“சாதி’’ இந்திய சமூகத்தை, “மேலும் ஆய்வை நோக்கிச் செல்’’ என நிர்பந்திக்கிற வார்த்தை. கார்பன் பரிசோதனையோ, வேறு பரிசோதனைகளோ, “சாதி’’ என்கிற வார்த்தை மீது செல்லுபடி ஆவதில்லை. இ.எம். சங்கரன் என்கிற இ.எம்.எஸ் மார்க்சியத் தத்துவத்தை இந்திய மண்ணில், மண்ணுக்கேற்ற மார்க்சியமாக வளர்ப்பதற்கு முயற்சித்த தத்துவவாதி. ஒருமுறை இ.எம்.எஸ் “நான் முதலில் சீர்திருத்தவாதி, பின் இடதுசாரி, பின் கம்யூனிஸ்ட்’’ என்று, தன் வளர்ச்சியை, தன் சிந்தனை வளர்ச்சியுடன் ஒப்பிட்டு வரையறை செய்திருக்கிறார். கேள்விக் கணைகள் மூளையை கசக்கியதாலேயே, இ.எம்.எஸ் என்கிற மனிதன் மார்க்சியவாதியாக மலர்ந்திருக்கிறார்.

இ.எம்.எஸ் பிறந்த, வளர்ந்த குடும்பப் பின்னணியை விளக்குவது கட்டுரையின் நோக்கமன்று, ஆனாலும் அவர், நிலையில் உயர்ந்ததாகக் கூறப்படுகிற சாதியில் பிறந்தவர், நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இளம் வயதில் தன் வாழ்க்கை மீது அவர் எழுப்பிய கேள்விகளின் விளைவு தான், வேதங்களின் நாடு, இந்திய வரலாறு ஆகிய புத்தகங்கள். சிலர் மார்க்சிஸ்ட் இயக்கத்தை விமர்சிக்க இ.எம்.எஸ். ஏன் நம்பூதிரிபாட் என்ற சாதிய வார்த்தையை பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்? மார்க்சிஸ்ட் கட்சி இ.எம்.எஸ் போன்ற பிராமணர்களால் தலைமை தாங்கப்படும் கட்சி  என்று வினாக்களை பயன்படுத்துவது உண்டு.

தன் பெயரில் நம்பூதிரியை வைத்துக் கொண்டு, சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுடனான வாழ்க்கையுடன் இணைந்ததால், ‘நம்பூதிரி’ என்கிற வார்த்தை மீதான மரியாதையை உடைக்கப் பயன்படுத்தினார். என ஏற்க, மேற்படி கேள்வியாளர்கள் முன்வரவில்லை. இரண்டாவதாக, தனது குடும்பப் பின்னணி காரணமாக, தான் கற்க நேர்ந்த வேதங்களை கேள்விக்குட்படுத்தியதால், இந்திய பிராமணீயத்தை, சாதிய மேலாதிக்க வரலாற்றை அம்பலப்படுத்த முயற்சி எடுத்தார். என்பதையும் ஏற்கவில்லை.

இந்தியாவில் சாதிய படிநிலையை, அகமண முறையை ஒவ்வொரு சாதியும் சமஸ்கிருதமயமாக்கலுக்குள் சிக்கி, தன்னை உயர்வான சாதியாக வெளிப்படுத்தும் வரலாறுகளை முதலில் எழுத்து வடிவத்தில் இந்திய மக்களுக்கு தந்தவர்கள் வெளிநாட்டவரே. அதன் பின் அப்பணியை திறம்பட செய்தவர் இ.எம்.எஸ் என்பது வரலாற்று உண்மை. 1960 களின் இறுதியில் அவர் எழுதிய வேதங்களின் நாடு, 1975 இல் சற்று விரிவாக எழுதிய இந்திய வரலாறு ஆகிய இரு நூல்களும், அவருடைய இந்திய சமூகம் குறித்த ஆய்வை தெளிவு படுத்துகின்றன.

நாம் விமர்சனங்களை வரவேற்று இ.எம்.எஸ் எழுத்துக்களை கற்றுணர்வதன் மூலம் உண்மையை உணர முடியும். இல்லை என்றால், இ.எம்.எஸ் என்கிற கம்யூனிஸ்ட் அல்லது பொருள் முதல்வாதி புனிதப் படுத்தப்பட்டு விடுவார். சாதியப் பிரிவினை இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்ற, சொல்லப்பட்ட காரணங்கள் 1. ஆரியர் வருகை, 2. வேதங்கள், 3. மனு ஸ்மிருதி, 4. வேலைப் பிரிவினை போன்றவை ஆகும். இ.எம்.எஸ் இதைப் படிப்படியாக தெளிவுபடுத்துகிறார். இந்திய சமூகத்தில் இருந்த பொருளாதார மாற்றங்கள் சாதியத்தை நிலைநிறுத்த அல்லது உறுதிப்படுத்த எந்தெந்த வகைகளில் உதவி செய்தது என்பதை எல்லா அத்தியாயங்களிலும் குறிப்பிடுகிறார்.

நிலம், சாதி, வர்க்கம் என்ற புத்தகத்தை எழுதிய சமூகவியலாளர் கெய்ல் ஓம்லெட், ஆரியர் வருகையினால் தான் சாதி வந்தது என்றால், ஆரியர் என்கிற நாடோடி இனம் சென்று குடியமர்ந்த இதர நாடுகளில் ஏன் சாதி உருவாகவில்லை? என்ற கேள்வியை முன்னிறுத்தி இந்திய சமூகப் பின்னணியை விவரிக்கிறார். ஆரியர்களைப் பிராமணர்களாய் பார்ப்பதும், வேத காலம் தொடங்கி, இன்றுவரை சமூக ஒடுக்குமுறையை நிகழ்த்துகிற பிராமணீயம் மீது, இருக்கிற கோபம் காரணமாகவும் கெய்ல் ஓம்லெட் எழுப்புகிற கேள்வியை சிலரின் சிந்தை ஏற்க மறுக்கிறது.

இ.எம்.எஸ் எழுதிய இந்திய வரலாறும், சோவியத் எழுத்தாளர்கள் எழுதிய இந்திய வரலாறும், ஆரியர்களுக்குள் இருந்த “கோத்ரம்’’ என்ற நடைமுறையும், அதே போல் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த சமூக அமைப்பும், வேலைப் பிரிவினைகளைக் கொண்டிருந்தது எனக் குறிப்பிடுகின்றனர். பேராசிரியர் காஞ்ச அய்லையா மேலை நாடுகளிலும் வேலைப் பிரிவினை இருந்தது அந்த வேலைப் பிரிவினை காரணமாக அவர்களில்  தீண்டத் தகாதவர்கள் என யாரும் உருவாகவில்லை, ஆனால் ஐரோப்பியர்களின் பெயர்களில்  இணைந்தே இருக்கிறது என்று வாதிடுகிறார். உதாரணத்திற்கு POTTER (பானை செய்பவர்), FULLER(சலவையாளர்) உள்ளிட்ட பெயர்களையும் காஞ்ச அய்லையா குறிப்பிடுகிறார்.

அதே போல் உலகில் ரோமாபுரியின் வரலாறு, கிரேக்கத்தின் வரலாறு ஐரோப்பாவின் இதர பகுதிகளின் வரலாறு அனைத்தும் அடிமை முறை இருந்ததை பதிவு செய்திருக்கிறது. அமெரிக்கா மிக சமீபத்திய உதாரணம், அதாவது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கறுப்பினத்தவரை ஏலம் போட்டு விற்பனை செய்த “அடிமை முறை’’ என்கிற கொடுமையை நிகழ்த்திய நாடு என்பதை அறிய முடிகிறது. இப்படி உலகின் பிற நாடுகளில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய போது இருந்த அடிமை முறை இந்தியாவில் இல்லை என்று தான் நமது ஆட்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் கூறிக் கொள்ள விரும்புகின்றனர்.

இ.எம்.எஸ் “இந்தியாவில் அடிமை முறை என்பது வருண அடிப்படையில் மக்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யக்கூடியதாக அமலானது’’ என குறிப்பிடுகிறார். சரித்திர முற்கால கட்டத்தின் இறுதியிலும், சரித்திர காலத்தின் துவக்கத்திலுமாக, இதர அநேக நாடுகளில் இருந்து மாறுபட்ட வளர்ச்சிப் போக்கு இந்தியாவிற்குள் ஏற்பட்டது. வர்க்கங்கள் உருவாகி, வர்க்க மோதல்கள் நடைபெற்ற போது, இந்தியாவிற்கே உரித்தான வடிவத்தைப் பெற்றது என இந்திய வரலாறு (பக்கம், 20) இல் இ.எம்.எஸ் எழுதி உள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அகழ்வாய்வுகளில் கிடைக்கப் பெற்ற தடயங்கள், சமூக அநீதிகள் இருந்ததையும் வெளிப்படுத்துகிறது. இந்திய வரலாறு பக், 23இல் பணக்காரர்களுடையதென்று கருதப்படக் கூடிய வீடுகளின் அமைப்பு ஏராளமான சொத்துக்கள் பாதுகாப்பதற்கும், திருடர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அவைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு நேர்மாறாக அடிமைகளோ அல்லது அடிமைகளை விடச் சற்றுக் குறைவான சுரண்டலுக்கு இறையானவர்களோ அல்லது வேலைக்காரர்களோ குடியிருக்கும் தன்மை கொண்ட வீடுகளின் தடயங்களும் கிடைத்தது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வரிகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏற்றம் இறக்கம் இருந்ததைக் குறிப்பிடுகிறது.

அதேபோல் ஆரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிற போது பக், 29இல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் அனைவரும், ஒரே கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர் இந்தக் கோத்திர சமுதாயங்களுக்கு இடையில் மோதல்கள் நடந்து வந்தன. தங்கள் வாழ்க்கைக்காகவும், வளர்த்த ஆடு, மாடுகளுக்காகவும் அவர்களுக்குள் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். என்பதைக் காணலாம். இத்தகைய சிறு, சிறு வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் கூட்டம் தான், பின்னர் இந்தோ ஆரிய கலப்பினமாக உருவாகிறது. மோதலில் ஆரியர்கள், சிந்து சமவெளி மக்களை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து, தங்களை மேலானவர்களாக முன்னிறுத்தி இருக்க வேண்டும். கூடவே, சிந்து சமவெளி பகுதிக்குள் வருவதற்கு முன்னதாகவே ஆரியர்கள் இலக்கியங்களை, குறிப்பாக வேதங்களில் முதலாவதான ரிக்வேதம் உருவாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. நான்கு வருண முறைகளும், ஆண்டான், அடிமை ஆகிய இரு வர்க்கங்களின் மோதல் உருவாவதற்கு பதிலாக, படிநிலை அதிகாரங்களும், சுரண்டலுக்கான வாய்ப்புகளும் உருவானதாக இ.எம்.எஸ் ஆய்வு செய்கிறார். இந்தப் படிநிலை தொடர்ந்து பல காவியங்களாலும், கதைகளாலும் அடுத்தடுத்த தலைமுறையின் மீது நிலை நிறுத்தப் படவும் செய்கிறது. இதில் தீட்டு என்கிற ஒதுக்கல் முறை மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தினால் சுரண்ட முடிந்ததையும், தீட்டுக்குரியவர்களாகப் பிறந்தது முன் பிறவிப் பயன் என்ற கருத்தாக்கத்திற்கு ஆட்பட்ட உழைக்கும் வர்க்கம், பிறவிப் பயன் கழிக்க உழைத்துக் கொட்டியதையும் அறிய முடியும். எனவே தான் இந்தியாவில் சாதியே, வர்க்கமாக பிரிந்து கிடக்கிறது என இடதுசாரிகள் கூறுகின்றனர்.

சாதியே வர்க்கம் என்றால், “தலித் காலனிக்குள்ளும், இதரர் ஊருக்குள்ளும் குடியிருப்பது ஏன்?’’ என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இ.எம்.எஸ்.சோ (அ) இடதுசாரிகளோ மேற்படி கேள்விக்கு காரணமான சூழலை நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்த நிலை சில நூறு ஆண்டுகளில் வளர்ந்த அவலம். சாதிப் படிநிலையில் தான் உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிற, பிராமணீய சிந்தனை (சமஸ்கிருதமயமாக்கல்)யின் வளர்ச்சி ஆகும். இந்த உயரத்தை அடைவதற்காக, பிராமண சாதியினரின் நடவடிக்கையை இதரர்களும் பின்பற்றுகிற போக்கு கடந்த இரு நூற்றாண்டுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றமாகவே இதைக் கொள்ள முடியும். அம்பேத்காரியவாதி என குறிப்பிடப்படுகிற ஆனந்த் டெல்டும்டே, சென்னை எழுத்தளார் சங்க மாநாட்டில் பேசுகிற போது, இதே கருத்தை முன்வைக்கிறார். “இன்றைய சாதியம் முதலில் நாம் பார்த்தத் தொன்மையான சாதியத்தில் இருந்து மிகவும் மாறுபட்டது. தொன்மையான சாதியம் பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் இருந்து வந்தது. இன்று அது வருண அமைப்பிற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும் நடந்து வருகிறது. அதாவது தலித்துகளுக்கும், தலித் அல்லாதோருக்கும் இடையிலான போராட்டமாக இன்றைய சாதியம் இருக்கிறது.’’ என ஆனந்த் டெல்டும்டே கூறுகிறார். இந்த வேறு பாட்டையும் இ.எம்.எஸ் இந்திய அரை நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சிமுறை குறித்து விளக்குகிற போது குறிப்பிடுகிறார்.

மேற்படி விவரங்களில் இருந்து இ.எம்.எஸ் கருத்து ரீதியில் சரியான அணுகுமுறை கொண்டிருந்தார். செயல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறாரா? என்றால், ஆம் செயல்பட்டிருக்கிறார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இடதுசாரிகளை பொருத்தளவில் செய்யப்பட்ட செயல்கள், தனி நபர் சாதனையாக குறிப்பிடுவது இல்லை. இருந்தாலும், விடுதலைக்கு முன்பு கேரளத்தில் நடைபெற்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் இ.எம்.எஸ் பங்கு வகித்தார். 1957இல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான அரசுக்கு, கம்யூனிஸ்ட் அரசிற்கு தலைமை ஏற்றார். அப்போது, ஜமீன்தாரிகளின் கூலி ஆட்களாக குடியமர்த்தப்பட்டு இருந்த தலித் மக்களுக்கு வீட்டுமனையும், நிலமும் உறுதி செய்யப்படும், என்ற சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1967இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், தீவிர நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அமலாக்கியபோது, தலித்துகள் பயனடைந்ததை மறுக்க முடியாது. இன்று தமிழகத்தில் இருப்பது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் கேரளத்தில் நிகழவில்லை. காரணம் நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எனக் குறிப்பிடலாம். மக்களின் திட்டமிடல் றிணிளிறிலிணிஷி றிலிகிழி  என்ற முறையை கிராமப் பஞ்சாயத்துகள் வரை அறிமுகம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் இ.எம்.எஸ் இத்தகைய செயல்கள் மூலம், இந்திய சமூகத்தில் சாதியச் சிந்தனை, சுரண்டல் உருவாக காரணமானவற்றை வேரறுக்க முனைப்பு காட்டினார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

Pin It