இந்தியாவினை ஒற்றுமைப்படுத்தத் திரு.ராகுல்காந்தி நேற்று கன்னியாகுமரியில் நடைப்பயணத்தைத் துவக்கி இருக்கிறார். இந்திய அளவில் ஒற்றுமை நடைப்பயணம் பாஜகவின் பிரிவினைவாத அரசியல் எதிர்ப்பு பிரச்சாரமாக இது அமையும் என்கிறது காங்கிரஸ். இந்தியாவின் அரசு நிறுவனங்களை ஆக்கிரமிப்பு செய்யும் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பிடியிலிருந்து சனநாயகத்தை மீட்பதும் இப்பயணத்தின் நோக்கம் என்று திரு.ராகுல்காந்தி உரை நிகழ்த்தி இருக்கிறார். கன்னியாகுமரியில் துவங்கிய இப்பயணம் 3570 கி.மீ தொலைவினை கடந்து காசுமீரில் நிறைவடைய உள்ளது. “பாரத்- ஜொடொ” யாத்திரை எனப்படும் இப்பயணத்தின் மூலம் காங்கிரஸ் இந்திய அளவில் அரசியல் கவனத்தினை பெறுகிறது.
இந்திய ஒன்றியத்திலுள்ள தேசிய இனங்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளே பாஜக முன்னெடுக்கும் பிளவு அரசியலின் அச்சாணியாக அமைகின்றது. தேசிய இனங்களின் மொழிகள், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் மீது இந்து, இந்தி, இந்தியா எனும் ஆதிக்கத் திணிப்பை பாஜக அப்பட்டமாகச் செய்து வருகிறது. ஆளுநர்கள் வழியாக மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைகளை தடுப்பது, மாநில அரசியலை நெருக்கடிக்குள்ளாக்குவது போன்றவை எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் என்பது மட்டுமல்ல; அடிப்படையில் தேசிய இனங்கள் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதே ஆகும்.
ஜி.எஸ்.டி., “ஒரே இந்தியா” போன்றவையும் இத்தேசிய இன அடக்குமுறையின் சட்டப்பூர்வமான வடிவமாகவே வளர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.டி., கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளைச் சிறு-குறு நிறுவனங்கள் மீதான தாக்குதலாகத் திரு. ராகுல் காந்தி உரைத்திருக்கிறார். சிறு நிறுவனங்கள் மீதான நெருக்கடிகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவை பாஜக நிகழ்த்திடும் மிகமோசமான தாக்குதல் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. திரு.ராகுல் முன்மொழியும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் சனநாயக விரோத நடவடிக்கைகள் எவ்வகையான இந்தி மத்தியத்துவத்தை, ஆரிய அதிகார மையத்தினை தில்லியில் அமர்த்துகிறது என்பதே தேசிய இனங்கள் எழுப்பும் கேள்வியாகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை ஆகிய இரண்டும் ஆரிய-பனியா-பார்ப்பன அதிகார மையத்தினை வலுவாக நிறுத்த பயன்படும் கட்டமைப்பாக பாஜக உருவாக்கி இருக்கிறது. பாஜக கட்சி கட்டமைப்பின் அடிப்படையாக அமையும் ஆரிய இனவெறி அரசியலினை எதிர்கொள்ளும் அரசியல் சித்தாந்த நிலைப்பாடுகளைக் காங்கிரஸ் எவ்வாறு கையாளப் போகிறது? இந்தியாவின் விடுதலைப் போராட்ட காலத்தில் தந்தை பெரியாரால் எழுப்பப்பட்ட இக்கேள்விக்கான பதிலை என்றுமே காங்கிரஸ் வெளிப்படுத்தியதில்லை. ஆரிய இனவெறி, சுதேசி பொருளாதாரத்தினை ஆதரிக்க மறுத்து பனியாக்களின் ஏகபோகத்தினை வளர்த்தெடுத்த காங்கிரஸின் அரசியல் மறக்கக்கூடியதல்ல.
காங்கிரஸ் உருவாக்கிய “ஆரிய வர்த்தா” எனப்படும் ஆரிய பெருந்தேசியத்தினை அசுர வளர்ச்சியில் நிலை நிறுத்தியதே பாஜகவின் வெற்றியாகும்!
காங்கிரஸ் கட்சி அதிகார கட்டமைப்பில் நிலைகொண்டிருக்கும் இந்த ஆரிய-பார்ப்பன-பனியா கட்டமைப்பு எவ்வாறு பாஜக வளர்த்தெடுத்த இந்துத்துவ-ஆரியக் கட்டமைப்பினை எதிர்கொள்ளப்போகிறது என்பதற்கான பதில்கள் காங்கிரசால் எவ்விடத்திலும் விளக்கப்படவில்லை. காங்கிரஸிற்குள் நிலவும் அதிகார வெற்றிடத்தை நிரப்பவும், ஒற்றை மைய அதிகாரத்திற்கான வேலைத்திட்டமாகவுமே இப்பயணம் அமையப்போகிறது என்பதை யாரால் மறுக்க இயலும்? காங்கிரஸ் 1990-களில் கொண்டு வந்த புதிய பொருளாதாரக்கொள்கை, தனியார்மயம் இன்று உலக அளவில் ஏகபோக இந்திய நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை பனியாக்களின் நிறுவனங்களே ஆகும்.
ஒருபுறம் இந்திய மக்களின் உழைப்பு, வரி, நிலம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசத்தின் சொத்துக்கள் தனியாரிடம் தாரைவார்ப்பதற்குரிய அடிப்படையைக் காங்கிரஸ் அமைத்தது. மறுபுறத்தில், இந்திய மார்வாடி பனியா நிறுவனங்களுக்குத் தங்குதடையற்ற பொருளாதார உதவி, அதிகார வர்க்க ஆதரவு, கொள்கை ரீதியான உதவிகளை சட்டப்பூர்வமானதாகவே மாற்றி அமைத்தது. இத்திட்டத்திற்கு உதவிய தென்னிந்திய அரசியல்வாதிகளான ப.சிதம்பரம் போன்றவர்களைத் தனது அதிகார மையத்தில் நிலைகொள்ள அனுமதித்தது. இந்த இடைவெளியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திக் கொண்டு பனியாக்களுடன் கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்டது. அதே சமயம், இந்திய அதிகார மையத்திற்குள்ளாகத் தனது முகவர்களை நிலைநிறுத்தியது. இன்று இந்தியாவின் அதிகார வர்க்கம் ஆர்.எஸ்.எஸ் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கண்டும் காணாமல் செய்த பேருதவியே என்றால் அது மிகையல்ல.
ஆர்.எஸ்.எஸ். காங்கிரஸ் கட்சிக்குள் நடத்திய ஊடுருவல்கள் என்பது ரகசியமானதல்ல. நேரு காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். முகவர்கள் வெளிப்படையாகவே தமது நோக்கங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் கோட்பாட்டாளர்களில் ஒருவராக மரியாதை செய்யப்படும் முன்ஷி அரசியல் சாசன உருவாக்கத்தின்போது வல்லபாய் பட்டேலின் உதவியுடன் மாநில ஆளுநர்கள் எனும் கட்டமைப்பைப் பாதுகாத்து சனநாயக விரோத அதிகாரத்தை நிலைநிறுத்தியது வரலாறு. இது போன்ற பல சனநாயக விரோத சரத்துகள் அரசியல் சாசனத்தில் எதிர்ப்புகளுக்கிடையே கொண்டு செல்லப்பட்டதற்குக் காங்கிரஸின் பார்ப்பன ஆதரவு கூட்டத்திற்குப் பெரும்பங்குண்டு. இதனாலேயே காந்தியர் கொலையில் ஆர்.எஸ்.எஸ்.இற்குப் பங்கிருக்கிறது என்பது ஐயம் தெளிவுற நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வளர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதே சமயத்தில் இந்துத்துவ பார்ப்பன அரசியலை எதிர்த்து இந்தியாவின் பன்முகத்தன்மையின் அரசியலைச் சுட்டிக்காட்டிய அமைப்புகள் எவ்வகையில் கையாளப்பட்டன என்பதை தந்தைப்பெரியார் மற்றும் திராவிடர் கழகம் மீதான காங்கிரஸின் அடக்குமுறைகள், கம்யூனிஸ்ட் கட்சி மீது நடத்திய வன்முறைகள், தேசிய இனங்களாகக் காசுமீர, அச்சாம், மணிப்பூர், நாகா ஆகிய வடகிழக்கு மாகாணத்தின் தேசிய இனங்கள் ஆகியவற்றினை காங்கிரஸும், நேருவும் எதிர்கொண்ட விதம் எவ்வகையிலும் ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியலுக்கு எதிரானதல்ல.
அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரத்திட்டங்கள் புறந்தள்ளப்பட்டன. அவர் பொருளாதாரத்தின் புலமைபெற்றவராக அக்காலத்திலேயே நன்கு அறியப்பட்டிருந்தாலும் அவரை சட்ட அமைச்சராக்கி அதிகாரமற்ற நிலையிலேயே நேரு வைத்திருந்தது இந்து சனாதனவாதிகளின் ஆதரவு மனநிலையையே பிரதிபலித்தது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து அதன் தோழர்களைப் படுகொலை செய்தது; நில உடைமையாளர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்தது எனக் காங்கிரஸ் யாருடைய முகவராகச் செயல்பட்டது என்பதை வரலாறு சொல்லும். இப்படியான நிலைப்பாடுகளிலேயே தமிழ்த் தேசிய இனத்தின் மீதான “இந்தி எதிர்ப்பு” போராட்டத்தின் பொழுது படுகொலையினை தயக்கமின்றி கட்டவிழ்த்தது. தெலுங்கானா, பாக்கா எழுச்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. காங்கிரஸின் உள்ளார்ந்த இப்பாசிச போக்கின் உச்சமாக 2009-இல் தமிழீழத்தில் இனப்படுகொலை கட்டவிழ்க்கப்பட்டு ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலையானார்கள். அதன் ஆட்சியாளர்களை இன்றளவும் பாதுகாப்பதைத் தனது கொள்கையாகவே காங்கிரஸ் வைத்திருக்கிறது.
இப்படியான, காங்கிரஸின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜக ஆட்சிக் காலத்தில் எவ்வகையில் மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதையே மே பதினேழு இயக்கம் எழுப்ப விரும்பும் கேள்வி. பாசிச பாஜகவினை கோட்பாடு ரீதியாக எதிர்கொள்ளும் பின்னணி கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கேரளாவின் வழியாகவே தனது பெரும்பாலான பயணத்தை ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளது எவ்வகையில் காங்கிரஸின் கொள்கை மாற்றத்தைக் குறிக்கிறது? பாஜகவின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகக் காங்கிரஸ் என்ன மாற்றுத் திட்டத்தை முன்வைக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தாமல் வேலைவாய்ப்பு நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது? ஆரியப் பார்ப்பன சனாதனத்தின் மீது கொள்கை முடிவெடுக்காமல், எதிரியாக அறிவிக்காமல் எவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அரசியலைத் திரு.ராகுல் காந்தி முறியடிக்கப் போகிறார்? இவை வரலாறு நெடுக காங்கிரஸை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள். இக்கேள்விகள் பதிலளிக்கப்படாமலே நடைப்பயணம் துவக்கப்பட்டிருக்கிறது.
- மே பதினேழு இயக்கம்