த.சத்திய நாராயணன், அயன்புரம்

நித்தியானந்தர் குற்றமற்றவர்போல் பேட்டி அளித்து வருகிறாரே..?

அதுவும் ரஞ்சிதாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு! அந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று கர்நாடகா காவல்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளதாம்! அங்கல்லவா அவர் தனது தரப்பு வாதத்தை நிரூபிக்க வேண்டும்? அதை விடுத்து கன்னாபின்னாவென்று பேட்டி கொடுக்கிறார். அதற்கு ஜெயா டி.வி.யில் ஏகப்பட்ட நேரம் ஒதுக்கீடு! சன் டி.வி. சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் ஏகபோகம் செலுத்த முறைகேடுகளில் இறங்கியது உலகறிந்த ரகசியம். அதற்காக, அது செய்த ஒரு நல்ல காரியமாகிய நித்தியானந்தாவை அம்பலப்படுத்தியதைக் குற்றப்பட்டியலில் சேர்க்கக்கூடாது. இதிலே கேலிக்கூத்து, மனிதர்களைப் பறக்க வைக்கிறேன் என்று அவர் போட்ட நாடகம். அதிலும் ரஞ்சிதா பங்கேற்று எம்பி எம்பிக் குதித்தது! மனிதன் பறக்க சாமியார்கள் எதற்கு? அதை விமானக் கம்பெனிகள் ஏற்கெனவே சாதித்துக் காட்டிவிட்டன!

திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயப் புதையல் பற்றி..?

ஐந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகளும், காசுகளும், பண்ட பாத்திரங்களும் உள்ளதாம்! ‘கோ+இல்’ என்பது உண்மையில் அரசனின் கஜானாவே, மக்களைச் சுரண்டிச் சேர்த்த செல்வமே. அதனால் தான் எதிரி நாட்டவர் படையெடுக்கும் போது கோயில்களைத் தாக்கினார்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள லாம். இதுவெல்லாம் மக்கள் சொத்து. இவற்றை அரசு தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். இவற்றில் கலைநுணுக்கம் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவற்றை மக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும், மற்றவற்றை ஏலம்விட்டு அதில் வரும் பணத்தை மக்கள் நல வாழ்வுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் திருவாங்கூர் ராஜா குடும்பத் திற்கே சொந்தம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரர் குறுக்குசால் ஒட்டியிருப்பதை ஒப்புக் கொள்ளக்கூடாது.

ஊழலுக்கு எதிராகப் போராட கோடீஸ் வர மதவாதியான பாபா ராம்தேவ் தகுதியானவர்தானா?

அவர் தகுதியற்றவர் என்பதற்கு அவர் ஒரு மதமுதலாளி என்பது மட்டுமல்லாது, 12 ஆயிரம் பேருக்கு ஆயுதப் பயிற்சி கொடுப்பேன் என்றதிலி ருந்தும் புரிந்து கொள்ளலாம். இவர் மட்டுமல்ல அன்னா ஹசாரேயும் கர்நாடக பாஜக அரசின் ஊழலைக் கண்டுகொள்ளாதது மட்டு மல்லாது குஜராத்தின் மோடி அரசைப் பாராட்ட வும் செய்கிறார். இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருப்பவர் ஜக்கி வாசுதேவ். “தலைவர்கள் சரியாக இருந்தால் தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும் பீகாரும் முன்னுதாரணங்கள்” (தினமலர் 20-7-11) என்று கூறியிருக்கிறார் அந்த மகானுபாவர்! குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நரவேட்டையைத் தூண்டி விட்ட மோடி தான் இவருக்கு “முன்னுதாரண” புருஷர்!

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்

இந்தியாவில் சட்டதிட்டங்கள் அனைத்தும் ஆண்களாலேயே இயற்றப்படுவதால் ஆண்களுக்குச் சாதகமாகவும் பெண் களுக்குப் பாதகமாகவும் அமைந்துள்ளன” என்று பெங்களூருவில் ஸ்ரீஜக்ருதி சமிதி என்ற பெண்கள் அமைப்பு சார்பில் நடத்தப் பட்ட கருத்தரங்கில் பேசப்பட்டது பற்றி..?

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாகப் பெண்கள் இருந்து சட்டங்கள் இயற்றினால் நிச்சயம் அவை இன்னும் நியாயமானவையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தான் அங்கே பெண் களுக்கு 33சதவீதம் இடஒதுக்கீடு கேட்கப்படுகிறது. ஆனால், இதன் பொருள் சட்டம் இயற்றிய சகல ஆண்களுமே மோசமானவர்கள் என்பதல்ல. இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தை மீறி நின்ற ஆண்களும் உண்டு. 1955-56ல் பெண்களுக்கு ஆதரவான இந்தச் சட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்பட்டன என்றால் அவற்றுக்கு அச்சாரம் போட்டுக் கொடுத் தவர் அண்ணல் அம்பேத்கர். பின்னர் அவற்றை நிறைவேற்றிக் கொடுத்தவர் பிரதமர் நேரு. உங்க ளுக்குத் தெரியுமா? பலதார மணம் ஒழிப்பு, விவாகரத்து உரிமை, பெண்ணுக்குச் சொத்துரிமை போன்றவற்றை உள்ளடக்கிய இந்து சட்டத் திருத்த மசோதா நிறைவேறவில்லையே என்கிற வருத்தத் தில் தான் 1951ல் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர். அது 1955-56ல் நிறைவேறிய பொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் ஒருவர் இந்து மகாசபை எம்.பி.யாகிய சகுந்தலா நாயர் என்கிற பெண்மணி! விஷயம் ஆணா, பெண்ணா என்றில்லை, பிரா மணியச் சிந்தனையா, சமூக சீர்திருத்த நடவடிக் கையா என்பதாக இருந்தது.

ப.அண்ணாமலை, ஒட்டன் சத்திரம்

நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் சென்று வழிபடுவது எந்த தெய்வத்தையும் முழுவதும் நம்பாமல்தான்” என்ற வாதம் சரியா?

எல்லாத் தெய்வங்களையும் நம்பி என்றுகூடச் சொல்லலாம்! உலக மாந்தரையெல்லாம் காப்பாற்றுகிற வேலையில் “பிசியாக” இருந்து தன்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையில் சகல சாமிகளையும் அணுகுகிறார் ஒருவர் என்றும் சொல்லலாம்! சக மனிதர்கள் மீது நம்பிக்கை வரும்வரை சாமிகள் மீதான நம்பிக்கை போகாது என்றுபடுகிறது. பூங்காவில் உட்கார்ந்திருந்தேன். ஏதேதோ பேசிக் கொண்டிருந்த பெரிசுகளில் ஒன்று திடீரென்று கேட்டது - “வாழ்வின் அர்த்தம் என்ன?” அதற்கு இன்னொரு பெரிசு சொன்னது- “சாவுதான்”. எல்லோரும் சிரித்தார்கள். வாழ்வின் அர்த்தம் எப்படிச் சாவாக இருக்க முடியும்? வாழ்வு பற்றிய தெளிவான தத்துவ நோக்கு ஏற்படும் வரையில் சாமிகள் மீதான நம்பிக்கை போகாது என்றும் படுகிறது.

எஸ்.தன்ராஜ், சென்னை

குடிப்பவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கெடுதல் செய்யும் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு அவசியந் தானா?

அவசியம் இல்லைதான். ஆனால், அந்தப் பணம் அரசுக்கு கிடைக்காமல் கள்ளச் சாராயப் பேர்வழிகளுக்கு அல்லவா போய்க் கொண்டிருந் தது! போலிசுக்கு அல்லவா “மேல் வரும்படி” ஆகிக் கொண்டிருந்தது! குடிப்பழக்கத்தைச் தடைச் சட்டத்தால் நிறுத்திவிட முடியாது. மாறாக, அரசு மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, சிறுவர், சிறுமிகள், மாணவர்கள் இதைப் பழகா மல் இருக்க வயதுக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இரண்டு, சினிமாக்களில் குடிக்கும் காட்சிகள் சர்வசாதாரண மாக வருகின்றன. குடிப்பது நியாயப்படுத்தப் படவும் செய்கிறது. இவை தடை செய்யப்பட வேண்டும். மூன்று, மது எதிர்ப்புப் பிரச்சாரத்தை தொண்டு நிறுவனங்களின் உதவியோடு அரசே தீவிரமாகச் செய்ய வேண்டும். டாஸ்மாக் மூலம் பணத்தை வாரிக் கொட்டிக் கொள்கிற அரசு இந்த விஷயங்களில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இதிலே அண்ணா பெயரைச் சொல்லிக் கொள்ளும் திமுக, எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லிக் கொள்ளும் அதிமுக!

கே.சூசை, வேதாரண்யம்

சென்ற இதழில் மறுவாசிப்பின் நோக்கம் பற்றிய கேள்விக்கு பதில் மிகவும் சுருக்கமாக இருந்தது, திருப்தியாக இல்லை. அதைச் சற்று விரிவாகக் கூறுங்களேன்..?

மறுவாசிப்பு என்பது கூறியது கூறலாக இல்லாமல் மறு சிந்தனையைத் தருவதாக இருக்க வேண்டும் என்றேன். குறிப்பாக சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு நோக்கில் இதிகாசங்களும் புராணங்களும் படிக்கப்பட வேண்டும், படைக்கப் பட வேண்டும் என்றேன். புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்” அகலிகை கதையைப் பெண்ணிய நோக்கில் கேள்விக்கு உட்படுத்தியது. “வள்ளி நாயகியின் கோபம்” என்பது அண்ணா எழுதிய சிறுகதை. அப்போது சென்னை மாகாணத்தில் இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் அரசு பலதார மணத்தைத் தடை செய்து சட்டம் போட்டது. இந்தச் சட்டம் முருகனின் இரண்டா வது மனைவியாகிய வள்ளியின் மனோ நிலையை எப்படிப் பாதிக்கும் என்று அவர் கற்பனை செய்த தில் பிறந்தது அந்தக் கதை. ராமாயணத்தில் வரும் சம்பூகன் வதம், மகா பாரதத்தில் வரும் ஏகலைவ னின் கட்டைவிரல் பிடுங்கல் என்பவற்றை வைத்து கதைகள், கவிதை கள் பின்னப்பட்டுள்ளன. இந்த அளவுக்குக்கூடப் புராணப் பாத்திரங்கள் இன்னும் மறுவாசிப்புச் செய்யப்படவில்லை. தேவ-அசுர யுத்தங்கள் பற்றியும், சிவ-பார்வதி மோதல் பற்றியும், விஷ்ணுவின் பெண் உரு பற்றியும், அர்த்த நாரீஸ்வரர் கற்பிதம் பற்றியும், பெரிய புராணப் பாத்திரங்கள் பற்றியும் இன்னும் இப்படி எவ்வளவோ மறுவாசிப்புச் செய்யலாம். தமிழக எழுத்தாளர்கள் இவற்றில் கவனம் செலுத்தாமல் இதிகாசங்களை நவீன மொழியில் தருவதிலே மட்டும் மும்முரம் காட்டினால் அது கூறியது கூறலாகப் போய்விடும். ஏற்கெனவே, உபன்யாசகர் கள் கிருபானந்தவாரியார் முதல் கண்ணதாசன் வரை இதிகாச - புராணச் செய்திகள் அனைத்தை யும் நியாயப்படுத்திப் பேசினார்கள். மறுபுறம் தி.க.வினர் அவை அனைத்துமே குப்பைகள் என ஒதுக்கித் தள்ளினார்கள். விஷயம் என்னவோ இந்த இரண்டையும் தாண்டி, தற்காலத்திய சமூகநீதி நோக்கில் அக்காலத்திய உண்மைகளைச் சலித்தெடுத்து கதைகள் ஆக்குவதில் இருக்கிறது. 

எல்.மங்கையர்க்கரசி, தஞ்சாவூர்

இன்றைய கல்வி முறை, பரீட்சைக்கான பாடங்களுடன் நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறதா?

“நன்கு படித்த பையனுக்கு” அவனது சொந்த சாதியில் பெண் வேண்டும் எனக் கேட்டு பத்திரிகைகளில் விளம்பரம் வருகிறது. இது என்ன கல்வி? பாடங்கள் சொல்லித் தருவது தனி, ஒழுக்கம் சொல்லித் தருவது தனி என்று இருக்கக் கூடாது. பாடத் திட்டத்திலேயே அதுவொரு பகுதியாக இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பது சக மனிதர்களைச் சொல்லாலும் செயலாலும் புண் படுத்தக்கூடாது என்பதுதான். அதிலும் முக்கியமாக சாதிப் பாகுபாடு பார்க்கக் கூடாது, பெண்ணை இழிவாக நடத்தக்கூடாது என்பதுதான். அப்புறம் பொதுநலத்துக்கு சுயநலத்தை உட்படுத்துவது என்பதுதான். இதெல்லாம் எங்கே சொல்லித் தருகிறார்கள் நமது பள்ளிகளில்? ஏழாம் வகுப்புப் பாடம் என்றால் எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம்தானே இருக்க வேண்டும்? அப் போதுதானே மாணவர்களின் திறனை நிர்ணயிக்க முடியும்? அந்தப் பொதுப் பாடத் திட்டத்திற்கே-சமச்சீர்கல்விக்கே-எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே தனியார் பள்ளி நிர்வாகிகள்! இவர்களா மாணவர் களுக்கு ஒழுக்கம் போதிக்கப் போகிறார்கள்?

ஜே.மகேந்திர பூபதி, தென்காசி

சமீபத்தில் நீங்கள் எதைப் பார்த்து வியந்து போனீர்கள்?

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. கண்ணாடிக் கூண்டுக்குள் இருவர் உட்கார்ந்து கொண்டு பக்கத்திலேயே மனித பொம்மையை வைத்திருக்கிறார்கள். கிடைத்தது இரை என்று ஓடி வருகின்றன ஐந்தாறு ஆண்-பெண் சிங்கங்கள். வேகமாக அந்த பொம்மையை இழுத்துக் கொண்டு போய், கடித்துப் பார்த்துக் கடிக்க முடியா மல் போட்டுவிட்டு, மீண்டும் அந்தக் கூண்டைச் சுற்றி வருகின்றன. காலால் தட்டிப் பார்க்கின்றன, பல்லால் கடித்துப் பார்க்கின்றன, நாக்கால் நக்கிப் பார்க்கின்றன. அவ்வளவையும் அந்தக் கூண்டுக்குள் இருந்து படமாக்குகிறார்கள் அந்த இருவரும். அவ்வளவும் சேர்ந்து அந்தக் கண்ணாடிக் கூண்டை உடைத்தால் என்னாகும்? வலுவான கண்ணாடி யாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும், எவ் வளவு ஆபத்து! அவர்களோ சிரித்துக் கொண்டே அவற்றின் நாக்கைப் பற்றியும் பல்லைப் பற்றியும் நமக்கு விளக்கம் தருகிறார்கள்! அசந்து போனேன். ஒரு மணி நேரம் அந்தக் கூண்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு, மொட்டை வெயிலைத் தாங்க முடியாமல் அவ்வளவும் ஓடிப்போயின. முழுத் தேங்காயை உருட்டிய நாயைப் பார்த்திருக் கிறோம்! மூடி போட்ட கண்ணாடிக் கூண்டைச் சுற்றி வந்த முரட்டுச் சிங்கங்களை இப்போதுதான் பார்த்தேன்! இந்த மனிதப் பயலுக்கு ஈடு இணை ஏது? அதுகள் அல்ல, இவன்தாண்டா சிங்கம்!

Pin It