எந்த சீதை
காத்திருக்கிறாளோ
உடைபடாமல்
இங்கொரு வில்

யாரை வரவேற்க
இந்த பிரம்மாண்ட
அலங்கார வளைவு

மழைநீர் தொட்டு
சூரியன் எழுதிய
எழுசீர்க் கழிநெடிலடி
ஆச்சர்யப்பா!

மழையில் நனைந்தும்
சாயம் போகா
வண்ணச் சேலை எவருடையது?

வேரும் இலையுமின்றி
அந்தரத்தில் படர்ந்த
ஆகாயப் பந்தலில்
வண்ணமய ஒற்றைப்பூ

எந்தத் தேவதையிட்ட
மழை நிறுத்த ஒப்பந்த
வண்ணக் கையெழுத்து இது

முகில் கண்டு
மயில் தோகை விரிக்கும்
இங்கு
வானமே தோகை விரித்திருக்கிறதே!?

- மா. கண்ணன்

Pin It