இந்நோய் பொதுவாக கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்குத்தான் அதிக அளவில் ஏற்படுகிறது. காரணம், சமூகம் இவர்களை ஒரு கட்டத்தில் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. பின் திடீரென்று இவர்களின் புகழ் அதல பாதாளத்திற்குச் சரிகிறது. இதனால் மனம் பலவீனமாய் உள்ள ஒரு சிலருக்கு இந்நோய் எளிதில் ஏற்படுகிறது. மன உணர்ச்சிகள் இரு துருவங்கள் போன்றது மகிழ்ச்சியும், சோகமும் ஆகும். இவை இரண்டும் சில சமயங்களில் சிலரிடம் மிகையாக வெளிப்படலாம். அதற்காக, நாம் அவர்களை நோயாளிகளாகக் கருதுவதில்லை. நோய் என்பது அதே உணர்வு நிலை அதீத அளவிலும், தொடர்ந்தும் நீடிப்பதாலும், அதன் காரணமாய் மனிதர்களின் செயல்திறன், சிந்தனை முறை, நடத்தைகள் ஆகியயாவும் சீர்குலைந்து, வாழ்க்கை தன் சீரான பாதையி லிருந்து விலகுவது தான் இயல்பான உணர்ச்சி நிலை அதன் தருணத்தை மீறி நீடிப்பதைத் தான் மருத்துவத்துறை நோய் என்கிறது. எப்போதாவது மிகையாகச் செயல் படுவது என்பது மனித இயல்பு. ஆனால் தொடர்ந்து மிகையாக நடந்து கொள்வது என்பது மனப்பிறழ்வு நோயாகும்.

இந்நோயாளர்களுக்கு ஏற்படும் மன உணர்ச்சிகளின் கொந்தளிப்பினால் சிறிது காலம் அதீத மகிழ்ச்சியில், அதாவது அதீத உற்சாகத்தில் திளைக்கின்றனர். பின் இதற்கு நேர் எதிரான அதீத சோகத்தில், அதாவது அதீத வீழ்ச்சியால் சில காலம் வாடுகிறார்கள். இரு நேர் எதிர் மன உணர்வுகளான சந்தோஷமும், துக்கமும் சில காலங்கள் மாறி மாறி பாதிப்பதே இரு துருவ மனநோயாகும் (Bipolar Illness). இந்நோயை அதி உற்சாக, அதி வீழ்ச்சி நோய் (Manic Depressive Disorder) என்றும் வேறு பெயரில் அழைப்பார்கள்.

இந்நோயும் ஒருவகை உணர்ச்சிப் பிறழ்வு நோய் தான்! (Mood Affective Disorder). இந்நோயில் அதீத மகிழ்ச்சியும் (Mania), அதீத சோகமும் (Depression) மாறி மாறி ஏற்படும். ஆனால் ஒரு நிலை இருக்கும் சமயத்தில், அடுத்த நிலை ஏற்படாது. இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் நோயாளர்கள், நோயற்று நல்ல நிலையில் இருப்பார்கள். இவ்விடைவெளி மிகக் குறுகியோ அல்லது நீண்ட காலத்துக்கோ நோயின் தீவிரத்தைப் பொருத்து அமையும்.

இந்நோயாளர்களிடம் காணப்படும் சில நோய் அறிகுறிகள் :

1.     தூக்கமின்மை

2.     அழுத்தமான தத்துவம் கலந்த பேச்சுகள்

3.     அதீத காம உணர்வுகள்

4.     விளைவைப் பற்றி யோசிக்காத கருத்து வெளிப்பாடுகள்

5.     அட்டகாசமான உரையாடல்கள்

6.     அதீத உற்சாக நிலை மற்றும் அதீத சோக நிலை, இதற்கு இடையே இயல்பான மன நிலை

சிந்தசிஸ் ஹோமியோபதி மருந்துகாண் பேரேட்டில் உள்ள இந்நோய்க்கான குறிமொழிகளாவன (Rubrics) : MANIA alternating with DEPRESSION, EUPHORIA - alternating – SADNESS, EXCITEMENT - alternating - SADNESS.

 இக்குறிமொழிகளுக்கான மருந்துகள் :

அனகார்டியம், அர்ஜெண்டம் மெட்டா லிகம், ஆரம் மெட்டாலிகம், பெல்லடோனா, கன்னபிஸ் இன்டிகா, கார்சினோசின், காஃபியா குரூடா, கோனியம், சைடிசஸ் லெபூர்ணம், ஹயாசியாமஸ், கிரியோசோட்டம், லாக்கசிஸ், லில்லியம் டிக்ரினம், லித்தியம் கார்பானிகம், லித்தியம் மெட்டாலிகம், மெடோரினம், நேட்ரம் சல்பியூரிகம், பாஸ்பரஸ், பிக்ரிக் ஆசிட், சோரினம், ஸ்டாபிசக்ரியா, ஸ்ட்ரெமோனியம், சல்பனில மைட், டியூபர் குலினம், வனாடியம் மற்றும் வெராட்ரம் ஆல்பம்.

-உ. அறவாழி

Pin It