இந்திய மருத்துவக்கழக தலைவர் டாக்டர். கேதான் தேசாய் ரூ. 2 கோடி லஞ்சப் பணத்துடன் டெல்லியில் கைதாகியுள்ளார். மேலும் ரூ. 1800 கோடி ரொக்கமும், 1500 கிலோ தங்க நகைகளும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேசாயிடம் இருக்கும் லஞ்சப் பணத்தின் மதிப்பு ரூ. 2500 கோடி. ஏற்கனவே டெல்லி உயர்நீதி மன்றத்தில் இவர் மீதான குற்றச்சாட்டு, வழக்கு காரணமாக 2001-ல் இதே தலைவர் பதவியைத் துறந்தார்.  இவரை மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யக்கூடாது என்று நாடுமுழுதும் உள்ள் ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தன.

கடுமையான ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரை (IMA) இந்திய மருத்துவ சங்கத்தினர் தங்களுக்கும், இந்திய மருத்துவக் கழகத்திற்கும் (MC) தலைவராகத் தேர்வு செய்ததும், உலக மருத்துவ சங்கத்திற்கு (WMA) தலைவராக முன்மொழிந்ததும் ஏன்? இவர் மீதான IMA-ன் நம்பிக்கைக்கு காரணம் என்ன? பொறுப்பான பதவிகளுக்கு தேர்வு செய்வதில் IMa வினர் என்ன அளவுகோல்களை கடைப்பிடிக்கிறார்கள்?

1930ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் சுமார் 1,80,000 ஆங்கில மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அமைப்பின் ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 20 சதவீத டாக்டர்களே வாக்களிக்கின்றனர். 80 சதவீதத்தினர் நிலை என்ன? (வினோதமான ஜனநாயகம்!) மரணம், தொழில் நிறுத்தம், வெளிநாட்டு வாழ்க்கை போன்ற பல காரணங்களால் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்ற கணக்கெல்லாம் இல்லை. இவர்கள் கூறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை முதல் இவர்களின் தேர்தல், தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் அடிமட்டம் வரை அலோபதித் துறை முழுவதும் ‘போலிகளும்’ ‘பொய்மூட்டைகளும்’ ‘ஊழல்களும்’ நிரம்பி வழிகின்றன!

பாரம்பரிய மருத்துவர்களையும், பதிவு கிட்டாத சித்தா, ஹோமியோ, இயற்கை முறை மருத்துவர்களையும் (Traditionally and Non-Institutionally Qualified Alternative Practioners) ‘போலிகள்’ என்று குற்றம் சாட்டும் ஆங்கில மருத்துவத்துறையின் ‘தரங்கெட்ட போலித்தனங்கள்’ வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. தற்போது போலி (ஆங்கில) மருத்துவர்கள் பரவலாகக் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் யார்? இவர்களை உருவாக்கியது யார்? பெரும்பாலான ஆங்கில மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற (Certified) நர்சுகளைவிட, பயிற்சி பெறாத (uncertified) ஆண், பெண் நர்சுகளே அதிகம் பணிபுரிகின்றனர். இத்தகைய ‘போலிநர்சுகள்’ பணிக்காக கேரளப் பெண்களும், தமிழகத்தின் பல பகுதிப் பெண்களும் மொத்தக் குத்தகை அடிப்படையில் ஆங்கில மருத்துவமனைகளில் அமர்த்தப்படுகின்றனர்.

சில ஆண்டுகள் பணிக்குப் (பயிற்சிக்கு?) பின் அருகிலுள்ள புறநகர் பகுதியில் அல்லது கிராமத்தில் சிறுபெட்டிக்கடை போல் கிளினிக் துவங்கி விடுகின்றனர் இந்த நர்சுகள். இவர்களிடம் பெரிய கேஸ்கள் வரும்போது முன்பு பணிபுரிந்த டாக்டரிடமே அனுப்பி வைக்கின்றனர். எந்தவித மருத்துவத் தகுதியுமற்ற இந்த நர்சுகளை ஊசிபோடத் தெரிந்தவர்களாக, காயங்களுக்கு மருந்துக்கட்டு போடத் தெரிந்தவர்களாக, அத்தியாவசிய மாத்திரை மருந்துகளை உபயோகிக்கத் தெரிந்தவர்களாக (போலி மருத்துவர் கூட்டமாக) உருவாக்கியது ஆங்கில மருத்துவர்களே!

போலி ஆங்கில மருத்துவர்களை முற்றிலும் ஒழிக்க ஒரே வழி அலோபதி மருத்துவமனைகளில் தகுதியுள்ள மருத்துவப் பணியாளர்கள், நர்சுகள் நியமிக்கப்படவேண்டும். ஏனெனில் ஆங்கில மருத்துவமுறை என்பது பக்கவிளைவுகள், பின்விளைவுகள், மரண ஆபத்துக்கள் உள்ள கடுமையான ரசாயன மருத்துவம்; எனவே முறையான பயிற்சியும் தகுதியும் இல்லாத மருத்துவப் பணியாளர்கள் உள்ள ஆங்கில மருத்துவமனைகளின் நடைமுறைகள் கண்காணிக்கப்படவேண்டும்; நடவடிக்கைள் எடுத்து ஒழுங்குபடுத்தப்படவேண்டும்.

ஆங்கில மருத்துவ மேதாவிகள் மாற்றுமருத்துவ முறைகளிலுள்ள மருத்துவர்களையும், மருந்துகளையும் ‘போலிகள்’ என்பதோடு ‘மக்கள் உயிரோடு விளையாடுபவர்கள்’ என்றும் அர்ச்சனை செய்வதுண்டு, இன்றைய நிலையில் அலோபதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் போலி மருந்து ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது (சென்னை சிறுமி கிருத்திகாவைப் போல இம்மருந்துகளால் எத்தனை பேர்கள் மாண்டனர்? அல்லது மாறாத நோய்த்துயர்களில் வீழ்ந்தனர்? என்பது இன்னும்வெளிச்சத்திற்கு வரவில்லை!)

தமிழகத்தில் 42,000 மருந்துக் கடைகள் உள்ளன. ஆனால் 5 ஆண்டு முன் வரை தமிழக பார்மசி கவுன்சிலில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23,000 மட்டுமே. இவர்களில் அனைவரும் பிராக்டிஸ் தொடர்வதில்லை. இதிலும் முரண்பாடு எழுகிறது. 20 ஆண்டுகளாக போலி மருந்துகள் புழக்கத்திலிருந்ததாக இப்போது தெரியவந்துள்ளது. சுமார் 300க்கும் மேலான போலி மருந்துகளை, மருத்துவர்கள் யாரும் பரிந்துரைக்காமல் மக்கள் பயன்படுத்தமுடியுமா? எந்த ஒரு அலோபதி மருத்துவரும் கூடச் சம்பந்தப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் போலி மருந்து ஊழல் நடைபெற முடியுமா? மீனாட்சி சுந்தரமும் சிலரும் மட்டும்தான் பலிகடாக்களா?

தேசாயோ, மீனாட்சி சுந்தரமோ எந்த ஒரு தனி மனிதராலும் மெகா ஊழல்களை நிகழ்த்த முடியாது. இவர்களுக்கு மேலும் கீழும் ஏராளமானவர்கள் கொண்ட சங்ற்ஜ்ர்ழ்ந் இல்லாமல் இத்தகைய பிரம்மாண்டமான ஊழல்கள் நடைபெற வாய்ப்பே இல்லை. ஹோமியோபதியின் தந்தை, மனித நேய மருத்துவ மாமேதை டாக்டர் ஹானிமன் 200 ஆண்டுகளுக்கு முன் தான் பயின்று, பயிற்சி செய்த ஆங்கில மருத்துவத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். ‘ஆங்கில மருத்துவம் பணவெறி பிடித்த மருத்துவம்’ என்று அம்பலப்படுத்தினார்.

‘நவீனம்’ மற்றும் ‘அறிவியல்’ எனும் பெயரால் ஆங்கில மருத்துவமுறையை மட்டுமே பெரிதும் நம்புவதால் மக்களுக்கு ஏற்படும் பேரிழப்புகள் குறித்தும், மாற்றுமருத்துவங்களை விரிவாக மக்களுக்குக் கொண்டுசென்றால் கிடைக்கும் நலன்கள் குறித்தும் மக்கள் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாக பரிசீலித்து செயல்பட வேண்டிய காலமிது.

ஆங்கில மருத்துவத்துறை ஊழல்களையும், போலித்தனங்களையும் சமூக அக்கறையுள்ளவர் களின் தொடர்ச்சியான புகார்களின் பேரில் அரசுகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளன. அலோபதித் துறையின் தேசவிரோத ஊழல்களிலிருந்து மக்களைக் காக்கவும், மக்களின் அச்சங்களை, ஐயங்களை போக்கவும் திறந்த விசாரணை நடத்தி கீழ்க்கண்ட உண்மைகள் வெளிவரச் செய்யவேண்டும்.

  1. 3 ஆண்டு மருத்துவப் படிப்புக்கு கல்லூரிகள் திறப்பதன் மூலம் மேலும் பலஆயிரம் கோடி ஊழலுக்கு தேசாய் திட்டமிட்டது உண்மையா?

2. மருந்து நிறுவனங்கள் தேசாய் கோரிய 20 கமிஷன் தராததால், டாக்டர்கள் யாரும் மருந்து கம்பெனிகளிடமிருந்து அன்பளிப்புகள், இலவசங்கள் பெறக்கூடாது என்று தேசாய் உத்திரவிட்டார் என வரும் செய்திகள் உண்மையா?

3. அலோபதித் துறையின் (சென்னை & டெல்லி) மெகா ஊழல்களில் வேறு டாக்டர்கள், அரசியல்வாதிகள் எவருக்கும் தொடர்புகள் இல்லையா?

4. தேசாயும், மீனாட்சி சுந்தரமும் மீண்டும் ஊழல் செய்யமுடியாமல் தண்டனை கிடைத்து விட்டால் இத்தகைய ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி      அமைந்துவிடுமா? இவர்களுடன் உள்ள சங்கிலித்தொடராய் இயங்கிய பல சுயநல சக்திகள் யார் யார்? என கண்டறிந்து களை எடுத்தாக வேண்டுமல்லவா?

இக்கேள்விகளுக்கான நியாயமான விடைகளை மத்திய மாநில அரசுகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-ஆசிரியர்.

Pin It