அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோவில் 29-4-2009ல் பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. இன்று உலகிலுள்ள சுமார் 180 நாடுகளிலும் பரவி விட்டது. இந்தியாவிலும் பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என்பது இன்புளூயன்சா எனப்படும் ஒருவகை சளி சுரம். இத்தகைய சளிசுரத் தாக்குதல்கள் கடந்த காலத்திலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 1918ஆம் ஆண்டில் ஸ்பானிய ஃபுளூ சுரம் உலகளாவிய தொற்றாகப் பரவி 5 கோடிக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 1957ல் ஆசியன் ஃபுளூ சுரம் பரவி 4.5 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு அவர்களில் 70,000 பேர்கள் மரணமடைந்தனர். 1968ல் ஹாங்காங் ஃபுளூ சுரம் பரவி உலகளவில் 10 லட்சம் பேர்கள் இறந்தனர். 1976ல் அமெரிக்க படைவீரர்கள் 500 பேர்கள் புளூவால் தாக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸில் இந்நோய் பரவியது.

ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் RNAவைத் தனது பாரம்பரிய மூலக்கூறாக கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இன்புளூயன்சா. ஸ்வைன் இன்புளூயன்சா எனப்படும் பன்றி சுரத்தைப் பரப்பும் வைரஸ் ஆர்த்தோ மிக்சோ விரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. ஆர்.என்.ஏ.வை அடிப்படையாகக் கொண்ட இந்த வைரஸ்களுக்கு உருமாறும் ஆற்றல் உள்ளது. பொதுவாக எந்த ஒரு வைரஸ் மனித உடலுக்குள் புகுந்தாலும் தற்காப்பு அமைப்பு அதனை அழித்துவிடும். ஆனால் இந்த வைரஸ்களிடம் அமைந்துள்ள Mutation எனப்படும் உருமாறும் திறன் காரணமாக மனித உடலின் தற்காப்பு அமைப்பினை வென்று விடுகிறது என்று மருத்துவ அறிவியலாளர்கள் விளக்குகின்றனர்.

தற்போது மெக்ஸிகோவின் பன்றி வளர்ப்புப் பண்ணைகளிலிருந்து தான் இந்த வைரஸ் மனிதருக்குள் ஊடுருவியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. H1N1 என்று இந்த வைரஸ் வகைக்குப் பெயரிடப்பட்டுள்ளது; ‘பன்றிசுரம்’ என்று அழைக்காமல் ‘மெக்ஸிகன் சுரம்’ என்று அழைக்குமாறு உலக நல நிறுவனம் கூறிய போதிலும் ‘பன்றிசுரம்’ என்ற பெயரிலேயே உலகம் அழைத்து வருகிறது.

கொள்ளை நோயை ‘எபிடெமிக்’ என்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொள்ளை நோய் பரவியுள்ள நிலையில் ‘எண்டெமிக்’ என்றும், எல்லைகள் கடந்து பலநாடுகளில் பரவிய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக ‘பேண்டமிக்’ என்றும் அழைக்கப்படும். வைரஸ் நோய் விரைவாக உலகில் பரவியதைத் தொடர்ந்து உலக நல நிறுவனம் பன்றி சுரத்தை பேண்டமிக் என்றும் அது ஆறாம் நிலையில் உள்ளதாகவும் பாய்ச்சலாக பரவி ஆபத்துக்களை விளைவிப்பதாகவும் ஜூன் 11ஆம் தேதி அறிவித்தது. மெக்ஸிகோவின் பன்றிப் பண்ணைகளில் இந்நோய் தோன்றிப் பரவுவதற்கு என்ன காரணம்? இது குறித்து சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பன்றிப் பண்ணை அதிபர்கள் அதிகப் பணம் குவிக்க ஆசைப்பட்டு குறைந்தளவு இடங்களில் மிக நெருக்கடியாக அதிகளவு பன்றிகளை வளர்க்கத் தொடங்கினர். இதனால் தொடக்கத்தில் பன்றிகளை தாக்கிய கிருமிகள் வேகமாக அதிகரித்து, வீரியம் பெருகி, மனிதர்களையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.

இதனை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கால்நடைகள், இறைச்சிக் கோழிகள், பன்றிகள் போன்றவை வளர்ப்பதில் நவீன பண்ணை முறையைப் புகுத்தியுள்ளன பன்னாட்டு நிறுவனங்கள். மரபணு தொழில் நுட்பம், அறிவுச் சொத்துரிமை போன்ற பெயர்களில் உணவு தானியங்களையும், உணவுக்குப் பயன்படும் கால்நடைகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக இறைச்சி உணவுகளில் இவற்றின் ஆதிக்கம் வலுவடைந்துள்ளது.

அதிக முட்டை, அதிக பால், அதிக இறைச்சி என்ற காரணங்களுக்காக இந்தக் கால் நடைகளின் மரபணுக்களில் பன்னாட்டு நிறுவனங்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றன. வளரும் நாடுகளின் அரசுத்துறைகளில் இந்நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதால் மரபணு மாற்ற விலங்குகளே சந்தையில் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய விலங்குகள், பறவை இனங்கள் அழிந்து கொண்டே வருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுய உதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சிறுகடன், வங்கிக் கடனுதவி போன்றவை மூலமாக மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

இதனால் கால்நடைகளின் இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றல் வீரியமிழக்கிறது. மரமணு மாற்றத்தால் பலவித எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன. மனித சமூகத்தை மிரட்டும் புதுப்புது நோய்கள் நவீனப் பண்ணை வளர்ப்புகளால் ஏற்படுகின்றன.

அதிக உற்பத்தி, அதிக லாபம் என்ற ஒரே நோக்கத்தில் இயங்கும் நிறுவனங்களால் ஆராய்ச்சி நிபுணர்கள், அறிவியலாளர்கள் அமர்த்தப்பட்டு கால்நடைகளின் உற்பத்தியை மேம்படுத்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில் இந்த ஆராய்ச்சிகள் தீய விளைவுளை உண்டாக்கும் வைரஸ்களை உருவாக்குகின்றன. இந்த வைரஸ்களே சார்ஸ், ஆந்திராக்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற புதுப்புது நோய்களை உற்பத்தி செய்கின்றன.

இந்நோய்க் கிருமிகள் உயிரியல் ஆயுதங்களாகத் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது. எதிர்காலத்தில் வல்லரசுகள் நடத்தவிருக்கும் உயிரியல் ஆயுதப் போருக்கான ஒரு சோதனை ஒத்திகை என்றும் கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் இப்போது இந்நோய் கட்டுப்படுத்த இயலாதபடி வேகவேகமாகப் பரவி வருகிறது என்று ஊடகங்கள் கூக்குரலிடுகின்றன.

பன்றிக் காய்ச்சலுக்கு Oseltamivir என்ற மருந்து Tamiflu என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. இதனை ‘ரோச்’ (Roche) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியப் பங்காளியான ‘ஹெடெரோ’ (Hetero) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை ரோச் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகிறது. Tamiflu மருந்திலுள்ள பக்க விளைவுகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரையிலான பன்றிக் காய்ச்சல் மரணங்களில் பெரும்பாலோர் Tamiflu கொடுக்கப்பட்டும் பலனின்றி மரணமடைந்துள்ளனர். இவர்களுக்கு நிமோனியா என்றும், ஆஸ்துமா என்றும், இருதய நோய் என்றும், சிறுநீரக நோய் என்றும் மருத்துவர்கள் காரணம் கூறினாலும், இந்நோய்களோடு இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பன்றிச்சுரம் தாக்கிய பின்தான் மோசமான நிலைக்கு ஆளாகி, Tamiflu மருந்தும் இதர ஆங்கில மருத்துவ சிகிச்சைகளும் பலனளிக்காமல் இறந்து போயிருக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் பற்றிய செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரத்துடன் விற்பனைக்கு வரக்கூடும். இந்தத் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன.

இந்த தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பிரதானமான பக்க விளைவு ‘குல்லன் பாரி சிண்ட்ரோம்’ (Guillain Barre Syndrome - GBS) என்ற கொடிய நரம்பு நோயாகும். இந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கித் தசைகளைச் செயலிழக்கச் செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு மரணத்தை ஏற்படுத்தி விடும். இந்நோய் தாக்கினால் முதலில் காலும் கையும் பாதிக்கப்படும். பின்னர் மூச்சடைப்பு ஏற்படும். இது போன்ற தடுப்பூசி 1976ல் உபயோகப்படுத்தப்பட்டது. அப்போது ஃப்ளூ சுரத்தில் இறந்தவர்களை விட அதிகமானோர் தடுப்பூசியால் இறந்தார்கள். GPS நோய் ஏற்படுவது 8 மடங்கு அதிகரித்தது. 2500 பேர்களை GPS நோய் கடுமையாகத் தாக்கியது. தற்போது இந்தத் தடுப்பூசியானது தேவையானளவு சோதிக்கப்படவில்லை. குறிப்பாக குழந்தைகளிடம் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் இத்தடுப்பூசி மருந்தில் ‘ஸ்குவாலின்’ என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அதனால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்று இன்றுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் இந்தப் பின்னணியில் மாற்று முறை மருத்துவர்களும், குறிப்பாக ஹோமியோபதி மருத்துவர்களும் தடுப்பு மருந்துகளை முன்மொழிகின்றனர். இந்த முன்மொழிவுகளை உடனடியாக மறுதலிக்கிற ஆங்கில மருத்துவ பீடங்களும், அதிகார மையங்களும் ஆலோசிக்க வேண்டிய அடிப்படைச் செய்தி என்னவெனில் ... தடுப்பு மருந்துகளே இல்லாதபோது பின் விளைவுகளற்ற விலை மலிவான மென்மையான மாற்றுமுறை மருந்துகளை வழங்கினால் என்ன கெடுதல் வந்துவிடும் என்பது தான்.

உலகிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்றான ஆங்கில மருத்துவத்தின் கிருமிகள் கோட்பாட்டின் அடிப்படையிலான ஓர் தயாரிப்பே தடுப்பு மருந்து என்பது. ஒரு மருத்துவ முறையின் வழிமுறையை மாற்ற மருத்துவங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவை வெவ்வேறு மருத்துவங்களாக நீடிக்க வேண்டியதன் பொருள்தான் என்ன?

ஆங்கில மருத்துவத் துறையினர், மாற்று மருத்துவர்கள் குறிப்பாக ஹோமியோபதியர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தடுப்பு மருந்துகள் அல்ல என்று கூறுவார்களேயானால் இவற்றைக் கொடுப்பதால் என்னவிதமான தீங்குகள் ஏற்படும் என நிரூபித்திருக்கிறார்களா?

ஆங்கில மருத்துவம் தனது முறையிலான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கட்டும். ஆனால் ஹோமியோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தற்காப்பு திறனை வலிமைப்படுத்தும் மருந்துகள் கெடுதலானது என நிரூபிக்கப்படும் வரை மக்களுக்கு இவற்றை வழங்குவது மருத்துவ அறநெறிக் கோட்பாடுகளுக்கும் உட்பட்டதே. மேலும் உலகின் இரண்டாவது பெரிய மருத்துவ முறை ஹோமியோபதி. இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறை. இம்மருத்துவ முறையின் செயல்பாடுகளில். பரிந்துரைகளில் ஆங்கில மருத்துவ முறையினரின் விமர்சன தலையீட்டின் அவசியம் என்ன?

நோய்க்குக் காரணம் நோய்கிருமிகள் மட்டுமே என்று ஹோமியோபதி ஒப்புக் கொள்வதில்லை. நோய் உண்டாக எத்தனையோ காரணிகள் உள்ளன. ஒரு மனிதனை நோய் பீடிக்க நோய்க்கிருமிகள் மட்டும் போதாது. அவனது மனநிலை, உணர்ச்சிகள், துயரங்கள், இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள், வறுமை, செல்வம், தொழில், வீடு, உணவு, பருவ நிலை மாற்றங்களான வெப்பம், பகல், இரவு, வறட்சி, ஈரம், மழை, பனி...என்று மனிதனின் உள்ளும் புறமும் எண்ணற்ற காரணிகள் உள்ளன. நோய்க்கு ஆட்படும் தன்மை என்றும், நோயைத் தூண்டும் காரணிகள் என்றும் ஹோமியோபதி பகுத்துள்ளது.

இத்தகைய தனித்தன்மை கொண்ட பார்வையால் தான் கிருமிகள் ஆக்ரமிப்பால் உண்டாவதாகக் கூறப்படும் டைபாய்டு, மலேரியா, டி.பி. போன்ற நோய்களை ஆண்டிபயாடிக்குகள் இல்லாமலேயே ஹோமியோபதி குணப்படுத்துகிறது. வெறுமனே கிருமிகள் விரட்டும் பணியை மட்டும் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் மனிதனை நோய்க்கு ஆளாக்கும் முறை ஹோமியோபதி அல்ல. மாறாக நோய்க்கிருமிகள் வாழ்வதற்கு ஏற்ற வீடாக இருக்கும் நோயாளியின் உடலை நோய்க் கிருமிகள் வாழ இடமளிக்காத நல் உடலாக மாற்றி ஆரோக்கியம் அளிக்கிறது ஹோமியோபதி.

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமியோபதி மருத்துவர்கள் உலகில் கொள்ளை நோய்களும், தொற்றுநோய்களும் பரவியுள்ளபோதெல்லாம் அவற்றை முறியடித்து மனித குலத்தைக் காப்பதில் பெரும் பங்களித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்ட மக்கள் பகுதியினரிடம் தொற்றுநோய் பரவி நிலைக்கும் பட்சத்தில் பலரிடமும் காணப்படும் பொதுவான குறிகள் அடிப்படையில் நோயைத் தடுக்க, குணப்படுத்த சில ஹோமியோ மருந்துகள் பயன்படுகின்றன. ஹோமியோபதியின் தந்தை டாக்டர். ஹானிமன் அவர்களும் அவரது உலகம் தழுவிய சீடர்களும் ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளை நோய்களிலிருந்தும், தொற்று நோய்களிலிருந்தும் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

பிரான்சில் ‘காலரா’ பரவிய போது காம்போரா, குப்ரம்மெட், வெராட்ரம் ஆல்பம் ஆகிய ஹோமியோ மருந்துகள் மூலம் ஹானிமனும் அவரது மருத்துவ நண்பர்களும் காலராவை முழுவீச்சில் கட்டுப்படுத்தினர். அப்போது ஆங்கில மருத்துவத்தை நாடியவர்களில் 85 சதவீதத்தினர் பலியாயினர். ஹோமியோபதி மருத்துவத்தை நாடியவர்களில் 85 சதவீதத்தினர் உயிர்பிழைத்தனர். டாக்டர். ஹானிமன் காலத்திலேயே டைபஸ் சுரத்திற்கு பிரையோனியா, ரஸ்டாக்ஸ் மருந்துகளும், ஸ்கார்லட் சுரத்திற்கு (செங் காய்ச்சல்) பெல்லடோனா என்ற மருந்தும், புறப்பாட்டுக் காய்ச்சலுக்கு ‘அகோனைட்’ என்ற மருந்தும் தடுப்பு மருந்துகளாகப் பயன்பட்டு வெற்றிகளைக் குவித்துள்ளது.

1996ல் டில்லியில் டெங்குசுரம் பரவியபோது டில்லி ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் அரசின் ஆலோசனைப்படி இந்நோயை ஹோமியோ மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தியது. ஹோமியோ மருந்தை தடுப்பு மருந்தாக 10 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியது. பின் சிக்குன்குனியா பரவியபோது ஆந்திர அரசும், கேரள அரசும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டன. தமிழகத்திலும் சிக்குன்குனியா பரவிய போது அரசு மருத்துவமனைகளிலுள்ள ஹோமியோபதி பிரிவுகளிலும், தனியார் ஹோமியோபதி மருத்துவமனைகளிலும் மக்கள் குவிந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகளின்றி பெருமளவு நிவாரணம் வழங்கின.

இன்றைய பன்றி சுரத்தைத் தடுப்பதிலும் சில ஹோமியோபதி மருந்துகள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றில் பிரதானமான மருந்துகள் 1. ஆர்சனிகம் ஆல்பம். 2. ஜெல் சிமியம். 3. பிரையோனியா. 4.இன்ஃப்ளூயன்சினம். 5. ஆக்சிலோகாக்சினம். 6. பாப்டீசியா. இம்மருந்துகள் அனைத்தும் ஒரே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்குத் தேவைப்படாது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ‘இன்புளூயன்சினம்’ மற்றும் ‘ஜெல்சிமியம்’, ‘பிரையோனியா’ மருந்துகள் அதிகம் பயன்பட்டுள்ளன. ஆனால் இந்தியத் தட்பவெட்ப நிலையில், இங்குள்ள நோய்க்குறிகளை ஆய்வு செய்து பார்க்கும்போது இரு மருந்துகள் இந்நோயைத் தடுப்பதிலும், குணமளிப்பதிலும் முன்னிடம் வகிக்கின்றன. அவை (1) ஆர்சனிகம் ஆல்பம்  (2) பாப்டீசியா இம்மருந்துகளை ‘30C’ வீரியத்தில் காலை ஒரு மருந்து மாலை ஒரு மருந்து என 3 நாட்கள் சாப்பிட்டால் பன்றி சுர வைரஸ் உட்பட இன்றைய பருவகாலத்தில் தோன்றும் பிற வைரஸ் தாக்குதலிலிருந்தும் மனிதர்கள் பாதுகாக்கப்படுவார்கள். உயிராற்றலையும், பாதுகாப்பு மண்டலத்தையும், பலப்படுத்தி, தற்காப்பு ஆற்றலைப் பெருக்கி நோய்கள் நெருங்க விடாமல் காக்கும் இம்மருந்துகளை தடுப்பு மருந்துகள் என்றழைப்பதைவிட தற்காப்பு மருந்துகள் என்றழைப்பதே சரியானது. இருப்பினும் சாதாரண மக்களின் பயன்பாட்டிலும் புரிதலிலும் ‘தடுப்பு மருந்துகள்’ என்பதே சரியாக உள்ளது.

ஹோமியோ கோட்பாடுகளின்படி, ஹானிமன் காட்டிய வழிமுறைகளின்படி கொள்ளை நோய்களுக்கு எதிராக ... ஹோமியோபதி தடுப்புமருந்துகள் வழங்கிட மத்திய மாநிலஅரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் காலங்களில் ஆங்கில மருத்துவம் மட்டுமே கதி என்று ஒற்றைப் பாதையில் பயணம் செல்லாமல் ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவங்களையும் முழுவீச்சில் பயன்படுத்தி மிகத்துரிதமாகவும், உயிர் இழப்புகள் இல்லாமலும் மக்களைக் காக்க வேண்டியது நல்லரசுகளின் கடமை.

Pin It