கடுமையான மாசுபாடு, இரைச்சல், நெருக்கடிக்கு மத்தியில் மாநகரிலும் பிழைத்திருக்கும் பறவைகள் தொடர்ந்து வாழ முடியுமா? 

சில விஷயங்கள் காலங்களை மாறி, வயதை மீறி நமக்குப் பிடித்துப் போகும். அப்படிப்பட்ட ஒன்று ரயில் பயணம், அதுவும் ஜன்னலோரப் பயணம். வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு இயற்கை சார்ந்த எனது விருப்பங்களுக்கு வடிகாலாக இருப்பது பறவைகளை நோக்குதல் (பேர்ட் வாட்சிங்). இந்த இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது.Bird

காட்டுயிர்கள் மீது விருப்பம் ஏற்பட்டு என்னால் அதிகம் காடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்றபோதும், இயற்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எனது ஆசைக்கு அவ்வப்போது தீனி போட்டு வந்தது பறவைகளை நோக்கும் செயல்பாடுதான். சென்னையில் சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு 2004ல் எனது சொந்த ஊரான திருச்சிக்குச் சென்ற பின்னர், தஞ்சாவூருக்கு ரயிலில் செல்ல ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜன்னலோரமாகப் பார்த்துக் கொண்டே சென்றபோது, நல்லதொரு நீர்நிலையும் அங்கு நிறையப் பறவைகளுமாக எனக்கு ஒரு நினைவு பதிந்து போயிருந்தது. என்றாவது ஒரு நாள் அந்த இடத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அருகிலிருந்த ரயில் நிலையத்தின் பெயரை மனதில் பதிந்து கொண்டேன். அந்த ஊரின் பெயர் தொண்டைமான்நல்லூர். அரசர்களை அடியொற்றி பெயரிடப்பட்டதாக இருக்கும்.  

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின், நீர்வாழ் பறவைகள் நீர்நிலைகளைத் தேடி வர ஆரம்பிக்கும் காலத்தில் அந்த ஊரை தேடிச் சென்றேன். வழக்கமாக நீ்ர்வாழ் பறவைகள் பருவமழைக்குப் பின்னரே இனப்பெருக்கும் செய்யத் தொடங்கும். அப்பொழுதுதான் அவற்றுக்கும் புதிதாகப் பிறக்கும் குஞ்சுகளுக்கும் எந்தப் பிரச்சினையுமின்றி ஊட்டமுடன் வளரத் தேவையான உணவு கிடைக்கும்.  

பறவைகளை நோக்குவதில் நிறைய புவியியல்-காலநிலை சார்ந்த அம்சங்கள் அடங்கியுள்ளன. ஆண்டில் சராசரியாக ஆறு மாதங்களுக்கு நீர்வாழ் பறவைகளை பார்க்கலாம். தங்களுக்கு ஏற்ற உணவைத் தரக்கூடிய நீர்நிலை, கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து நீர்வாழ் பறவைகள் கூடும். ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு உணவுதான் முக்கிய காரணமாக இருக்கும். 

தொண்டைமான் நல்லூருக்கு வருவோம். இந்த ஊர் திருச்சி-திருவெறும்பூர் சாலையில் திருவெறும்பூரின் இடதுபக்கம் உள்ளடங்கி இருக்கிறது. எனக்குத் தெரிந்த அடையாளம் எல்லாம் அந்த ஊரின் பெயர், ரயில் நிலையத்துக்கு அருகேயிருந்த நீர்நிலை, அங்கிருந்த பறவைகள் மட்டும்தான். ரயில் நிலையத்தைக் கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை. நீ்ர்நிலையை கண்டறிவது சற்றே கடினமாக இருந்தது. இன்னும் நிலப்பசி கொண்ட ரியல் எஸ்டேட்காரர்கள், ஆலை முதலாளிகளின் பார்வை படாத இடமாக இருந்ததால், அந்த ஊரில் நிறைய நீ்ர்நிலைகள் இருந்தன. சரி, கிராமத்தில் உள்ள நீர்நிலைதானே கட்டாயம் பறவைகள் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வழிகாட்டியவர்கள் கூறிய இடத்துக்குப் போனேன். ஒரு நிலைக்கு மேல் எனது இருசக்கர வாகனம் செல்ல இயலாததால் இறங்கி, வயல்கள்-திறந்தவெளியில் நடக்க ஆரம்பித்தேன். நீர்நிலையை நெருங்க சில அடி தூரங்கள் இருந்தபோது அங்கு எந்த வகையான பறவைகள் இருக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் என்னை ஒரு பறவை கண்டு கொண்டது. என் வருகையை உணர்ந்தவுடன் முதலில் தரையிலிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த அது, சட்டென்று மேலேறி சுற்றிச்சுற்றி வந்து "டிட் யூ டூயிட் டிட் யூ டூயி்ட்" என்று என்னைப் பார்த்து கேள்வி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தது. 

அந்தப் பறவையை ஏற்கெனவே பார்த்து பழகியிருந்தேன். அதன் செயல்பாட்டுக்கு ஏற்ப தமிழில் அதற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. அதற்கு நமது கிராமத்தவர்கள் வைத்த பெயர் ஆள்காட்டி, பேச்சு வழக்கில் ஆக்காட்டி. நான் பார்த்தது சிவப்பு மூக்கு ஆள்காட்டி. இந்தப் பறவையை சாதாரணமாக நீர்நிலைகளுக்கு அருகேயும், வயல்வெளிகளுக்கு அருகேயும் பார்க்கலாம். தரையில் கூடமைத்து முட்டையிடும். ஓரிடத்தி்ல் இது இருக்கிறது என்பதை, அந்த இடத்தை நெருங்கியவுடனே ஆரவாரமாக குரல் கொடுப்பதையும், வானில் சுற்றிச்சுற்றிப் பறந்து ஆர்ப்பாட்டமாக குரல் கொடுப்பதையும் வைத்தே அறிந்து கொள்ளலாம். இதை நெருங்கி்ச் சென்று பார்ப்பது அரிது.  

நான் எடுத்துச் சென்றிருந்த இரு கண்ணோக்கி (பைனாகுலர்) வழியாகப் பார்த்தேன். அது ஆள்காட்டியேதான். அப்படியே நீர்நிலையில் இருந்த பறவைகளையும் நோட்டம் விட்டேன். ஒரளவுக்கு நீர்வாழ் பறவைகள் இருந்தன. அந்தப் பயணம் திருவெறும்பூரைச் சுற்றி பறவைகள் கூடும் இடங்கள் பற்றிய புதிய கதவுகளை எனக்குள் திறந்துவிட்டது. 

சில ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் மீண்டும் நான் குடியேறிய இடம் மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரத்துடன் இணையும் இடம். எனது வீட்டுக்கு சில நூறு அடிகள் பின்னால் "அடையாறு பூங்கா" என்ற இயற்கை சார்ந்த பூங்கா அமைக்க தொடக்ககட்ட வேலைகள் நடக்கத் தொடங்கியிருந்தன. அந்த இடம் அம்பேத்கர் மணிமண்டபத்துக்குப் பின்னால் கேட்பாரற்று கிடந்த அரசு இடம். சுற்றிலும் பணக்கார அடுக்குமாடிக் குடியிருப்புகள் சூழ்ந்திருந்தன. அப்பகுதிக்கு மழைநீர் வடிகாலாக வந்து கொண்டிருந்த வாய்க்கால் தூர்ந்து போயிருந்தது. அதனால் அந்த தாழ்வான பகுதியில் குட்டை போல் தேங்கிக் கிடந்த தண்ணீர் வறண்டிருந்தது. அந்த நிலையிலும்கூட சில நீர் வாழ் பறவைகள் வந்து கொண்டிருந்தன. 

இந்த இடத்தை நான் மறக்காமல் இருப்பதற்குக் காரணம், தொண்டைமான் நல்லூர் கிராமத்தில் பார்த்த அதே ஆள்காட்டிதான். சிறியதாக இருந்த நீர்நிலையில் ஆள்காட்டி இருந்தது. அநேகமாக அது முட்டையிட்டிருக்க வேண்டும். நாள் முழுக்க "டிட் யூ டூ இட்" என்ற குரல் இடைவெளியின்றி கேட்டுக் கொண்டே இருக்கும். இரவுகளிலும்கூட ஊரே அடங்கிய பிறகு, அந்த ஆள்காட்டியின் குரல் மட்டும் தனித்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஓய்வின்றி. 

தொண்டைமான் நல்லூராக இருந்தாலும் சரி, இரைச்சலும் மாசுபாடும் நெருக்கித்தள்ளும் சென்னையாக இருந்தாலும் சரி, இயற்கையும், அதன் இயல்பைக் குலைக்காமல்-வரம்பை மீறாத ஆள்காட்டி போன்ற கூட்டாளிகளும், எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் ஆலமர விழுதைப் போல் கிளை பரப்பி, பூமியை செழிக்க வைக்கிறார்கள். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இந்த உயிர்ப் பிணைப்பை நம்மால் செயற்கையாக உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. அதுகூடத் தேவையில்லை, இயல்பான இந்த தொப்புள்கொடி உறவை அறுக்காமல் இருப்பது ஒரு நல்ல காரியம். அதை நாம் செய்ய வேண்டும். கூடுதலாக பங்காற்ற விரும்புபவர்கள் அவற்றுக்கு உதவும் சிறு செயல்களைச் மேற்கொள்ளலாம். எப்பொழுதுமே தன் தேவையை மீறி கூடுதலாக ஆசைப்படுவதில்லை இயற்கை. 

ஆள்காட்டி-சிறு குறிப்பு

இதன் அறிவியல் பெயர் Vanellus indicus. இந்தப் பறவையைத் தனித்துக் காட்டும் அம்சங்கள்: சிவப்பு நிற அலகு, அந்தச் சிவப்பு நிறம் கண்களைச் சுற்றி வளையமாகப் படர்ந்திருக்கும். இரு கண்களையும் இணைப்பது போல் சிவப்பு நிறத் தசை ஒரு கோடு போலிருக்கும். முகம் கறுப்பு நிறம், உடல் பழுப்பு நிறம், கால்கள் மஞ்சள் நிறம். நீர் வளம் மிக்க நஞ்சை நிலங்கள் அருகே இவற்றை அதிகம் பார்க்கலாம். ஜோடியாகவோ, ஆறு வரை குழுவாகவோ திரியும்.  

ஆட்களோ, பறவை பிடிக்கும் விலங்குகள் வந்தால் ஆர்ப்பாட்டமாகக் குரல் கொடுக்கும். (இப்படி எச்சரிக்கை குரல் கொடுக்கும் பண்பு உயிரினங்கள் இடையே பல நிலைகளில் காணப்படுகிறது. காடுகளில் புலியின் வருகையை எச்சரிக்கை செய்து மரத்தின் மீதிருக்கும் குரங்குகள் இதர விலங்களுக்கு அறிவிக்கின்றன). ஆள்காட்டி பறந்து வந்து கீழே இறங்கும்போது அப்படியே தரையில் வந்து "லேண்ட்" ஆவதில்லை. சிறிது தூரம் ஓடித்தான் நிற்கும். புல் வளர்ந்த நீர்நிலைகளின் கரைகளில் வண்டு, பூச்சி, நத்தை, எறும்பு, கூட்டுப்புழு போன்றவற்றை பிடித்துண்ணும். குளக்கரை, ஆற்றுப்படுகைகளில் சிறிய குழி அமைத்து 4 முட்டைகள் வரை இடும். தவிட்டு நிறப் புள்ளிகள் கொண்ட இந்த முட்டைகளும், குஞ்சுகளும் சுற்றுப்புறத்தில் இருந்து எளிதாக பிரித்தறிந்துவிட முடியாத அளவுக்கு ஒன்றிப் போயிருக்கும்.

 

Pin It