 |
ஞாநி
சிக்கன் குனியாவுக்கு யார் பொறுப்பு?
‘ஓ பக்கங்கள்’ கேள்வி - பதில் வடிவில் வருவதைப் பல வாசகர்கள் வரவேற்றிருக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால், மாஸ் சைக்காலஜியில் பெரிய வல்லுநரான கருணாநிதி அண்மைக் காலமாக தன் அரசியல் அறிக்கைகளை அவ்வப்போது கேள்வி&பதில் வடிவில் வெளியிடத் தொடங்கி இருக்கிறார். காமராஜரும், எம்.ஜி.ஆரும் பொதுக் கூட்டப் பேச்சுக்களின்போது மக்களிடம் கேள்வி கேட்டுப் பதில் சொல்லவைப்பது வழக்கம். பெரியார் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். கேள்வி&பதில்களுக்கு அப்பாற்பட்டவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் தலைவர்களும் உண்டு. சரி, இங்கே சில கேள்விகள், பதில்கள்...
1.சிக்குன் குனியா நோய் பரவுவதற்கு யார் பொறுப்பு?
பகல் நேரத்தில் மட்டும் கடிக்கும் கொசுதான் பொறுப்பு என்பது ஒரு டெக்னிக்கலான பதில். இரவு நேரக் கொசு மலேரியாவுக்குப் பொறுப்பு. ஆனால், சிக்குன் குனியா எவ்வளவு கடுமையான, நிலைகுலைக்கும் நோய் என்பதை, இந்தக் கட்டுரையைக் கணினியில் அடித்துக்கொண்டு இருக்கும் என் விரல்களுக்கு வாயிருந்தால் கதறிக் கதறிச் சொல்லும்.
முதுமையில் சிலரைத் தாக்கக்கூடிய ஆர்த்திரைடிஸ் நோய்கூட உடலின் ஏதாவது ஒரு மூட்டுப் பகுதியை மட்டுமே பொதுவாகப் பாதிக்கிறது. ஆனால், சிக்குன் குனியா உடலில் உள்ள எல்லா மூட்டு இணைப்புகளிலும், அசைக்கவே அஞ்சும் அளவுக்கு வலி உண்டாக்குகிறது. உட்கார, எழுந்திருக்க, படுக்க, கை கால்களை அசைக்க விரும்பினால், ஒவ்வொரு அசைவையும் கடும் வலியுடன்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிரமப்பட்டு எழுந்து நடந்தால், ஏறத்தாழ குரங்கிலிருந்து உதயமான ஆதி மனிதனைப் போல சற்றே மடித்த காலும், கூனுமாக நடக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த நோயின் பெயரை ‘முடக்கிக் குறுக்கும் நோய்’ என்று ‘ப்ரிக்க ஸ்வாஹிலி’ மொழியில் சூட்டியிருக்கிறார்கள்.
கடுமையான காய்ச்சல், சுமார் 103 டிகிரி வரை முதல் மூன்று தினங்களுக்கு நீடிக்கிறது. காய்ச்சல் இறங்கிய பின்னரும் ஓரிரு வாரங்களுக்குக் குறையாமல் மூட்டு வலி தொடர்கிறது. சிகிச்சை என்பது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகளும் மட்டுமே! உடல் உழைப்பிலான தினக்கூலி வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டால், குடும்பமே மிகப் பெரும் துயரத்துக்கு உள்ளாகும். தற்போது தமிழகத்தில் சிக்குன் குனியா தாக்குதல் அடிமட்டத் தொழிலாளி முதல் ஐ.டி. துறை வரை பரவலாக இருக்கிறது. ஆவடி புறநகர் மருத்துவமனையில், ஒரே வேளையில் புற நோயாளிகளில் 500 பேர் சிக்குன் குனியா பாதிப்புடன் வந்திருக்கிறார்கள். கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் ஒரு மருத்துவ முகாமுக்கு சிகிச்சைக்கு வந்த 90 பேரில் 62 பேருக்கு சிக்குன் குனியா! தமிழ்நாட்டிலும் இன்னும் சில மாநிலங்களிலுமாக பல லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் அன்புமணி மக்களவையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
சிக்குன் குனியாவுக்கு யார் பொறுப்பு? கொசுக்களைக் கட்டுப்படுத்தமுடியாத அரசாங்கங்கள்தான் பொறுப்பு. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சிக்குன் குனியா பாணி நோய்கள் வருவதில்லையே, ஏன்? பொது சுகாதாரத்தை அங்குள்ளஅரசுகள் ஒழுங்காகப் பேணுவதுதான் காரணம். கட்டமைப்பு என்ற பெயரில் பிரமாண்டமான சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நிகராக பொது சுகாதாரத்துக்கு நமது அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை.
எனக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் சொன்னார்... ‘பத்திரிகையாளருக்கு சிக்குன் குனியா வந்தது நல்லதுதான். இதைப் பற்றி நேரடி அனுபவத்தை எழுதி, விழிப்பு உணர்வு பரவச் செய்ய உதவியாக இருக்கும்!’ அரசியல் தலைவர்களுக்கு சிக்கன் குனியா வந்தால்தான், பொது சுகாதாரம் கவனம் பெறும் போலிருக்கிறது!
2.எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லை. ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள்தான். சரியா?
சரியல்ல! பயங்கரவாதம் என்பது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. உலகத்தின் எல்லா மதத்திலும் பயங்கரவாதிகள் இருந்திருக்கிறார்கள். இதுபற்றி பிரபல பொருளாதார விமர்சகரும், வலதுசாரி அரசியல் ஆதரவுப் பத்திரிகையாளருமான சுவாமிநாதன் எஸ்.அய்யர் சில வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து அளித்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள், வேறு சிலரால் விடுதலை வீரர்கள் என்று கொண்டாடப் பட்டிருக்கிறார்கள். கால மாற்றம் பயங்கரவாதிகள் பலரைத்தியாகிகளாக் கியிருக்கிறது. பிரிட்டிஷாரைப் பொறுத்தமட்டில் (இப்போது நூற்றாண்டு விழா காணும்) பகத் சிங்கும், தோழர்கள் சுகதேவ், ஆசாத் எல்லாருமே பயங்கர வாதிகள்தான். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல! இந்தியாவில் காஷ்மீரில் மட்டும்தான் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் உள்ளன. பஞ்சாபில் இருந்த தீவிரவாதிகள் சீக்கியர். அஸ்ஸாமின் உல்பா தீவிரவாதிகள் இந்துக்கள். திரிபுரா, போடோ தீவிரவாதிகள் யாரும் முஸ்லிம்கள் அல்ல. இந்தியாவில் சுமார் 150 மாவட்டங்களில் இருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பு, மதச்சார்பற்ற அமைப்பு.
இருந்தபோதிலும், முஸ்லிம் தீவிரவாதிகள் பற்றியே நம் கவனம் அதிகம் திருப்பப்படுவதற்குக் காரணம், தற்போது மேற்கு நாடுகள் அவர்களைப் பற்றி அதிக பயம்கொண்டு இருப் பதுதான்.
உண்மையில் பயங்கரவாதம் என்பது சாதி, மதம், கடவுள், தேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு சமூகமும் தன் பொருளாதார, கலாசாரச் சிக்கல்களை ஜனநாயக முறையில் சமத்துவ அடிப்படையில் தீர்க்கத் தவறும்போது, அந்தத் தோல்வியை மறைக்க பொய் எதிரிகளை உருவாக்கிக் காட்டுகிறது. அதிலிருந்துதான் பயங்கரவாதம் தொடங்குகிறது!
இந்த வார விடுகதை:
சென்னைப் பள்ளிக்கூடம் ஒன்றில் சுமார் 1,000 மாணவிகள், அண்மையில் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். எதற்கான உறுதிமொழி?
1. தேசப் பாதுகாப்பு
2. ரத்த தானம்
3. வரதட்சணை மறுப்பு
4. மூன்றும் இல்லை.
விடை: மூன்றும் இல்லை. எந்தச் சூழலிலும் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அண்மைக் காலமாக மாணவர்களின், குறிப்பாக மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இத்தகைய உறுதிமொழி ஏற்பை மாணவர்களிடையே பரப்பி வருகிறார்கள். பெரும்பாலான தற்கொலைகளுக்குக் காரணம் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி என்பதைவிட, குழப்பமான மனநிலையைப் பகிர்ந்துகொள்ளவோ, வழிகாட்டவோ யாரும் இல்லாததுதான்!
ஆனந்தவிகடன் – 10/9/2006
|