உலக உணவு நெருக்கடி, விலை உயர்வு பின்னணியில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு அவசரமான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்திய அரசு சுற்றுக்குவிட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டம் அப்படியே நிறைவேறினால் அது உணவு பாதுகாப்பு சட்டம் என்பதைவிட உணவு பறிப்புச் சட்டமாகத்தான் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை காணுமுன் சாமானியன் நிலை என்ன என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் உணவின் அளவு 1950-55ல் ஆண்டுக்கு 152 கிலோவாக இருந்தது. இது 1989-92-ல் 177 கிலோவாக உயர்ந்தது. நகர்புறத்தில் 155 கிலோவாகவும், கிராமபுறத்தில் 151 கிலோவாகவும் உள்ளது. இது அனைவருக்கும் சமமாக கிடைத்துவிடும் என்று நினைத்திடவேண்டாம். இது சராசரி அளவாகும்.

கிராமப்புற, நகர்ப்புற மக்களின் சராசரி உணவின் அளவு இக்காலத்தில் குறைந்து கொண்டு வருகிறது. கிராமப்புறத்தில் 1993-94ல் 2153 கலோரியும் 60.2கிராம் புரதசத்தும் கிடைத்தது. இது 2004-05ல் 2047 கலோரியும், 57 கிராம் புரதசத்துமாக குறைந்துவிட்டது. இதே நிலைதான் சிறிது மாறுபாட்டுடன் நகர்ப்புறத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் 30 சதவீத குடும்பங்கள் 1700 கலோரிக்குக் குறைவாகவே உண்ணுகின்றனர். இது சர்வதேச குறைந்தபட்ச அளவான 2100 கலோரி என்பதைவிட குறைவானது. வளர்ச்சியடைந்ததாகக் கூறப்படும் தமிழக கிராமப்புறங்களில் 1842 கலோரியும், கர்நாடகத்தில் 1845 கலோரியும், குஜராத்தில் 1923 கலோரியும் கிடைக்கிறது. இது பீஹாரின் 2049, உ.பி.யில் 2200 கலோரியைவிடக் குறைவானது என்பது அதிர்ச்சிதரும் உண்மைகளாகும்.

உலகின் பட்டினி பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது. பஞ்சாபில் பட்டினி புள்ளி 13.6 என்றால் இது மத்தியப்பிரதேசத்தில் 30.9 புள்ளிகளாக உள்ளது. மத்தியப்பிரதேசம், பீஹார், ஜார்கண்ட் மாநிலங்கள் பட்டினியில் ஜிம்பாப்வே, ஹெய்டியைவிட கீழே உள்ளது. இந்தியாவில் 3 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளில் 47 சதம் எடை குறைவாக உள்ளனர். 46 சதம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள். 80 சதவீதம் குழந்தைகளும், பெண்களும் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிகள் அனைத்தும் இந்தியா கட்டமைப்பு சீரமைப்புக் கொள்கையை கடைபிடித்ததன் பாதிப்புகள்தான் என்பதை இன்னும் உணரவில்லை.

உணவு தானிய இருப்பைக்கூட உபரி இருப்பாக மத்திய அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2002-03ல் கடுமையான வறட்சி, வேலையின்மை பெருகியது. வாங்கும் சக்தி குறைந்ததால் 6.4 கோடி டன் தானியங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்தது. இக்காலத்தில்தான் பிஜேபி அரசு 2 கோடி 20 லட்சம் டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்தது. தற்போது உள்ள சேமிப்பும் உபரி அல்ல. வாங்க வழியற்ற மக்கள் பட்டினியால் இருப்பதாலும், பொதுவிநியோக முறையை வெட்டி சுருக்கியதாலும் கிடங்குகளில் உள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்து உணவு பாதுகாப்பை நடுவண் அரசு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் உணவு உற்பத்தியை பெருக்குவது எளிதான் விஷயம்தான் . உடனடி நெருக்கடிக்குக் காரணம் இந்தியா மற்ற அனைத்து நாடுகளையும்விட பட்டினிச்சாவு, வறுமை, சத்துக்குறைவு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

“பட்டினி அல்லது பஞ்சம் என்ற அச்சுறுத்தலில் மக்கள் வாழவேண்டிய அவசியம் இருக்காது”என்பதுதான் உணவு பாதுகாப்பின் சுருக்கமான வரையறை, ஐக்கிய நாடுகள் சபை இதை “அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு விரும்பும் வகையில், பாதுகாப்பான முறையில் சத்துநிறைந்த, சுறுசுறுப்பும், நலமும் நிறைந்த வாழ்வு நடத்த தேவையான உணவை அளிப்பதுதான் உணவு பாதுகாப்பாகும்” என்று விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசு தானாக முன்வந்து உணவு பாதுகாப்பிற்கு துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

1948ம் ஆண்டு சர்வதேச மனித உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பிறகு 1976 முதல் குடிமை, அரசியல் உரிமைகள் பற்றியும், சர்வதேச பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள், மற்றும் பெண்கள், குழந்தைகள், அகதிகள் உடல் ஊனமுற்றவர்கள் என்று பல பகுதி மக்களின் உரிமைகள் பற்றிய மாநாடுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 1996ம் ஆண்டு ரோம் நகரில் ஐ.நா.வின் சார்பில் “உலக உணவு மாநாடு” நடைபெற்று உணவு பாதுகாப்பு அளிப்பதின் அவசியம் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே காலத்தில் தென் ஆப்பிரிக்கா, நிகரகுவா, பெரு, உகாண்டா, மெக்சிகோ நாடுகளில் உணவு பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெலாரஸ், மால்டோவா ஆகிய நாடுகளில் உணவு பாதுகாப்பை அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. ஊட்டச்சத்து வாழ்க்கை தரத்தையும் சட்டமாக்கின. இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் இந்திய அரசு துளியும் அசையவில்லை, அப்பாவி மக்களை பற்றி கவலைப்படவில்லை.

ஜனநாயகசக்திகளும், இடதுசாரிகளும் தெருவில் இறங்கி உணவு பாதுகாப்பிற்காக போராடினர். சில தன்னார்வ குழுக்கள் சர்வதேச தீர்மானங்களை சுட்டிக்காட்டி உணவு பாதுகாப்பிற்காக பல வழக்குகளை தொடுத்தன. 2001ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஒரு தன்னார்வக் குழு கடும் வறட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேமிப்பு கிடங்கில் (6.4கோடி டன்) உள்ள உணவை விநியோகிக்கக்கோரி வழக்கு தொடுத்தது. இதையேற்று உச்சநீதிமன்றம் பட்டினிச்சாவை தடுக்க கிடங்கில் உள்ள உணவை விநியோகிக்க உத்தரவிட்டது. இந்தக் காலத்தில்தான் அதுவரை இல்லாத அளவு 2.2 கோடி டன் உணவை பிஜேபி அரசு ஏற்றமதி செய்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மற்றொரு அமைப்பான பியுசிஎல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள “வாழ்வதற்கான உரிமை” என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வதும் என்பதுதான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். மத்திய அரசின் தற்போதைய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் இந்த அளவுகோல் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. நடுவண் அரசு தற்போதைய சட்டத்தில் 5 கோடியே 91 லட்சம் குடும்பங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மானியத்தில் உணவு வழங்கப்படும். இதில் பரமஏழைகளான அந்தோதயா அன்ன போஜனாவில் உள்ள 2.05கோடி குடும்பங்களும் அடங்கும் என்று அறிவித்துள்ளது, ஏற்கனவே இந்த அந்தோதயா அன்னதான திட்டத்தில் உள்ளவர்கள் மாதம் 35 கிலோ உணவு தானியங்களை ரூ.2/- விலைக்கு பெறுகின்றனர். தற்போது இச்சட்டத்தில் இவர்கள் அனைவருக்கும் மாதம் 25 கிலோ உணவுதானியங்களை ரூ.3/- விலைக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை வெட்டிச்சுருக்குவது மட்டுமல்ல, அளவையும் குறைத்து விலையையும் ஏற்றுவது “ஒரே கல்லில் மூன்று மாங்காய்” என்பதுபோல் உள்ளது.

நடுவண் அரசு ஏற்கனவே, 6 கோடியே 52 லட்சம் குடும்பங்களுக்கு உணவுதானிய ஒதுக்கீடு செய்துவருகிறது. மாநில அரசுகள் 10 கோடியே 68 லட்சம் குடும்ப அட்டைகளை வழங்கி உள்ளன. இதையும் இச்சட்ட வரைவு கவனத்தில் எடுக்கவில்லை. வறுமைக்கோடு என்பதை கிராமப்புறத்தில் ஒரு நபருக்கு ஒருநாள் வருமானம் 11.80ம் நகர்புறத்தில் ரூ.17.80 என்றும் அளவிட்டுள்ளனர். இதுவும் 1983ம்ஆண்டு விலைவாசி அடிப்படையில் என்று மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த கணக்கின்படியே கூட நடுவண் அரசு உண்மையான விபரங்களை சேகரிக்கவில்லை. நடுவண் அரசு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 28 சதம் என்றும் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 40 சதம் என்றும் ஊரக வளர்ச்சித்துறை 50 சதம் என்றும் பேரா.அர்ஜீன்சென் குப்தா குழு 77 சதம் என்றும் அறிவித்துள்ளது. இவை நான்குமே மத்திய அரசின் நிறுவனங்கள்தான்.

வறுமைக்கோடு அளவீடான 11.80 மற்றும் 17.80 என்ற வருவாய் உணவுக்காக மட்டும் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்திய குடிமக்களுக்கு உடை, இருப்பிடம் தேவையில்லையா? என்று கேட்டால் இவை அனைத்தும் அரசியல் சட்டத்தில் உரிமைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதைக் கூறுகின்றனர். அதாவது ஏட்டுச் சுரைக்காயை சமைத்து சாப்பிட வேண்டும் என்று மன்மோகன் சிங் வகையறாக்கள் வாதிடுகின்றனர். எனவே இந்த உணவு பாதுகாப்பு வரைவுச் சட்டத்தில் வறுமைக்கோடு தொடர்பாக சமீபத்திய நிலைமைகளுடன் விஞ்ஞானப் பூர்வமான வகையில் முடிவெடுத்து இணைக்கப்படவேண்டும். இரண்டாவதாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும். எனவே உணவு பாதுகாப்பு வரையறைக்குள் இவர்களையும் கொண்டுவந்திட வேண்டும்.

கேரளாவில் அனைத்து பழங்குடி, தாழ்த்தப்பட்டவர்கள், மீனவர் சமுதாயம் முழுவதும் அமைப்புசாரா தொழில் செய்வோர் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என கணக்கிட்டு உணவுதானியங்கள் வழங்கப்படுகிறது. இதே போன்று சத்தீஷ்கரில் அனைத்து பூர்வகுடி மக்களும் (70 சதம்) வறுமைக்கோட்டிற்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுபோன்று விரிவான வரையறை அவசியமானது. மூன்றாவதாக, வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ள மக்கள் எப்போதும் அதே நிலையிலேயே இருப்பது இல்லை. வறட்சி, வெள்ளம், விலையேற்றத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாய் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பாதுகாப்பாக விரிவான முறையில் பொதுவிநியோக முறையைக் கொண்டு வரவேண்டும். பொதுவிநியோக முறையின் நோக்கமே வெளிச்சந்தை விலையை கட்டுக்குள் வைப்பதுதான். ஆனால் தற்போது பொதுவிநியோகமுறை கடையில் உள்ள விலைகளுக்கும் வெளிச்சந்தை விலைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு நீடிக்கிறது. இதில் அடிப்படையான மாற்றங்கள் காணவேண்டும்.

நான்காவதாக, பொது விநியோக முறையை அனைவருக்குமான பொதுவிநியோக முறையாக மாற்றினால் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் கைவிடப்படுவதை தடுத்திடவேண்டும். தற்போது நடுவண் அரசு 2009-2010ல் நிதிநிலை அறிக்கையில் பொதுவிநியோக முறைக்கு 52,484 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் ரூ.70,000-ம் கோடி ஒதுக்கினால் அனைவருக்குமான பொது விநியோக முறையை அமுலாக்கலாம். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே. இதே காலத்தில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 4 லட்சம் கோடி வரை நடுவண் அரசு சலுகை வழங்குவதும், அம்பானிக்கு கடந்த 6 மாதத்தில் 45000 கோடி சலுகை வழங்குவதும் சாத்தியமாகிறபோது, பட்டினியைத் தடுக்க ரூ.70000 கோடி சாத்தியமே, ஆனால் இதைத்தடுப்பது எது? மத்திய அரசின் வர்க்க கொள்கைதான். இந்த பொதுவிநியோக முறையைப் பலப்படுத்தினால், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் இந்திய நிலபிரபுக்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் லாபவேட்டை சுருங்கும். அதனாலேயே சாத்தியமான நிதியாக இருந்தும்கூட ஒதுக்க மறுக்கிறது.

ஐந்தாவதாக, இந்தியாவில் உணவிற்காக பல திட்டங்கள் உள்ளன. மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுதிட்டம் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட திட்டங்களை மேலும் பலப்படுத்தி உணவு பாதுகாப்பை விரைவாக அமல்படுத்திட வேண்டும். ஆறாவதாக உணவு பாதுகாப்பு பெற்றிட மூன்று முக்கிய அம்சங்கள் தேவை, 1) உற்பத்தி பெருகி உணவு தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும் 2.உணவு தானியங்களை வாங்கும் சக்தி மக்களிடம் இருக்கவேண்டும் 3. உண்டு பயனைடையும் ஆரோக்கியமான உடல்நலம் இருக்கவேண்டும்.

உணவு உற்பத்தியை பெருக்கிட நடுவண் அரசு விவசாயம் மற்றும் ஆராய்ச்சிக்கான பொதுமுதலீட்டை அதிகப்படுத்திட வேண்டும். பொது முதலீட்டை குறைக்கிறபோது மிகமோசமான உற்பத்திமுறை அதிகரிக்கிறது. பீஹாரில் தற்போது ஒரு ஹெக்டேருக்கு 1287 கிலோவும், மேற்கு வங்கத்தில் 2509 கிலோவும், பஞ்சாபில் 4.6 டன்னும் விளைகிறது. சீனாவில் இதுவே 6 முதல் 7 டன் உற்பத்தி ஆகிறது. மோசமான உற்பத்தி பெருகுவதற்கு இது போன்ற பல உண்மைகளைக் காணலாம். எனவே நடுவண் அரசு பொது முதலீட்டை அதிகப்படுத்துவது, விளைபொருட்களை கொள்முதல் செய்வது, இடுபொருட்களை மானிய விலையில் வழங்குவது, விளைநிலங்களை பாதுகாப்பது, கூட்டுறவு கடன்வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். அதே நேரத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீது உள்ள முன்பேர ஊக வாணிபத்தை தடைசெய்வது உணவு பாதுகாப்பின் அடிப்டைத் தேவையாகும். எனவே உணவுக்கான உரிமை, உணவு பாதுகாப்பு என்பதை இன்றைய அரசு உறுதியாக அமுலாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போது உருவாக்கி உள்ள வரைவு சட்டமும் வறியவர்களைக் காத்திட உதவாது, மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கி ஒரு விரிவான உணவு பாதுகாப்புத்திட்டத்தை உருவாக்கிடவேண்டும். நடுவண் அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றிடவும், உறுதியாக அமுலாக்கிடவும் இந்தியாவின் பெருந்திரள் மக்கள் எழுச்சி பெற்று நிர்பந்தம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவே, நாங்கள் சாகவோ என்ற நிலைமாற்றிட வழிகாணவேண்டும்.

உதவிய கட்டுரைகள்

1. The world food crisis Historical Perspective- PhilipMemichael

2. Orgins of the food crisis in India and Developing  countries–Utsav Patnaik

3. Food Wars – Waldan Bello and Mara Baviera

4. Reducing Energy Inputs in the Agricultural Production System-David Pinental

5. Last Opportunity in Bihar – EPW – Nov.21

6. Agriculture and Food in crisis-Fred Magdoff and Brian Tobar

7. Free Trade in Agriculture – Sophia Murphy

- ஏ.பாக்கியம்
Pin It