மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு - என பெயர்ப்பில் இருவகைகள் உள்ளன. ஒரு சின்ன உதாரணம்: book-புத்தகம் இது மொழி பெயர்ப்பு. book-புக் இது ஒலி பெயர்ப்பு. மூலமொழியில் உள்ள சொற்களின் அல்லது சொற்றொடர்களின் பொருளை மற்றொரு மொழியில் மாற்றித் தருவது மொழிபெயர்ப்பு. இங்கே மூலமொழி- பெயர்ப்பு மொழி என இருவிதம் வந்துவிடுகிறது. எடுத்துக் காட்டாக, ஆங்கிலம் மூலமொழியென்றால் தமிழ் பெயர்ப்பு மொழி.

ஒலி பெயர்ப்பு என்பது மூலமொழியின் சொல்லை பிற மொழியின் எழுத்துக்களில் ஒலி மாறாது-உச்சரிப்பு மாறாது எழுதுவதாகும்.

மொழிபெயர்ப்பில் மூலமொழியின் பொரு ளும் உணர்வும் முக்கியமென்றால், ஒலிபெயர்ப் பில் ஒலி - அதாவது உச்சரிப்பு முக்கியமாகிறது.

இங்கே சொல்லவருவது என்னவென்றால், பத்திரிகைகளிலும் நூல்களிலும் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் பரவலாகக் காணப்படும் ஓர் ஒலிபெயர்ப்புப் பிழையைப் பற்றி. அது,‘nt’ இணைந்துவரும் ஆங்கிலச் சொற் களைத் தமிழ் எழுத்துக்களில் ஒலிபெயர்ப்புச் செய்வதில் ஏற்படுகிற பிழையைப் பற்றி.

எடுத்துக்காட்டாக,

government

parliament

internet -இந்தச் சொற்களில் முதல் இரண்டில் இறுதி யிலும், மூன்றாவதில் இடையிலும் ‘வே’ இணைந்து வருகின்றன.

இந்தச் சொற்களைத் தமிழ் எழுத்துக்களில் ஒலி பெயர்ப்பு செய்கிறபோது பலர் மூன்று சுழி ‘ண்’போட்டு கவர்மெண்ட், பார்லிமெண்ட், இண்டர்நெட் என்று எழுதுகிறார்கள்.இது சரியல்ல. இரண்டு சுழி ‘ன்’ போட்டு-

கவர்ன்மென்ட்

பார்லிமென்ட்

இன்டர்நெட்

- என்று எழுத வேண்டும். கணினி தொடர்பான பத்திரிகையிலும் நூலிலும்கூடமூன்று சுழி ‘ண்’ போட்டுஇண்டர்நெட் என்றே பலர் எழுதுகிறார்கள். எல்லாரும் இப்படிப் பிழை யோடுதான் எழுதுகிறார்கள் என்பதல்ல; ஆனால் பிழையோடு எழுதுகிறவர்கள் நிறைய என்பது உண்மை.

t - க்கு அழுத்தமான ஒலி-உச்சரிப்பு என்றால், d-க்கு வெடிப்பொலி-வெடித்த உச்சரிப்பு.எனவே, ஓர்ஆங்கிலச் சொல்லில் t-க்கு முன் n இணைந்து nt என வந்தால் இரண்டு சுழி ‘ன்’ போட்டால்தான் அழுத்த ஒலிக்கு ஏற்றதாக ஒலிபெயர்ப்பு இருக்கும். அதுபோல் d- க்கு முன் n இணைந்து nd என வந்தால் மூன்று சுழி ‘ண்’ போட்டால்தான் d-யின் வெடிப் பொலிக்கு ஏற்றதாக இருக்கும்.

மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்யப் பட்ட ஒரு நூலில் nt – nd இணைந்துவரும் ஆங்கிலச் சொற்கள் சரியாக ஒலிபெயர்ப்பு செய்யப் பட்டிருந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட மற்றொரு நூலில் இரண்டு சுழி ‘ன்’ வரவேண்டிய ஆங்கிலச் சொற்களுக் கெல்லாம் மூன்று சுழி ‘ண்’ போட்டிருந்தது. பார்க்கையில் உறுத்தலாக இருந்தது.

உதாரணமாக இண்டர்நேஷனல்,பர்ஷெண்ட், டிபார்ட்மெண்ட், கம்பார்ட்மெண்ட் என்றிருந்தது.

மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஊரின் பெயர்ப் பலகையில் ட்டி.ஆண்டிபட்டி என்று குறிப்பிட் டுள்ளதைப் பார்த்தேன். அது T.ஆண்டிபட்டி போலும். தமிழில் மெய்யெழுத்து -அதாவது,புள்ளி உள்ள எழுத்து சொல்லின் முதலில் வராது. ஆனால், கூ எனும் ஆங்கில எழுத்தின் உச்சரிப்பு சரியாக வெளிப்படவேண்டும் என்பதற்காக ‘ட்டி’ என எழுதியிருக்கலாம். ஒரு விதத்தில் அந்த ‘ட்டி’ யும் சரியாகத்தான் உள்ளது.

தொண்டர், கண்டார், வண்டினம் போன்ற ‘ட’ வர்க்க எழுத்துக்களுக்கு முன் டண்ணகர மூன்று சுழி ‘ண்’தான் வரவேண்டும் என்பது தமிழ் முறைக்குச் சரி. ஆனால், ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பில் பின்பற்றவேண்டியது அச் சொல்லின் ஒலிபெயர்ப்புக்கு ஏற்ற-அதாவது உச்சரிப்புக்கு ஏற்ற தமிழ் எழுத்துக்கள்தாம்.

சகட்டுமேனிக்கு ‘ண்’ போட்டுக்கொண் டிராமல் ன் - ண் என்பவற்றை இடமறிந்து சரியாக எழுதுவதே சரியானது.

Pin It