற்குப் பதில் கூறு போட்டு கொடுக்கப்படும்.

மாடு அறுக்கும் பொழுது தலித் குழந்தைகள் இரண்டு காரணங்களுக்காக குதூகலமடைவர். ஒன்று, ருசியோடு வறட்டித் தரப்படும் மாட்டின் ரத்தம், இரண்டாவது மாட்டிலிருந்து எடுக்கப்படும் ஆனால் உண்ணப்படாத ஊத்தாம்பட்டி என்றழைக்கப்படும் ஒருவகைக் குடல். இவை இரண்டிற்காகவும் மாடு அறுக்கப்படும்பொழுது அதனைச் சுற்றி குழந்தைகள் உற்சாகத்தோடு அமர்ந்து கொள்வர். முதலில், ரத்தம் வறட்டி கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி வழங்கப்படும். பின்னர் மாடு அறுக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் ஊத்தாம்பட்டியும் அவர்களுக்கே வழங்கப்படும். ஊத்தாம்பட்டி அறுக்கப்பட்டு அது உடைந்த மண்பானைகளின் கழுத்துப் பகுதியில் இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டு பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் தடவப்பட்டு அது வெயிலில் நன்றாக காய வேண்டும் என்பதற்காக வீட்டின் கூரையின் மேல் வைத்துவிடுவர். தொப், தொப் என்ற சத்தத்தில் தொடங்கி டன், டன் என்ற ஓசை வரும்வரை அவ்வப்பொழுது அதனை சிறு குச்சியால் தட்டிப்பார்த்து ஓசையின் தன்மையினை குழந்தைகள் சோதித்துக் கொள்வர்.

குழந்தைகளாலேயே உருவாக்கப்படும் இந்த இசைக் கருவியின் பெயர் பறை அல்ல, அது கொட்டு என்றே அழைக்கப்படும். கொட்டு தயாரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் சிறு மண் கோயிலும் அவர்களால் கட்டியெழுப்பப்படும்; ஆவாரம்பூ மாலைகளும் தயாரிக்கப்படும். இப்பணிகளில் குழந்தைகளுக்குள் வேலைப் பிரிவினை இல்லையெனினும் கொட்டு மட்டும் சிறுவர்களாலேயே தயாரிக்கப்படும். கொட்டு டன், டன் ஓசையை கொடுத்து விட்டால் போதும் குழந்தைகளின் மகிழ்ச்சித் துள்ளலுக்கு அளவே இல்லை. அவர்களால் கட்டப்பட்டிருக்கும் கோயிலின் முன்பு குழந்தைகளில் சிலர் கொட்டு அடிக்கத் தொடங்குவர் சிலர் மெதுவாக சாமியாடுவர். டன்டனக்கா, டன்டனக்கா என்று மெதுவாக அடிப்பதில் தொடங்கும் பொழுது மெதுவாக ஆடும் குழந்தைச் சாமிகள் டன்டன் டன்டனக்கா, டன்டன் டன்டனக்கா என்ற சப்தம் எழும்பும் பொழுது வேகமாக ஆடத் தொடங்குவர் அப்பொழுது அச்சாமியாடிகளுக்கு ஆவரம்பூ மாலை அணிவிக்கப்படும். சிறிது நேரம் மட்டுமே அவர்கள் அங்கு ஆடுவர், அங்கு வெகு நேரம் ஆடுவதை அக்குழந்தைகள் விரும்புவதில்லை. காரணம் அக்குழந்தைகளின் ஆட்டம் பாட்டத்தினை ஊர்மக்கள் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கும். சாமியாடிக் கொண்டு வீதி வழியாக வரும்பொழுது அங்கு ஏற்கனவே தயாராக நிற்கும் குழந்தைகள் சாமியாடும் குழந்தைகளுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவர். இக்குழந்தைகள் ஆடுகின்ற ஆட்டம், அருள்கூறும் விதம் இவற்றை மக்கள் பெரிதும் ரசித்துப் பார்ப்பர்.

இந்த ஆட்டம் பாட்டமெல்லாம் மாடு அறுக்கப்படுகின்ற நாட்களிலெல்லாம் நிகழ்வதால் மாடு அறுக்கப்படுகின்ற நாட்களில் தலித் குழந்தைகளின் அளவிற்கு எல்லையே இல்லை. குழந்தைகளின் குதூகலாம் வெறும் வார்த்தைகளால் மட்டும் வர்ணித்துவிட முடியாது. குழந்தைகளுக்கு ஒருவிதத்தில் கொண்டாட்டம் என்றால் பெரியவர்களுக்கு, குறிப்பாக குடியர்களுக்கு வேறுவிதத்தில் கொண்டாட்டம். அவர்கள் மது போதையிலும் மாமிச ருசியிலும் திளைப்பர், ஒருசிலர் மனைவியைப் பந்தாடுவதும் உண்டு. ஆனால் அத்தகைய குடிமகன்கள் அவருடைய உறவினர்களின் தர்ம அடிக்கு ஆளாவதும் நிகழும். தலித் பெண்களைப் பொறுத்த மட்டிலும் அவர்களுக்கு அது நல்ல ருசியான உணவு.

ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் இன்று பெரும் மாற்றத்திற்குள்ளாகிவிட்டது. இந்த மாற்றம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் 1990களிலிருந்தே தொடங்கிவிட்டது. புன்செய் நிலப்பரப்பினைக் கொண்டிருக்கும் இப் பகுதிகளில் இந்து, கிறிஸ்துவ நாடார்கள் எண்ணிக்கை, பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற பிரிவினர் ஆவர். இப்பகுதியல் தலித்துகளில் பறையர் சாதியினர் வசிக்கின்றனர். ஆட்டிறைச்சியினை உணவாகவும் அதனை வியாபாரமும் செய்து கொண்டிருந்த நாடார்கள் மாட்டிறைச்சி விற்பனை செய்கின்ற தொழிலிலும் ஈடுபடத் தொடங்கினர். ஆரம்ப காலங்களில் பறையர்களைக் கொண்டு மாடுகளை அறுத்து விற்பனை செய்தனர்.

இக்காலங்களில் பறையர் கிராமங்களில் மாடு அறுப்பது நின்று போனதற்கு சில முக்கியக் காரணங்கள் உண்டு. மாடு அறுக்கின்ற மூதாட்டிகளும், தாத்தாக்களும் மரணமடைந்துவிட்டனர். மாடு அறுப்பதற்கென இரண்டாம் தலைமுறையினர் உருவாகியிருக்கவில்லை. அது மட்டுமின்றி முந்தைய காலங்களைவிடவும் 1980களிலும் 1990களிலும் இடப்பெயர்வின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது பொருளீட்டுவதற்காக ஆண்கள் மட்டுமே இடம் பெயர்வது என்ற நிலையிலிருந்து குடும்பம் குடும்பமாக இடம்பெயர்தல் என்ற புதிய நிலை உருவானது, அது மட்டுமின்றி இடம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்திருந்தது.

முன்பு ஒரு தலித் கிராமத்தில் மாடு அறுக்கப்பட்டால் அது பக்கத்து கிராமங்களில் வசிக்கின்ற தலித்துகளும் வந்து வாங்கிச் செல்வது வழமை. காரணம் பொதுவாக ஒவ்வொரு தலித் கிராமத்திலும் அதிகபட்சம் 20 அல்லது 30 குடும்பங்கள்தான் வசித்து வந்தன. இதனால் ஒரு தலித் கிராமத்தில் மாடு அறுக்கின்ற பொழுது அதனைப் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த தலித்துகளும் வாங்குவது வழமை. ஆனால் பல கிராமங்களிலும் தலித்துகள் குடும்பங்களோடு இடம்பெயர்ந்து செல்லுதல் என்ற நிலை உருவானதால் அது தலித்துகளின் எண்ணிக்கையினைக் குறைத்தது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலுள்ள மக்களுக்கு ஒரு மாடு அறுப்பது என்பது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் நாடார் சாதியினர் மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கியதும் தலித் கிராமங்களில் மாடு அறுப்பது முற்றிலுமாக நின்று போய் விட்டது.

நாடார்கள் ஆரம்ப காலங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சியினை ரூ.5க்கு விற்று வந்தனர். 1990களிலும்கூட ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.10, ரூ.15 என்ற விலைகளில் விற்றுக் கொண்டிருந்தது. (இன்று மாட்டிறைச்சி கிலோ ரூ.150, ஆட்டிறைச்சியின் விலையோ ஒரு கிலோ ரூ. 350). இந்தக் காலங்களில் தலித்தல்லாத பிற சாதியினரும் மாட்டிறைச்சியினை உண்ணத் தொடங்கினர். இதில் இரண்டு காரணிகள் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஒன்று ருசி, மற்றொன்று விலை. மாட்டிறைச்சியின் ருசியை தலித்தல்லாதோருக்குக் கற்றுக் கொடுத்தது உணவகங்களே என்று கூறலாம். பொதுவாக உணவகங்களில் மட்டன் (ஆட்டிறைச்சி) என்ற பெயரில் வழங்கப்படுவது மாட்டிறைச்சிதான். ஆட்டிறைச்சியின் விலையேற்றம், குறைந்த விலையில் மாட்டிறைச்சியினை வாங்கி அதனை ஆட்டிறைச்சி என்ற பெயரில் விற்பனை செய்வதால் கிடைக்கின்ற கூடுதல் லாபம் ஆகியன உணவகங்களை மட்டன் என்ற பெயரில் மாட்டிறைச்சியினை வினியோகிக்கத் தூண்டின.

ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக இருக்கிற பொழுது குறைந்த விலையில் அதுவும் ருசியான மாட்டிறைச்சி கிடைக்கிற பொழுது ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன? எனவே, மாட்டிறைச்சியை தலித்தல்லாதோர் நாடத்தொடங்கினர். ஆரம்ப காலங்களில் ரகசியமாகவே உண்டு வந்தனர். தலித்தல்லாதோர் ரகசியமாக மாட்டுக்கறி உண்ணுவதை நன்கு அறிந்திருந்த தலித்துகள் அதனை தங்களுக்குள் கிண்டல் செய்வதும் உண்டு. தலித்தல்லாதோர் ரகசியமாக மாட்டுக்கறி தின்று வந்த காலங்களில் மாடு அறுப்பும் விற்பனையும் வெளிப்படையாக நடைபெற்றிருக்கவில்லை. அது ஒதுக்குப்புறமாக அறுக்கப்படுவதும் விற்பனை செய்வதற்கு கடை அமைக்காமல் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதுமாக இருந்தது. வீடு வீடாக விற்பனை செய்வது என்பது தலித் கிராமத்தில் மட்டுமின்றி தலித்தல்லாத கிராமத்திலும் நகரத்திலும் நடைபெற்றது. எத்தனை நாட்கள்தான் ரகசியமாக மாட்டுக்கறியை உண்பது? இன்று அவர்கள் வெளிப்படையாகவே மாடுகளை அறுக்கின்றனர் அதுவும் சாலைகளின் ஓரத்தில்! விற்பனைக்காகவும் கடையை விரித்திருக்கிறார்கள்!

இன்று மாடு அறுத்தல், விற்பனை செய்தல் என அனைத்துப் பணிகளும் தலித்தல்லாதோரால் மேற்கொள்ளப்படுகிறது. மாநகரங்கள் தொடங்கி பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளிலும் வெளிப்படையாக மாட்டுக்கறி உண்ணும் வழமை வேரூன்றிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும் மாட்டுக் கறி உண்பது தீட்டுக்குரியதாகவே கருதப்படுகிறது. நடந்து முடிந்த பொங்கல் விழாவிற்குப் பிந்தைய கரிநாள் அன்று அசைவம் உண்பது வழமை. கரிநாளன்று ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் கூடுதலாக மீன் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன (தினகரன், நெல்லை 17 ஜனவரி 2011, ப.16). வழமைக்கு மாறாக நடைபெறுகின்ற நிகழ்வு செய்தி என்று சிலர் கூறுவர். அவ்வாறானால், தலித்தல்லாதோர் ஆடு, கோழி, மீன் உண்ணுவதோ அல்லது தலித்துகள் மாடு, பன்றி உண்ணுவதோ செய்தியாகிவிட முடியாது. இவ்விடத்தில் தலித்தல்லாதோர் மாட்டுக்கறி உண்பதுதான் செய்தியாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகள் ஆடு, கோழி கறி விற்பனை அமோகம் என்று செய்தி வெளியிடுவது என்பது பத்திரிகைகள் மாடு, பன்றி உண்பது தீட்டுக்குரியதாகவும், அது தலித்துகளின் உணவாகவும் கருதுகின்றனர் என்பதையே வெளிப்படுத்துகிறது. அது மட்டுமின்றி தலித்தல்லாதோர் மாட்டுக்கறி உண்ணும் வழமையினை பத்திரிகையில் வெளியிடாதது என்பது மாட்டுக்கறி தீட்டுக்குரியது என்னும் கருத்து மக்களிடம் மேலும் வலுப்படுதற்கு பத்திரிகை துணைபுரிகிறது.

மாட்டுக்கறி உண்ணும் பறையர்கள் மீது தீண்டாமை கடைபிடிக்கப் பட்டது சரி. ஆனால் அதனை உண்ணாத நம் மீது தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது ஏன்? என்ற தலித் சாதியில் ஒருபிரிவினர் எழுப்புகின்ற கேள்விக்கும் பத்திரிகைகள் ஆடு, கோழி அமோக விற்பனை என்று செய்தி வெளியிடுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவையிரண்டிற்குள்ளும் மாட்டுக்கறி தீட்டுக்குரியது என்ற கருத்தாக்கம் ஆழப் பொதிந்திருக்கிறது என்பது வெளிப்படை. இது இந்துத்துவத்திற்கு ஆதரவான போக்குத்தானே தவிர வேறல்ல.

கடந்த காலங்களைப் போல் இன்றும் பசுமாடு இந்துத்துவ வளர்ச்சிக்கானப் பண்பாட்டு அரசியல் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. புனிதமான பசுவதையைத் தடுக்கின்றோம் என்ற பெயரில் தலித்வதையை அவ்வமைப்புகள் விளைவித்துக் கொண்டிருக்கின்றன. மிகச் சமீபத்தில், இறந்த மாட்டின் தோலினை அறுத்தெடுத்து தோல் வியாபாரத்திற்குச் சென்று கொண்டிருந்த தலித்துகள் இந்துக்களால் அடித்தே கொல்லப்பட்டது தலித்வதைக்கான சிறந்த உதராணம்! பசு புனிதம் என்ற இந்துத்துவத்தின் கருத்தாக்கத்திற்கும் அது விளைவிக்கின்ற வன்முறைக்கும் எதிரான போராட் டம் அறிஞர்களாலும் இயக்கங்களாலும் முன் னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்து சமூக அமைப்பில் “புனிதமானவர்கள்” என்று கூறப்படுகின்ற பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ட வரலாற்றினை மாட்டைத் தோலுரிப்பதுபோல் அறிஞர்கள் உரிக்கின்றனர்.

அன்பு பொன்னோவியம், உணவில் ஒளிந்திருக்கும் சாதி என்ற கட்டுரையிலும், டி.என்.ஜா பசுவின் புனிதம் என்ற நூலிலும் யாகம் என்ற பெயரில் பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ட வரலாற்றினை தோலுரித்துக் காட்டியிருக்கின்றனர். அறிவுத்தள செயல்பாடுகள் மட்டுமே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்திவிடாது, சமூக மாற்றத்திற்கு இயக்கச் செயல்பாடு அவசியம். இந்துத்துவத்திற்கு எதிரான இயக்கங்கள் குறிப்பாக இடது சாரி இயக்கங்களின் கலையிலக்கிய அணிகள் தாங்கள் நடத்துகின்ற கலையிலக்கிய நிகழ்வில் மாட்டுக்கறி விருந்து படைக்கின்றனர். மாட்டுக் கறி உண்பதை தலித் இயக்கங்கள் தங்களின் அடையாளமாகப் பறைசாற்றியது.

பசுவை புனிதமாக போற்றுகின்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிரான சரியான பண்பாட்டு அரசியல் மாட்டுக்கறி விருந்து படைப்பதுதான். இதனால் இதுகாறும் ஏதாவது சில காரணங்களினால் மாட்டுக்கறி உணவினை தவிர்த்து வந்தவர்கள்கூட இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினால் மாட்டுக்கறி உண்ணத் தொடங்கியிருக்கின்றனர். மாட்டுக்கறி உண்பதை பண்பாட்டு அரசியல் போராட்டமாக இடதுசாரி இயக்கங்களும் தலித் இயக்கங்களும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற வேளையில் எவ்வித கருத்தியல் நிலைபாட்டினாலன்றி ருசி, குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக தலித்தல்லாதோர் மாட்டுக்கறி உண்ணத் தொடங்கியிருக்கின்றனர். இந்தப் போக்கு சாத்தன்குளம் பகுதியில் சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இது முன்னெப்பொழுதும் நடைபெற்றிராத மாற்றம் ஆகும். அதாவது, சாதிக்கும் உணவிற்குமான ஒரு முடிச்சு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மாட்டுக்கறி உண்பதென்பது தலித்துகளுக்கு மட்டுமான உணவாகவே சுருக்கப்பட்டுவிட்டது. ஆனால் தற்பொழுது மாட்டுக்கறி சாதியைக் கடந்து வருகிறது என்பது மிகவும் முக்கியமான மாற்றமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் போக்கிற்கு மாறான செயல்பாடு தலித் மக்களிடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே நடைபெற்ற ஒன்றுதான். அதாவது, முற்போக்கான இயக்கங்களுடனோ அல்லது அது சார்ந்த கருத்தியல்களோடு எவ்வித உறவும் கொண்டிருக்காத நடுத்தர வர்க்க தலித்துகளிடமோ மாட்டுக்கறி உணவைக் கைவிடுதல் என்ற சமஸ்கிருத மயமாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை சமஸ்கிருதமயமாக்கம் என்று மட்டும் சுருக்க விடமுடியாது. அந்தச் செயல்பாடு பசு புனிதம் என்று கூறுகின்ற இந்துத்துவக் கருத்தியலுக்கு தங்களை அடிமைப்படுத்துகிற போக்கும் அதில் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த இரண்டு போக்குகளிலிருந்தும் ஒன்று தெளிவாகிறது அதாவது, அவையிரண்டுமே மாட்டுக் கறி தீட்டு என்றும் அதனைக் கைவிடுவது தங்களைச் சுத்தப்படுத்தும் செயல் என்ற கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டுதான் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மாட்டுக்கறியைக் கைவிடுவது சமஸ்கிருதமயமாக்கம் அல்லது இந்துத்துவமயமாக்கம் என்று கூறுகிற பொழுது, மாட்டுக்கறி உண்ணுவதை காஞ்சா அய்லய்யா மொழியில் தலித்மயமாக்கல் என்றும் கூறலாம். ஆனால் அவ்வாறு கூறினால் அது மாட்டுக்கறி உண்ணுதல் என்பது தலித்துகளின் வழமை என்றே மீண்டும் அடையாளப்படுத்திவிடும். இன்றையத் தேவை மாட்டுக்கறி சாதியைக் கடப்பதுதான்.

உணவுப் பழக்க வழக்கங்களில் மலையாளிகளிடம் சாதியப் படிநிலை இருக்கிறது என்ற பொழுதிலும் மாட்டுக்கறி என்பது அனைவருக்குமான உணவு என்ற நிலையினை நோக்கி அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். மாட்டுக்கறி மக்களுக்கானது அது சாதியைக் கடந்தது என்ற நிலையை உருவாக்குகின்ற தொடக்க நிலையில்தான் தமிழகம் இருக்கிறது. இது அதன் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு எவ்வித கருத்தியல் பின்புலமுமின்றி ருசியினாலும் குறைந்த விலையில் கிடைக்கின்ற காரணத்தினாலும் மாட்டுக்கறியினை உண்ணத் தொடங்கியிருக்கின்ற மக்களை இந்துத்துவத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் இணைக்க வேண்டும். இது வெறும் இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. அது உணவிற்கும் சாதிக்கும் உள்ள உறவினை துண்டிப்பதாகும். அவ்வாறு துண்டிக்கப்பட்டால் மாட்டுக் கறி உண்ணுபவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற கருத்தாக்கம் ஒழிவதற்கான வழிவகை உருவாகும். மாட்டுக்கறி சாதியையும் தீண்டாமையையும் கடக்க வேண்டிய தருணமிது.

Pin It