உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த ஆண்டில் (2010-ஜூன் 24), கோவையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் கோயம்புத்தூரில் அணிதிரள உள்ளார்கள். இலட்சக்கணக்கில் பொது மக்களும் இம்மாநாட்டில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலை, இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள், புதைபொருள் சார்ந்த ஆராய்ச்சி, கலாச்சாரம் என பல்வேறு வகையான தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விமரிசகர்கள் சமர்ப்பிக்க உள்ளார்கள். தமிழ் சார்ந்த மருத்துவம் என்கிற முறையில் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படலாம். அதை நாம் மனதார வரவேற்கிறோம்.

தமிழ் மொழியில் பிற மருத்துவ முறைகள் பெருமளவில் வளர்ச்சி பெற்று, தமிழகத்தில் பெரும்பாலான மக்களுக்கு நேரிடையாக நன்மை செய்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, ஹோமியோபதி மருத்துவம் ஜெர்மன் நாட்டில் தோன்றியிருந்தாலும், உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகள் கடந்து, பல்வேறு மதம்- இனங்களைக் கடந்து, பல்வேறு மொழிகளைக் கடந்து இன்றைய நிலையில் அது மக்கள் மருத்துவமாக மலர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமியோபதி மருத்துவம் அறிமுகமானதிலிருந்து இன்று வரை, தமிழ்மொழியோடு பின்னிப் பிணைந்தே வளர்ந்திருக்கிறது. ஒப்பிட்டளவில் பாமர மக்கள் முதற் கொண்டு பண்டிதர்கள் வரை ஹோமியோபதி மருத்துவ முறையை தமிழ் மொழியின் மூலமாகத்தான் கற்றறிந்தார்கள் என்பது உண்மை. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏராளமான ஹோமியோபதி பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்தப் பயிற்சி நிறுவனங்களிலும், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ நூல்களைக் கொண்டுதான் வகுப்புகள் நடத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

ஹோமியோபதி மருத்துவம் படிக்க வேண்டுமென்பதற்காக தமிழைப் படித்தவர்கள் ஏராளமானவர்கள். நூற்றுக்கணக்கான ஹோமியோபதி நூலாசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு மிகுந்த சிரமங்களை மேற்கொண்டு, தங்களை அறியாமலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. கடந்த காலங்களில் ஹோமியோபதி மருத்துவ மாத-காலண்டிதழ்கள், ஆண்டு மலர்கள் என தமிழ் மொழியில் வந்த எண்ணற்ற வெளியீடுகள் இன்றைக்கும் சாட்சிகளாக உள்ளன. எனவே தமிழகத்தைப் பொருத்த வரை ஹோமியோபதி மருத்துவத்திற்கும், ஹோமியோபதி மருத்துவர்களுக்கும் தமிழ் மொழியின் வாழ்விலும், வளர்ச்சியிலும் நகமும் - சதையுமான உறவு நீடித்து கொண்டிருக்கிறது.

தஞ்சை, சரஸ்வதி மஹால் நூலக ஆவணங்களின்படி, இந்திய வரலாற்றில் முதன் முறையாக, தமிழகத்தில் தஞ்சாவூரில் தான் முதல் ஹோமியோபதி மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, 1970-களில் டாக்டர் கலைஞரின் ஆட்சியில் தான், மேற்கூரையில்லாத வீட்டிற்கு கூரை வேய்ந்தது போல, சட்டரீதியான பாதுகாப்பற்ற ஹோமியோபதி மருத்துவத்துறைக்கு, கவுன்சில் அமைக்கப்பட்டு, முறைப்படியான பதிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் தமிழ் மொழியிலேயே தேர்வு நடத்தி பி++ கிளாஸ் மற்றும் சி++ கிளாஸ் பதிவுகள் வழங்கப்பட்டன. பின்னர் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் துவங்கப்பட்டது.

தற்போது கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழ் மொழியில் ஹோமியோபதி மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்கள் ஆவண செய்ய வேண்டுமென, தமிழக ஹோமியோபதி மருத்துவர்களின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு, பணிவான கோரிக்கைகள்:

1. அரசு சார்பில் மூத்த ஹோமியோபதி மருத்துவர்களைக் கொண்ட ‘உலக தமிழ் செம்மொழி மாநாடு ஹோமியோபதிக் குழு’ அமைக்க வேண்டும்.

2. மாநாட்டில் ஹோமியோபதி மருத்துவ முறைக்கென ஆய்வரங்கம் - நடத்த வேண்டும்.

3. மாநாட்டில் ஹோமியோபதி மருத்துவக் கண்காட்சி (தமிழில் விளக்கங்களுடன்) நடத்த அனுமதிக்க வேண்டும்.

4. மாநாடு நடைபெறும் இடங்களில், சிறப்பு ஹோமியோபதி மருத்துவ முகாம்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்.

கடந்த கால வரலாற்றில், தமிழகத்தில் ஹோமியோபதியின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் தற்போது ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்’ ஹோமியோபதி மருத்துவத் துறைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென மீண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Pin It