இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்விக்கு இணையாக வளராததற்கு முக்கிய காரணமாக பொது ஜன ஊடகம் மூலம் ஒட்டு மொத்தமாக பரப்பப்படும் காரணி மெக்காலே கல்வித் திட்டமாகத் தான் இருக்கும். மெக்காலே வழி கல்வி கற்றவர்களை மெக்காலைட்டுகள் என்றும், சொந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் என்றும் சொல்லாடலாக வலம் வருகிறது. மெக்காலே கல்வித் திட்டம் என்றால் என்ன என்றும் அது பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின்னனியைப் பற்றியும் அறிமுகம் இல்லாத பெரும்பாலோர் அது உண்மை என்றே நம்பி வருகின்றனர். மெக்காலே கல்வித் திட்டம் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு 1835ம் ஆண்டு. முதலில் அந்த காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

macaulayஇரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் வர்ணாஸ்ரம முறை வலுவாக காலை ஊன்றி இருந்தது. இதன் விளைவாக கல்வி என்பது மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கபட்டு வந்தது. புத்த மதம் இந்தியாவில் ஆட்சி செய்தபோது தற்போதைய பல்கலைகழகங்களைப் போன்றே நாலந்தா போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் சாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி அளித்தது (அந்தக் காலத்தில் கல்வி என்பது மத போதனை தான் என்பது வேறு செய்தி). ஆனால் அதன் பிறகு இந்து மதம் தழைத்தோங்கிய பின் சமஸ்கிருத வழி குருகுல கல்வி வளர்ந்து அது உயர் சாதியினருக்கும் மட்டும் சென்றடைந்தது. அதுமட்டுமன்றி இந்தியாவில் இருந்த பல்வேறு சிறு மற்றும் குறுநில மன்னர்களைச் சுற்றி உயர் சாதியினரை மட்டும் உள்ளடக்கிய பெரிய அதிகார வர்க்கம் உருவானது. அந்த அதிகார வர்க்கம், கல்வி சாமனியரை சென்றடைவதைத் தடுத்து, அவர்கள் மட்டும் பயனடைய உதவி செய்தது.

அது மட்டுமன்றி சமஸ்கிருத மொழி கடவுள் பேசும் தேவ மொழி என்ற செய்தி பரப்பப்பட்டு அதைப் படிக்கும் உரிமை ஒரு சில உயர் சாதியினருக்கே உரியது என்பதும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் அதைப் படிக்க முயல்வது பாவம் என்பதும் நீதி ஆனது. அப்போதைய கல்விக் கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களும் சமஸ்கிருத மொழியில் வேதம் ஓதுவது எப்படி என்பது பற்றிய பாடங்களும் பிற மத ரீதியான பாடங்களும் தான். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இஸ்லாமிய மன்னர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களில் குரான் மற்றும் இசுலாமிய மதரீதியான பாடங்கள் தான் இருக்கும். ஒரு புறம் இந்து மன்னர்களின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அடிப்படையான இந்து சமய பாடமுறைகளும், மறுபுறம் இசுலாமியப் பள்ளிகளில் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் இசுலாமிய மத பாட முறைகளும் தான் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் சிறிது சிறிதாக காலூன்ற ஆரம்பித்தது. பிரிட்டன் பாராளுமன்றம், கிழக்கு இந்தியக் கம்பெனி கட்டாயமாக இலட்சம் ரூபாயை இந்தியர் கல்விக்காக செலவிட வேண்டும் என்று உத்திரவிட்டது. அந்த லட்சம் ரூபாயை எவ்வாறு செலவிடுவது என்று கிழக்கிந்தியக் கம்பெனி சிந்தித்தபோது அப்போதைய கல்வியாளர்களால் இறுதி செய்யபட்டது இரண்டு முறைகள். ஒன்று இந்தியாவில் அப்போது நடைமுறையில் இருந்த "தாய் மொழி" வடிவில் கற்று கொடுக்கப்பட்டு வந்த கல்விமுறை. மற்றொன்று ஆங்கில் முறையில் மேற்கத்திய வழிக் கல்வி. அந்த இரண்டில் மெக்காலே தேர்ந்து எடுத்தது மேற்கத்திய முறை அடிப்படையான ஆங்கில வழிக் கல்வி. அது தான் இன்றைய தேசியவாதிகளாலும், இந்து மத அடிப்படைவாதிகளாலும் சாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிக் கல்வி என்றவுடன் ஏதோ இந்தியாவில் இருந்த அனைத்து மக்களும் தங்களது தாய் மொழியில் கற்க வாய்ப்பு கிடைத்து அதை மெக்காலே தடுத்து விட்டதாக நினைத்து விட வேண்டாம். அந்தக் கால தாய்மொழிக் கல்வி என்று குறிப்பிடப்படுவது சமஸ்கிருதம், அரேபிய மற்றும் பெர்சிய மொழி வழிக் கல்விதான். இது அவரது குறிப்புகளில் தெளிவாக இருக்கிறது. அன்று மெக்காலே பாரம்பரிய கல்வி முறையை தேர்ந்து எடுத்து இருந்தால், அதன் விளைவாக இந்தி ஆதிக்கம் இந்தியா முழுதும் படர்ந்து மற்றைய பிராந்திய மொழிகளின் அடிப்படையிலான கல்வியை முழுமையாக அழித்திருக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி மத ரீதியான காரணங்களைச் சொல்லி 1000 ஆண்டுகளாக நடந்து வந்ததைப் போல் கல்வி செல்வத்தையும் அதன் மூலம் வரும் வளர்ச்சி மற்றும் பொருள் செல்வத்தையும் ஒரு சில ஆதிக்க சாதியினருக்கு மட்டும் தனியுடமை ஆக்கி, தங்களின் வளர்ச்சிக்கு ஒரு போட்டியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இவையெல்லாம் உண்மை என்றாலும் மேற்கத்தைய கல்விக்கு ஆதரவாக மெக்காலே சொன்ன காரணங்கள் இவை இல்லை. அவரது கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக அவர் கூறிய காரணங்களைப் பார்ப்போம். .

“மெக்காலேயின் கருத்துப்படி ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு என அனைத்துத் துறைகளிளும் அதிக அளவு புத்தகம் உள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களில் உள்ள கருத்துகள் ஒரு பீரோவின் பாதி அளவில் உள்ள ஆங்கிலப் புத்தகங்களில் உள்ளதை விட குறைவாகவே இருந்தது என்பது தான். அது மட்டுமன்றி கம்பெனியினரின் பணத்தை அறிவியல் சார்ந்த கல்விக்காக செலவிடுவதை விடுத்து மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது என்பது வீண். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தும் கல்வி முறை இருக்க வேண்டும். இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க உதவுவது ஏராளமான கலை பொக்கிஷங்களை உள்ளடக்கிய ஆங்கில மொழி வழியில் இருப்பது தான் நன்று. எனவே இந்தியர்கள் ஆங்கிலத்தைப் படித்தால் அவர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து கலை பொக்கிஷங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது அறிவின் வளர்ச்சிக்கு உதவும். அந்த சமயத்தில் கூட இந்திய அதிகார வர்க்கத்தினர் ஆங்கிலத்தில் நன்கு பேசும் புலமை பெற்று ஆங்கிலப் புத்தகங்களை படிக்கின்றனர். எனவே ஆங்கில மொழிக் கல்வியை அனைவருக்கும் அளித்தால் அது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் விரிவடைகிறது. இனி வரும் காலங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிடையே ஏற்படும் வர்த்தகத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே ஆங்கில வழிக் கல்வி பிற்காலத்தில் இந்தியர்களுக்கு இந்த வர்த்தகத்துக்கும் உதவியாக இருக்கும். 15ம் நூற்றாண்டில் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்த அளவு கலை செல்வம் ஆங்கிலத்தில் இல்லை. ஆனால் அப்போது இங்கிலாந்தில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் தான் படிப்போம் என்று கூறி பிற மொழிகளில் இருந்த கருத்துகளைப் புறக்கணிக்கவில்லை. மாறாக சில காலத்துக்குப் பின் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அனைத்து புத்தகங்களையும் சமஸ்கிருதத்திலும் அரேபிய மொழியிலும் குறைந்த காலத்தில் மொழி பெயர்ப்பது என்பது கடினம். அதுமட்டுமின்றி இந்தியர்களும் ஆங்கில வழி கற்று உலக நடப்புகள் மற்றும் அறிவியலைக் கற்றால், இந்தியர்களும் மேற்கத்திய சிந்தனை மற்றும் மேற்கத்திய நீதி நெறிமுறைகளை அறிந்து அதை பின்பற்றப் வாய்ப்பாகவும் இருக்கும்.”

இனி அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி பார்ப்போம். மெக்காலேவின் கல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கி சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க முயன்றார் என்பது தான். அதற்கு அவர்கள் காட்டும் மேற்கோள்

"We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste"

ஆனால் இந்த மேற்கோள் பாதியை மட்டும் கொண்டது. அந்த மேற்கோளின் மீதி பாதியை பெரும்பான்மையானோர் மறைத்து விடுவர். அதன் முழு செய்தியையும் படித்துப் பாருங்கள். அவர் கூறியதற்கான காரணம் உங்களுக்கு புரியும்.

"In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "

அதாவது கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியருக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதும் கடினம். அது மட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு அவர்களது மொழியைப் புரிந்து கொண்டு அதை அவர்கள் ஆளும் மக்களிடம் அவர்களது மொழியில் பேச ஆட்கள் உடனடியாக தேவைபட்டது. எனவே முதலில் ஆங்கிலத்தை இந்தியாவில் உள்ள ஒரு சிலரிடம் கற்று கொடுப்போம். அவர்கள் ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்து தங்களது மொழியில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கொண்டு செல்லட்டும் என்பதேயாகும்.

தற்போது வலையுலகத்தில் வேகமாகப் பரவி வரும் செய்தி மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசியதாக வரும் செய்தி. அதில் கூறபட்டுள்ள செய்தி

"I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation. "

அதாவது இந்தியாவில் ஏழைகளே இல்லையாம். பாலாறும் தேனாறும் ஓடியதாம். வருணாஸ்ரம வழி கல்வி முறையால் தான் இந்தியா இவ்வாறு வளமாக இருந்ததாம். என்வே அந்தக் கல்வி முறையை அழித்து ஆங்கிலக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை அடிமைப்படுத்த முடியுமாம். இந்தச் செய்தியை படிக்கும் யாவருக்கும் அது உண்மையான செய்தியா என்பது புரிந்து இருக்கும். 1835ம் ஆண்டு மெக்காலே இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் மேற்கூறியவற்றை கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் மெக்காலே பற்றிய எந்த வரலாற்று குறிப்புகளிலும் இது பற்றி இல்லை. அது மட்டுமன்றி 1835ம் ஆண்டு மெக்காலே இந்தியாவில் தான் இருந்தார். எனவே பிரிட்டன் பார்லிமெண்ட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது சாத்தியமில்லை.

மெக்காலே ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தாமல் பாரம்பரிய கல்வியை சிபாரிசு செய்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு அன்றைய இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தினரின் நன்மதிப்பைப் பெற்றிருக்க முடியும். அது மட்டுமன்றி, சமஸ்கிருத மற்றும் அரேபிய வழி இரு மொழிக் கல்வியை தனித்தனியே கொடுப்பதின் மூலம் இந்து முஸ்லீம் பிரிவினையை நன்கு வளர்த்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் திசை திருப்பி இருக்கலாம். மேலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மேற்கத்தைய சிந்தனைகளை இந்தியாவில் வளர விடாமல் வருணாஸ்ரமம் சார்ந்த குறுகிய மனப்பான்மையிலேயே இந்தியர்களை வளர விட்டிருக்கலாம். அன்று அவர் கொடுத்த ஆங்கிலக் கல்வி முறை தான் பிற்காலத்தில் பல்லாயிரம் இந்தியத் தலைவர்கள் சிந்தனாவாதியாக உருவாகி, இந்திய சுதந்திர இயக்கத்தை வளர்க்க உதவியது என்பதும் மறுக்க இயலாது.

மெக்காலே கல்வித் திட்டத்தின் பயனாகக் கிடைத்த ஆங்கில அறிவின் மூலம் இன்று ஏராளமான இந்தியர்கள் உலகின் பல நாடுகளிளும் வேலை வாய்ப்பைப் பெற உதவி செய்து வருகிறது. இந்தியாவில் ஆங்கில அடிப்படையிலான கல்வியை அறிமுகப்படுத்தி சமஸ்கிருத/இந்தி வழிக் கல்வியை தடுத்ததன் விளைவாக பிராந்திய மொழி தொடக்கக் கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் காரணியாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மெக்காலே சமஸ்கிருத வழிக் கல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால், இந்திய தேசியவாதத்தைக் காரணம் காட்டி, மற்ற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக சமாதி கட்டி இருப்பார்கள். ஆங்கிலம் என்பது வெளிநாட்டினரின் மொழியாக இருந்ததால், பிராந்திய மொழி வழி தொடக்கக் கல்வியை ஆங்கிலத்துக்கு இணையாக அறிமுகப்படுத்திய போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது.

தற்போது பாக்கிஸ்தானிய மதராசாக்களிலும், ஆப்கானிஸ்தானிலும் கற்று கொடுக்கப்படும் கல்வி அன்றைய இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறையாகத் தான் உள்ளது. இன்றைய இந்து தேசியவாதிகளும் முன்னனி ஊடகங்களும் பாராட்டிப் பேசும் இந்திய பாரம்பரியக் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தைய கல்விமுறைக்கு பதில் நடைமுறைப்படுத்தி இருந்தால், இந்தியாவும் அறிவு சார் சமுதாயமாக வளராமல், ஆப்கானில் இருப்பதுபோல் மத அடிப்படைவாத சமுதாயமாக வளர்ந்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மெக்காலே கல்வித் திட்டம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.english.ucsb.edu/faculty/rraley/research/english/macaulay.html

- சதுக்கபூதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It

இந்தியாவில் எப்பொழுதெல்லாம் குண்டு வெடிக்கின்றதோ, அதன் அடுத்த நாள் முழுவதும் ஊடகங்கள் ஒரு செய்தியைத் தாங்கிவரும், அது தான் “இசுலாமிய பயங்கரவாதம்”. அந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாகவும், அதன் மூளையாகவும் செயல்பட்டதாகக் கூறி சில இசுலாமியர்களை அரச அதிகாரம் கைது செய்யும். அரசு மற்றும் ஊடகங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது இந்த இசுலாமியப் பயங்கரவாதம். ஆனால் இதன் பின்னர் நடப்பவை எதுவுமே பெரும்பான்மையான ஊடகங்களில் வெளிவருவதில்லை (அ) வெளிவிடப்படுவதில்லை. இதைப் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஆனால் செய்திகளில் குற்றவாளிகளாக்க் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்கள் மனதில் தீவிரவாதி என்ற உருவத்தை பெறும்வரை ஊடகங்கள் விடுவதில்லை. இந்த செய்திகளெல்லாம் உண்மை, அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், எல்லா இசுலாமியர்களும் இவ்வாறு தான் என்ற எண்ணம் கொண்ட ஒரு வர்க்கம் உருவாகிவருகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த கருத்தாக்கம் புனையப்பட்ட ஒன்று என்பதை விளக்கவே இந்த மொழிபெயர்ப்பு. அரசு புனையும் வழக்குகளும், அதில் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றியும், அந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் இங்கு நாம் காணப்போகின்றோம். இந்தக் கட்டுரை இசுலாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற கருத்தாக்கத்தை உடைப்பதற்கான ஒரு மிகச்சிறிய முயற்சி.

தில்லி காவல்துறையில் 1986ல் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. 1990களில் இது பரவலாக எல்லோராலும் அறியப்பட்டது. இதற்குக் காரணம் இவர்கள் பல தீவிரவாதிகளைக் கொன்றதும், பல வழக்குகளை விசாரித்து முடித்து வைத்ததுமே. இதே நேரத்தில் இந்தத் துறையில் உள்ள அதிகாரிகளே இந்தத் துறையில் பல தவறுகள் நடைபெறுவதாகவும், போலியான காரணங்களைக் காட்டி கொலை செய்வதும் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். மிகவும் முக்கிய வழக்கறிஞரான பிரசாந்த் பூசன் கூறுகையில் “துரதிஷ்டவசமாக எப்பொழுதெல்லாம் நீதிமன்றம் அவர்களால் (சிறப்புப் பிரிவு) புனையப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு வழக்கை உருவாக்கியுள்ளார்கள் எனத் தெரிந்துகொள்கின்றதோ அந்த வழக்குகளில் அவர்களுக்கு எதிராக “ஒரு கண்டனத்தைக் கூட” பதிவு செய்வதில்லை. இவ்வாறு செய்யும் அதிகாரிகள் மிகக் கடுமையாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும் வரை, இந்த காவல்துறை அதிகாரிகள் அப்பாவிப் பொதுமக்களை தீவிரவாதி என்று சித்தரிப்பதை நிறுத்தமாட்டார்க‌ள்” என்கிறார்.

தில்லியில் உள்ள கீழ்நிலை நீதிமன்றங்கள் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தீவிரவாதியாக சிறப்புப் பிரிவினரால் குற்றம் சாட்டப்பட்ட பலரைக் குற்றமற்றவர்கள் எனக்கூறி விடுதலை செய்துள்ளது. இதில் நால்வர் தெற்கு தில்லியில் நடைபெற்ற காவல் துறையின் போலி கொலைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் நால்வரும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் மிகப் பெரிய தீவிரவாத செயல் திட்டம் தீட்டி உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றிய புனையப்பட்ட தீவிரவாத வழக்கு மற்றும் அதன் தீர்ப்பு பற்றிய விவரங்களே இக்கட்டுரை எனக் கூறுகின்றார் தெகல்கா நிருபர் பிர்ஜேஷ் பாண்டே.

 

தில்வார் கான் மற்றும் மசூத் அகமது

terror1தன்னைக் கடந்து செல்லும் காவலாளியின் ஒரு சிறு பார்வை போதும் இவர்கள் இருவரின் முதுகுத்தண்டு வழியே பயம் படர்ந்து செல்ல. இதற்குப் பின்னால் ஒரு காரணமும் உண்டு. தில்வார் இவர் டெல்லியின் வட கிழக்குப் பகுதியில் உள்ள இமாம்- உல்- உலூம் மதராசாவில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். மசூத் பகவாலி மசூதியில் இமாமாக இருப்பவர்.

மார்ச் 2005 அன்று அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, அங்கிருந்து டெல்லியின் தெற்குப் பகுதியான லோதி காலனியில் உள்ள டெல்லி சிறப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன்பின்பு இவர்கள் இருவரும் வெளியில் வந்து பொதுமக்களை பார்த்து ஐந்து வருடங்கள் ஆனது. இலசுகர் இ தொய்பா தீவிரவாதிகள் என இவர்கள் இருவரும் முத்திரை குத்தப்பட்டார்கள். மேலும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பள்ளியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

பாட்டியாலா நீதிமன்றம் இவர்களின் மேலான குற்றச்சாட்டிற்கு ஆதாரமான ஆவணங்கள் இல்லாததால் போன சனவரி 2010ல் விடுவிக்கும் வரை இவர்கள் இருவரும் ஐந்து வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சிறப்பு பிரிவு காவலர்கள் விசாரிக்கும் முறையில் உள்ள குழப்பங்களையும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியமைக்கும் கண்டனம் தெரிவித்தது.

கமீத் என்ற இலசுகர் இ தொய்பா உறுப்பினரின் வாக்குமூலம் ஒன்றை வைத்து மட்டுமே காவல்துறை தில்வாரி மற்றும் மசூத்தைக் கைது செய்தது. மேலும் கமீத் தனது வாக்குமூலத்தில் தில்வாரியிடம் பாகிசுதான் தீவரவாதிகளின் வெடிமருந்து பெட்டகம் ஒன்று இருப்பதாகவும் கூறினான். கமீதே தில்வாரி மற்றும் மசூதை அடையாளம் காட்டினான். இவர்களிடம் இருந்து ஒரு வெடிகுண்டும், சீன வகை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை கூறியது.

தில்வார் தனக்கு நடந்த விசாரணை பற்றி நினைவு கூறுகின்றார் ”என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிவதற்கே எனக்கு வெகு நேரமாயிற்று. அவர்கள் கேட்ட கேள்வியெல்லாம் ஒன்று தான். உனக்கு கமீதை தெரியுமா. அவரை எனக்குத் தெரியாது எனக் கூறிய போதெல்லாம் அவர்கள் என்னைத் தொந்தரவு செய்து திரும்ப திரும்ப அதே கேள்வியையே கேட்டனர். அவர்கள் என்னை ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திடக் கோரினர். நான் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வந்தேன். உன் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை நீ படிப்பாய் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்."

மசூத்திற்கும் அதே நிலையே, "முதலில் அவர்கள் கமீதை அடையாளம் காட்டச் சொன்னார்கள், பின் அந்த தற்கொலை தாக்குதல் திட்டத்தை பற்றி விவரிக்கச் சொன்னார்கள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நேரம் ஆக ஆக நிலைமை மோசமானது. நாங்கள் ஒளிவாங்கியின் முன்னால் மிருகங்களைப் போல நடத்தப்பட்டோம். சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்ட எங்களுக்கு அருகில் நின்று கொள்வதற்கு மிகவும் ஆசைபட்டனர். ஏனென்றால் அப்பொழுது தானே செய்திகளில் அவர்களும் தோன்றுவர். ஒரு அதிகாரி என்னை நன்றாக நிற்க சொன்னார் (தில்வாரி). கடவுளின் மீதான எனது நம்பிக்கை அந்த ஒரு நிலையில் என்னை சோதித்தது. நான் இந்த நிலைக்கு வர என்ன செய்தேன்?"

கைதான பின்னர் இவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியவில்லை. பொறுமையாக இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்காக காத்திருந்தனர்.

வழக்கில் தீர்ப்பு வருவதற்கு நீண்ட காலமாகியது, சனவரி எட்டு வந்த அந்தத் தீர்ப்பு இவர்களை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்தது. நீதிபதி சர்மா இவ்வாறு தனது தீர்ப்பில் கூறுகின்றார் “அரச தரப்பினால் வைக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நம்பும் விதம் இல்லை. தில்வார் கைது செய்யப்பட்டதாகக் கூறும் வீட்டில் அவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை. மேலும் சிறப்புப் பிரிவு ஆய்வாளரான இரமேசு லாம்பா டெல்லியின் வடகிழக்கு பகுதியின் நுழைவுப் பகுதியில் இருந்த தில்வார் மற்றும் மசூதை அரை மணி நேர இடைவெளியில் கைது செய்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறும் வெடிமருந்துப் பொருட்களை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த வழக்கு விசாரணையில் அவர் கூறவில்லை. இதில் மிகவும் விசித்திரமானது என்னவென்றால் ஆய்வாளார் இரான் சிங்கின் கூற்றே. அவர் கூறுகிறார் தில்வாரைக் கைது செய்த பின்னர் நாங்கள் அலுவலகத்துக்கு சென்ற பின்னர் திரும்பச் சென்று மசூதைக் கைது செய்தோம் (மசூதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்க). இந்தக் கூற்றும் ஆய்வாளர் இரமேசின் கூற்றும் வேறுபடுகின்றன. அவர் கூறுகையில் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்தோம் என்றார். அதாவது ஒரே பகுதியில் வாழ்ந்த இருவரில் ஒருவரைக் கைது செய்ய மட்டும் இரான் சிங்கை சேர்த்தும் இரண்டாமவரைக் கைது செய்யப்போகும் போது அவரை சேர்க்காததும் விசித்திரமானது. மேலும் நீதிபதி கூறுகையில் ”இவர்களை கைது செய்யப்போகும்போது அடையாளம் காட்ட கமீது சென்றாரா என்பது ஐயத்திற்கிடமானது. ஏனென்றால் காவல்துறை தினக்குறிப்புகளில் அப்படி ஒரு பெயரே இல்லை”.

"நான் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் நான் ஒரு விசித்திரமான உலகில் வாழ்வது போல எனக்குத் தோன்றியது. என் மேலான தீவிரவாதி என்ற முத்திரை என்னை விட்டு போய்விட்டது என நான் நம்பவே எனக்கு சில காலம் ஆயிற்று" எனக் கூறுகின்றார் தில்வார். மசூத்தோ ஒரு சிறிய புன்னகையுடன் கடவுளுக்கு நன்றி சொல்கின்றார். ஆனால் இந்த மனநிலை சில நேரமே நீடித்தது. அதற்கு அடுத்த நாளே காவல் துறை அதிகாரிகள் வந்து வேறொரு வழக்கிற்காக சந்தேகத்தின் பேரில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தில்வாரியை வரச் சொன்னார்கள். தில்வாரியின் கண்முன்னே கடந்த ஐந்து வருட கால துன்பமும் வந்து சென்றது. ஆனால் தில்வாரின் வழக்கறிஞர் மீட்டுச்சென்றார். 'நீதிமன்றம் நான் குற்றமற்றவன் எனக் கூறிய பின்னும் என்னை விட்டு அந்த பயம் மட்டும் அகலவே இல்லை. என் இறப்பிற்கு பிறகுதான் அது மறையும்' என விரக்தியுடன் கூறுகின்றார் தில்வாரி.

——————————–

terror2வேலை பார்ப்பதற்காக தான் சிங்கப்பூர் செல்வது தன்னை இந்த அளவில் பாதிக்கும் என கரூண் ரசீத் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் பீகாரில் இயந்தரவியல் தொழில்நுட்பம படித்தவர். 2004ல் இந்துசுதான் ஏரோநாட்டிகல் நிறுவனப் பணியிலிருந்து வெளியேறி சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 22 மாத கால பயிற்சியில் சேரச் சென்றார். பின்னர் மே 16, 2005ல் தனது குடும்த்தாரைப் பார்க்க‌ வந்த இவரை இந்திராகாந்தி விமான நிலைத்திலேயே சிறப்புப் பிரிவு கைது செய்தது. டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பள்ளியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த பண உதவி புரிந்ததாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி சிறப்புப் பிரிவு அதிகாரிகளின் கூற்றுப்படி கரூண் இரண்டு முறை சிங்கப்பூரிலிருந்து மொத்தம் ரூபாய் 49,000ஐ தனது தம்பி மொகமதிற்கு சனவரி 10 மற்றும் 15 திகதிகளில் இரண்டு தவணைகளில் அனுப்பி உள்ளார். மொகமது அந்த பணத்தை சாமிற்கு அனுப்பி உள்ளார். இந்த சாம் என்பவர் உத்தம் நகர்(மார்ச் 2005) துப்பாக்கிச் சண்டையில் இறந்த மூவரில் ஒருவராவர். அதே போல கரூண் தான் பாகிசுதானின் அப்துல் அசீசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் 76 பக்க மின்மடல் ஒன்று ஃபரூக் என்ற பெயரில் இவர் சங்கேத மொழியில் மற்றொரு தீவிரவாத இயக்கத்திற்கு எதிர்காலத் திட்டம் பற்றி அனுப்பி உள்ளதாகவும், இவரைக் கைது செய்தது ஒரு முக்கியமான நிகழ்வு என்றும் காவல் துறை கூறிய‌து.

ஆனால் கரூணின் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது முற்றிலும் மாறுபட்ட உண்மை வெளிப்பட்டது. தீவிரவாத நிகழ்வுகளைத் தடுப்பதற்காக கொடுத்த அதிகாரங்களை சிறப்புப் பிரிவு தவறாக பிரயோகப்படுத்துவதாக கரூணின் வழக்கறிஞரான கான் வாதம் செய்தார். “கரூண் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூர் செல்வதற்காக தனது மாமாவிடமிருந்து ஒரு இலட்சம் கடன் வாங்கியுள்ளார். அங்கு சென்றவுடன் தனக்கு இவ்வளவு பணம் தேவையில்லை என்று தெரிந்தவுடன் இவர் ரூபாய் 49,000ஐ தனது தம்பிக்கு அனுப்பி, கடனை திருப்பிச் செலுத்தக் கோரியுள்ளார். அந்தப் பணம் தீவிரவாத செயல்களுக்குப் பயன்பட்டது இவருக்கு எப்படித் தெரியும்?” இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூணின் தம்பி மொகமது தான் சாமிற்கு பணம் கொடுக்கவே இல்லை என நீதிமன்றத்தில் கூறினார். காவல்துறையும் கரூணிற்கும் இலசுகர் இ தொய்பா அமைப்பிற்கும் தொடர்பு படுத்தி எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை. மேலும் கரூணிடம் இருந்து சென்றதாக கூறப்பட்ட மின்மடலும் போலி என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. மே 18 ஆம் திகதி கரூணின் மின்மடல் முகவரியின் சங்கேதக் குறி சொல்லின் மூலம் அந்த மின்மடலை கண்டுபிடித்து ஒரு பிரதி எடுத்ததாக நீதிமன்றத்தில் கூறினார் ஆய்வாளர் கைலாசு. ஆனால் ஆய்வாளர் பத்ரிநாத்தின் கூற்றுப்படி மே 13, 2005 அன்றே கரூண் தனது மின்மடல் முகவரிக்கான சங்கேத குறிச்சொல்லை தங்களிடம் கொடுத்ததாகவும் அன்று நடந்த விசாரணையின் போது ஆய்வாளர் கைலாசும் இருந்தார் என்றார். அப்படியானால் இந்த ஐந்து நாட்களில் காவல் துறையின் மூலம் புனையப்பட்ட ஒன்றே இந்த மின்மடல் என நிறுவப்பட்டது. இந்த மின்மடலின் பிரதி கூட வழக்கின் பிரதியுடன் இணைக்கப்படவில்லை. இந்த மின்மடலை பற்றிய எந்த ஒரு குறிப்பும் காவல்துறையின் குறிப்பேடுகளில் இல்லை. இதன் மூலம் ஆய்வாளர் கைலாசு பொய் கூறியது நிரூபணமாகியது.

இறுதியாக கரூண் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இன்னமும் அவரிடம் இருந்து அந்த பயம் போகவில்லை எனக் கூறுகின்றார் அவரது வழக்கறிஞர் கான். மீண்டும் காவல் துறையின் மீது அவருக்கு நம்பிக்கை வர பல காலம் பிடிக்கும் எனவும் கூறுகின்றார் அவர்.

——————————- 

எனது இளமை காலத்தை யார் திருப்பித் தருவார் சொல்லுங்கள்? இஃப்திகார் மாலிக் 

terror3டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பள்ளியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் இலசுகர் இ தொய்பாவுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் இருந்த இஃப்திகாரின் வாழ்க்கையில் இப்பொழுது தான் வெளிச்சம் வர ஆரம்பித்துள்ளது. இஃப்திகார் வயது 26, டேராடூனில் உள்ள டால்பின் உயிரி மருத்துவம் மற்றும் இயற்கை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிரி மருத்துவம் பயிலும் ஒரு மாணவர். இவர் மார்ச் 7,2005 அன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பேட்டில், குசராத் மதக்கலவரத்தின் மறுவினையாக டேராடூனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சி பள்ளியின் அணிவகுப்பின் போது தற்கொலைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், மேலும் குரானில் இருந்து தீவிரமான சில பத்திகளும் அதில் உள்ளதாகவும் கூறியது சிறப்புப் பிரிவு. மேலும் இஃப்திகார் பாகிசுதானிய தீவிரவாதி சாமுடன் எப்பொழுதும் தொடர்பிலேயெ இருப்பதாகவும், சாமின் அறிவுறுத்தலின் பேரிலே இசுலாமிய மாணவர்கள் முன்னணி நடத்திய கூட்டங்கள் பீகாரில் நடைபெற்ற போது இஃப்திகார் அதில் கலந்து கொண்டதாகவும் கூறியது. மேலும் இஃப்திகார் ,சாமின் நாட்குறிப்பேட்டில் சாகித் என்று குறிக்கப்பட்டதாகவும், இஃப்திகாருக்கு இலசுக்கர் கல்வியுதவி செய்ததாகவும் கூறியது. ஆனால் இஃப்திகாரோ இதற்கும் எனக்கும் சம்மபந்தமில்லை என கூறிய பின்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.

நீதிபதி சர்மாவே இந்த வழக்கில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் இவ்வாறு கூறுகின்றார் “ஆய்வாளர் இரமேசின் கூற்றுப்படி ஆய்வாளர் கைலாசு டேரா டூன் சென்று இஃப்திகார் வீட்டில் இருந்து கைப்பற்றியதாக்க் கூறிய இராணுவப் பள்ளி நுழைவு சீட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அது ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வு என்றும் அணிவகுப்பு சமீபத்தில் தான் நடைபெற்றது என பின்னர் குறுக்கு விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஆய்வாளர் கைலாசு டேராடூன் சென்றதே இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியும் தெரிய வந்தது. மேலும் இஃப்திகார் தன்னை வற்புறுத்தித்தான் குசராத் மதக்கலவரத்திற்கு எதிரான தாக்குதல் தொடர்பான குறிப்பு எழுதிவாங்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் கூறினார். மேலும் குரானில் இருந்து தீவிரமான பத்திகள் எழுதப்பட்டதாக காவல் துறை கூறியதும் பொய். அந்தப் பத்திகளில் உள்ளது சாதாரண வார்த்தைகளேயாகும். மேலும் இஃப்திகார் கைது செய்யப்படுவது பற்றி வீட்டின் உரிமையாளருக்குக் கூறவில்லை. மேலும் கைதின் போது எந்த ஒரு பொது மக்களுமே பார்க்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமானது” என தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் குறுக்கு விசாரணையின் போது இஃப்திகாரின் நாட்குறிப்பு மற்றும் தீவிரவாதக் குறிப்பை டேராடூன் சென்று கைப்பற்றியதாகக் கூறிய ஆய்வாளர்கள் இதுவரை டேரா டூன் சென்றதே இல்லை என்றும், அது ஒரு புனையப்பட்ட ஆதாரம் என்றும் நிரூபணமானது. மேலும் ஒரு ஆய்வாளர் அந்த குறிப்புகள் இந்தியில் இருந்ததாகவும் மற்றொருவர் ஆங்கிலத்தில் இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் கூறினர். மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் இஃப்திகார் இலசுகர் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், மேலும் உத்தம் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளை இவருக்குத் தெரியாது என்றும் கூறியது. இறுதியாக இஃப்திகார் விடுதலை செய்யப்பட்டார். இவரின் சகோதரியின் திருமணம் 2010ல் நடக்க உள்ளது , இந்த வருடம் இவருக்கு சில நம்பிக்கைகளைத் தந்தாலும் காவல்துறையின் மீதான பயம் மட்டும் போகுமா என்பது ஐயமே.

——————————————

குல்சார் அகமது ஞானி மொகமது அமின் கசாம் “இன்னும் அவர்கள் என்னை தீவிரவாதி என்றே கருதுகின்றனர். இனி ஒரு பொழுதும் இந்தியாவில் எங்கும் நான் பயணிக்கமாட்டேன்”எனக்கூறுகின்றார். ஏனென்றால் அவர் 2006ல் முதல் முறையாக காசுமீரை விட்டு டெல்லி நோக்கிப் பயணித்தது அவரது வாழ்க்கையில் பல விபரீத மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.

இவர் ஒரு இளங்கலை அறிவியல் மாணவராவார். மொகமது அமின் சம்மு காசுமீர் வருவாய் துறையில் உதவியாளராக பணியாற்றியவர். மொகமது அமீனின் சகோதரி திருமணத்திற்கு தங்க ஆபரணங்கள் வாங்குவதற்காக இருவரும் நவம்பர் 23, 2006 அன்று டெல்லி சென்றனர். ஆனால் இவர்கள் டிசம்பர் 10, 2006 அன்று காவல்துறை சிறப்புப் பிரிவால் பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டார்கள். மேலும் இவர்கள் இருவரும் இலசுகர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் இருந்து 1.5 கிலோ வெடி மருந்தும், ரூபாய் 6 இலட்சம் பணமும் கைப்பற்றப்பட்டதாக்க் கூறியது காவல் துறை. மேலும் காவல் துறை அபு தகிர் என்ற இலசுகர் இ தொய்பாவின் பிராந்தியத் தலைவர் ஒருவரின் அலைபேசியை ஒட்டுக்கேட்டதாகவும், அதில் அவர் காசுமீரில் இருந்து இரண்டு நபர்களை வெடிமருந்து வாங்கிச் செல்வதற்கும், பணம் வாங்கிச் செல்வதற்கும் அனுப்புவதாக்க் கூறியதாகவும் கூறினர். இந்தக் குறிப்பின் மூலம் முன்னாள் ஆய்வாளர் மோகன் தலைமையிலான குழு சென்று இவர்கள் இருவரையும் டிசம்பர் 10 அன்று தாவுலாகானிலிருந்து மாகிபல்பூர் செல்லும் வழியில் கைது செய்தனர்.

மேலும் காவல் துறை அவர்களைக் கைது செய்த இடத்திலிருந்து ஒரு ஒளிப்படத்தையும் வெளியிட்டது. ஆனால் குல்சார் வேறுவிதத் தகவலைத் தருகின்றார். அதை நீதிபதி சர்மா தனது தீர்ப்பில் வெளிபடுத்தியுள்ளார். “வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் எல்லாம் கண நேரத்தில் தயாரிக்கப்பட்டவை”, “இது ஒரு தவறான அணுகுமுறையாகும்”, ” நான் இது ஒரு மனிதனின் தவறான செயலா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என வியக்கின்றேன்”, “இந்தத் தவறுகள் எல்லாமே இது ஒரு புனையப்பட்ட வழக்கு என்பதை தெளிவுற காட்டுகின்றது” என தனது தீர்ப்பில் நீதிபதி கூறுகின்றார். குல்சாரி கூறுகின்றார், தானும் மொகமதும் டெல்லியில் கடந்த நான்கு நாட்கள் இருந்ததாகவும், தாங்கள் காசுமீரிக்குத் திரும்பச் செல்லும் போது 30 ஆயுதமேந்திய பொது மக்கள் உடையிலிருந்த சிலர் நாங்கள் பயணம் செய்த தானியை மறித்து எங்களை வெள்ளை நிற வண்டியில் ஏற்றினார்கள். எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பின்னர் தான் தெரிந்தது நாங்கள் லோதி காலனியில் உள்ள சிறப்புப் பிரிவுச் சாலையில் இருக்கின்றோம் என்பது. எங்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தினார்கள் எங்களுக்கு மின்சார அதிர்வுகள் தொடர்ந்து 12 நாட்கள் கொடுக்கப்பட்டன.

அவர்கள் திரும்பத் திரும்ப நீங்கள் இலசுக்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், நீங்கள் இங்கே வெடி மருந்து வாங்கவே வந்தீர்கள் என சொன்னார்கள். டிசம்பர் 10, 2006 அன்று இரவு 10.30 மணி அளவில் எங்களிடம் வந்து உங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். நாங்கள் நினைத்தோம் அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என. அவர்கள் எங்கள் கண்களைக் கட்டி ஒரு வெள்ளை நிற கனரக வண்டியில் ஏற்றிச் சென்றார்கள், அது ஒரு சந்தைப் பகுதியில் நின்றது. அங்கு நாங்கள் இறக்கிவிடப்பட்டு உட்காரவைக்கப்பட்டோம். எங்கள் அருகே ஒரு பையையும் அவர்கள் வைத்தனர். அதில் அதிக பணமும் மற்றும் சில பொருட்களும் இருந்தன. ஆனால் அவை யாவும் எங்களுடையவை அல்ல. அந்த வண்டியிலிருந்த ஒருவர், கையில் ஏ.கே இரகத் துப்பாக்கிகளையும், சில கைத்துப்பாக்கிகளையும் வைத்து ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டார். பின்னர் அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் தாங்கள் வெடி மருந்து மற்றும் பணத்துடன் இரு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாகவும் கூறினர்.

மீண்டும் அவர்கள் எங்களை சிறப்பு பிரிவுக்கே அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் அவர்கள் தீசு கசாரி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நீதிபதி எங்களை எதுவும் கேட்கவில்லை. மேலும் ஐந்து நாட்கள் சிறையில் வைத்திருக்க அனுமதி அளித்தார். அந்த ஐந்து நாட்களில் அவர்கள் எங்களை வெறும் காகிதத்தில் பல முறை கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர் நாங்கள் மூன்று வருடம் தீகார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டோம். சிறப்புப் பிரிவு காட்டிய ஆதரங்கள் அனைத்தும் புனையப்பட்டவையே ஆகும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அவர்கள் பயணம் செய்ததாக்க் கூறப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சாட்சியம் அளிக்க ஆரம்பித்த அந்த கணத்திலிருந்து வழக்கு குல்சாரி மற்றும் மொகமதிற்க்கு ஆதரவாக மாற ஆரம்பித்தது. அந்த நடத்துநரிடம் விசாரித்த வழக்கறிஞர் கானிடம் அவர்கள் காவல் துறை கூறும் அந்த நாளில் எங்கள் பேருந்து ஓடவே இல்லை என்று ஆதாரத்துடன் கூறினார்கள். எங்களை வியப்பில் ஆழ்த்தியது இந்த நிகழ்வு. காவல்துறை ஒரு வழக்கைப் புனைய முயலும்போது அந்த நாளில் அந்த பேருந்து இயங்கியதா , இல்லையா எனக் கூட தெரிந்து கொள்ள முயலவில்லை. 

மேலும் அவர்கள் கைது செய்யும்போது எடுத்ததாகக் கூறிய ஒளிப்படங்களில் சுற்றியுள்ளவர்கள் யாரும் தெரியவே இல்லை. அது ஒரு மயான பூமியில் எடுக்கப்பட்டது போல் இருந்தது. மேலும் அந்தப் படத்தை எடுத்த ஒளிம்பு நோக்கியை அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவே இல்லை. மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆர்.டி.எக்சு என்ற வெடி மருந்தும் சோதனையின் போது தவறான ஒன்று என நிறுவப்பட்டது. இது போல பல புனைவுகளும் விசாரணையின் போது வெளிவந்தன. பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் ஆளான இந்த உளவியல் மற்றும் உடல் ரீதியான தொல்லைகளுக்கு யார் பொறுப்பு? அவர்கள் இழந்த இந்த ஐந்து வருடத்தையும், நிம்மதியான வாழ்வையும் யாரால் திரும்பக் கொடுக்க முடியும்? இந்தத் தொல்லைகளின் காரணமாக குல்சாரி தன்னை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டார். குல்சாரியிடம் அந்தக் கிராமத்தில் வாழும் ஒருவர் தனது மகனும் கிராமத்திற்கு வெளியே வைத்து கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக சிறையில் இருப்பதாகவும், யார் அவரை வெளியே கொணர்வார், யார் உதவுவார் எனவும் கேட்டார்.

அமெரிக்காவின் பாதச் சுவடை பின்பற்றி அதே வல்லரசுக் கனவில் பயணிக்கும் இந்தியாவில் இனி இது போன்ற நிகழ்வுகள் வழமையான ஒன்றாகவும் ஆகக்கூடும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்குத் தெரிவிக்கும் செய்தி. இஸ்லாமியர்கள் என்ற ஒரு காரணத்திற்காகவே சிறுபான்மையினச் சகோதரர்கள் இந்துத்துவ வெறியர்களால் இங்கு தீவிரவாதிகளாகக் கட்டமைக்கப்படுகிறார்கள். ஆனால், அதற்கு எதிராக உண்மையைக் கண்டறிந்து அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே இங்கு, அத்தகைய காவாலித்தனங்களை முன்னின்று செய்கிறது அந்தக் கேவலத்தை எங்கு போய்ச் சொல்ல?. நாளை இது போன்ற நிகழ்வில் நீங்கள் கைது செய்யப்பட்டால், அந்தக் கிராமவாசி கேட்ட அதே கேள்வியையே உங்களிடம் கேட்கிறேன், யார் வருவார் உங்களைக் காப்பற்ற?

- ப.நற்றமிழன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

நன்றி: தெகல்கா வார இதழ்
Pin It

ஞாநி குமுதம் இதழில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து இந்திய திரைப்பட அகாடமி  விருதுகள் (IIFA - 2010) விழாவைப் புறக்கணித்து இருப்பதை தவறு என 'ஒ' பக்கங்களில் கண்டித்து இருக்கிறார். கமலஹாசன் முதல் இராமநாராயணன் வரையான படைப்பாளிகள் இலங்கை IIFA - 2010ஐப் புறக்கணித்து இருப்பது மிரட்டல் அரசியலுக்குப் பயந்துதான் என திசை திருப்புகிறார்.

இலங்கை IIFA-2010 ல் தாங்களும் கலந்து கொள்வதில்லை, மற்ற நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு கலந்து கொண்டால் அவர்களின் படங்களை தென் இந்தியாவில் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற முடிவை கீழ்கண்ட, தமிழகத்தைச் சேர்ந்த மற்றும் தென்னிந்திய திரைப்பட சங்கங்களும் இணைந்து கூட்டறிக்கை விடுத்தன.
 
gnaniதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாடல் சங்கம்
 
இத்தனை சங்கங்களையும் மிரட்டி அடி பணிய வைக்குமளவு பலம் கொண்ட கட்சி தமிழகத்தில் இல்லை என்பது ஞாநி அவர்களுக்குத் தெரியும். ஆளும்தரப்பு இதனை செய்திருக்கும் என்ற சந்தேகம் ஞாநிக்கு வந்திருக்காது என்று நம்புவோம். அப்படி எதாவது கட்சிகள் முயன்றிருந்தால் குறிப்பிட்ட சங்கங்களிடமிருந்து சிறு சலசலப்பாவது எழுந்திருக்கும்.
 
உண்மையில் ஈழத் தமிழனின் உரிமைக்கான போராட்டம் எந்தத் தீர்வையும் பெற்றுத் தராமல் படுகொலைகளுடனும், சிறைபிடிப்புகளுடனும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்ற வலி  ஞாநி போன்ற மேல்தட்டு பத்திரிகையாளர்களையும், சில அரசியல்வாதிகளையும் தவிர்த்து எல்லாருக்குமே இருக்கிறது.
 
அதனால் தான் IIFA- 2010 ல் கலந்து கொள்வதற்கான அழைப்பை தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினர் தாங்களாகவே புறக்கணித்து இருந்தனர். ஞாநியை போன்ற, ஈழப் பிரச்னையில் தவறான கருத்துடைய பத்திரிகையாளர்களாலும், ஆங்கில செய்தி ஊடகங்களில் ஈழம் பற்றிய இருட்டடிப்பு செய்திகளாலும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழும் கொடூரங்கள் வட இந்திய திரைத்துறையையும், மக்களையும் சென்றடையவில்லை.
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கூறி IIFA -2010ல் கலந்து கொள்ளும் இந்தித் திரையுலக பிரபலங்களைக் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டு இங்கிருக்கும் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கூட்டறிக்கை என்பவற்றுடன், தனிநபர்களும் திரைத்துறையினர் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் பலனாகத் தான் IIFA -2010ல் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளாமல் பொலிவிழந்தது.
 
மற்றபடி எல்லாக் காலங்களிலும் கலைஞர்களும், படைப்பாளிகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தங்களது தார்மீகக் கடமைகளை உணர்ந்து குரல் கொடுத்தே வந்துள்ளனர். என்ன காரணத்தினால் ஞாநி மறந்து போனார் என்று தெரியவில்லை.

அடுத்து 'ஓராண்டுக்கு முன் ஏராளமான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு இராஜபக்ஷே அரசு, புலிகள் அமைப்பு இருவரின் தவறான அரசியலுமே காரணம் என்பதை மனசாட்சியுடன் சிந்திக்கும் எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள்' என்று எழுதியுள்ளார். அவர்களின் தவறான அரசியல் மட்டுமா காரணம்?
ஞானியின் மனசாட்சி எப்பொழுதுமே அவரைக் கேள்வி கேட்காது போலும். சிங்கள அரசு பயங்கரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி ஈழத்திலிருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெளியேற்றி சாட்சியங்களில்லாமல், எந்தவித போர்நெறிகளையும் பின்பற்றாமல் 3.5  லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் குறைத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாகக் கூறி 18 மாதங்களுக்கு மேலாக உணவு, மருந்துப் பொருட்களைத் தடை செய்து மருத்துவமனைகள், மக்கள் வாழும் பாதுகாப்பு வலயம் மீது குண்டு போட்டு, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள், போராளிகள் என சகட்டுமேனிக்குப் பாவித்து, இவ்வாறு ஒரு அரசு தனது உள்நாட்டுப் போரை முடிக்க முடியும் என்பது, இந்த நுற்றாண்டின் எவ்வளவு பெரிய கேவலம்.
 
புலிகள் இயக்கம் எவ்வளவு முற்றுமுழுதான பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களே மக்களை பலவந்தமாக  சிறைபிடித்து இருந்தாலும், அந்த மக்களை மீட்கவே இந்தப் போரை நடத்துகிறோம் என சிங்கள அரசு சொன்னாலும், குறைந்தபட்சம் ஒரு தற்காலிக போர் நிறுத்தமாவ‌து ஏற்படுத்தி போர்க்களத்திலிருந்து பொதுமக்களையாவது  சர்வதேச சமூகம் அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
 
அந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிர்சேதத்திற்கும், அங்கஹீனத்திற்கும், மனச்சிதைவுக்கும், பறிக்கப்பட்ட வாழ்வுக்கும் எதுவுமே செய்ய முடியாத சர்வதேசமும், ஐநாவும், கள்ள மௌனம் சாதித்த இந்தியாவும், நாடகதாரிகளாய் மாறிப்போன அரசியல்வாதிகளை நம்பி, ஒற்றுமையாய்ப் போராடாமல் போன நாங்களும், இத்தகைய அறிவியல் யுகத்திலும் சர்வதேசத்திலிருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவு, மருந்து மறுக்கப்பட்டு பதுங்கு குழிக்குள் துரத்தப்பட்ட ஈழ மக்களுக்காக உண்மையை எழுதாத நீங்களும் என நீளும் பட்டியலில் எல்லோரும் குற்றவாளிகள்தான், ஆனால் அதனை அறிய ஞாநியின் மனசாட்சி சுத்தமாக சிந்திக்க வேண்டும்
 
அடுத்து இந்தக் கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழித்து இப்போது கொழும்பில் இந்திய திரைப்பட விழா நடத்தக்கூடாது என்று கோரிக்கை எழுப்புவது அர்த்தமற்றது என்று எழுதியுள்ளார்.  இலங்கையின் எந்தக் கொடூரங்களும் முடிந்துவிடவில்லை ஞாநி அவர்களே! ஈழ மக்களின் அரசியல் அபிலாஷை எதுவும் நிறைவேறவில்லை. அந்த மக்கள் உரிமை கேட்டதாலே சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழ்கின்றனர். இன்று இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு தெற்கு பிரதேசங்கள் இராணுவ சிறைகளாகவும், அகதி முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. எந்த நேரமும் யாரையும் ராணுவம் கைது செய்து, சித்ரவதை செய்யலாம், காணாமல் போகச் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. அங்கு வாழும் எல்லா தமிழனையும் சிங்களத் துப்பாக்கி சந்தேகக் கண்கொண்டு  கண்காணித்தபடியே உள்ளது.

இப்பொழுதும் அகதிமுகாம்களில் உள்ள மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திக்க முடியாதபடி உள்ளது. கைது செய்யப்பட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளை ஓராண்டு ஆன பின்னரும் செஞ்சுலுவைச் சங்கங்களே சந்திக்க முடியாதபடி நிலைமை உள்ளது.

போரின் போதும், போரின் பின்னும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டி மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு  அத்தாட்சியாக தொடர்ந்து அவர்கள் புகைப்படங்களையும், காணொளிகளையும்  வெளியிடுகின்றனர். நடந்த போரில் ஐ.நா.வின் செயலற்ற தன்மையைக் கண்டித்திருப்பதோடு, இதற்கு இலங்கை தண்டிக்கப்படவில்லை என்றால் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்க ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என தொடர்ச்சியாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்துகின்றன. இதிலிருந்து நீண்ட காலம் தப்பிக்க முடியாது.

இவ்வளவு போர்க்குற்றங்களையும் புரிந்த இராஜபக்ஷே நீங்கள் கூறும் அந்த சாதாரண சிங்களர்களின் வாக்குகளால் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து, தமிழின சுத்திகரிப்பையும், தமிழர்களின் நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார். எனவே ஈழ மக்களுக்கான உரிமை கிடைக்கும் வரை இலங்கையை தனிமைப்படுத்தும் போராட்டம்  தொடரும்.

இனவெறி அரசை தனிமைப்படுத்த இதுபோன்ற முறையைப் பயன்படுத்துவது புதிதல்ல. இனவெறி தென் ஆப்பிரிக்க அரசை வழிக்குக் கொண்டு வர கிரிக்கெட்டில் இருந்து அந்த அணியை விளக்கி வைத்ததும் உதவியது.

மற்றபடி ஈழ தமிழினத்தைத் தேவையில்லாமல் சிங்கள இனத்துடன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள் . இவ்வளவு பெரிய இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர் ஆட்சியில் எல்லா குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால் ஈழ உரிமைப் போராட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விலை கொடுத்துள்ளது. எனவே சுதந்திரத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுவதை விட ஒரு சிறந்த வாழ்க்கை இருக்க முடியாது என்பதை ஏற்றுகொள்வீர்கள் என நம்புகிறோம்.

சிங்கள அரசு தனது போர்க் குற்றத்தை மறைத்து, தமிழர்க்கு எந்த உரிமையும் தராமல்  இழுத்தடித்துக்கொண்டு இருப்பதைத் தடுக்கவே, இது போன்ற புறக்கணிப்புகள். ௦தனிப்பட்ட சிங்களர்கள் மேல் வெறுப்பில்லை. இங்கு நடிக்கின்ற சிங்கள நடிகைகளோ அல்லது தொழில் செய்யும் தனி நபர்களோ எங்களது இலக்கல்ல. உண்மையில் விடுதலைப் புலிகளும் சாதாரண சிங்கள மக்கள் தங்கள் இலக்கல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் நான்காம் கட்ட ஈழப் போரில் சர்வதேச அனுமதியுடன் வகைதொகையின்றி ஈழ மக்களை சிங்கள அரசு கொன்றொழித்த போதும், விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை தாக்கவில்லை. மற்றபடி ஒவ்வொரு இனத்திற்கும் சில பெருமைகள் உண்டு. அந்த வகையில் சிங்கள இனத்திற்கு உள்ள பெருமைகளையும் ஏற்று கொள்கிறோம்.

இப்பொழுதும் நேர்மையான, துணிச்சலான பத்திரிக்கையாளர் என்றால் சிங்களப் பத்திரிகையாளர் லசந்த பெயர் தான் நினைவுக்கு வருகிறது. உங்களைப் போன்றவர்களை நினைத்தால் எரிச்சல்தான் வருகிறது. என்ன செய்ய?

 - வெ.தனஞ்செயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

"முதலாளி தன் லாபத்தில் தொழிலாளிக்குப் பங்கு கொடுக்கத் தேவையில்லை, ஆனால் தொழிலாளி எப்பொழுதும் தன்னை தன்னுள் இழந்துகொண்டிருக்கிறான்" என்றார் கார்ல் மார்க்ஸ். ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் முதலாலிகளுக்காக ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில், ஏழைகளின் நிலை மார்க்ஸ் கண்ட தொழிலாளர் வர்க்கங்களைவிட மோசமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் இங்குள்ள ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுகிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியில் தன்னையிழக்கும் ஏழைகள், தங்கள் நாட்டின் வளர்ச்சியால் தாங்கள் உயரவில்லை என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதுதான் சாபக்கேடு. மார்க்ஸ் சொன்னதுபோல் "தொழிலாளர்கள் புரட்சியாளனாக இருக்க வேண்டும், இல்லையேல் இல்லாமல் போகவேண்டும்".

தன் நாட்டு பத்திரிக்கையாளன் தாலிபன்களால் கடத்தப்பட்டதற்காக பல மில்லியன் டாலர் செலவுசெய்கிறது அமெரிக்க அரசு. இந்தியாவோ, அமெரிக்கக் கம்பெனியால் கொல்ல‌ப்பட்ட 15 ஆயிரம் மனித உயிர்களுக்காக நீதியையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. போபாலில் 1984, டிசம்பர் 2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு இன்டியா லிமிட்ட‌ட் கம்பெனியிலிருந்து கசிந்த மீத்தைல் ஐசோ சயனேட் நச்சினால் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 15 ஆயிரம் உயிர்கள் காற்றில் கரைந்து போயின. இந்த வழக்கில் 26 ஆண்டிற்குப் பிறகு தீர்ப்பளித்த போபால் நீதிமன்றம் எட்டு நபர்களுக்கு மட்டுமே இரண்டு ஆண்டு சிறைதண்டனை கொடுத்துவிட்டு, அவர்களையும் அன்று மாலையே பிணையில் வெளியிட்டுவிட்ட அநீதி உலகில் வேறு எங்கும் நிகழாத மாபெரும் மனித உரிமை மீறல். இதுபோன்ற பேரழிவிற்குப் பிறகும், மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மானியத்தோடு அனுமதியளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்திய அரசு ஏழை எளிய மக்களைத் தன்னுடைய குடிமக்களாக ஒருபோதும் கருதியது இல்லை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறேது?

உணவு, உறைவிடம், உடை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி என மனிதனுக்குரிய எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்ய விரும்பாத நாடாக இந்தியா இன்றும் இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்பும் கூட குடிநீருக்காகவும், மருத்துவமனைக்காகவும் இந்திய மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இந் நிலையில் அணுஆயுத வல்ல‌ரசு என்று தன்னை வெட்கப்படாமல் அறிவித்துக்கொள்கிறது இந்தியா. ஏழை, எளிய மக்களை ஒரு பொருளாகக் காட்டி உலக வங்கியில் குறைந்த வட்டியில் அதிக அளவு கடன் பெற்று, இந்த நாட்டின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை முதலாளிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்கிறதே தவிர, ஏழ்மையைப் போக்க, பட்டினி சாவைக் குறைக்க எந்த நடவடிக்கையும் தீவிரமாக இங்கு மேற்கொள்ளவில்லை.

கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு விமான விபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 158 பயணிகள் உயிரிழந்தார்கள். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட‌ துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதே மாநிலத்தில் அடுத்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பேருந்தில் பயணித்த 30 பயணிக‌ள் கொல்ல‌ப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் மரணத்திற்கு மாநில அரசு ரூ 2 லட்சம் மட்டுமே இழப்பீடாக அறிவித்தது. இதாவது பரவாயில்லை சாதிய வன்கொடுமையில் உயிரிழந்தவர்களுக்கு வெறும் 1.5 லட்சம் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்படுகிறது. அதுவும் அந்தப் படுகொலைக்கு முறையாக வழக்கு பதிவு செய்தபின்புதான் இந்த இழப்பீட்டைக் கூட கொடுக்க அரசு சம்மதிக்கிறது. என்ன ஓரு பாகுபாடு பாருங்கள்! தன் குடிமக்களின் மரணத்தில் கூட ஏழை, பணக்காரன் என தரம் பிரித்து இழப்பீடு வழங்கும் இந்த அரசை மக்கள் அரசு எனறால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? மக்கள் அனைவரும் சமம், அவர்களுடைய ஒவ்வொரு வாக்கும் சம மதிப்புடையது என்ற மக்களாட்சி தத்துவத்தையே மழுங்கடிக்கும் இந்த தேசத்தின் அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்கள், பெரு முதலாளிகளைவிடக் கொடுமையானவர்கள்.

இயற்கை பேரிடர்களான வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றில் உயிரிழந்தவர்கள் மற்றும் உடமையிழந்தவர்களுக்கு எந்த ஒரு குறிபிட்ட தொகையையுமே இழப்பீடாக "பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005" இல் மத்திய அரசு நிர்ண‌யிக்கவில்லை. மாறாக உடனடி நிவாரண‌மாக சில ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத ஆளும் கட்சிக்காரர்களுக்கு மாநில அரசு கொடுத்தபின்பு, பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு செய்தபின்பே மத்திய அரசு நிவாரண‌த் தொகை அனுப்புகிறது. அப்படி தரும் நிவாரண‌ம் கூட முழுமையாக மக்களுக்குக் கிடைப்பதில்லை. 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டுகள் முடிந்தபின்பும் வீடுகள் கட்டித்தரப்படாத அவல நிலை நீடிப்பதைக் காணமுடிகிறது.

நிவாரண‌ம் வழங்குவதில் தமிழக அரசு யாருக்கும் குறைவைப்பதில்லை. எல்.சி.டி டிவி வைத்திருப்பவனுக்குக் கூட இலவச டிவி கொடுப்பதுபோல், வெள்ளம் வந்துவிட்டால் மூன்றாவது மாடியில் குடியிருப்போர்களுக்கும் கூட இரண்டாயிரம் ரூபாய் நிவாரண‌த் தொகை கிடைக்கிறது. வாக்கிற்கு ஐநூறு என்ற கணக்கு போலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண‌ம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது, உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? அதுமட்டுமல்லாமல் குடிசையை இழந்து தவிப்பவன் இரண்டாயிரம் ரூபாயில் மச்சிவீடா கட்டமுடியும்?சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டிசேலை தருவ‌தாகச் சொல்லி பலபேர் நெரிசலில் சிக்கி இறந்த கதையும் உண்டு.

இவைமட்டுமின்றி மரணங்கள் பல்வேறுவகையில் நம் மக்களைத் தழுவுகிறது. சிறைச்சாலைகள் மற்றும் போலிஸ் கஸ்ட‌டியில் ஆண்டிற்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சாலை விபத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரும் உயிரிழப்பதாக மனித உரிமை ஆர்வல‌ர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் விபத்தில் ஆண்டிற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ மானுட உயிர்கள் சாலையில் மடிந்துபோகின்றன. இதைத்தவிர‌ இரயில் விபத்து, விமான விபத்து, குடும்ப வன்முறை, சாதி மத மோதல், கடத்தல் மற்றும் காணாமல் போதல், எல்லைப் பிரச்சனை, வெடிகுண்டு, இயற்கை மற்றும் செயற்கை பேரிடர், காலரா, காசநோய், பட்டினிச் சாவு, சிசுக் கொலை, பிர‌சவ இறப்பு, உயிர்க்கொல்லி மற்றும் தொற்று நோய்கள் என ஆண்டிற்கு பல லட்சம் உயிர்களை நம் அரசு கவன‌க்குறைவு மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் பலிகொடுக்கிறது. வன விலங்குகளைக் கூட மின்வேலி அமைத்துப் பாதுகாக்கும் அரசு, மனிதர்களை மரணத்திலிருந்து பாதுகாக்க ஏன் தயங்குகிறது? முறையான போக்குவரத்து விதி, சாலை பராமரிப்பு, வாகன தணிக்கை, கட்டாய தலைக்கவசம், சாலையோர மருத்துவமனை மற்றும் சாலை விபத்துகள் பற்றிய விழிப்புண‌ர்வு போன்ற செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டாலே ஆண்டிற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களையாவது சாலை விபத்திலிருந்து காக்க முடியும்.

இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பின்மை மட்டுமல்ல, சாதி மாதங்கள் கடந்து ஏழை எளியமக்கள் ஒன்று படாதது, மேலும் நாட்டின் 60 சதவிகித வருமானத்தை ஈட்டித்தரும் சுமார் 93 சதமுள்ள முறைசார தொழிலார்களின் நலன் புறக்கணிப்பு, அரசியல் மற்றும் அதிகார வர்க்க தலையீடு, முறையற்ற நிதி மற்றும் நீதி நிர்வாகம், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை, சாதி மத மற்றும் தீண்டாமை பிரச்சனை என காரணம் நீண்டுகொன்டே போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போண்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு இலவச ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா குறைந்த அளவு சமூக பாதுகாப்பையாவது தன் குடிமக்களுக்கு கொடுக்க முன்வரவேண்டும். ஒரு முழுநேர அரசு ஊழியருக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் 12 ஆயிரம் கொடுக்கும் அரசு, வயதுவந்தோர்க்கு ஓய்வூதியமாக மாதம் ஐநூறு மட்டுமே அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

இந்திய ஜனநாயகம் சாதி மத சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏழைகள் மீண்டும் மீண்டும் கூறுபோடப்பட்டு முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே பாடுபடும்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் பணிக்கப்படுகிறார்கள். "சமூக விடுதலையை நீங்கள் வென்றெடுக்காத வரையில், சட்டம் அளித்த விடுதலை உங்களுக்குப் பயன்படப் போவதில்லை" என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நமக்குப் பொருந்துவதாக உள்ளது. சட்ட திட்டங்களால் உயராத நம் வாழ்க்கை, சகோதரத்துவத்தால் உயரும் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்? கைவிரலில் மை வைக்க காத்துக் கிடக்கும் கூட்டமாக நாம் இருக்கும் வரை, முதலாளிகளை மட்டுமே ஈன்றெடுக்கும் இந்திய ஜனநாயகம் என்பதை நம் புரிந்துகொண்டால் ம்ட்டுமே மக்களுக்கு சேவைசெய்யும் மக்களாட்சி மலரும். இல்லையேல் இந்திய மக்களாட்சி எப்பொழுதும் போல் முதலாளிகளாலே வழிநடத்தப்படும்.

- ப.அப்ரகாம் லிங்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

நமது மத்திய இந்தியாவில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்டுகளின் இயக்கம் அரச படைகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகிறது. பாரத பிரதமர் மன்மோகன் சிங் ‘மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்’ என்று வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகள் என்று மாவோயிஸ்டுகளை அழைத்து வந்த ஆங்கில காட்சி ஊடகங்கள் கடந்த ஓராண்டில் சிகப்பு பயங்கரவாதிகள் என்று பெயர் மாற்றி அழைக்கத் துவங்கி விட்டன. CNN IBN ஆங்கிலத் தொலைக்காட்சி நக்சல் என்ற ஆங்கில எழுத்தில் வரும் ஓ என்ற சொல்லை பெரியதாகக் காட்டி அது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை வெளிப்படுத்தி வருகிறது.

adivasi_womenமாவோயிஸ்டுகளின் வன்முறைத் தாக்குதல்கள் நிகழும் சமயம் இந்தக் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் நாடகபாணி பின் இசைகளுடன் செய்திகளை பரபரப்பாக்கி வெளியிடுவதும், விவாதம் நடத்துவதும் நடக்கிறது. இவ்விவாதங்களில் மனித உரிமை ஆர்வலர் ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களை நீங்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளரா என்ற வகையில் கேள்விகளைக் கேட்பதும், ஆனால் கேள்விக்கு மனித உரிமையாளர்கள் பதில் தரும்போது அதனை முழுதும் உள்வாங்காது அலட்சியப்படுத்துவதுமான போக்குகளும் தொடர்கின்றன. மாவோயிஸ்டுகள் காவல்படைகளுடன் மோதிய அன்னைத்து நிகழ்வுகளுக்குப் பின்னும் இவ்வூடகங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதப் பொருளாகி வந்துள்ளனர். 

கடந்த 07.04.2010-ம் தேதி மாவோயிஸ்டுகள் 76 சி.ஆர்.பி.எப். படையினரை கொன்ற நிகழ்வு, பேருந்து கண்ணி வெடியில் சிக்கிக்கொண்ட நிகழ்வு, இரயில் கவிழ்ப்பு - இவைகளுக்குப் பின் நாள்கணக்கில் நாடக பாணியில் ஒரு சேர ஆங்கில தொலைக்காட்சிகள் மனித உரிமையாளர்களைத் திட்டித் தீர்ப்பதைக் காண முடிந்தது. சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கள் தலையங்கங்களில் மனித உரிமையாளர்களுக்கு இனி நல்ல பிள்ளைகளாக நடக்கச் சொல்லி அறிவுரை கூறின. புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், வங்க எழுத்தாளர் மகேஸ்வதா தேவி போன்றோர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று இவைகள் முத்திரை குத்தி விட்டன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்களை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக மிரட்டி வருகின்றார். இதன் எதிர்வினையாக மகேஸ்வதாதேவி தன்னை கைது செய்வது பற்றி கவலைப்படவில்லை என்றும், அதற்கு முன் தனக்கு நக்சல்பாரி தொடர்பு உள்ளதை ப.சிதம்பரம் நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விட்டார்.

கடந்த 2010 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கொல்லப்பட்ட அன்று Times Now தொலைக்காட்சி திரைப்படக் கலைஞர் அபர்ணா சென்னிடம் பேட்டி கண்டது. அப்பேட்டியில் அவர் இந்த வன்முறைக்கு அரசுதான் காரணம், இவ்வாறு நிகழக்கூடாது என்பதால் தான் தாங்கள் ‘பச்சை வேட்டை’ கூடாது என்று பேசி வந்ததாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அத்தொலைக்காட்சி ‘துரோகி’ என்று தலைப்பும் கொடுத்தது. யார் தேசபக்தன், யார் துரோகி என்பதை - ஒரு மனிதனின் அரசியல் நேர்மையை - கண நேரத்தில் முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்ற அதிகார மையங்களாக இத்தொலைக் காட்சிகள் உருவாகி விட்டது ஆச்சரியமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. 

வணிகப்போட்டி சூழலில் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்திகளை முந்தித் தருவதிலும் அதன் மூலம் தங்களின் TRP என்ற இலாப வணிகத்தை உயர்த்தவும் தொடர்ந்து பரபரப்பான செய்திகளுக்குப் பின்னே இவை ஓடிக்கொண்டே உள்ளன. கொலைகள், பாலியல் வன்முறை உள்ளிட்ட பலவற்றை நாள் கணக்கில் ஒளிபரப்பி பார்வையாளர்களை திகிலடைய வைப்பதுண்டு. பிரபஞ்சம் பிறப்பு குறித்த “பெரும் வெடிப்பு” சோதனை நிகழ்வை இத்தொலைக்காட்சிகள் கண்டு கொள்ளாத சூழலில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அச்செய்தியை வெளியிட இந்த கூட்டு ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் பின் இந்த நிகழ்வு பற்றி இத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. ஆனால் இதே ஊடகங்கள் டெல்லியில் 14 வயது சிறுமி அனுர்சி கொலை செய்யப்பட்ட செய்தியையும், அதில் அப்பெண்ணின் தந்தை டாக்டர்.தல்வார் என்பவர் காரணமாக உள்ளதாகவும் தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு புலனாய்வுத் துறையை நிர்ப்பந்தப்படுத்தியது. வேறு வழியின்றி அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். கைதான நபர் அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பின்னர் நடந்தது. இதுபோன்ற பரபரப்பான செய்திக் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட‌, அறிவியல் அற்புதமான பெருவெடிப்பு போன்ற நிகழ்வுகளுக்குத் தரவில்லை. 

மாவோயிஸ்ட் பிரச்சனையில் 2010 மே 17-ம் தேதி NDTV தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு பெரிய அளவில் அதிகாரம் தேவை என்றும் வான்படைத் தாக்குதலுக்கு ஆதரவு தேவை என்றும் மாநில முதலமைச்சர்கள் இதனை விரும்புவதாகவும் கேட்டுக் கொண்டார். மென்மையாகவும், நயமாகவும் உள்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டும் அதே தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்தான் மனித உரிமை ஆர்வலர்கள் பழங்குடி மக்களுக்காகப் பரிந்து பேசும்போது மாவோயிஸ்டு ஆதரவாளர்களா என்று கேட்டவர்கள். உண்மையில் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 2004 வரை வேதாந்தா குழுமம் என்ற பகாசுர பன்னாட்டு கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். அதற்காக வருடத்திற்கு 70,000 டாலர் சம்பளம் பெற்று வந்தார். (1) கம்பெனி பழங்குடி மக்களின் நிலங்களை சட்ட விரோதமாக அபகரித்ததற்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கும் பல சான்றுகள் உள்ளன. 2003-ம் ஆண்டு இந்த நிறுவனம் சுங்க வரி மோசடி செய்ததற்கு நடவடிக்கை எடுப்பதிலிருந்து தடுக்க ப.சிதம்பரம் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்றுத் தந்தார். அவர் நிதியமைச்சர் ஆன பின்பும் சுங்கவரி பாக்கியை வசூ்லிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சட்ட விரோதமாக அரசாங்கப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டும் உள்ளது என பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் ப.சிதம்பரத்தைப் பார்த்து ஒரு நேர்மையான ஊடகம் அது குறித்தான கேள்விகளை கேட்டிருக்க முடியும். ஆனால் இவை அதுபற்றி கேட்டு ப.சிதம்பரத்தை சங்கடப்படுத்தத் தயாராக இல்லை.

 அமெரிக்காவில் 1946 ஆம் ஆண்டு ஜோசப் ஆர்.மெக்கார்தே என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு விஸ்கான்சின் பகுதி நீதிபதியாக பணிபுரிந்தவர். 1950 வரை இவரைப் பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் 1950-ல் இவர் தன் அதிரடியான பேச்சுக்களால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்க அரசின் துறைகளில் 205 கம்யூனிஸ்டுகள் ஊடுருவி விட்டதாகவும் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். இப்பரபரப்பில் 1952-ல் மீண்டும் இவர் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் செனட்டர்களின் புலனாய்வு கமிட்டிக்கு இவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த அதிகாரத்தை வைத்து இரண்டு ஆண்டுகளில் தான் சந்தேகப்படும் பலர் மீது கம்யூனிஸ்ட் என்ற குற்றச்சாட்டை சுமத்தி பணிநீக்கமும் செய்தார். தனது ஆதரவாளர்களுக்கு தன்னை தேசபக்தனாகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதனாகவும் காட்டிக் கொண்ட மெர்கார்த்தேயின் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான புளுகு மூட்டை என்பதும் மெக்கார்த்தே ஒரு தேர்ந்த புளுகினி என்பதையும் 1954-ல் அறிந்த அமெரிக்கா, சிவில் உரிமைகளை மறுத்த மெக்கார்த்தேயின் செயல்பாடுகளுக்காக அவரை கைது செய்தது. அப்பட்டமான புளுகுகளை அவிழ்த்து விடுவதும் தன்னுடன் சேராதவர்கள் எதிரியின் ஆட்கள் என சவடால் விடுவதையும் மெக்கார்த்தேயிசம் என்று அழைக்கப்படுகிறது. 

ப.சிதம்பரம் மனித உரிமை ஆர்வலர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா என்று கேட்பதும், தொலைக்காட்சிகள் ‘எங்கே போனார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்’ என்று கேலி செய்வதும் இந்த மெக்கார்த்தேயிசம் தான். மெக்கார்த்தேயிசம் பாசிச சிந்தனைப் போக்கின் இணைபிரியாத சக்தியாக இருந்து வந்திருக்கிறது. முன்பு அமெரிக்கா இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11, 2001-ன் போது அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் சொன்னார் ‘நீங்கள் எங்களோடா அல்லது எதிரிகளோடா?’ என்று. பாரதீய ஜனதாக் கட்சி பொடா சட்டத்தைக் கொண்டு வந்த விவாதத்தின்போது எல்.கே.அத்வானி சொன்னார் “பயங்கவாத தடுப்புச் சட்டமான பொடாவை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்” என்று. 

 கடந்த 2010 பிப்ரவரி 18-ல் டெல்லி தீன் வடிகால் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் கோபன் காந்தி என்பவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப் பத்திரிக்கையில் அரச வன்முறையை விமர்சனம் செய்த PUCL உள்ளிட்ட சில மனித உரிமை இயக்கங்கள் மாவோயிஸ்ட் அமைப்பின் வெகுஜன அமைப்புகள் என்று முத்திரை குத்தப்பட்டது. இந்திய உளவுத்துறை மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவு இயக்கங்கள் என்று PUCL உள்ளிட்ட 57 இயக்கங்களின் பெயர்களை வெளியிட்டு அவைகளைக் கண்காணிக்கும் வேலையும் செய்து வருகிறது. 

 கடந்த 2007 மே-17ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநிலத்தின் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) செயலரான டாக்டர்.பினாயக் சென் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என முத்திரை குத்தி கைது செய்யப்பட்டார். அரசின் மெக்கார்த்தேயிச பிரச்சாரத்தால் உச்ச நீதிமன்றத்தில் கூட பிணை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கடும் சிறைவாசத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. நாடு முழுவதும் பல மனித உரிமை ஆர்வலர்கள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சத்தீஸ்கரில் ஆவணப்பட தயாரிப்பாளர் டி.ஜே.அஜ‌ய் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 2010 பிப்ரவரியில் PUCL உத்திரபிரதேச மாநிலச் செயலாளர் திருமதி. சீமா ஆசாத் என்பவர் டெல்லி புத்தக கண்காட்சிக்குச் சென்று திரும்பும் வழியில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி அவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். இவர் தன் பத்திரிக்கையில் பழங்குடிகளுக்கு எதிரான அரச வன்முறையை விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சத்தீஸ்கரில் வனவாசி சேட்னா ஆசிரமம் என்ற காந்தி வழி ஆசிரமத்தை நடத்தி வருபவர் ஹிம்மன்ஸ் குமார் என்ற PUCL அமைப்பைச் சார்ந்தவர். இவரது ஆசிரமம் சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையாலும் அரசப் படைகளாலும் உடைத்து எறியப்பட்டது. ஹிம்மன்ஸ் குமார் அரச வன்முறையைக் கண்டித்து மனித உரிமைகளுக்காகப் பேசி வந்தார் என்பதே அந்த காந்தியவாதி செய்த பிழை. 

சில மாநிலங்களிலிருந்த நக்சல்பாரி இயக்கச் செயல்பாடு இன்று 250 மாவட்டங்கள், 23 மாநிலங்கள் என்று விரிவடைந்ததற்கு காரணங்களைத் தேட வேண்டியது அவசியமானது. நமது அரசியலமைப்பின் முகப்புரை இந்தியா ஒரு ஜனநாயக சோசலிச நாடு என்று பறை சாற்றுகிறது. நமது அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை மாநிலங்கள், அரசுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சொல்கிறது. இயற்கை வளங்கள் பொது சமூகப் பயன்பாட்டிற்கு என்றும், ஏழைகள், பணக்காரன் என்ற பாகுபாடு சமூகத்தில் மறைய வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நமது அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை பழங்குடி மக்களின் நிலங்களை அம்மக்களின் கவுன்சில் அனுமதியின்றி பிற கம்பெனிகளோ, நபர்களோ அபகரிப்பதைத் தடை செய்கிறது. மேலும் 2005-ம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய வன உரிமைச் சட்டம் பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கும் சட்ட வழி வகைகளைக் கொண்டுள்ளது. 

இவ்வகையான பல்வேறு சட்ட பாதுகாப்புகளும் அதனை அரணாக நின்று காக்க நீதிமன்ற அமைப்புகளும் இருக்கும் சூழலில் ஏன் நக்சல்பாரிகளின் மாவோயிசம் வளர்கிறது? ஏனெனில் நமது அரசியலமைப்பின் உரிமைகளையும், நமது ஜனநாயக உயிர்ப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் நமது ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், செல்வந்தர்களின் கூட்டு செல்லரிக்கச் செய்து வீழ்த்தி தோல்வி பெறச் செய்த இடத்திலிருந்தே மாவோயிஸ்டுகளுக்கான சிந்தனையும், ஆதரவும் வேர் விடுகின்றது. உலக மயமாக்கல் என்ற பொருளாதார வன்முறை ஏழை, எளிய பழங்குடி மக்களின் மீது திணிக்கப்பட்ட சமயம் நமது பாராளுமன்றங்கள், நிர்வாகத்துறை, நீதித்துறையின் செயல்பாடுகள் முழுவதும் ஜனநாயக சோசலிசம் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறி முதலாளித்துவ சேவை என்ற நிலைக்கு சென்று விட்டது. மத்திய இந்தியாவில் பழங்குடிகளை ஆயுதம் தூக்கச் செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கை விட ஜனநாயகத்தை தடம் புரளச் செய்த நமது ஆட்சியாளர்களின் பங்கே அதிகம். 

 சத்தீஸ்கர் மாநிலத்தில் 28 வகை பெரும் கனிமங்கள் கிடைக்கின்றன. இரும்புத்தாது இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இது உள்ளது. பாக்சைட், டால்மியம் உள்ளிட்ட பல கனிமங்கள் இங்கு உள்ளது. இப்பூமியில் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் நிலச் சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் இப்பகுதியில் முன்பு மேற்கொள்ளப்பட்ட நில ஆர்ஜித முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதையும் எனவே கனிம வளங்களை எடுக்க வேறு முயற்சி அரசுக்கு தேவைப்பட்டதையும் சுட்டிக் காட்டியது. (2) எனவே ‘அமைதி இயக்கம்’ என்ற சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியது அரசு. இப்படைகளுக்கு இரும்பு கம்பெனிகளான டாடாவும், எஸ்ஸாரும் பெரும் தொகை கொடுத்து உதவி வருகின்றன‌. இக்கூலிப் படைகள் அரச படைகளுடன் சேர்ந்து மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களை பழங்குடி மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டனர். கொலைகள்? பாலியல் வன்முறை? சித்திரவதை என அது நீண்டது. அதன் விளைவாக சத்தீஸ்கர் மாநில தண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 664 கிராமங்களை முற்றிலும் கைவிட்டு பழங்குடி மக்கள் பக்கத்திலுள்ள மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திரா காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். காலியான இப்பகுதிகளை சுரங்க நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளதாக அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. (2) 

 சத்தீஸ்கரில் உள்ள கனிமங்களை இரயில் மூலம் கொண்டு செல்வதற்கு அதிகப் பணம் செலவாகிறது என்பதற்காக குழாய்கள் மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்பெனிக்கு நேரிடையாக கொண்டு செல்ல எஸ்ஸார் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கு எதிராக 25 மீட்டர் அகலத்தில் 267 கிலோ மீட்டர் குழாய்கள் சத்தீஸ்கரிலிருந்து விசாகப்பட்டினம் வரை கட்டப்பட்டது. இதில் இரும்பு தாதுக்களுடன் தண்ணீர் கலந்து அனுப்பப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 2.5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.(3) எனவே எஸ்ஸார் கம்பெனிக்காக சபரி ஆற்றின் பெரும்பகுதி திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று சத்தீஸ்கரில் ஓடும் முக்கிய நதிகளான கேலு, குர்குட், கருணா, சியோநாத், மானத் போன்ற ஆறுகளும் தனியார் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராய்க்கர் என்ற ஊரின் வழியாக சென்ற கேலு நதி ஜிண்டால் இரும்பு மற்றும் மின்சார நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டாகி விட்டது. தினமும் 35,400 கியூபிக் மீட்டர் தண்ணீரை இந்த ஆலைகள் தாங்கள் கட்டியுள்ள தனியார் அணைகள் மூலம் எடுத்துக் கொள்கின்றன.(4) ஆக பழங்குடிகள், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான‌ தண்ணீர் பயன்பாட்டு உரிமையை முற்றிலும் இழந்து விட்டனர். 

 tribes_331நமது வளர்ச்சித் திட்டங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பொது நலனைப் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் உருவாக்கப்பட்டவை. இதனால் உலகில் வேறு எங்கும் நிகழாத ஒரு பெரும் சோகம் இங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட எளிய மக்களின் எண்ணிக்கை 6 கோடியாகும். இதில் பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களை அடிமை வியாபாரத்திற்கு உட்படுத்தியதால் 200 ஆண்டு சோக நிகழ்வில் இடம் பெயர்ந்த கருப்பின மக்களின் எண்ணிக்கையே 5 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.(5) இவ்வாறு சொந்த நாட்டில் அகதிகளாக ‘வளர்ச்சிக்காக’ இடம் பெயரச் செய்யப்பட்ட இம்மக்களுக்கு அரசின் மறு வாழ்வு என்பதும் வெறும் கான‌ல் நீரே. ஆக மலைகளிலும், வனங்களிலுமிருந்து இம்மக்கள் விரட்டப்படுவது குறித்துப் பேசுபவர்கள், அரசின் பொருளாதார வன் செயல்களையும், அரச வன்முறைகளையும் விமர்சிப்பவர்கள் காட்சி ஊடகங்கள் மற்றும் இதர அரசின் ஊதுகுழல்களில் முக்கிய இலக்காக குறி வைத்து தாக்கப்படுகின்றனர். 

 இந்தியாவில் உள்ள பெரும்பாலான அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) தவிர பழங்குடி மக்கள் மீதான அரச வன்முறையை ஆதரிக்கின்றன. மாவோயிஸ்ட் பிரச்சனையில் பாரதீய ஜனதா கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. கனிம வளங்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அனுமதிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பின் ஆட்சியாளர்களுக்கு வரும் பெரும் இலாபம் பற்றி விரிவாக விவாதிக்கத் தேவையில்லை. சமீபத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் கணக்கில் வராத சொத்து மதிப்பு மட்டும் ரூ.4000 கோடிக்கு மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு, ஜனநாயகம் என எல்லா வகைக் கூறுகளையும் தூக்கி எறிந்து விட்ட இக்கொடிய பொருளாதார வன்முறையையும், அதைப் பாதுகாக்கும் அரச வன்முறையையும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரிப்பது வெட்கக்கேடானது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பெருத்த பின்னடைவும் கூட. 

 இச்சூழலில் மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் மட்டுமே ஒற்றைக் குரல்களாக இக்கொடுமைகளுக்கு எதிராக ஒலிக்கின்றன‌. எனவே மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), அருந்ததிராய், அபர்ணாசென், மகேஸ்வதாதேவி மற்றும் பிற மெல்லிய எதிர்ப்புக் குரல்களை நசுக்கிவிடத் துடிக்கிறது அரச வன்முறை. தாக்குதலை நியாயப்படுத்த தாக்குவதற்கு முன் வெறிபிடித்து விட்டது என்ற கதையாடல்கள் பரப்ப ஆதாய செய்திகளை (Paid News) வெளியிடும் ஊடகங்கள் தேவைப்படுகிறது. இவ்வூடகங்களின் கருத்துருவாக்கம் போலீஸ் மனநிலையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. அது சமூகத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பயங்கரவாத இயக்கத் தொடர்பு, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், வன்முறையாளர்கள் என மெக்கார்தேயிசத்தை வெளிப்படுத்துகிறது. 

 அரச வன்முறைக்கு எதிராக ஜனநாயகக் கடமையாற்றுவது என்பதை பல்வேறு சூழல்களில் உயிருக்கும், வாழ்க்கைக்கும் அஞ்ச வேண்டிய நிலைக்கு அரச வன்முறை தள்ளுகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்களும், ஜனநாயக சக்திகளும் அரச வன்முறைக்கு மிக எளிய இலக்காக மாற்றப்படுகின்றனர். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, கொலை என பல்வேறு இழப்புகளைக் கொடுத்து ஜனநாயகத்திற்காக நாடு முழுவதும் மக்கள் ஆதரவு சக்திகள் போராடி வரும் நிலை உள்ளது. மனித உரிமை சக்திகளின் செயல்பாடு வெளிப்படையானது, ஜனநாயகப் பூர்வமானது, சட்ட ரீதியானது. மேலும் சமூக அமைதியை மையமாகக் கொண்டது. சட்டத்தை மதிக்கும் அறப்பண்புள்ள யாரும் இவர்களை விரோதிகளாகப் பார்க்க முடியாது. PUCL தேசிய‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர் சின்கா கூறிய‌தைப் போல‌, ம‌னித‌ உரிமை செயல்பாட்டாள‌ர்க‌ள் பணி ஒரு ம‌ருத்துவரின் பணி போல‌த்தான். எந்தவொரு கொடிய குற்றவாளிக்கும் மருத்துவ உரிமையை மறுப்பது கூடாது என்பதைப் போலத்தான், அவருக்கான மனித உரிமைகளை மறுப்பதும். 

 நீங்கள் யார் பக்கம் என்ற கேள்விக்கு, நாங்கள் வறுமையில் வாடும் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்படும் ஆதரவற்ற அந்த மக்களின் பக்கம். நாங்கள் அவர்கள் பக்கம் நிற்பது போல மாவோயிஸ்டுகள் பல சமயங்களில் நிற்கிறார்கள். அதற்காக மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. உண்மையில் ஏழைகளைப் புறக்கணிக்கும் இந்த அரசும் சொந்த மக்களின் மீது பச்சை வேட்டை என்ற பெயரில் விமானப்படை தாக்குதலுக்குத் தயாராகி வரும் அரச பயங்கரவாதம், வன்முறைகளுக்கெல்லாம் தலையானதாகவும், வரலாற்று பிழையாகவும் இருக்கப் போகிறது. 'நீங்கள் யார் பக்கம்? மாவோயிஸ்ட் பக்கமா? அரசு பக்கமா?' என்ற தொலைக்காட்சி வர்ணணையாளர் கேள்விக்கு நாம் வைக்கும் எதிர்க் கேள்வி 'ஊடகங்களே! நீங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் பக்கமா? இந்திய ஏழைப் பழங்குடி மக்களின் பக்கமா? இந்நாட்டில் ஏழை, எளிய பழங்குடி மக்கள் மனித கண்ணியத்தோடு வாழும் உரிமை அவர்களுக்கு உள்ளதா, இல்லையா? சொந்த மக்களைக் கொன்றொழிக்க போர்ப் பிரகடனம் அறிவிக்க இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச சிறுதார்மீக உரிமையாவது உள்ளதா?' 

குறிப்புகள்:

(1) Vedanta’s Billions by Rohit Poddar.

(2) Committee on State Agrarian Relations and Unfinished Task of Land Reforms. Volume I, draft report pg 161. Ministry of    Rural Development, Government of India.

(3)  http://radicalnotes.com, 28 August 2009.

(4)  Deccan chronicle Newspaper 09.04.2010, Page-8.

(5)  The Third position Non-alignment with violence by Sudhir Vombakere.

- ச.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(கட்டுரையாளர் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு புதுவை மாநிலங்களின் பொதுச் செயலாளர்)

Pin It

உட்பிரிவுகள்