முரட்டு ஓட்டுடன் பார்வைக்கு சாதாரணமாக இருக்கிற விளாம் பழம், ஒரு அழகுக் கலை நிபுணருக்கு இணையானது. இதனிடம் உங்களை ஒப்படைத்துப் பாருங்களேன்.  இளவரசிகளின் அரசியாக ஜொலிப்பீர்கள்!

வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும்.  விளாம்பழம் இருக்க வேதனை ஏன்?

இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போடுங்கள்.  விளாம்பழ விழுது எவ்வளவு நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில் நீங்களாகவே கழுவி விடுங்கள்.  இந்த சிகிச்சையை தினமும் காலையில் செய்து வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும் உங்கள் முகம்.

பருவப் பெண்களை படுத்துகிற பெரும் பிரச்னை பருதான்!  பருக்களை ஓடஓட விரட்டலாம்.  இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்!  பயத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், விளாங்காய் விழுது - 2 டீஸ்பூன், பாதாம்பருப்பு - 2.  இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊறவைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். விளாங்காய் கிரீம் ரெடி!

இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள் கூட மாயமாக மறைந்துவிடும்.  தழும்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். (கிரீமை உபயோகிக்கும் முன், கைகளை நன்றாகக் கழுவுவது அவசியம்.  பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த கிரீம் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு மருத்துவ பலனை தரும்.) விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும்.  பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

ஃபேஷியல் செய்து கொண்டதுபோல ‘ஃப்ரெஷ் ஃப்ரெஷ்’ முகம் வேண்டுமா? ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன், லவங்க தைலம் - 3 துளி, சந்தன பவுடர் - 2 சிட்டிகை, விளாம்பழ சதை - 2 டீஸ்பூன்... இவற்றைக் கலந்து முகத்தில் பூசி, மெதுவாக மசாஜ் செய்ய, ஒளியிலே தெரியும் தேவதையேதான் நீங்கள்!

குழந்தையைப் போன்ற மென்மையான சருமத்தை விரும்பாதவர்கள் யார்? விளாம்பழத்தில் அதற்கான ரகசியம் இருக்கிறது.  விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வையுங்கள்.  இதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ... எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.  இதை குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகளும் காணாமல் போகும்.

சருமப் பொலிவுடன் கேச ஆரோக்கியத்துக்கும் வழி சொல்கிறது விளாம்பழம்.  சருமம் மென்மையாவது அழகுதான். ஆனால், கேசம் மென்மையாவது ..? தலைமுடியின் வலு குறைந்து நூல் போல ஆகிறதா? விளாம் இலையில் இருக்கிறது இதற்கான தீர்வு!

விளாம்மர இலை, செம்பருத்தி இலை - தலா 5, கொட்டை நீக்கிய பூந்தித் தோல்- 4 ...இவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, நன்றாக அரையுங்கள். இதைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் குளியுங்கள்.  தொடர்ந்து இதைச் செய்துவர, கேசத்தின் அடர்த்தி அதிகரிக்கும்.

வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு!  காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் - 100 கிராம், சீயக்காய், வெந்தயம் - தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும்.

முடி கொட்டும் பிரச்னையா? அதைத் தடுப்பதில் விளாம் மர இலைக்கு தனிப்பங்கு உண்டு.  சுருள் பட்டை - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், வெட்டிவேர் - 10 கிராம், விளாம் மர இலை - 50கிராம் ... இவற்றை கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில்வைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.  தினமும் இந்தத் தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்த, தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடி முடி வரை படுகிற மாதிரி தடவுங்கள்.  முடி கொட்டுவது நிற்பதுடன், கருகருவென வளரவும் தொடங்கும்.

வெயிலிலும் தூசியிலம் அலைவதால் கூந்தல் அழுக்கடைந்து பிசுபிசுவென்று இருக்கிறதா? செம்பருத்தி இலை, விளாம் இலை சமஅளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும்.  எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை.  கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

அல்சரை போக்கும் அருமருந்து!

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.

விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும்.

வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர ... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் நீங்கும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.  இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

Pin It