வசந்தகாலமான பனிக்காலம் விடை பெற்று கோடைகாலம் வந்துவிட்டால் குழந்தை களுக்கு குதூகலம் தான். குழந்தைகளை கோடை வெயிலைவிட உக்கிரமாக வாட்டி வதக்கிய கல்விக்கூடங்களுக்கும், தேர்வுகளுக்கும் (தற்காலிக) முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் குழந்தைகளின் உள்ளங்களில் மகிழ்ச்சி பூக்கிறது. குழந்தை களோடு சேர்ந்து பெரியவர்களும் கோடையைக் கொண்டாட விரும்புகிறோம். நீச்சல்குளம், மலை பிரதேசம், அருவிகள் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்லுதல், உடலுக்கும் மனதுக்கும் உற்சாகமூட்டும் குளிர்ந்த உணவுகள், பானங்களை உண்ணுதல் என சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் கோடைகாலத்திற்கான புதிய திட்டங் களை வகுக்கிறார்கள்.
ஆயினும் கோடையும் கடும் உஷ்ணமும் பிரிக்கமுடியாதவை. அதே போல கோடையும் கடும் மின்வெட்டும் பிரிக்கமுடியாதவை. கோடையின் அதிக வெப்பமும், புழுக்கமும், வியர்வையும், கசகசப்பும் உடல் ஆற்றலை வற்றடிக்கும்; மோசமான விளைவுகளை உண்டாக்கும். குழந்தைகளும் முதியோரும் உஷ்ணத் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் பாதிக்கப் படுகிறார்கள்.
கடும் உஷ்ணத் தாக்குதலுக்கு காரணம் என்ன?
ஆண்டுக்காண்டு வெப்பத்தின் தாக்குதலும் இயற்கைச் சீற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் இயற்கைச் சமநிலைச் சீர்குலைவு. உலகமயக் கொள்கையும், ஓசோன் படல ஓட்டையும், காடுகள் அழிப்பும், நகரமய நெருக்கடியும், தொழில்மயமும் ‘சூழலை’ மாற்றியுள்ளது. இதனால் பருவங்கள் தவறுகின்றன. ‘பருவ மழை‘ என்பது இறந்த காலச் சொற்றொடர் ஆகிவிட்டது. இந்தியா கிராமங்களையும், விவசாயத்தையும் மையமாகக் கொண்ட நாடு. இப்போது விவசாய நிலங்களை பலிகொடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இதிலிருந்து மீள்வது மக்கள் சமுதாய விழிப்புணர்விலும் எழுச்சியிலும்தான் சாத்தியம்.
புற ஊதாக் கதிர்கள் :
சூரியக் கதிர்வீச்சு இரண்டுவித புற ஊதாக் கதிர்களை உமிழ்கிறது.
- UVA : தோலின் ஆழம் வரை ஊடுருவக் கூடியது; ஒவ்வாமையை உண்டாக்கும். இதன் பாதிப்பால் இளம் வயதிலேயே...தோல் சுருக்கங்கள், முதுமை தோற்றம் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன.
2. UVB : இக்கதிர்கள் தோலின் மேற்பகுதியை ஊடுருவுகின்றன. இதனால் நிறமிகள் பாதிக்கப்படுகின்றன.
UVA, UVB ஆகிய இரண்டு புற ஊதாக் கதிர்களும் மேகங்களை ஊடுருவக் கூடியவை. நீரின் மேற்பரப்பு, பனி, மணல் அனைத்திலும் பிரதிபலிக்கக் கூடியவை. அதிக உயரமான பகுதிகளில் இக்கதிர்களின் அடர்த்தி அதிகம் இருக்கும்.
வெயிலால், வெப்பத்தால் யார்யாருக்கு அதிக பாதிப்பு?
- 1. மென்மையான தோல் உடையவர்கள், குழந்தைகள், முதியவர்கள், அதிக பருமன் உள்ளவர்கள்.
2. தோல் நோய்கள், ஒவ்வாமை, சோரியாசிஸ், வெண்திட்டுகள் உள்ளவர்கள், தோல் புற்று உள்ளவர்கள்.
3. இயற்கையாகவே வெப்பமான உடல்வாகு உள்ளவர்கள்.
வெயிலால், வெப்பத்தால் ஏற்படும் பிரதானமான பிரச்சனைகள் என்ன?
1. செயலிழக்கச் செய்யும் வெப்பத் தளர்ச்சி
வெயிலின் ஆதிக்கத்தால் உடல் வெப்பம் சிலருக்கு 105 டிகிரி F, 106 டிகிரி F க்கு மேல் தாண்டிவிடும். உடலின் வெப்பம் வெளியேறாத நிலையில் ஏற்படும் மிகை சுரத்திற்கு HYPERPYREXIA எனப் பெயர். அப்போது உடலில் தளர்ச்சி, களைப்பு, அதிக தாகம், அதிக வியர்வை ஏற்படும். அதிக வியர்வை காரணமாக, நீரிழப்பும், உடலிலுள்ள உப்புச்சத்தும் சேர்ந்து வெளியேற்றமும் நிகழ் கின்றன. இதன் காரணமாக தளர்ச்சி மட்டுமின்றி, தலைவலி, தலைசுற்றல், வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. இவைமட்டுமின்றி மூன்று முக்கிய நிலைகளை உடல் சந்திக்க நேர்கிறது.
1. மூளை செயலிழப்பு
2. உடறுப்பு செயலிழப்பு
3. இறுதியில் மரணமும் ஏற்படலாம்.
வழக்கத்திற்கு மாறான, அதிக, நீண்ட வெயிலின் நேரடிபாதிப்பால் வெப்பத்தளர்ச்சி ஏற்படுகிறது. வெப்பத்தளர்ச்சியின் இறுதிக் கட்டத்தில் ‘வெப்ப மயக்கம்’ (Heat Stroke) ஏற்படுகிறது. உடலின் உஷ்ண அளவை சமச்சீராக வைத்திருக்கும் தன்மை செயலிழந்து போய் இறுதியாக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது.
2. மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்லும் வெப்பத் தாக்குதல்,வெப்ப மயக்கம்
வெயில் காரணமாக தோலிலுள்ள ரத்த நாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்பிற்குக் கீழ்பாகங்களில் ரத்தம் தேங்க வழி ஏற்படும். இதனால் இருதயத்திற்கு ரத்தம் வருதல் குறையும். இரத்த அழுத்தம் குறைந்துவிடும். மூளைக்கு போதுமான ரத்தம் கிடைக்காது. வியர்வை வெளியேற்றம் நின்றுவிடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 1070ஊ வரை சுரம் ஏறக்கூடும்; தலை சுற்றலும் மயக்கமும் ஏற்படும்; நினைவிழப்பு ஏற்பட்டு கோமா நிலை நோக்கி நழுவிச் செல்லக் கூடும். உடனடிச் சிகிச்சை கிடைக்காவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
வெப்பத் தாக்குதலின் ஆரம்ப நிலை அறிகுறிகள் :
மிக வியர்ப்பு, களைப்பு, தாகம், தசைப்பிடிப்பு, உஷ்ணம் 104 டிகிரி F க்கு மேல் இருத்தல், எரிச்சல், மனக் குழப்பம், வேகமூச்சு, பலவீனநாடி
வெப்பத்தாக்குதலின் முற்றிய அறிகுறிகள் :
தலைவலி, கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி, தோல் சில்லிப்பு, சிறுநீர்கடுத்தல்
பொதுவான தற்காப்பு நடவடிக்கைகள் :
- தேவையைவிடச் சற்று அதிகளவு நீர் அருந்த வேண்டும்.
2. குடை, தொப்பி, பருத்தி ஆடை அணிதல் நல்லது. குடை உட்பட இவற்றின் நிறம் கருப்பாக இருக்கக் கூடாது. மெல்லிய நிறமே ஏற்றது.
3. காலையில் குளிர்ந்த உணவு - பழைய சாதம், கூழ், லெஸ்ஸி, உப்பிட்ட மோர், கீரை சூப் (இதில் உப்புச்சத்து, உயிர்ச்சத்துகள் அதிகளவு கிடைக்கும்) பொறித்த உணவுகள், கார உணவுகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனால் தோல் தொந்தரவுகள் ஏற்படும்.
4. காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டுச் சாறு சிறிதளவு குடிப்பது மிகவும் நல்லது.
5. காலையில் நீராகாரம் பருகலாம். இரவு சாதத்தில் நீர் ஊற்றினால் கோடை வெப்பத்தில் சாதம் கூழாக மாறும். நீர் ஊற்றும் போது சிறிது உப்பைக் கலந்து வைத்தால் கூழாகாது.
5. வெயிலில், வெளியிடங்களில் அலையும் போது இடையிடையே நீர், பழச்சாறு, இளநீர், பதநீர், மோர், தர்ப்பூசணி, நீர்ச்சத்துள்ள பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. இளநீர் உடல் சூட்டினை குறைத்து சிறுநீரை எளிதில் பிரிய வழிசெய்யும்.
7. கோடை சுற்றுலாவாக வெளியிடங்கள் செல்லும் போது சுத்தமற்ற உணவுகளைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். இத்தகைய வெளி உணவுகளால் நச்சுத்தன்மையும் ,காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும். பொதுவாக வெயில் காலங்களில் சாப்பிட வேண்டியவை, சாப்பிடக் கூடாதவை பற்றி நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.
8. வீடுகளில் ஜன்னல் கதவுகளில் ஈரத்துணி நனைத்துப் போர்த்தினால் வெப்பம் சற்று தணியும்.
9. வியர்க்குரு வந்துவிட்டால் சந்தனம் குழைத்து தொடர்ந்து சில நாட்கள் பூசி வரவேண்டும். தினம் காலை, மாலை இரண்டு தடவை குளிப்பது உகந்தது.
10. அதிகாலை அல்லது அந்தி நேரங்களில் யோகா அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் அதிக நேரம் இப்பயிற்சிகள் செய்யக்கூடாது. அதிகளவு வியர்த்தால் பயிற்சிகளை நிறுத்திவிட வேண்டும்.
வெப்பத் தளர்ச்சி, வெப்ப மயக்கம் - முதலுதவி அவசியம் :
- பாதிக்கப்பட்ட நபரை குளிர்ச்சியான இடத்திற்கு எடுத்துச்சென்று கால்கள் ஓரடி உயரத்திலிருக்குமாறு படுக்க வைக்க வேண்டும். மின் விசிறியின் கீழ் ஓய்வெடுக்கச் செய்யவேண்டும்.
2. ஆடைகளைத் தளர்த்தி உடல் முழுவதும் காற்றுப்படச்செய்யவேண்டும்.
3. ஈரத்துணியால் உடலைத் துடைத்து விட வேண்டும் அல்லது ஒத்தடம் தரவேண்டும்.
4. நீர் அருந்தச் செய்யவேண்டும். குளுக்கோஸ் & தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்கள் செலுத்துதல் நல்லது. குளிர்பானம் அல்லது சிறிய உப்புக்கலந்த நீரை 15 நிமிடத்திற்கு 1 தடவை வீதம் குடிக்கச் செய்யவேண்டும்.
5. தசைப் பிடிப்பு ஏற்பட்டிருப்பின் வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்யவேண்டும்.
6. அதிர்ச்சி உண்டாகியிருந்தால் மருத்துவ உதவி அவசியம்.
கோடையில் எவ்வளவு நீர் அருந்துவது நல்லது?
50 முதல் 60 கிலோ வரை உடை உள்ளவர்களுக்கு 24 மணி நேரத்திற்கு 2.5 லிட்டர் நீர் தேவை. இதில் மட்டுமின்றி காய்கறி, பழங்கள், குழம்பு, ரசம் போன்றவை மூலம் கிடைக்கும் நீரும் அடங்கும். ஒரு நபருக்கு உடலிலிருந்து நாள் ஒன்றுக்கு வெளியேறும் நீரின் அளவு :
சிறுநீராக .... 1.5 லி
மலம் வழி நீராக .... 200 to 300 ml
சுவாசம் வழி நீராக .... 300 to 400 ml
வியர்வை மூலம் .... 300 to 400 ml
இவ்வாறு உடலிலிருந்து வெளியேறும் நீரைச் சமன் செய்வதற்கு மட்டுமே 21/2 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. கோடையில் அதிகளவு வியர்ப்பதால் நீர் அருந்தும் அளவை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம் மிகவும் அதிகளவு நீர் அருந்துதல் (நீர் சிகிச்சை என்ற பெயரில்) கூடாது. இதனால் சிறுநீர் வழியே உடம்பிலுள்ள பொட்டாசியம் வெளியேறிவிடும். அதிகளவு பொட்டாசியம் வெளியேறும் நோய் நிலை HYPOKALEMIA எனப்படும். வாந்தி, வயிற்றுப்போக்கலும் HYPOKALEMIA ஏற்படலாம். உடம்பில் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் மிகவும் முக்கியம். அதிகளவு பொட்டாசியம் வெளியேறினால் இரண்டு கால் மூட்டுகளும் வலுவிழந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.
நீருக்கு உதவியாக பழங்கள், காய்கறிகளைப் பயன்படுத்தலாம். பழங்கள் நீர்ச்சத்து நிறைந்ததாகவும் வெப்பத்தைக் கட்டுப்படுத்து வதாகவும் அமைகின்றன. காய்கறிகளிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. முடிந்தளவு பச்சையாக அல்லது ஓரளவு வேக வைத்து உண்ணுதலே நல்லது. பொரித்துச் சாப்பிடுவதால் பயனில்லை. பழங்கள் & காய்கறிகள் இரண்டிலும் நீர்ச்சத்து, குளிர்ச்சி, வைட்டமின்கள், தாதுக்கள், நச்சு எதிர்ப்புத் தன்மை, நார்ச்சத்து இருப்பதால் கோடை நோய்கள் வராமல் தடுக்கமுடியும்.
தர்ப்பூசணியில் 90% நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயில் அதைவிட அதிக நீர்ச்சத்து உள்ளது; காய்கறி சூப் தயாரித்து குளிர வைத்துச் சாப்பிடவேண்டும். காய்கறி சாலட் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. பாட்டில் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. கோடைக்கேற்ற சிறந்த பானம் எலுமிச்சை பானம். எலுமிச்சங்காயின் தாயகம் இந்தியா. பிற பழங்களைக் காட்டிலும் அதிகளவு சிட்ரிக் அமிலமும், ‘சி’ வைட்டமினும் உள்ளதால் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் வியாதிகளைக் குறைக்கவும் நோய் எதிர்ப்புசக்தி ஏற்படுத்தவும் பயன்படும்.
கோடையில் ஏற்படும் வேறுமுக்கிய உடல்நலப் பிரச்சனைகள் :
வெப்பத்தளர்ச்சி, வெப்ப மயக்கம் போலவே வேறுசில நோய்களும் வெயில் காலத்தில் ஏற்படும். வெப்பப்புண்கள், வியர்க்குரு, காளான்படை, கொப்புளம், ஒவ்வாமை போன்ற தோல் நோய்களும், வயிற்றுக் கோளாறுகளும், நீர்க்கடுப்பும், மூக்கிலிருந்து ரத்தப் பெருக்கும், தசைப் பிடிப்பும் ஏற்படக்கூடும்.
கோடைகால உடல்நலப்பிரச்சனைகளுக்கு ஹோமியோ சிகிச்சைகள் :
கோடைகால உஷ்ணம் தணித்து குளிர்ச்சி ஏற்படுத்த SARASAPARILLA - Q 10 முதல் 20 சொட்டுக்கள் 1/2 டம்ளர் நீரில் கலந்து அருந்தலாம்.
SYZYGIUM - Q இதேபோல பயன்படும். (துவர்ப்பு ருசி உடம்பில் குளிர்ச்சி உண்டாக் கும் - துவர்ப்பு உணவுகளான வாழைத் தண்டு, மாம்பருப்பு, கொய்யாக்காய், மாதுளை, நாவற்பழம் போன்றவை உஷ்ணம் தணிக்கும்)
வெப்பத்தளர்ச்சிக்கு பயன்படும் முக்கிய மருந்துகள் :
Natrum Carb, Selenium, Gelsemium, Lachesis..
வெப்பத்தாக்குதலுக்கு பயன்படும் முக்கிய மருந்துகள் :
Belladonaa, Lachesis, Amyle Nit-Q (நகர்வதற்கு)
மேலும் சில பிரச்சனைகளும் பயனுள்ள மருந்துகளும்
வெயிலில் மூளைக் குழப்பம் ஏற்படுதல் - Pulsatilla, Glonoine, Nat.Carb, Nat.mur, Antim Crud, Bovista
கோடையில் ஏற்படும் சிவந்த தன்மையும் எரிச்சலும் உள்ள வியர்க்குரு - Belladonna
மேற்படி குறி நீடித்தால் - Ledumpal
உடல் முழுவதும் ஏற்படும் வியர்குரு / பருக்கள் (Pimples all over the body - Boerick) - Bovista
அரிப்புடன் கூடிய வியர்க்குரு - தலையில் மட்டும் அதிக வெயில் தாக்கியதன் விளைவுகள், மயக்கம், கிறுகிறுப்பு - Aconite
அதிக உடல் உஷ்ணம் (சுரம்), சோர்வு, தூக்கக்கலக்கம், தாகமின்மை, கோமா ஏற்படும் நிலை - Gelsemium
வெடிக்கும், தெறிக்கும் தலைவலி, அதிக வெப்பத்தால் மூளைச்சோர்வும் மூளைக் சோகையும் (Hyperaemia) - Glonoine.
சூரியத் தாக்குதலின் நாட்பட்ட விளைவுகள், வெயிலால், கேஸ் லைட்டால் ஏற்படக்கூடிய தலைவலி, பலவீனம், தளர்ச்சி - Natrum Carb
கோடைகால வயிற்றுப்போக்கு - odophyllum, Croton Tig
வெயிலால் தோலில் எரிதல், நீர்க்கடுப்பு, எரிச்சலுள்ள சிறு கொப்புளங்கள், குளிர் நீரால் உபாதை குறையும் - Cantharis
தீவிர எரிச்சல், அரிப்பு, சிவந்த தோல், நீர்நிரம்பிய சிறு கொப்புளங்கள் - குளிர்நீராலும் உபாதைகள் அதிகரிக்கும் வெப்பத்தாலும் அதிகரிக்கும் – Urtica Urenus
வெயில் கால தசைப்பிடிப்பு வலிகள் (Heat Cramps) - Bell, Nat mur, Colo, Cup.met, China..
கோடையைச் சமாளிக்கவும், வெப்பநோய்கள் வராமல் தடுக்கவும் மேலும் சில ஆலோசனைகள்
வாயு நிரம்பிய செயற்கை மென்பானங்கள் அருந்தக்கூடாது. இயற்கையான பானங்களே நல்லது. சுத்தமான குடிநீர் பருக வேண்டும்.
காரம், மசாலா உணவுகள், எண்ணெய் பண்டங்கள், பேக்கரிப் பொருட்கள், அசைவப் உணவுகள் ஆகியவை மிகவும் குறைக்க வேண்டும். இவற்றால் அஜீரணம், மலச்சிக்கல், அதிக தாகம் உட்பட பல உபாதைகள் ஏற்படும்.
குழந்தைகள் உச்சி வெயிலில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும்.
குச்சி ஐஸ் சாப்பிடக்கூடாது - வெப்பத்தையும் நோய்களையும் அதிகரிக்கும். ஐஸ் காப்பி, ஐஸ் டீ இரண்டும் நல்லதல்ல.
தர்பூசணி தாகம் தணிக்கும்; பித்த சூட்டைத் தணிக்கும், வயிறுப் பொருமல், எரிச்சல், அடிவயிறு கோளாறுகள் நீங்கும், சிறுநீரகக் கற்கள் சேராமல் தடுக்கும். புத்துணர்ச்சி தரும்.
ஆரஞ்சு பசி தூண்டும், பித்தம் போக்கும், வயிற்று உப்புசம் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும் எலும்புகளை வலுப்படுத்தும். (சளியுள்ளவர்கள் - ஆரஞ்சு சாற்றை வெந்நீரில் கலந்து பருகலாம்) இப்பழம் ஆஸ்துமா, நெஞ்சகக் கோளாறுகளுக்கும் நல்லது. கர்ப்பகால குமட்டலுக்கு நல்லது.
சாத்துக்குடி குளிர்ச்சியான பழம் - தாகம் தணிக்கும் - ரத்தக் கழிவுகளை நீக்கும். வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதைத் தடுக்கும். (சளி நோயுற்றவர் – சாத்துக்குடி சாற்றை வெந்நீரில் இஞ்சிச்சாறுடன் சேர்த்து அருந்தலாம்)
வெள்ளரி : பித்தம் தணிக்கும், குடல்களுக்கு குளிர்ச்சியூட்டும்.
- Dr.V.ஆவுடேஸ்வரி