கள்ளத் தனம்மிகுந்தோன் - கொடுங்

கவுடில்ய னுக்கிவன் முன்பிறந்தோன்!

சொல்இன நலம்உரைக்கும் - கறுஞ்

சிந்தையில் தன்னலம் பாய்விரிக்கும் !

 

எண்ணிய முடிப்பதிலும் - போட்டிக்கு

இருப்பவர் எவரையும் துடைப்பதிலும்

நுண்ணிய கலைஞனிவன்!- காய்

நகர்த்தலில் நிகரிலா மன்னனிவன்!

 

உறவுக்குக் 'கை'கொடுத்தான்! - இன

உரிமைக்குக் கல்லறை பல சமைத்தான் !

வருபுனல் காவிரியை - இவன்

வற்றவைத் தான்மிகு தன்னலத்தால்!

 

பகையுடன்  கொஞ்சிவந்தான்! - கெஞ்சிப்

பல்லிளித்து உரிமைகள் அடகுவைத்தான்!

மிகப்பெரும் வினைத்திறத்தால் - தன்

மனைஉயர் வொன்;றையே  நிதம்நினைத்தான்!

 

தமிழினைத் தமிழினத்தை - நெஞ்சில்

தாளாப் பகையாய்ச் சுமப்பவரை

உவந்து வளர்த்துவிட்டான்! - இன

உயிர்ப்பகைக்கு ஊக்கம் உரம்அளித்தான்!

 

குடிநலம் புரிவனென்றான்! - மதுக்

குடியராய்த் தமிழரைக் கெடுத்துஉயர்ந்தான்!

விடிவிலாத் துயரினர்முன் - இவன்

வீசினான் 'இலவசம்"! அவர்புதைந்தார்!

 

ஆற்றை அடகுவைத்தான் ! - மண்ணை

அயலவர்க்கு இங்கே பகிர்ந்தளித்தான்!

சோற்றுக்(கு) இலாதவர்க்கே  வண்ணத்

தொலைக்காட்சி குடிக்காசால் உவந்தளித்தான்!

முன்னவர் சொந்தநிலம் - எங்கள்

மீனவர் தென்கச்சத் தீ(வு)அதனை

“அன்னை” கொடை கொடுத்தாள்! - வீரன்

அடங்கி ஒடுங்கி முடங்கி விட்டான்!

 

மணற்கொள்ளைத் திருடர்களால் - வன

மரங்களைக் கடத்திடு;ம் கயவர்களால்

பணம்பண்ணிக் கும்பல்களால் - ஆன

பண்புசால் தானையின் தலைவனிவன்!

 

தமிழ்எங்கும்  எதிலும்என்றான்!  கல்வி

தமிழ்தா என்கையில் திரும்பிநின்றான்!

தமிழிலா தமிழர் மண்ணில் - இவன்

தாராள மயங்களை இறக்கிவைத்தான்!

 

ஆங்கிலக் கொள்ளையர்க்கே -- இங்கு

ஆவன யாவையும் உடன்புரிந்தான்!

பாங்குறு தாய்த்தமிழ்சொல்   - பள்ளி

பார்க்கவும் ஊக்கவும் நினைவிழந்தான் !

 

நெஞ்சம் கலங்கவில்லை! - மக்கள்

நூறா யிரர்மாண்ட(து) உறுத்தவில்லை!

கொஞ்சி மகிழ்ந்திருந்தான் !-டெல்லிக்

கொலைகாரர் உறவிலே திளைத்திருந்தான்!

 

ஈழம் எரிகையிலே - மக்கள்

உள்ளங்கள் வெதும்பித் துடிக்கையிலே

ஆளப் பிறந்தமகன் - ஆட்சிக்(கு)

ஆகத் திரிந்தனன் டெல்லியிலே!

 

தமிழைத் தமிழ்நிலத்தில் - ஆட்சித்

தகுமொழி ஆக்கி நலம்புரியான்

இமயம் குமரியிடை - நடு

ஆள்மொழி கோரிப் பிதற்றுகின்றான்!

 

ஆக்கச் செயல்விழையான்! - நாளும் 

ஆரவா ரக்கூத்தை மறந்தறியான்

மாக்கொலை நினைவழித்தல் - வேண்டி

மாநாடு போட்டுக் கலக்குகிறான்!

 போலிக்(கு) இலக்கணமாய்- பல

பொய்கள் பரப்பும் இருள்திரையாய்

வாழ்ந்து நிறைந்துவிட்டான் - வர

லாறுசீர் செய்வார் கடன்பெரிதே!

Pin It