‘அம் அஹ, இம் இஹி, உம் உஹ§’ இது மாயா பஜார் படத்தில் வரும் பிரபலமான வசனம். இப்படிச் சொன்னால் நினைத்தது நடக்கும். விரும்பியது தோன்றும். எனவே தான்...

தோடர்களும், எருமைமாட்டுத் தேசியமும்

சமீபத்தில் நீலகிரியில் தோடர் பழங்குடி யினருடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. தோடர் கள் என்றாலே ‘எருமைகளின் மக்கள்’ என்பது மரபார்ந்த தொடர்பு. ஏனெனில் தோடர்களுக்கு எருமை தெய்வீகமானது. இயற்கையோடு இயைந்து வாழும் தோடர்களின் வாழ்வில் எருமை மாடு தலையாய பங்கு வகிக்கிறது. தோடர்கள் வாழும் பகுதி ‘மந்து’, என்று அழைக்கப்படுகிறது. மந்தை என்ற சொல்லிலிருந்து  இச்சொல் வந்திருக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் பத்து எருமை மாடுகளுக்கு மேல் வளர்க்கின்றனர்.

ஒவ்வொரு வாழ்விடத்திலும் நூற்றுக்கணக்கான எருமைகள் வளர்க்கப்படுகின்றனர். கோயில் எருமை, வீட்டு எருமை என்று பிரித்து வைத்துள்ளனர். எருமைகளை கட்டி வைத்திருக்கும் இடம் புனிதமானதாகவும், வழிபடக்கூடியதாகவும் இருக்கிறது. இவர்கள் தங்களுடைய மூதாதையர்களையே வழிபடுகின்றனர். உருவ வழிபாடு இல்லை. வழிபடும் பாடல் முறை களும் எருமைகள் தங்களுக்குள் குரல் கொடுப்பது போலவே அமைந்துள்ளது. இப்பாடலில் பொருள்களும் இயற்கை வழிபாடு, இயற்கையைப் பாதுகாப்பது என்ற கருத்தினைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் மேய்ச்சல் நிலங்களுக்கு தங்களுடைய எருமைகளுக்கான வரியும் கட்டியுள்ளனர். இவர்களுடைய அடிப்படை தொழிலே எருமை மேய்த்தல் தான்.

தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் காலை முதல் இரவு வரை எருமைப் பால், தயிர், மோர், நெய் என்று அவர்களுடைய முழு உணவுப் பழக்கமும் எருமைப் பாலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. லிட்டர் கணக்கில் பாலும் தயிரும் அவர்களது வீட்டில் நிரம்பி வழிகிறது. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இவர்களிடம் இப்படி ஓர் ஆழமான எருமைமாட்டுப் பண்பாடு உள்ளது. எருமைகளின் அமைதியும், தியானமும் தங்களுக்கு இயற்கையை விளங்கிக் கொள்ளவும், அன்றாட வாழ்க்கையில் எருமையின் அமைதியும் தியானமும் இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கும் குணத்தைக் கொடுத்ததாக அவர்கள் விளக்கினர். எருமைமாடு இல்லையெனில் தோடர்கள் இல்லை.

இந்தியாவிலும் திராவிடர் பண்பாட்டில் ஓர் உயர்ந்த அலகாக எருமைமாடு விளங்குகிறது, நிச்சயம் பசு மாடு இல்லை. எருமை மாட்டைப் பற்றி பேசும் போது நம்முடைய அறிஞர் காஞ்சா அயிலையாவைப் பற்றிப்  பேசாமல் இருக்க முடியாது.  காஞ்சா அயிலையா எருமைமாட்டுத் தேசியம் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் உருவகப்படுத்தும் தேசியம், திராவிடர்களின் தேசியம்தான். இன்று எல்லா பார்ப்பன அறிஞர்களும், சுற்றுச் சூழல்வாதிகளும் அரசியல்வாதிகளும் வெவ்வேறு கருத்தியல்களை பேசினாலும் இறுதியில் அவர்கள் வந்தடைவது பசு மைய வாதம்தான்.

வந்தனா சிவா உள்பட யாரும் இதில் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? யார் இதனால் பெரும் பயன்களும், நிதி உதவிகளும் பெறுகிறார்கள் என்று பார்த்தால் பார்ப்பனர்களும், பனியாக்களும்தான். இவர்களின் சுற்றுச்சூழல் பசுமாடு இல்லாமல் இல்லை. இதை ஆய்ந்து நோக்கியே பசுவதை மற்றும் பசு குறித்த அனைத்து சிந்தனைகளும் ஆரிய, பார்ப்பன, இந்துத்துவ சிந்தனைகள் என்ற முடிவுக்கு காஞ்சா அயிலையா வருகிறார். வெண்மை நிறத்தைப் புனிதமாகவும், கருப்பு நிறத்தைக் கீழானதாகவும் பார்க்கும் சிந்தனையும் இதில் உள்ளது என்கிறார்.

பசு மாட்டுப் பொருளாதாரத்தை விட எருமை மாட்டுப் பொருளாதாரம் எவ்வளவு உயர்ந்தது என்று விரிவாக விளக்குகிறார். எருமைமாடு என்பது திராவிடர்களின் குறியீடு என்கிறார். மேலும் அவர் கூறுவது நாம் சாதி, வர்ணம், மொழி, நிலம், விலங்குகள், பறவைகள், உணவு இவற்றின் அடிப்படைத் தத்துவத்தை முற்றிலும் மாற்ற வேண்டும் என்கிறார். இந்து பார்ப்பனீயம் கீழானவையாக மாற்றி வைத்திருக்கும் அனைத்தையும் மறுவாசிப்பு செய்து அவற்றை உயர்வு படச் செய்வதே நம்முடைய தலையாய பணி என்கிறார் அயிலையா.

ஒரு சுற்றுச் சூழல் வாதியை நாம் முதலில் சந்திக்கும்போது நம்மைப் போலவே அவர் கூடங்குளத்திலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வரை அனைத்தையும் பேசுவார். இரண்டாவது சந்திப்பில் சைவ உணவின் முக்கியத்துவம் பற்றி விளக்குவார். மூன்றாவது சந்திப்பில் காந்தியின் முக்கியத்துவத்தை விளக்குவார். நான்காவது சந்திப்பில் பசுவதை குறித்தும்  பசுமைய வாதத்தையும் விளக்குவார். ஐந்தாவது சந்திப்பில் ராமாயண மகாபாரதத்திற்கும், சுற்றுச்சூழல் தொடர்பு குறித்து விளக்குவார்.

ஆறாவது சந்திப்பில் நாம் சுற்றுச்சூழல் என்று சொல்வதும், இயற்கையைப் பாதுகாப்பது என்பதும் மற்றும் அனைத்து தீர்வுகளுமே வேதங்களிலும் உபநிடத்திலும் உள்ளதென்பார், இதுதான் இந்தியாவின் சுற்றுச்சூழல். இதைத் தான் எதிர்க்கிறார் காஞ்சா அயிலையா. எளிய மக்களின் வாழ்வையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும் எதிர்ப்பவர்களை எதிர்க்க வேண்டியது நம்முடைய கடமை. இவ்வழியில்தான் எருமைமாட்டுத் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். ஏனெனில் அது பெரியாரின் கருப்பு சட்டையை இயல்பாகவே அணிந்திருக்கிறது.

Pin It