மாற்றுமருத்துவங்கள் உரிய வளர்ச்சி அடைய வேண்டியதன் இன்றைய தேவை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டுவருகிற நிலையில் ஹோமியோபதியின் வளர்ச்சி குறித்து நம்மைப்போன்றவர்கள் சிந்திப்பதும் அதன் அடிப்படையில் செயல்படுவதும் இன்றியமை யாததே.

ஹோமியோபதி வளர்ச்சி அடைந்துள்ளதா?

இந்தக் கேள்விக்கு “ஆம்” என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் உலகளாவிய அளவில் ஹோமியோபதி நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்பதுதான் உண்மை. ஹோமியோபதி உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறையாக விளங்குவதையும் ஆண் டொன்றுக்கு 20 - 25% வளர்ச்சியை எட்டி வருவதையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இன்றைக்கு அனைத்து மாற்றுமருத்துவங்களின் ஒட்டுமொத்த சந்தை என்னவோ அதனை 2017-ல் ஹோமியோபதி தனி ஒரு மருத்துவமாகப் பெற்றுவிடும் என்றும் அது கணித்துக் கூறுகிறது.

இங்கிலாந்தில் 42% பொது மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை ஹோமியோபதி மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கின்றனர். எலிஸபெத் மகாராணிக்கு ஹோமியோபதி மருத்துவர்தான் குடும்ப மருத்துவர்.

பிரான்சில் 75% பொது மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் 1970களில் புத்துயிர் பெற்ற ஹோமியோபதி 1980களில் 1000% வளர்ச்சியைப் பெற்றதாக FDஆ நுகர்வோர்அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இப்படியாக கிழக்கு ஐரோப்பாவிலும், ஸ்பெயினிலும், இத்தாலியிலும், சுவிட்சர்லாந்திலும், அயர்லாந்திலும், ஜெர்மனியிலும் கூட ஹோமியோபதி வளர்ச்சி குறித்த இதுபோன்ற தரவுகளும், தகவல்களும் ஏராளமாக உள்ளன.

இந்தியாவில்....?

இந்தியாவில் ஹோமியோபதி 1835-லேயே அறிமுகமாகி விட்டது. தமிழகத்தில் 1836-ல் தஞ்சாவூரில் பணிபுரிந்த டாக்டர். சாமுவேல் புரூக்லிங் என்பவர் இராணுவ அதிகாரிகளுக்கு ஹோமியோபதி மருத்துவம் செய்ததாக தகவல்கள் உள்ளன. இந்தியாவில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். 180 ஹோமியோபதி கல்லூரிகள் உள்ளன. 2,00,000 பேர் 51/2 வருட படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளனர். அனுபவ அடிப்படையில் அரசு பதிவு பெற்றோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 20% பேர் ஹோமியோபதியை பயன்படுத்துகின்றனர். ஹோமியோபதியைப் பயன்படுத்துவோரில் 62%பேர் ஆங்கில மருத்துவத்தைப் பயன்படுத்தியதே இல்லை. 82% பேர் ஆங்கில மருத்துவத்துக்கு திரும்புவதில்லை.

இந்த வளர்ச்சி போதுமா?

நிச்சயமாக போதாது. உலகளவில் பார்த்தால் ஒரு நாட்டில் ஹோமியோபதி அடைந்திருக்க்கும் வளர்ச்சி இன்னொரு நாட்டில் இல்லை. இந்தியாவிலோ ஒரு மாநிலத்தில் அடைந்திருக்கும் வளர்ச்சி இன்னொரு மாநிலத்தில் இல்லை. தமிழகத்திலோ ஒரு மாவட்டத்தில் அடைந்திருக்கும் வளர்ச்சி இன்னொரு மாவட்டத்தில் இல்லை. அதேபோல சில பகுதிகளில் கற்றவர்களின், வசதி படைத்தவர்களின் மருத்துவமாக விளங்கும் ஹோமியோபதி சில பகுதிகளில் பாமரர்களின், பட்டாளிகளின் மருத்துவமாக உள்ளது. இந்த சமச்சீரற்ற நிலை மாறவேண்டும். ஹோமியோபதி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்.

ஹோமியோபதியும், அலோபதியும்

அலோபதி தவறான மருத்துவமுறை என உணர்ந்து அதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டது தான் ஹோமியோபதி. அதனைக் கண்டுபிடித்தவர் மருத்துவ மாமேதை டாக்டர். சாமுவேல் ஹானிமன். இரண்டு மருத்துவமுறைகளுக்கும் ஹோமியோபதி, அலோபதி எனப் பெயரிட்டவரும் அவரே. இரண்டுக்கும் எதிரெதிôன கோட்பாடுகள் உள்ளன. அதேபோல அலோபதி யின் வளர்ச்சிக்கும் ஹோமியோபதியின் வளர்ச்சிக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

ஆங்கிலேயர்கள் தாங்கள் அடிமைப்படுத்திய நாடுகள் அனைத்திலும் தங்களுடைய மொழி, கல்விமுறை, கலாச்சாரம், மருத்துவம் என அனைத்தையும் திணித்தனர். அது அவர்களின் சுரண்டலுக்கு வசதியாக இருந்தது. ஆங்கில மருத்துவத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்குப் பின்னாலும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் நோக்கம், சர்வதேச மருந்துக் கம்பெனிகளின் லாபவேட்டை, கார்பரேட் மருத்துவமனைகள், விளம்பரம், தேசிய-சர்வதேசிய அரசியல் என அனைத்தும் உண்டு.

ஹோமியோபதி மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் எளிமை, உண்மை, நலமாக்கும் ஆற்றல், தன்னலமற்ற மருத்துவர் பலரின் தியாகம் மட்டுமே உண்டு. அது மட்டுமல்ல. அரசு அடக்குமுறை, பொய் பரப்புரைகள் (இயற்கைக்கு மாறான அறிவியல் கோட்பாடுகள் என) அனைத்தையும் உடைத்தெறிந்து வளர்ந்து வருவதே ஹோமியோபதி.

மக்களே நீதிபதிகள்

மக்களின் அங்கீகாரம் இல்லாமல் எந்த ஒரு மருத்துவமும் வெற்றி பெறவோ, வளர்ச்சியுறவோ, ஏன்? நீடித்திருக்கவோ கூட முடியாது. ஆகவே தான் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி ஹோமியோபதியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

-டாக்டர். ச. அன்பழகன், தஞ்சை. செல் : 99434 86018

Pin It