அன்புமிக்க தோழனே,
வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடிதம் என்பதால், தகவல் தொடர்புகளுடன் நாம் இல்லை, என அர்த்தம் கொள்ளமுடியாது . இதர தகவல் தொடர்புகள், அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருப்பதில்லை. கடிதம் என்ற ஊடகம் நலம் விசாரிப்பில் துவங்கி கடமைகளையும் நமது பங்கினையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துவதால் நமக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து அதிகரிக்க வேண்டியிருப்பதை நாம் உணர்கிறோம்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து 100 நாள்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் கொண்டாட்டங்கள் என மத்திய அரசும், காங்கிரஸ் தலைமையும் திளைத்தாலும் காங்கிரஸ் கட்சி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் தமிழகத்தை பொறுத்த அளவில் வெற்றி பெற இயலவில்லை. நமது வாலிபர் இயக்கத்தின் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் 45 நாள்களில் புதிய மைல் கல்லை பதித்து இருக்கிறது. கடந்த ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெற்ற தீவிர உறுப்பினர் சேர்க்கையில் 8 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 8 லட்சத்து 59 ஆயிரம் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 45 நாட்கள் கால இடைவெளி என்றாலும் தீவிரமாகச் செயல்பட்ட நாட்கள் 8 மட்டுமே. இந்த மைல் கல்லை நிறுவுவதில் 3200 கிளைகளும் 340 இடைக்குழுக்களும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இவர்களை செயல்படுத்துவதற்காக சுமார் 18, மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்களும் , 58 பகுதிகளில் கோரிக்கை மாநாடுகளும் , 92 பகுதிகளில் பேரவைக் கூட்டங்களும் 1500 கிளைகளில் சந்திப்பு இயக்கங்களும் நடைபெற்றுள்ளன.
இத்தகைய கூட்டங்களில் சுமார் 19 ஆயிரம் தோழர்கள் பங்கேற்பு செய்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் நமக்கு வாய்ப்புள்ள 1200 கிளைகளில் கவனம் செலுத்தி உறுப்பினர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டால் 12லட்சம் என்கிற மாநிலக் குழுவின் இலக்கை பூர்த்தி செய்யஇயலும். நலத்திட்டங்களும் தேர்தல் கால மொய்விருந்துகளும் மக்களை நீண்ட நாள் மயக்கத்தில் வைத்திருக்காது. எவ்வளவு நீண்ட இரவானாலும் விடிந்து தான் ஆகவேண்டும் என்ற கவிதை வரிகளைப் போல் மயக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தெளிவு பெறத்தான் செய்வார்கள். அதற்கான தூண்டுகோலாக நமது டி.ஒய்.எப்.ஐ. விளங்கும். 400 ஆண்டுகள் நடைபெற்ற காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் தலைமுறைகள் கடந்தாலும் லட்சியப் போர் வெற்றி பெற்ற வரலாறு நம்முடையது.
இன்று விலை உயர்வு, வறுமை, பட்டினி, லஞ்சம், கொள்ளைலாபம் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு வேட்டைக்காடாக இந்திய சந்தையை அடமானம் வைக்கும் ஆட்சியாளர்கள் என்ற சீரழிவுகளை உணர்ந்து செயல்படும் இளைஞர் சமூகம் நிச்சயம் எதிர்கொள்ளும், அதற்கான போராட்டப்பாதைகளை டி.ஒய்.எப்.ஐ. உருவாக்கும். அதில் சிலவற்றை உன்னைப் போன்ற போராட்ட குணம் கொண்ட தோழர்களின் கவனத்திற்கு முன் வைக்கிறேன்.
ஓய்வு பெறும் வயதை உயர்த்தலாமா?
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தீவிரம் காட்டி வரும், மைய ஆட்சிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் , அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த அறிவிப்பு செய்திருக்கிறது. தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நாடு முழுவதும் பதிவு செய்து இருப்போர் 5.5 கோடி, நமது தமிழகத்தில் அரை கோடி. ஏற்கனவே அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் சுமார் 34 லட்சம்.ஓய்வு பெறும் பணியாளர்களால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம். அகில இந்திய அளவில் சுமார் 4 லட்சம் பணியிடங்களும் உருவாகும். இவைகளில் வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர் பட்டாளத்தை பயன்படுத்தினால் லட்சக்கணக்கான குடும்பங்களின் புது வாழ்வுக்கு வழி உருவாக்க முடியும். ”ஹம் ஆத்மி’’ என்ற முழக்கத்தை முன் வைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் - தி.மு.க.கூட்டணி இளைஞர்களுக்கான எதிர்காலத்தை பறிப்பது ஏன்? வேலை இல்லா இளைஞர்களே ஒன்றிணைவோம் வேலைவாய்ப்பை பெற்றிடுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மாநிலம் முழுவதும் செப் 15 முதல் 19 வரையுள்ள ஏதாவது ஒரு நாளில் திறந்த வெளி கருத்தரங்கம் , தர்ணா போன்ற வடிவங்களில் இளைஞர்களை, பெற்றோர்களை சந்திக்க இருக்கிறோம்.
ரேசன் கார்டு இல்லை எப்போது கிடைக்கும் ?
குடும்ப அட்டைகள் தான், தற்போது இந்திய குடிமகனின் அடையாள அட்டை. கூடுதலாக , ஒரு ரூபாய் அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு போன்றவற்றை பெறுவதற்கு அடிப்படையில் குடும்ப அட்டை தேவை. தமிழகத்தில் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் குடும்ப அட்டை இல்லாமல், இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விலை உயர்வு கடுமையாகி, துவரம் பருப்பை இனி அருங்காட்சியக த்தில் வைக்க ஆட்சியாளர்களும் தயாராகி உள்ள நிலையில் குடும்ப அட்டை பெறுவதற்கு , மாநில அரசு நிபந்தனைகளை அதிகரித்து இருக்கிறது. இது, எளிய மக்களை, புரோக்கர்களை நோக்கித் தள்ளவே செய்யும். தாலுகா அலுவலகங்களை லஞ்சப் பேய் பிடித்து ஆட்டும். எனவே எளிய மக்களின் விண்ணப்பத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் நிபந்தனைகளைத் தளர்த்து, அனைத்து உணவு பொருள்களையும் வழங்கு, அரிசி கடத்தல், பதுக்கல் போன்றவற்றை தடுத்து நிறுத்து என கோரிக்கைகளை முன்வைத்து மாநில அளவில் அக்டோபர் -5 அன்று தாலுகா அலுவலகங்களுக்கு முன்பாக பெரும் மக்கள் திரளை திரட்டுகிற போராட்டம் நடைபெறஇருக்கிறது.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் - தொற்றுநோயை ஒழிக்குமா?
கலைஞர் மு.கருணாநிதி தனது ஆட்சியில் தனக்கு பிடித்த திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை குறிப்பிட்டு இருக்கிறார். திருக்குறளுக்கு, குறளோவியம் தீட்டியவர் தமிழக முதல்வர். அதில் ஒரு குறள் “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’. எனச்சொல்கிறது. காப்பீட்டுத் திட்டட்தை கண்மூடித்தனமாக நாம் எதிர்க்கவில்லை. விமர்சனப் பூர்வமாக அணுகுகிறோம். தற்போதைய தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களையும் அரசு மருத்துவமனைகளையும் மேம்படுத்துவது மிக அவசியமாகும். ஆண்டு ஒன்றுக்கு 500 கோடி ரூபாயை பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் மாநில அரசு அதை நமது அடிப்படை சுகாதார மேம்பாட்டில் முதலீடு செய்வதே நல்லது. காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கு ஆளாகி, உடலுழைப்பு செய்ய வழியற்று, வறுமையில் வாடும் மக்கள் பல லட்சம் ஆவர். இவர்களின் இறப்பு விகிதமும் பெருமளவில் குறையவில்லை. இதற்கு காரணம் அடிப்படை சுகாதாரமின்மை என்பது ஊரறிந்த உண்மை. இவை குறித்து நமது மாநில அரசு கவலை கொள்ளாதது ஏன்? காப்பீட்டு நிறுவனங்கள் நமது அரசால் நடத்தப்படும் போது, பன்னாட்டு நிறுவனத்திற்கு பட்டு கம்பள வரவேற்பு கொடுத்திருப்பது ஆபத்தானது. இவைகளைஅப்பாவி மக்களிடத்தில் அம்பலப் படுத்துவது டி.ஒய்.எப்.ஐ .யின் கடமை. ஏனவே, நவம்பரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரங்களும், போராட்டங்களும் நடத்திட நமது மாநிலக் குழு முடிவெடுத்திருக்கிறது.
தொடரும் தீண்டாமை கொடுமைகள் விடிவு எப்போது? மதுரை மாவட்டம் வடிவேல்கரை கிராமத்தில் டி.ஒய்.எப்.ஐ. கிளைச் செயலாளர் முருகன், எம்.காம்.முடித்து பி.எட். படித்துக் கொண்டிருப்பவர். 15 தினங்களுக்கு முன் ஆதிக்க சாதியினரால் மண்டை பிளக்கப்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்கு காரணம் , பிறந்த சாதி , தாக்கப்பட்டவர் மீதே கொலைமுயற்சி வழக்கையும் , காவல் துறை பதிவு செய்திருக்கிறது. இது வெளியுலகு அறிந்த சம்பவம். அறியாமல், தெரியாமல் இருட்டறைக்குள் முடங்கிக் கிடப்பவை ஏராளம். பெரியார் போன்ற தலைவர்களின் வாரிசுகளும் இந்த சமூகக் கொடுமையின் அங்கங்களாகி நிற்பது, அரசியலை பிழைப்பிற்காக பயன்படுத்துவதை புரிந்து கொள்ளச் செய்கிறது. தமிழகத்தில் நிலப் பிரபுத்துவ சாதி வெறியர்களால் , வீடு ஒன்று மயானமாக்கப்பட்ட இடம் கீழ் வெண்மணி . .இன்னும் அணையாத நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் , வெண்மனி தியாகிகளின் கோரிக்கை. போராட்டம் , தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் காட்டுத் தீயாக மாற்ற வேண்டிய தேவையை அதிகரித்து இருக்கிறது. டிச – 25 வெண்மணி நினைவு நாள் , தமிழகத்தில் தீண்டாமை தொடரும் 100 இடங்களில் டி.ஒய்.எப்.ஐ. நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. இன்று துவங்கி 2009இன் எஞ்சிய 120 நாள்களும், தமிழகத்தில் இளைஞர்களுக்கான எழுச்சியை உருவாக்கும், போராட்ட நாள்களா கட்டும். மழையும் , குளிரும் பருவ கால மாற்றம் கொண்டு வரும், இயற்கை வரவானாலும் அரசின், ஆட்சியாளர்களின் நயவஞ்சகத்தை வேர்அறுக்கும் போராட்டம் கொதிநிலையை அதிகரிக்கட்டும்.