மும்பைப் பல்கலைக்கழகம் பி.ஏ.ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலிருந்து “Such a long journey” என்ற நாவலை அவசரகதியாக விலக்கிக் கொண்டுள்ளது. இதற்கான காரணம், சிவசேனைக் கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆதித்யா தாக்கரே இந்நாவலின் ஒரு பகுதி சிவசேனைக் கட்சியை அவமதிப் பதாக உள்ளது என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியதுதான். புத்தகத்தை 24 மணி நேரத்துக்குள் விலக்கிக்கொள்ளாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்ததுடன், இப்புத்தகத்தின் நகலை பல்கலைக்கழக வாயிலிலேயே எரித்தும் உள்ளார். ‘நல்ல வேளையாக இந்நாவலின் ஆசிரியர் இந்தியாவில் இல்லை, இருந்திருந்தால் அவரையும் சேர்த்து எரித்திருப்போம்’ என்று வெறித்தனமாகவும் பேசியுள்ளார். இது பயங்கரவாத மின்றி வேறென்ன? இந்து பயங்கரவாதத்தின் சமீபத்திய பக்கம் இது.

மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராஜன் வெலுக்கர் நடுநடுங்கிப் போனார். பதட்டத்தில் நிதானமிழந்து, சிவசேனையின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந் துள்ளார். உடனே பாடத்திட்டக்குழுவைக் கூட்டி புத்தகம் விலக்கிக்கொள்ளப்பட்ட செய்தியையும் அறிவித்தார். அவர் கூட்டியிருந்தது காலாவதியாகிப்போன பழைய பாடத்திட்டக்குழு. புதிய பாடத்திட்டக்குழு உருவாகாமல் இருந்த சூழலில், நடைமுறை களையெல்லாம் மீறி இவ்வளவு அவசரமாகச் செயல்பட்டிருக்கத் தேவையில்லை என்பது பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கருத்து.

சிவசேனைக் கட்சி 1966ல் அது துவங்கிய காலத்திலிருந்து மொழி, மத, பிராந்திய வெறுப்புகளை மராத்திய மக்களிடையே விதைத்து வளர்த்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்திய நாட்டின் வணிகத் தலைநகரமாகத் திகழும் மும்பை மாநகரத்தின் முற்போக்கு முகத்திற்கு இழுக்கை விளைவிக்கும் அவமானச் சின்னமாக விளங்குகிறது.

பிரச்சனைக்குள்ளாகியுள்ள இந்நாவல் 1991ல் ரோஹின்டன் மிஸ்டிரி என்ற பார்ஸி எழுத்தாளர் எழுதிய மிகச்சிறந்த முதல் நாவலாகும். உலகப்புகழ் பெற்ற புக்கர் பரிசு பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஏழு நாவல்களில் ஒன்றாக இருந்த பெருமைக்குரிய நாவலாகும். ‘புக்கர் பரிசை’ மயிரிழையில் நழுவவிட்டாலும் “காமன்வெல்த் எழுத்தாளர்களின் பரிசு” என்ற விருதை வென்றது. ரோஹின்டன் மிஸ்டிரி இந்தியாவில் பிறந்து கனடா நாட்டில் வாழும் சிறந்த நாவலாசிரியர். இவருடைய இரண்டாவதுநாவல் “A fine balance” (1995) புக்கர் பரிசுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாவல்களில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூன்றாவது நாவல் “Familiy matters” (2002) மற்றும் முதல் சிறுகதைத் தொகுப்பு “Tales From Firosha Baag” ஆகிய நூல்களும் பெருமளவில் உலகெங் கிலும் படித்துப்பாராட்டப் படுகின்றன. மும்பை நகரத்து வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங் களையும் தன்னுடைய கதைகளில் சொற்சித் திரங்களாகத் தீட்டியுள்ளார். தாய் மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து செல்வோரின் மனநிலையிலிருந்து எழுதப்படும் இவருடைய எழுத்துக்கள் உணர்ச்சிப் பூர்வமானவை. கடல் கடந்து தொலைதூரத்தில் வாழ்வைத் தொடர்ந்தாலும், தன்னுடைய தாய் மண்ணை, வேர்களை மறக்காமல் மனதில் பசுமையுடன் நினைவில் ஏற்றி ஒருவித ஏக்கத்துடன் எழுதும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் ரோஹின் டனும் ஒருவர்.

1970களின் அரசியல் வரலாற்றுப் பின்னணி யில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் யதேச்சாதிகார அரசியல் போக்கு பற்றியும், சிவசேனை போன்ற வலதுசாரி அரசியல் கட்சிகளின் நிலைபாடுகள் பற்றியும் வருத்தத்துடனும், யதார்த்தத்துடனும் விமர்சிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பின்றி அச்சத்துடன் வாழநேர்ந்தால், வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும் என்பதை அழகாகச் சித்தரிக்கின்றது. நாவலின் கதாபாத்திரங்கள் மும்பை மாநகரின் சாதாரண குடிமக்களையே பிரதி நிதித்துவப்படுத்துகிறார்கள். உலகின் தலைசிறந்த நாவலாசிரியர்கள் சார்லஸ் டிக்கன்ஸ், டால்ஸ்டாய் போன்றவர்களின் நாவல்களுடன் இந்நாவல் ஒப்பிடப் பட்டு திறனாய்வாளர்களால் போற்றப்படுகிறது. உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்திய, மராத்திய அரசியல் நிலைமைகளை யதார்த்தமாக எடுத்துரைக்கும் இந்நாவலில் யாரும் ஆட்சேபிக்கத்தக்க எதுவும் இல்லை. ஏற்கெனவே மும்பைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., ஆங்கில இலக்கிய மாணவர்கள் கடந்த பத்தாண்டுகளாகப் பாடமாகப் படித்து வருகிறார்கள். சிவசேனைக் கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவராக பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே அறிமுகப் படுத்தப்பட்டுள்ளார். குடும்ப அரசியல் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமா என்ன? ஆதித்யா தாக்கரேயின் அரசியல் நுழைவு பரபரப்புடன் இருக்க வேண்டாமா? அதற்குத்தான் இந்தப் புத்தக எரிப்பு நாடகம். இத்தகு வெறுப்பு அரசியல் சிவசேனைக் கட்சியின் பிறவிக் குணமும், கொள்கையுமாகும். பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் ஜேம்ஸ் லேய்ன் (James Laine) எழுதிய மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பற்றிய புத்தகத்தையும் எரித்துப்போராட்டம் நடத்தியது சிவசேனை. புத்தகத்தை எரித்த ஆதித்யா தாக்கரே புத்தகத்தை தான் முழுவதும் படிக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இதைவிடப் பெரிய கூத்து அன்றைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவாண் (ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல் புகழ்) “நான் இப்புத்தகத்தை படித்ததில்லை, இருப்பினும் காங்கிரஸ் கட்சி பற்றியும், அதன் தலைவி இந்திரா காந்தி பற்றியும் தரக்குறைவாகப் பேசும் இப்புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டது சரிதான்” என்று கூறியதுதான்.

சமீப காலமாக இந்திய அரசியலில் ஆர்.எஸ்.எஸ். - சிவசேனை போன்ற பிற்போக்குப் பாசிஸ அமைப்புகள், தங்களை இந்தியாவின் கலை, இலக்கியம், கலாச்சாரக் காவலர்கள் என்று பாவித்துக் கொண்டு புத்தக எரிப்பு, திரைப்பட எதிர்ப்பு, ஓவியக் காட்சிக்குத் தடை என்று சகிப்பத்தன்மையற்ற வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவலை யளிக்கும் விஷயமாகும். 153 ஆண்டு காலப் பாரம் பரியமிக்க மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் இன்றைய நடவடிக்கை கல்வியாளர்கள் அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது.

Pin It