கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சி முத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும் போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது. நடைப்பயிற்சியின் போது நானும் அப்படியாக உணர்ந்திருக்கிறேன். கால்களால் சிந்திப்பது என்பது உயர்வானது என்று தோன்றியது. காரணம் கால்கள் பூமியோடு நேரடியாக தொடர்பு கொண்டவை. உடலின் மற்ற உறுப்புகள் மண்ணை தொடுவதேயில்லை. நாமாக விரும்பி பூமியை ஸ்பரிசத்தால் கூட அவை கால்களை போல மண்ணோடு ஸ்நேகம் கொள்வதில்லை.

குழந்தைகள் முதலடி எடுத்து வைக்கும் போது அதன் கைகள் காற்றை பற்றிக் கொண்டு நடக்க எத்தனிக்கும் தன் கால்க ளால் நடந்து பழகியதும் குழந்தை அந்த சுகத்திற்காகவே அங்குமிங்கும் ஓடியோடி நடக்கும். உறக்கத்தில் கூட குழந்தையின் கால்கள் அசைந்து கொண்டிருப்பது இதனால் தானோ என்னவோ படியில் ஏறுவது, குதிப்பது, ஓடுவது, சுற்றியலைவது என்று சிறுவயதில் கால்கள் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருந்தன.

பள்ளிவயது தான் கால்களை கட்டிப்போட துவங்குகிறது. வகுப்பறை பெஞ்சுகள், பாடம் வீடு என்று ஒடுங்க துவங்கியதும் விளையாட்டு மைதானம் தவிர வேறு எப்போதும் கால்கள் ஓய்விலே இருக்கின்றன. கால்களை கைகளால் தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா. ஒருமுறை குளிக்கும்போது கால்களை சோப்பு நுரையால் கழுவி துடைத்துவிட்டு ஏதோ அரிய பொருளை காண்பதை போல பார்த்து கொண்டேயிருந்தேன். கச்சிதமான பாதவடிவம். சிறிய விரல்கள். அதன் உறுதியான நகங்கள். கால்கள் விசித்திரமானவை. அதை நாம் அதிகம் கவனிப்பதோ, அக்கறை கொள்வதோயில்லை.

நடத்தல் என்பது வேண்டா வெறுப்புடன் செய்யப்படும் ஒரு உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. நிற்பதற்கோ, நடப்பதற்கோ கால்களை பயன்படுத்துவது மிகவும் குறைந்து போய்விட்டது. கால்கள் பெரும்பாலும் ஓய்விலே இருக்கின்றன. கால்களின் ஓய்வு தான் மனச் சோர் வின் முதல்படி என்கிறார்கள். ஓடியாடி நடந்து அலையும் கால்கள் மனிதனை உத்வேகம் கொள்ள செய்வதுடன் உலகை புதிதாக அறிந்து கொள் கின்றன. நடத்தல் என்பது வெறும் உடற்பயிற்சி யில்லை. அது ஒரு கலை.

பாதயாத்திரை போவது என்பது புனித பயணமாக கருதப்படுகிறது. இன்றும் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து போய்க் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த பயணத்தில் ஆன்மீகத்தை விடவும் அவர்கள் தொடர்ந்து நாட்கணக்கில் நடக்கிறார்கள் என்பதே மிக முக்கியமான அனுபவம். அது அவர்களின் நம்பிக்கையை மனஉறுதியை அதிகப்படுத்தி விடுகிறது.

வீடே உலகம் என்றிருந்தவர்கள் ஆங்காங்கே தங்கி சாப்பிட்டு நடந்தே போய்வருவது என்பது தங்களை தானே புத்துணர்வு கொள்ள வைத்துக் கொள்ளும் ஒரு அனுபவம். அந்த நடையை நீண்ட நடை என்கிறார்கள். பண்டை காலங்களில் பெரும்பான்மை புனித பயணங்கள் இது போன்று மாதக்கணக்கில் நடந்து போய் வந்த நீண்ட நடைப்பயணங்களே. அதனால் தான் அதை பற்றி நினைவுகள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அழியாமல் இருந்தது. இன்று நாம் மேற்கொள்வது சிறுநடை. அவசரத்திற்காகவும், மருத்துவ காரணங்களுக்காகவும் உருவாக்கி கொண்டது.

புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரூ நடத்தல் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.  அந்த புத்தகம் ரஹப்ந்ண்ய்ஞ்.  ஏன் தனக்கு நடப்பதில் விருப்பம் உள்ளது. நடப்பது என்பது என்ன? எப்படி நடக்க வேண்டும் என்று துவங்கி தனது சுய அனுபவத்திலிருந்து அவர் விவரிக்கும் குறிப்பு களும் நிகழ்வுகளும் மிக சுவாரஸ்ய மானவை. காட்டின் உள்ளே தினமும் மூன்று மணி முதல் நான்கு மணி நேரம் நடக்க கூடியவர் தோரூ. அதுவும் தனியாக நடப்பது அவருக்கு பிடித்தமான ஒன்று.

சில வேளைகளில் யாராவது நடைத் தோழராக ஒருவர் சேர்வதுண்டு. நடையால் ஒன்று சேர்பவர்கள் ஒத்த மனதுடையவர்கள் என்று தோரூ பாராட்டுகிறார். இருவர் நடக்கும்போது ஏற்படும் லயம் வேறுபட்டது. அது தனியாக நடப்பதைவிட மாறுபட்ட அனுபவம் தரக்கூடியது என்கிறார். அதே வேளையில் இருவர் நடக்கும் போது ஒருவர் நடையை மற்றவர் ரகசியமாக அவதானிப்பதும் ஆதங்கபடுவதும் இயல்பாகவே நடக்கிறது என்கிறார்.

ஒவ்வொரு நாளும் தோரூ காலை மாலை இருவேளைகளிலும் நடக்கக்கூடியவர். மாலை மணி நான்கானதும் அவருக்குள் நடக்கவேண்டும் என்ற உற்சாகம் வந்துவிடும். உண்மையில் பின் மதிய வேளையின் போதே மாலை வரப்போகிறது என்பதன் அறிகுறிகள் துவங்கி விடுகின்றன. நான்கு மணியின் போதுள்ள பகல்வெளிச்சத் தினுள் மாலையின் மென்துகள்கள் அடர்ந்திருக்கின்றன.

காலை துவங்கி நான்குமணி வரை எப்படி மனிதர்கள் உட்கார்ந்தேயிருக்கிறார்கள். அந்த கால்களுக்கு தான் வேலையே கொடுக்கவில்லை என்று யோசிப்பதே கிடையாதா என்று தோரூ ஆதங்கப்படுகிறார். ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் நின்று கொண்டிருக்க கூடியவர்கள் சமையல் அறையில் ஒரு பெண் சராசரியாக நான்கு மணி நேரமாவது நிற்கிறாள். அது போலவே வீட்டுவேலைகள், பராமரிப்பு என்று கால்களை பெண்கள் சரியாக பயன்படுத்துகிறார்கள். ஆண்களின் கால்கள் வெறும் தாங்குகோல்கள் போன்று மட்டுமே பயன் படுகின்றன.

இந்திய சமூகம் கால்கள் தான் மனிதனின் ஆதாரம் என்பதை மிக துல்லியமாக புரிந்து கொண்டிருக்கிறது. கடவுளின் பாதங்கள் தான் வணங்கப்படுகின்றன. பெரிய மனிதர்களின் கால்களில் விழுந்து ஆசிவாங்குவதை பெருமையாக கருதுகிறார்கள். பாதங்கள் தனித்து வழிபடப்படுகின்றன. கால்கள் நடந்த தூரம் பற்றி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.

உடல் ஒரு அதிசயம். அது கால்களின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை என்கிறார் தோரூ. உட்கார்ந்து கொண்டேயிருப்பது தான் வயதாவதன் முதற்அறிகுறி. ஒரு மனிதன் தன் வயதை தாண்டி உற்சாகமும் உத்வேகமும் கொள்ளவேண்டுமானால் அதற்கான ஒரே வழி நடப்பது மட்டுமே. நடக்கும் வழியை கண்டு கொள்வதும் அன்றாடம் நடப்பதன் வழியே காற்றையும் மரங்களையும் பறவைகளின் ஒலியையும் வீழ்த்து கிடக்கும் இலைகளையும் உதிர்ந்து கிடக்கும் பறவையின் சிறகுகளையும் கண்டு கொள்ளலாம். நடத்தல் ஒரு கண்டுபிடிப்பு. எதை எப்போது கண்டுபிடிப்போம் என்று தெரியாது என்கிறார் தோரூ.

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

நடத்தலுக்கு ஏன் எப்போதுமே இயற்கை யான சூழல் தேவைப்படுகிறது. மரங்கள் அடர்ந்த பாதையில் அல்லது தனிமை நிரம்பிய சாலை களில் மட்டுமே ஏன் நடந்து போகவேண்டும். நடப்பதற்கு பிரதான சாலையோ அல்லது வணிக மையங்களையோ ஏன் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்விக்கு தோரூ சொல்லும் பதில் அற்புதமானது.

நாம் நடக்கும் போது நாம் தனியாகவும் நம் மனது தனியாகவும் இயங்க கூடாது. வணிகமையம் ஒன்றினுள் நடந்து சென்றால் அது உங்கள் ஆசைகள், செய்ய வேண்டிய வேலைகள், அடுத்த திட்டங்கள் என்று தூண்டிவிட்டு உங்கள் நடையை விட வேகமாக உங்கள் மனது அலைந்து கொண்டிருக்கும். அதே வேளையில் தனிமையான இயற்கையான சாலையில் நடக்கும்போது மனதில் தூய்மையான காற்றும் இயற்கையான காட்சிகளும் மட்டுமே நிரம்பும். அப்போது தான் கால்களும் மனதும் ஒன்றாக நடக்கும். அது தான் நடத்தலின் ஆனந்தம்.

நடையில் நல்ல நடை என்ற ஒன்று இருக்கிறது. அது நம்மை மீறி நாம் நடந்து செல்வது. சில நாட்கள் தான் அப்படி உணர்வதுண்டு என்று சொல்லும் தோரூ வருசக்கணக்கில் நடந்துநடந்து நடப்பதன் வழியே மட்டும் தான் உலகை புரிந்து கொள்ளமுடியும் என்றாகிவிட்டது. ஒவ்வொரு முறை நடக்கும் போது ஏதாவது ஒரு விசயம் வியப்படைய வைக்கிறது. அது ஏதாவது ஒன்றின் நிழலாக இருக்கலாம். அல்லது ஓசையாக இருக்கலாம். இரண்டுமில்லாமல் வெளிச்சமாகவோ நீரோட்ட மாகவோ கூட இருக்க கூடும். அதுபோன்ற தருணத்தில் மனம் கொள்ளும் களிப்பு வேறு எதிலும் கிடைக்காதது என்கிறார்.

அது நிஜம். ஒரு நாள் நடைபாதையோரம் உள்ள தந்திகம்பம் ஒன்றில் உட்கார்ந்திருந்த குருவியை தினமும் காணமுடிவதில்லை. ஆனால் அந்த நாளில் குருவி மட்டுமின்றி தந்தி கம்பமும் அதன் முணுமுணுப்பும் கூட நெருக்கமாக இருந்த சந்தோஷம் மறக்க கூடியதா என்ன?

தோருவிடம் ஒருநாளைக்கு எவ்வளவு தூரம் நடப்பீர்கள். எப்படி நடந்து போவீர்கள் என்று கேட்டதற்கு அவர் தான் தினமும் பத்து முதல் இருபது மைல் தூரம் நடக்க கூடியவர் என்றும், முதலில் ஆற்றின் ஓரமாக நடக்க துவங்கி பின்பு அங்கிருந்து விலகி மரங்கள் அடந்த சாலைக்கு வந்து பிறகு அதன் உள்ளாக மேடேறி அடிவானத்தை பார்த்தபடியே நடந்து தூரத்து கிராமத்தின் காட்சியை கண்டபடியே போய்வருவது தனது நடையின் இயல்பு.

ஊரை கடந்து செல்லும் சாலைகள், அதன் ஏகாந்தமான காற்று. பெயர் அறியாத சிறுசெடிகள். மாலை நேரத்து வெயில் யாவும் ஒன்று சேர்ந்து எங்கோ கனவில் நுழைந்து நடந்து கொண்டிருப்பது போலவே இருக்கும். நடை பயிற்சி நம்மை பயத்திலிருந்து வெளியேற்றுகிறது. உலகம் மீது நாம் காரணமின்றி கொண்டுள்ள அச்சத்தை அது விலக்கிவிடுகிறது. அதே நேரம் எல்லா விலங்குகளும் தன் இரைதேடி குடிநீர் தேடி அலைந்து கொண்டுதானிருக்கின்றன.  தானும் அப்படியான இயற்கையின் ஒரு பகுதியே என்று மனிதனை உணர வைக்கிறது.

புதிய பாதைகள் விட பழைய பாதைகளே நடப்பதற்கு பிடித்தமானதாக இருக்கின்றது. புதிய பாதைகள் பரபரப்பான இயக்கத்துடன் ஓடுகின்றன. பழைய பாதைகளோ கைவிடப்பட்ட மனிதனை போல கண்டுகொள்ளப்படாமல் ஒதுங்கியிருக்கின்றன. அப்பாதைக்கு யாரோ நடப்பது மட்டுமே ஒரே ஆறுதல் தரக்கூடிய செயல்பாடு.

ஜே.கிருஷ்ணமூர்த்தி தினசரி பலமைல் நடக்க கூடியவர். அவருடன் ஒரு நாள் துணையாக நடந்த பத்திரிக்கையாளர் அதை பற்றி எழுதிய குறிப்பு முக்கியமானது கிருஷ்ணமூர்த்தி சாலையில் நடக்கும் போது காற்றில் மிதந்து செல்வது போல லகுவாக நடக்கிறார். வழியில் யாராவது நிறுத்தி பேசினால் அவர் நின்று பேசுவதில்லை. கடந்து சென்றபடியே இருக்கிறார். தற்செயலாக ஏதாவது ஒரு மரத்தையோ, நாயையோ கண்டதும் அவரது முகம் மலர்ச்சி கொள்கிறது. அதை பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறார்.

சில வேளைகளில் அதை பார்த்து மிக நட்புணர்வோடு புன்னகை புரிவார். சாலை களோடு அவர் மௌனமாக எதையோ பேசிக்கொண்டு வருவது போலவே அவரது பார்வையிருக்கும். நீண்ட தூரம் நடந்து திரும்பிய போதும் அவரிடம் களைப்போ, அசதியோ காணப்படாது. மாறாக மிகுந்த புத்துணர்வும் சந்தோஷமும் முகத்தில் பீறிடும் என்கிறார்.

நடத்தலின் போது எதை உணர்ந்து கொண்டீர்கள் என்றதற்கு தோரூ சொன்ன பதில் ஆரம்ப நாட்களில் மட்டுமே நான் நடந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு இயற்கையின் விசை என்னை நடக்க வைக்கிறது. அது என்னை ஈர்க்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையில் எனது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அழைத்து கொண்டு போவது போல இயற்கை என்னை வசீகரமாக முன் அழைத்து போது போல உணர்கிறேன். அது தான் முற்றான உண்மையும் கூடஇயற்கை நம் உள்ளுணர்வின் வழியே நம்மை வழிநடத்துகிறது. அதன்படியே நாம் நடக்கிறோம்.

மாலை நேரம் மேற்கு திசையில் நடக்கும் போது எப்போதுமே சூரியன் மறைவும் தொலை வும் அடிவானத்தின் அழகும் வசீகரித்தபடியே இருக்கிறது. அதற்குள் கரைந்து விட வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியிருக்கிறது. புகை போல அந்த காட்சிகள் கண்முன்னே மறைந்து போய்விடுகின்றன. ஒரு நாளில் பகல் முடிவதை பார்ப்பது எவ்வளவு ஆனந்தமான விசயம். அது தன் நடை தரும் பரிசு.

-எஸ். ராமகிருஷ்ணன்

Pin It