எப்போதும் போல அன்றி இம்முறை தீபாவளிக்கு நான்கு படங்களை மட்டுமே தமிழ்த் திரையுலகம் வழங்கியுள்ளது. கோடிகள் கொள்ளும் நட்சத்திரக் கதாநாயகர்களின் படம் ஒன்றும் வரவில்லை. தனுஷ், அர்ஜூன் ஆகிய இரு அடுத்த கட்ட கதாநாயகர்களின் படங்களான உத்தம புத்திரனையும் வல்லக்கோட்டையையும் சேர்த்தே நான்கு படங்கள்தாம். தொலைக்காட்சிகளில் நாள் ஒன்றுக்கு 60 க்கு மேற்பட்ட திரைப்படங்கள் காட்டப்படுவதால் இப்போதெல்லாம் ரசிகர்கள் ஒன்றும் இது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏகப்பட்ட தியேட்டர்களில் இன்னும் எந்திரன் ஓட்டப் பட்டுக்கொண்டிருப்பதும் படங்களின் எண்ணிக்கைக் குறைவுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

வெளித்தோற்றத்தில் வல்லக்கோட்டையும் உத்தமபுத்திரனும் வழக்கமான மசாலா படங்கள் என்றும், மைனாவும் வ-குவார்ட்டர் கட்டிங்கும் வித்தியாசமான படங்கள் போலவும் காட்சியளித்தாலும் மைனாவைத்தவிர மற்ற மூன்றும் இக்கட்டுரையின் தலைப்புக்கு நியாயம் செய் வதற்காக மட்டுமே இங்கு எழுதத் தக்கவையாக இருக்கின்றன.

மைனா - பழைய காற்றானாலும் புத்தம் புதுச் சுவாசமாக...

யார் படம் எடுத்தாலும் சன் பிக்சர்ஸ் அல்லது ரெட் ஜேயிண்ட் மூவீஸ் அல்லது க்ளவுட் நைன் மூவிசுக்கு விற்க வேண்டும் அல்லது ‘ஏரியா’க்களைப் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற இன்றைய தமிழ்த் திரையுலகின் எழுதப்படாத விதியின்படி மைனா படம் ஜான் மாக்ஸின் ஷாலொம் ஸ்டுடியோஸ் மற்றும் கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன் மெண்ட்ஸ் தயாரித்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜேயிண்ட் மூவீஸ் வழியாக (கலைஞர் டிவியின் விளம்பர ஊக்கத்துடன்) வெளி வந்துள்ளது.

ஏற்கனவே லீ,கொக்கி,கிங் போன்ற சில படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படத்தின் கதை வழக்கமான ஒன்றுதான். சின்ன வயதிலிருந்து காதலிக்கும் கிராமத்து ஜோடியைப் பிரிக்க நினைக்கும் குடும்பத்திலிருந்து தப்பி ஓடும் கதைதான். ஆனால் இந்தச் சின்ன முடிச்சை பிரபு சாலமன் திரைக்கதை ஆக்கும் போது உருவாக்கியுள்ள பின்னணியும் தற்செயலாகவும் இயல்பாகவும் ஏற்படும் திருப்பங்களுமாக கதை புதிய ரூபங்கொண்டு நம்மை ஈர்க்கிறது. எல்லோரும் பாராட்டுவதைப்போல படம் நிகழும் களமாக ஒரு மலைசார் கிராமத்தையும் மலைக்காடுகளையும் தேர்வு செய்து கொண்டது படத்துக்குப் பெரிய அழகையும் வலுவையும் தந்துள்ளது. எம்.சுகுமாரின் கேமிராவும் இமாமின் பின்னணி இசையும் காட்சிப்புலன்களையும் மனங்களை யும் கொள்ளை கொள்கின்றன.

பருத்திவீரன்,களவாணி போன்ற சில படங்களை இப்படத்தின் சில காட்சிகள் நினைவுபடுத்தினாலும் உடனே ஏற்படும் காட்சி மாற்றத்தில் படம் புதுசாகிவிடுகிறது. தமிழ் சினிமா இதுவரை தொடாத சில புள்ளிகளை இப்படம் தொட் டிருக்கிறது. காவல்துறையில் இயங்கும் மனிதர்களின் மனிதப்பக்கங்கள் வெகு இயல்பாகவும் நுட்பமாகவும் இப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. வார்டராக வரும் தம்பிராமையா படம் முழுக்கத் தன் நடிப்பால் நம்மைக் கவர்கிறார். அவருடைய கண்கள்,கைகள்,பருத்த அந்த சரீரம் முழுவதுமே அற்புதமான உடல்மொழியோடு நடிக் கின்றன. நகைச்சுவையாக மட்டுமின்றி இறுதிக்காட்சிகளில் தன் துணைவியாரோடு தொலைபேசியில் பேசும் காட்சியில் நெகிழ வைக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் சேது ஜி.பிள்ளையும் பாத்திரத்துக்கு ஏற்ற பங்கைச் செய்து கனம் சேர்த்துள்ளார். நான்கே கதாபாத்திரங்களைச் சுற்றி இரண்டு மணி நேரப்படமும் சலிப்பின்றிச் சுழல்வது பாராட்டத் தக்கது.

நாயகனாக வரும் வித்தார்த் (தொட்டுப்பார்) நாயகியாக வரும் அனகா (சிந்து சமவெளி அறிமுகம்) இருவருமே தம் நடிப்பால் அக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் கொடுத்துள் ளார்கள். எல்லாப் பாத்திரங்களுமே உயிரோட்டமாக உலவு வது குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியது.

வாழ்வின் அர்த்தம்,அர்த்தமின்மை போன்ற ஆழமான விவாதங்களைக்கூட வெகு யதார்த்தமாக இப்படம் விவாதிக்கிறது. குறிப்பாக அந்தப் பேருந்து விபத்துக்குள் ளாகும் அரைமணி நேரப் படத்தின் காட்சிகள் அபூர்வமாகத் தமிழ் சினிமா காட்டும் காட்சியெனலாம். எதிரிகள், குற்றவாளிகள், சட்டம் காப்பவர்கள் என்கிற அடையாளங்கள் எல்லாம் மரணத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போவது அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

உண்மையில் படம் அந்த விபத்துக் காட்சியோடு முடிந்து விடுகிறது.அப்படி முடிந்திருந்தால் மிக அழகான மனதுக்கு மிகுந்த நிறைவைத்தரும் படமாக ஒரு கவித்துவத்துடன் முடிந் திருக்கும். ஆனால் இயக்குநர் அதை அனுமதிக்கவில்லை. அதற்கப்புறம் அரைமணி நேரத்தில் ஆறு கொலை களும் கொடுமைகளும் என படம் இழுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. பருத்தி வீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்பிர மணியபுரம் போன்ற வெற்றிப்படங் களெல்லாம் கடைசியில் மரணம், கொலைகள் என முடிந்திருப்பதால் கோடம்பாக்கத்தில் அந்த செண்டிமெண்ட் எனப்படும் மூட நம்பிக்கை எல்லோ ருக்குள்ளும் ஆழமாக இயங்குகிறது போலும்.

படம் பார்த்துவிட்டு இயக்குநரிடம் தொலைபேசியில் பேசியபோது வியாபார வெற்றிக்காகச் சில சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கிறதே சார்... என்று சொல்லிவிட்டு அதே வேகத்தில் அந்தக் கொலைக்காட்சியின்போது ரசிகர்கள் தியேட்டர்களில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் சார்... என்றார். நான் பார்த்த திரையரங்கில் பஸ் விபத்துக் காட்சியில்தான் கரவொலி பலமாக எழுந்தது என்றேன்.

சமீப காலமாக வரும் படங்களிலெல்லாம் பத்தாம் வகுப்பு அல்லது ப்ளஸ் டூ மாணவிகள் நாயகிகளாகக் கதா நாயகனால் துரத்தப்படுவதும் காதல் வயப்படுவதும் என்று வந்து கொண்டே இருப்பது நல்லதா ஆரோக்கியமான போக்கா என்கிற கேள்வியை பொறுப்புள்ள இயக்குநர்கள் விவாதிப்பது அவசியம் என்று சொல்லத் தோன்றுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் அல்லவா அவர்கள்? அதற்காக எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும்; சிவாஜியும் கே.ஆர். விஜயாவும்; விஜய்காந்த்தும் சௌந்தர்யாவும் எனத் தொந்தி பெருத்த பெரும் பெரும் வயதுக்காரர்களின் காதலைத்தான் காட்ட வேண்டும் என்று நாம் கூறுவதாகப் புரிந்துகொள்ள வேண்டாம். பள்ளிக் காலத்தில் காதல் என்பது முதிர்ச்சியற்ற ஒரு மனநிலையுடன் உருவாவது - முதற்காதல் என இலக்கியத்திலும் அதற்கு இடம் இருக்கிறது. ஆனால் வரும் படம் எல்லாமே அந்த மாதிரியே வருவது சமூக உள வியலை எவ்விதமாகத் தகவமைக்கும் என்கிற கவலை யைத்தான் நாம் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

கலை நுட்பங்களோடு சமூக அக்கறையும் சேரும்போது அற்புத மான விளைச்சலைக் கலை உலகம் காணுமல்லவா? இந்த இரண்டுமே பிரபு சாலமனிடம் இருக்கின்றன. அக் கலைஞனைச் சுதந்திரமாகச் செயல்பட இன்றைய வியாபாரத் திரை உலகம் அனுமதிக்க வில்லை. கட்டிறுக்க மான திரைக்கதையும் அதை பிரபு சாலமன் சொல்லியிருக்கும் விதமும்தான் பழைய கதையானா லும் ஒரு புத்தம் புதுச் சுவாசத்தைத் தர உதவியிருக்கின்றன எனலாம்.

மைனா படம் வருவதற்கு முன்பே உருவான எதிர்பார்ப்புகளின்படி ஒரு கலைப் படைப்பாக நம் மனம் கவர்கிறது என்பது பாராட்டத்தக்க உண்மை.

மற்ற மூன்று படங்கள்

இந்த மூன்று படங்களையும் பகுத்தறிவு மற்றும் கலை நியாயங்கள் போன்ற அம்சங்களையெல்லாம் கழட்டி வைத்துவிட்டுத்தான் பார்க்க வேண்டும் என்பதை ஒரு பொதுவான முன்னுரையாகச் சொல்லி விட்டு...

1. உத்தமபுத்திரன்

மோகன் அப்பாராவ் - டி.ரமேஷ் தயாரிப்பில் ஐங்கரன் இண்டர்னேஷனல் வெளியீடாக வந்திருக்கும் உத்தம புத்திரன் 2008இல் தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் மறு உருவாக்கமாகும். அதில் நடித்த ஜேனலியாவே இதிலும் கதாநாயகி. தனுஷ் நாயகனாக வருகிறார். பெரிய பங்களாக்களில் வாழும் பணக்காரக் குடும்பங்களின் உப்பில்லாப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு சண்டை, பாட்டு, டான்ஸ் என்று மசாலாக் கலவையுடன் நமக்கு சப்ளை செய்யப்பட்டுள்ள பண்டம் இது. பிறருக்கு உதவுவதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காத குண முடைய கதாநாயகன். நண்பர்களுக்காக கல்யாணப் பெண்களைக் கடத்திக் காதலனுடன் சேர்த்து வைப்பதை முக்கிய உதவியாகச் செய்து வருபவர். தப்பாகக் கடத்திவிட்ட பெண்ணைக் கடத்திய நிமிடத்திலிருந்தே காதலித்து அவளை எப்படிக் கல்யாணம் செய்கிறார் என்பதே கதை. தமிழ்ச் சமூகத்தின் எரியும் பிரச்னை அல்லவா இது? ஆகவே சில கோடிகளைக் கொட்டி பால சுப்பிரமணியத்தின் கேமராவையும் விஜய் ஆண்டனியின் இசையையும் வைத்துப் படம் பண்ணியிருக்கிறார்கள். 1960களில் வந்த காமெடிப் படங்கள் எனப்பட்ட உருப்படிகளில் வரும் அதே திருப்பங்கள் அதே பாணியிலான முன்கூட்டியே நம்மால் எதிர்பார்த்துவிட முடிகிற திரைக்கதை.

தனுஷ் மற்றும் விவேக் மட்டுமே நம்மைத் தியேட்டரில் உட்கார வைக்கும் சக்திகளாக இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக் நல்ல நகைச்சுவை தருகிறார். தெலுங்குப்பட வாடை படம் முழுக்க அடிக்கிறது. ஆட்சேபகரமான வசனங்கள் இருப்பதாக (வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரும்) கொங்கு வேளாளர் சமூக சங்கத்தார் இப்படம் நடந்த தியேட்டர்களின் முன்பு ஆர்ப் பாட்டம் செய்து படக் குழுவினர் சார்பாக தனுஷ் வருத்தம் தெரிவித்து அவ்வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. கொடுமைக்குக் கோவணம் கட்டின கதைதான் போங்க....

2.வல்லக்கோட்டை

போலி தேசிய முலாம் பூசிய படங்களில் நாட்டுக்காகப் போராடும் அர்ஜூன் இப்படத்தில் காசுக்காக மற்றவர் செய்த குற்றங்களைத் தான் ஏற்று அடிக்கடி சிறை செல்லும் கதாபாத்திரமாக வித்தியாசமாக வருகிறாரே என்று ஆச்சரியப்படத் துவங்கும்போதே இது மலையாளத்தில் மம்முட்டி நடித்த மாயாவி படத்தின் அப்பட்டமான நகல் என்கிற செய்தி நமக்குக் கிடைக்கிறது.

இஎஸ்கே பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரித்துள்ள இப்படத்தின் இயக்குநர் அங்காடித்தெருவில் மேஸ்திரி வில்லனாக அற்புதமாக நடித்த இயக்குநர் ஏ.வெங்கடேஷ். நல்ல வில்லன் நடிகராகவே தன் கலைப்பயணத்தைக் கொண்டு செலுத்த வாய்ப்பிருந்தும் இப்படி மசாலாவுக்குள் நம்மைத் தள்ளிக்கொண்டிருக்கிறார். மலையாளப்படம் இதைவிட சூப்பரா இருக்கும் சார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.

எட்டு லட்ச ரூபாய்த் தேவைக்காக வல்லக்கோட்டைக்கு ஒரு கொலை நிமித்தம் பயணமாகும் அர்ஜூன் அங்கே ஈஸ்வர பாண்டியன் வீட்டில் கணக்கு எழுதும் ஹரிப் பிரியாவைக் காதலித்து பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்து வாயு புத்திரனாக பல ரூபங்களில் அவதாரம் எடுத்துக் கெட்டவர்களை வதம் செய்து நம்மையும் வதம் செய்து முடிக்கிறார். இவர் செய்யும் வதம் போதாதென்று நம்மைக் கொன்று தீர்க்கும் வஞ்சத்துடன் நகைச்சுவை என்கிற பெயரில் கஞ்சா கருப்பு அடிக்கும் கூத்து சகிக்கவே முடியவில்லை.

ஒரே ஆறுதல் அர்ஜூன் இப்படத்தில் தேசம் காக்கப் போராடாதது மட்டும்தான்.

3.- குவார்ட்டர் கட்டிங்

தமிழ்ச் சினிமாக்களை நக்கலடித்து - அதை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் என்கிற படத்தின் தயாரிப் பாளர் சசிகாந்த் சிவாஜியின் ஒய்னாட் ஸ்டுடியோஸ்சும் ஓரம்போ என்கிற அதே டைப்பான படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஜோடி இயக்குநர்களும் இணைந்து தயாரித்து, தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வெளியீடாக வந்திருப்பது வ. வ என்றால் தமிழ் எண்களில் கால் என்கிற பின்னத்தின் குறியீடாகும். கால் என்றால் ஆங்கிலத்தில் குவார்ட்டர். குவார்ட்டர் என்பது குடிகார வட்டாரத்தில் ஒரு குவார்ட்டர் சாராய பாட்டிலைக் குறிக்கிறது. கட்டிங் என்றாலே குவார்ட்டர்தான் என்கிற மொழி அமைதியும் உண்டு. ஆகவே இது தண்ணி அடிப்பதைப் பற்றிய படம் என்பது தெளிவு.

கோயம்புத்தூரிலிருந்து சௌதி அரேபியா செல்வதற்காக சென்னையில் விமானம் ஏற வரும் கதாநாயகனிடம் அந்த ட்ராவல் ஏஜன்சிக்காரர் சௌதிக்குப் போய்விட்டால் தண்ணியும் அடிக்க முடியாது பொண்ணையும் தொட முடியாது - அங்கே அவ்வளவு கறாரான சட்டங்கள் உள்ளன என்று சொல்லிவிட - கதாநாயகன் தன் கடைசி குவார்ட்டர் கட்டிங்கை இந்தச் சென்னை மாநகரத்திலேயே ‘அடித்து விட்டு’த்தான் விமானம் ஏறுவது என்று முடிவெடுக் கிறான். துணைக்கு சென்னையிலேயே இருக்கும் அவனுடைய வருங்கால மைத்துனன். ஆனால் சோதனை பாருங்கள் அன்றைக்கு தேர்தலை முன்னிட்டு சாராயக் கடைகள் ஒயின் ஷாப்புகளெல்லாம் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. மாலை 6.30க்கு சென்னை வந்து மறுநாள் காலை 6.30க்கு விமானம் பிடிக்கவேண்டிய பையன் ராவெல்லாம் சென்னையைச் சுற்றுகிறான் தன் கடைசி ஒரு குவார்ட்டர் கட்டிங்கைத் தேடி. இதன் வழியே சென்னை நகரத்தின் சில பகுதிகளின் இரவு வாழ்க்கை காட்டப் படுகிறது. அதற்காகப் பிளாட்பாரத்து மக்களின் அவல வாழ்வைச் சொல்லிவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது.சும்மா காமெடிப்படம் அவ்வளவுதான்.சிரிப்பு வந்தால் உட்கார்ந்து பார்த்துவிட்டு வரலாம். பலர் அரை மணி நேரத்தில் எழுந்து போனதையும் பார்க்க முடிந்தது.

காமெடிப் படம் என்கிற பேரில் படம் எடுத்து நம்மைக் காமெடி பண்ணியிருக்கிறார்கள். “Harold & Kumar Go to White Castle” என்கிற ஆங்கிலக் காமெடிப் படத்தின் தழுவல் தான் இப்படம் என்கிறார்கள். வித்தியாசமான ஒரு கோஷ்டி இப்படிப் படங்களாக எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதை பிரமாதம் என்று ரசிக்க ஒரு இளைஞர் படையும் தமிழகத் தில் உருவாகியிருக்கிறது. ஊறிப் புளித்துப்போன ஒரே மாதிரியான மசாலாப் படங்கள் உண்டாக்கியிருக்கும் வெறுப்பிலிருந்து இது போன்ற படங்களை ரசிக்கிற மனோபாவம் உருவாகிறது.

வித்தியாசமான படம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பது மட்டும் நமக்குப் புரிகிறது. சீயர்ஸ். வேறு என்ன சொல்ல?