கீற்றில் தேட...

ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும்

ஒரு ஆடு தனது குட்டிகளை ஒரு பட்டறையில் அடைத்து வைத்து விட்டு இரைதேடிப் புறப்பட்டது. அது தனது குட்டிகளைப் பார்த்து “குழந்தைகளே, உள்ளே யாரையும் நீங்கள் விடக்கூடாது. நான் திரும்பி வந்து சத்தம் கொடுத்தால் மட்டுமே நீங்கள் கதவைத் திறக்க வேண்டும்” என்று கூறியது.

இதை ஒரு ஓநாய் மறைந்துநின்று கேட்டது. ஆடு போனதும் ஓநாய் அங்கு வந்தது. மெதுவாக அது பட்டறைக்கு முன்னால் நின்று ஆட்டின் குரலைப் போலத் தனது குரலை மாற்றிப் பேசியது. “குழந்தைகளே! கதவைத் திறவுங்கள். இதோ உங்கள் அம்மா உங்களுக்கு இரை கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறியது.

குட்டிகள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தன. பார்த்துவிட்டு “உனது குரல் எங்கள் அம்மா குரலைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் உன்னுடைய கால்கள் ஓநாயின் கால்களைப் போல இருக்கின்றன. அதனால் உன்னை உள்ளே விட மாட்டோம்” என்று கூறிவிட்டன. 

சுமைதாங்கி

பிரெஞ்சுக்காரர்கள் மாஸ்கோ நகரைவிட்டுப் போய்விட்டனர். உடனே இரண்டு பேர் ஊருக்குள் போய் அங்கு நாலாதிசைகளிலும் சிதறிக்கிடக்கும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் சுருட்டிக் கொண்டு வரப்போனார்கள். அந்த இருவரில் ஒருவன் புத்திசாலி. மற்றவன் முட்டாள்.

அவர்கள் இருவரும் முதலில் தீ எரிந்த பகுதிக்குப் போனார்கள். அங்கு எரிந்து மிஞ்சிய ஒரு கம்பளியைப் பார்த்ததும் “இதை வீட்டுக்குக் கொண்டு போனால் பயன்படும்” என்று இருவரும் நினைத்தனர். கம்பளியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு நடந்தனர். வரும் வழியில் ஒரு ஜவுளி மூட்டை கிடந்தது. உடனே புத்திசாலி கம்பளியைத் தூக்கி எறிந்துவிட்டு ஜவுளி மூட்டை யைத் தூக்கிக் கொண்டான். முட்டாள் இதைப் பார்த்து -

“ஏன் கம்பளியை எறிந்துவிட்டாய். அதை அழகாக முதுகில் கட்டியிருந்தோமே!” என்று புலம்பினான். அவன் ஜவுளியை எடுக்கவில்லை.

அடுத்து அவர்கள் வரும் வழியில் புதிதாய் தைத்த சட்டைகள் கோட்டுகள், கால் சட்டைகள் கிடந்தன. புத்திசாலி ஜவுளி மூட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடைகளை எடுத்துக் கொண்டான். அப்போது முட்டாள் “கம்பளியை நான் ஏன் எறிய வேண்டும்? நான் அதை முதுகில் கட்டியிருக்கிறேன்” என்றான்.

மேலும் அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். வழியில் வெள்ளித் தட்டுகள் தெருவில் சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்த்ததும் புத்திசாலி சட் டைத் துணிகளை எறிந்துவிட்டு எவ்வளவு முடியு மோ அவ்வளவு வெள்ளித் தட்டுகளை அள்ளிக் கொண்டு புறப்பட்டான். முட்டாள் கம்பளியைத் தூக்கி எறியாமல் மறுபடியும் அது அழகாயிருக்கிறது என்றான்.

 இருவரும் மீண்டும் தொடர்ந்து நடந்தனர். ஒரு இடத்தில் தங்க நகைகள் சிதறிக்கிடந்தன. புத்திசாலி வெள்ளித்தட்டுகளைத் தூர எறிந்து விட்டுத் தங்கநகைகளை அள்ளிக்கொண்டான். அப்போதும் முட்டாள் “கம்பளியை ஏன் தூர எறிய வேண்டும்? அதை அழகாக முதுகோடு சேர்த்துக் கட்டியிருக்கிறேன்” என்றுதான் சொன்னான்.

பின்பு இருவரும் வீடுவந்து சேர்ந்தனர். வரும் வழியில் மழைபிடித்துக் கொண்டது கம்பளி நனைந்து கனத்தது. முட்டாள் அதைத் தூர எறிந்து விட்டு வீடு போய்ச் சேர்ந்தான். புத்திசாலி தங்கத்தைக் கொண்டு போய்ச் நன்றாக வாழ்ந்தான்.

 மெல்லிய நூல்

ஒருவன் இன்னொருவனிடம் மிகவும் மெல்லிய நூல் நூற்றுக்கொண்டு வரும்படி கூறினான். அதன்படி அவன் மெல்லிய நூல் நூற்றுக் கொண்டு வந்து கொடுத்தான். அதைப் பார்த்து விட்டு அவன் “இந்த நூல் மெல்லிய தாக இல்லை. இதைவிட மெல்லியதாக அல்லவா நான் கேட் டேன்” என்றான். அதற்கு நூல் நூற்றவன் “இந்த நூல் உங்களுக்கு மெல்லிசாக இல்லையா! அப்படி என்றால் இதோ இந்த நூலைப் பாருங்கள். இது உங்களுக்குப் பிடிக்கும்” என்று கூறிவிட்டு ஒரு வெற்றிடத்தைக் காட்டினான். முதலாவது ஆள் என்ன, ஒன்றையும் காணோமே” என்றான்.

இரண்டாவது ஆள் “உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதிலிருந்தே இந்த நூல் மெல்லி சானது என்பது தெரியவில்லையா? என் கண்ணுக்கும் கூட நூல் தெரியவில்லை!” என்று கூறினான்.

முதலாவது ஆள் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அந்த முட்டாள் இன்னும் கொஞ்சம் இப்படி மெல்லிசாக நூல் தயாரிக்கும்படி கூறி, அதற்கும் சேர்த்துப் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனான்.

                      - தமிழில்: எஸ்.ஏ.பி.